தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,


PUBLISHED ON : நவ 04, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 04, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

எழுத்தாளர், பி.சி.கணேசன், 'எதிலும் முதன்மை பெறுவது எப்படி?' என்ற நுாலில் சொல்கிறார்:

ஏ.வி.மெய்யப்ப செட்டியார், ஓர் இரவு கதையை, அண்ணாதுரையிடமிருந்து எவ்வாறு விலைப் பேசி வாங்கினார் என்பதை அண்ணாதுரையின் நண்பர்கள் சொல்லி, கேள்விப்பட்டிருக்கிறேன்... அப்போது, திருச்சியில் தங்கியிருந்த அண்ணாதுரையை பார்ப்பதற்கு, எதிர்பாராமல் திடீரென்று வந்திருக்கிறார், மெய்யப்ப செட்டியார்.

தரையில், பாயில் அமர்ந்து, சீட்டு விளையாடிக் கொண்டிருக்கிறார், அண்ணாதுரை. திடீரென்று மெய்யப்ப செட்டியார் வந்ததும், அவரை வரவேற்று, அங்கிருந்த நாற்காலியில் அமரச் சொன்னார், அண்ணாதுரை.

செட்டியார், அதற்கு சம்மதிக் காமல், அண்ணாதுரையை வலுக்கட்டாயமாக இழுத்து, நாற்காலியில் உட்கார வைத்தார். தான் பாயில் அமர்ந்து, வந்த விஷயத்தை அண்ணாதுரையிடம் சொல்லி, பேரம் பேசி, குறைந்த விலைக்கு, ஓர் இரவு கதையை வாங்கி, அங்கிருந்து புறப்பட்டாராம், செட்டியார்.

அவர் சென்றவுடன், அண்ணாதுரையிடம், 'செட்டியாரின் பெருந்தன்மையைப் பார்த்தீர்களா... எழுத்தாளர்களிடம், அவருக்கு எவ்வளவு மரியாதை... உங்களை நாற்காலியில் உட்கார வைத்து, அவர் கீழே அமர்ந்தல்லவா பேசிக் கொண்டிருந்தார்...' என்று, அங்கிருந்தவர்கள் பாராட்டினராம்.

உடனே, அண்ணாதுரை சிரித்தபடியே, 'செட்டியார், விஷயம் தெரிந்த வியாபாரி, என்னை கீழே உட்கார வைத்து, அவர் நாற்காலியில் அமர்ந்து, கதையை விலை பேசி இருந்தால், இன்னும் கொஞ்சம் அதிக தொகை கேட்கிற துணிச்சல், எனக்கு வந்திருக்கும். என்னை நாற்காலியில் உட்கார வைத்ததால், அவர் காட்டிய மரியாதையைப் பார்த்து, அதிகத் தொகை கேட்க எனக்கு மனம் வரவில்லை. அவர் கீழே உட்கார்ந்ததன் மூலம் குறைந்த விலைக்கு கதையை என்னிடமிருந்து வாங்க முடிந்தது. எனக்கு கிடைத்தது மரியாதை; அவருக்கு கிடைத்தது பணம்...' என்றிருக்கிறார், அண்ணாதுரை.

'எனது வாழ்க்கை அனுபவங்கள்' என்ற நுாலில், ஏ.வி.எம்., சொல்கிறார்:

'மெஸ்சர்ஸ் கராஜ்மல் அண்டு சன்ஸ்'காரர்கள், 'கிராமபோன் ரெக்கார்டு' கம்பெனி ஒன்றை, சென்னை ரட்டன் பஜாரில் வைத்திருந்தனர். ஒளிப்பதிவு செய்யலாம் என்பதற்காக, 600 ரூபாய்க்கு பாரதியார் பாடல்களின், 'காப்பிரைட்'டை வாங்கி வைத்திருந்தனர். பின், 'கிராமபோன் ரெக்கார்ட்' கம்பெனியை மூடி விட்டனர். ஆனால், 'காப்பிரைட்' உரிமை அவர்களிடமே இருந்தது.

அவர்களுடைய காரியஸ்தரைப் பிடித்து, 'உங்கள் முதலாளியிடம் சொல்லுங்கள், அவர்கள் தான் இப்போது, 'ரெக்கார்டிங்' செய்யவில்லையே... பாரதியார் பாடல்களின் உரிமையை வைத்திருந்து என்ன பிரயோஜனம்? ஏதோ ஒரு விலை சொல்லிக் கொடுத்தால், நான் வாங்கிக் கொள்கிறேன்...' என்றேன்.

முதலாளியை சந்திக்க ஏற்பாடு செய்தார்.

பாரதியாரின் பாடல்களை, 600 ரூபாய்க்கு தானே வாங்கியிருக்கிறார். ௨,௦௦௦ - ௩,௦௦௦திற்குள் முடித்து விடலாம் என்ற நினைப்பில், மடியில், 10 ஆயிரம் ரூபாயை எடுத்துச் சென்றேன். வியாபாரத் தந்திரங்களை எல்லாம் நான் உபயோகித்து பார்த்தேன். அவர், என் தந்திரங்களுக்கு எல்லாம் மேற்பட்டவராக இருந்தார்.

'உபயோகம் இருந்தாலும் சரி, இல்லா விட்டாலும் சரி... நான் வாங்கிய ரூபாயை பற்றி கேட்க வேண்டியதில்லை. 10 ஆயிரம் ரூபாய் தருவதாக இருந்தால் சொல்லுங்கள், உங்களுக்கு அந்த, 'காப்பிரைட்' உரிமையை தருகிறேன்...' என்றார்.

எனக்கு ரொம்ப சந்தோஷம். மறுநாள் அவர் மனம் மாறிவிடக் கூடாதே என்றும் திகில். நமக்கு பயன் இல்லாவிட்டாலும், பிறருக்கும் பயன் படக்கூடாது என்கிற மனோபாவம் உடையவர்கள் இருக்கத்தானே செய்கின்றனர். யாராவது நாளைக்குள் அவரது மனதை மாற்றி விட்டால்... அந்த இடத்திலேயே, 'எழுதுங்கள் அக்ரிமென்ட்டை' என்று கூறி, 10 ஆயிரம் ரூபாயை கொடுத்து, 'காப்பிரைட்'டை வாங்கி வந்து விட்டேன்.

வியாபாரம் என்றால், எவ்வளவு நுணுக்கங்கள் தெரிந்திருக்க வேண்டி இருக்கிறது பார்த்தீர்களா!

'வெண் குழல் வத்தி' மன்னர் லென்ஸ் மாமா... ஏ.சி., ரூமுக்குள் கூட புகை விட்டு மனிதனை மூச்சுத் திணறல் செய்து விடுவார்.

ஐந்தாவது வகுப்புப் படிக்கும்போது, ஸ்டார், பாசிங் ஷோ, யானை அல்லது கத்திரி இந்த வகை சிகரெட்டுகளில் ஏதோ ஒன்றை மூன்று காசுக்கு வாங்கி, திருட்டு 'தம்' அடித்தாராம் முதன் முதலில். அடுத்து, ஒன்பதாவது படிக்கும்பேது, 'கூல்' சிகரெட் புகைத்துப் பார்த்தாராம்... அதன் பின், டிகிரி, பி.ஜி., படிக்கும்போதெல்லாம், வில்ஸ், பில்டர் கிங்ஸ், ஒரு நாளுக்கு ஒன்று என்ற விகிதத்தில் ஆரம்பித்தவர், இன்று, '555'ஐ ஊதித் தள்ளிக் கொண்டிருக்கிறார்.

லென்ஸ் மாமாவுடன், வெளிநாடுகளில் காரில் பயணம் செய்வதைப் போன்ற அவஸ்தை கிடையவே கிடையாது. லண்டனில் இருக்கும் டாக்டர் நண்பர் ஒருவர், 'ஹம்லட்' சுருட்டு தான் பிடிப்பார்... சுருட்டு நாற்றம் குடலைப் பிரட்டுவது நீங்களும் அறிந்தது தான்... அவருடன் சேர்ந்து மாமாவும் சுருட்டு பிடிக்க ஆரம்பித்து விடுவார்... அதுவும், தேசிய நெடுஞ்சாலைகளில், கார், 150 - 160 கி.மீ., வேகத்தில் செல்லும் போது, காரின் ஜன்னல் கண்ணாடிகளை திறந்து வைத்துக் கொள்ள முடியாது! காரணம்; பேய் வேகக் காற்று... அப்பப்பா... அப்போது படும் அவஸ்தை இருக்கிறதே...

யார் என்ன, 'அட்வைஸ்' செய்தாலும், கண்டுகொள்ள மாட்டார், மாமா!

இது இப்படி இருக்க... இங்கிலாந்து நாட்டு, 'இண்டிபென்டன்ட்' நாளிதழில் ஒரு செய்தி படித்தேன் ('ஏன்யா ரீல் சுத்ரே... உனக்கு தான் இங்கிலீஷ் தெரியாதே... உதவி ஆசிரியர் யாராவது படித்துக் காட்டி இருப்பர்...' என, நீங்கள் அங்கே சொல்வது என் காதில் விழத்தான் செய்கிறது... நீங்கள் சொல்வது தான் சரி!)

அச்செய்தியில், சூ பார்கரே என்ற பெண்மணி, 'நான், 38 ஆண்டுகளாக சிகரெட் பிடித்து வருகிறேன்... இந்தப் பழக்கத்தை கை விட பல முறை, பல வழிகளில் முயன்றேன்... மனக் கட்டுப்பாட்டு சிகிச்சை, நிக்கோட்டின் கலந்த சூயிங்கம் மெல்லுதல் மற்றும் நிக்கோட்டின் பேச்சஸ் சிகிச்சை எல்லாம் மேற்கொண்டேன்... இவை எல்லாம் வெறுப்பைத் தான் துாண்டின... இதனால், வழக்கத்துக்கு அதிகமாக, 'தம்' அடிக்க ஆரம்பித்தேன்...' என்கிறார்.

இப்போது, பேனா மூடி அளவில், சிகரெட் ஹோல்டர் மாடலில் பிளாஸ்டிக்கில் அறிமுகமாகி உள்ள கருவி, சிகரெட்டைத் தலை முழுக, இந்த பெண்மணிக்கு உதவுகிறதாம். இந்த கருவியில் உள்ள நிக்கோட்டினை உறிஞ்சும்போது, அதன் ஆவி நேரடியாக நாக்கில் படும்போது, சிகரெட் பிடிக்க வேண்டும் என்ற உணர்வு தோன்றுவதில்லையாம்!

'எங்கள் அலுவலகத்தில் சிகரெட் பிடிக்க தடை கொண்டு வந்த போது, ரொம்ப அவதிப்பட்டேன்... நிக்கோட்டின் சூயிங்கம் மென்றேன்... சிகரெட் குடிப்பதற்காக, 'பிரேக்' விடும்போது, 'ஸ்மோக்கிங்' ரூமுக்கு ஓடி, சிகரெட் பிடித்து வந்தேன்... இப்போது, அறிமுகமாகியுள்ள இந்த கருவியை பயன்படுத்த ஆரம்பித்த பின், சிகரெட் புகைக்க வேண்டும் என்ற அரிப்பு வெகுவாகக் குறைந்துள்ளது...' என்கிறார், அதே பெண்மணி!

இந்த கருவியில் அப்படி என்ன தான் உள்ளது?

இக்கருவியினுள், சிகரெட்டில் இருப்பது போன்றே, 'நிக்கோட்டின்' குழல் இருக்கும். உபயோகித்த பின், இந்த 'நிக்கோட்டின்' குழலை மாற்றிக் கொள்ளும் வசதி இருக்கிறது. பிளாஸ்டிக் குழலை உதட்டில் வைத்து உள்ளிழுக்கும்போது, வாயினுள் நுழையும் நிக்கோட்டின் அளவில், மூன்றில் ஒரு பங்கு வாயினுள் நுழையும்... ஆனால், நுரையீரலை நிரப்பும், கேன்சரை வரவழைக்கும், புகை மட்டும் கிடையாது. மேலும், சிகரெட் போல சூடாக இல்லாததால், உடனடியாக நுரையீரலைச் சென்று அடைவதில்லை... அதனால், ஆபத்தும் குறைவு!

இதன் விலை, 350 ரூபாய். நிக்கோட்டின் குழல்கள், ஒரு வாரத்திற்கு, 1,200 ரூபாய் வரை ஆகும். அதாவது, தினசரி, 20 சிகரெட் பிடிக்கும் பழக்கம் உள்ளவருக்கு ஒரு வாரத்துக்கு ஆகும் செலவுக்கு ஈடானது. அங்கெல்லாம் சிகரெட் விலை எக்கச்சக்கம்!

இங்கிலாந்து நாட்டில் எடுக்கப்பட்ட ஒரு கணக்கெடுப்பில், எட்டு கோடி பேர் சிகரெட் பிடிப்பதை நிறுத்த விரும்புகின்றனராம். இந்த புதிய கருவி, அவர்களுக்கு பெரிய உதவியாக இருக்கும் என, அச்செய்தி கூறுகிறது!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us