PUBLISHED ON : நவ 04, 2018

மொபைல் எண்ணால் வந்த பிரச்னை!
என் நண்பர் மகள், இன்ஜினியரிங் கல்லுாரியில், ஆஸ்டலில் தங்கி படித்து வருகிறாள். விடுமுறை நாளில், மகளை பார்க்க, கல்லுாரி நுழைவு வாயிலில் உள்ள, 'செக்யூரிட்டி விசிட்டர் நோட்'டில், பெயர், மொபைல் எண், 'இன் - அவுட்' நேரம் போன்ற விபரங்களை, நண்பரின் மனைவி, பதிவு செய்வது வழக்கம்.
சில நாட்களுக்கு பின், நண்பரின் மனைவி, 'வாட்ஸ் - ஆப்' எண்ணுக்கு, ஆபாசமான வீடியோ, கதைகள் மற்றும் ஜோக்குகள் புதிய நம்பரிலிருந்து வந்ததை, என்னிடமும், நண்பரிடமும் தெரிவித்தார்.
அந்த எண்ணில், தொடர்பு கொண்டு, 'பேங்க் லோன் தருகிறோம்...' என்று கூறி, யார் அவர், வேலை செய்யும் இடம், என விசாரித்ததில், நண்பர் மகள் படிக்கும் கல்லுாரியின் பேராசிரியர் என தெரிய வந்தது.
மொபைலில் வந்த தகவல்களை, கல்லுாரி முல்வரிடம் காண்பித்தோம்.
சம்பந்தப்பட்ட பேராசிரியரை வரவழைத்து, அவரின் மொபைலை ஆராய்ந்தபோது, 'விசிட்டர் நோட்'டில் உள்ள பல பெண்களுக்கு, அவர், ஆபாச வீடியோ, கதைகள் மற்றும் ஜோக்குகள் அனுப்பியிருப்பது, தெரிய வந்தது.
கல்லுாரியின் பெயர் கெட்டு விடும் என்பதால், பேராசிரியரை காவல் துறையிடம் ஒப்படைக்காமல், கண்டித்து அனுப்பிவிட்டனர்.
எனவே, பொது இடங்களில், பெண்களின் மொபைல் எண்களை பதிவு செய்யாமல், கணவர், அப்பா மற்றும் அண்ணன் ஆகியோரின் எண்களை பதிவு செய்வது சிறந்தது.
— கே.சசிகுமார், சீர்காழி.
நண்பரின், 'ஷாக் ட்ரீட்மென்ட்!'
விடுமுறை நாளில், திருப்பதி சென்று திரும்பிய நண்பனை காண சென்றிருந்தேன். அவன் மனைவி மற்றும் மகள்கள் இருவரும், மொட்டை அடித்திருந்தனர். மகள்கள் இருவரும் கல்லுாரி மாணவியர், முடியை இழக்க, அவர்கள் எப்படி சம்மதித்தனர் என்று ஆச்சரியம் தாங்கவில்லை. அவனிடம், கேட்டேன். சிம்பிளாக, 'ஒரு வேண்டுதல்டா...' என்று, சொன்னான்.
வீட்டுக்கு திரும்பிய பின், என் மொபைலில், நண்பன் அனுப்பிய, 'வாட்ஸ் - ஆப்' மெசேஜ் இருந்தது. 'மச்சான்... பொண்டாட்டி, பொண்ணுங்கல்லாம், பின்னல் மற்றும் கொண்டை போடாம, தலையை விரிச்சு போட்டு திரிஞ்சிட்டிருந்தாங்க... காலை டிபன், மதிய சாப்பாடு எதை எடுத்தாலும் தலை முடி. அவ்வளவு ஏன், குடிக்க தண்ணி கொடுத்தாங்கன்னா, அதுல ஒரு முடி மிதந்திட்டிருக்கும். சொல்லி சொல்லி பார்த்தேன், கேக்குறா மாதிரி தெரியல... 'சாப்பாட்டுல முடி இருந்தா, உறவு விட்டுப் போகாம நீடிக்கும்'ன்னு, 'டயலாக்' வேற...
'குடும்பத்தோடு திருப்பதிக்கு போய், வேண்டுதல்ன்னு சொல்லி எல்லார் முடியையும் ஏழுமலையானுக்கு காணிக்கையா கொடுத்து திரும்பினோம். இது, 'ஷாக் ட்ரீட்மென்ட்'ன்னு அவங்களுக்கு தெரியாது... அவங்க முன் சொல்ல முடியலை... ரெண்டு வருஷத்துக்கு பிரச்னையில்லை பாரு... இந்த மெசேஜை படித்தவுடன், 'டெலிட்' பண்ணிரு'ன்னு அனுப்பி இருந்தான்.
திரவுபதி, கண்ணகி மாதிரி தலைமுடியை விரித்துத் திரியும் பெண்கள், எப்போது திருந்துவரோ!
- ரா.பி.மாணிக்கம்பிள்ளை, மறைமலைநகர்.
நாமும் விதைக்கலாம்!
சென்ற வாரம், உறவினர்களுடன், ஏலகிரி மலைக்கு சுற்றுலா சென்றோம். மலை பாதை துவங்கும் இடத்தில், பள்ளி சிறுவர் - சிறுமியர் எங்களை தடுத்து நிறுத்தி, பேப்பரில் செய்த பையை கொடுத்தனர். அதில், சில மண் உருண்டைகள் இருந்தன.
விசாரித்ததில், 'சப்போட்டா, பலா மற்றும் சீதா பழங்களின் விதை பந்துகள். இதை, 14 கொண்டை ஊசி வளைவுகள் உள்ள மலை பாதையில், மலை பாதைக்கு ஒன்று என வீசுங்கள்...' என்றனர்.
'வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில், இதுபோன்ற விதை பந்துகளை தயார் செய்து, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில், சுற்றுலா வருவோரிடம் கொடுக்கிறோம்...' என்றார், அச்சிறுவர்களை வழி நடத்திய, ஆசிரியர்.
மேலும், 'மழை காலம் என்பதால், நாங்கள் கொடுத்து அனுப்பும் விதை பந்துகளில், 10 முளைத்தால் கூட, இங்கு வாழும் விலங்குகளுக்கு நிச்சயம் பலன் தரும்...' என்றார்.
படிப்பு மட்டும் என்றில்லாமல், பொது சிந்தனையோடு செயல்படும் ஆசிரியரை பாராட்டி, விதை பந்துகளை வாங்கி, துாவிச் சென்றோம். அடுத்த முறை சுற்றுலா செல்லும்போது, நிச்சயம் நாங்கள் துாவிய விதை, மரமாகி இருக்கும்.
இனி, சுற்றுலா செல்லும்போது, நாங்களும் இதுபோன்ற விதை பந்துகளை தயார் செய்து, சாலையோரத்தில் போட முடிவு செய்தோம்; நீங்களும் செய்வீர்கள் தானே?
- நா.பத்மாவதி, ஜோலார்பேட்டை.
