தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/பரிகாரம்!

பரிகாரம்!

பரிகாரம்!


PUBLISHED ON : நவ 04, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 04, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கண்களை மூடி, ஈஸி சேரில் சாய்ந்திருந்தார், செல்வரங்கம். கண்கள் தான் மூடி இருந்தனவே ஒழிய, மனம் மிகவும் குழப்பத்தில் இருந்தது. ஆஸ்தியால் இதுவரை அவரால் அடைய முடியாதது எதுவுமே இருந்ததில்லை.

சிவகாமியை திருமணம் செய்த காலத்தில், சொத்து சுகம் எதுவும் இல்லாதவராய் தான் இருந்தார். மனைவி வந்த நேரமோ, அவருடைய யோக காலமோ, அவர் தொட்டதெல்லாம் துலங்கியது.

பஸ் ஸ்டாண்டை ஒட்டி, சிறிய முதலீட்டில் ஒரு பழக்கடை வைத்தார். எதிர்பாராத விதமாக வியாபாரம் சூடு பிடித்தது. அன்றன்றைக்கு எடுத்த சரக்கு விற்றுப் போனது.

பஸ் ஸ்டாண்டில் இருந்த ஓட்டல் முதலாளி, அதை விற்கப் போவதாக செல்வரங்கத்திடம் சொன்னார். தானே ஓட்டலை வாங்கி நடத்துவதாக செல்வரங்கம் கூறியதும், உடனே ஒப்புக்கொண்டார்.

ஓட்டலாக இருந்தது, செல்வரங்கத்தின் முயற்சியால், இரண்டு அறைகளுடன், 'போர்டிங் அண்ட் லாட்ஜ்' ஆக மாறியது.

அவரது ஓட்டல் லாட்ஜில் தங்க வந்த சிலர், பழக்கமாயினர். அவர்களில் ஒருவர், ரோடு போடும் கான்ட்ராக்டர்; அரசியல் செல்வாக்கு உள்ளவர். நிறைய நெளிவு சுளிவுகளை செல்வரங்கத்துக்கு சொல்லிக் கொடுத்தார். அவர் தொடர்பால், மணல், கருங்கல், ஜல்லி வியாபாரத்திலும் இறங்கி, ஊரில் முக்கியஸ்தரானார்.

இதற்கிடையில், சொந்தமாக இடம் வாங்கி, வீடு கட்டினார். புது வீடு குடிபோன நேரம், மனைவி, ஆண் குழந்தை பெற்றெடுத்தாள். குழந்தை படு சுட்டியாக இருந்தான். அடுத்த இரண்டு ஆண்டுகளில், பெண் குழந்தையும் பிறந்தது; செல்வ வளமும் கொழித்தது.

ஊரை ஒட்டியிருந்த வளமான நிலங்களை விலைக்கு வாங்கினார். நவீன தொழில் நுட்ப முறையை பயன்படுத்தி, விதையில்லா தக்காளி, திராட்சை, சப்போட்டா பயிர் செய்து, மகசூல் கண்டார். தோட்டத்தில் கிடைக்காத பழங்களே இல்லை என்னும் அளவுக்கு, சகலவித காய் கனிகளையும் விளைவித்தார், செல்வரங்கம்.

முன் போல, சாதாரண பழக்கடை இல்லை. குளிர்சாதனம் செய்யப்பட்ட பழக்கடை. லாபம் நாலு பக்கமிருந்தும் கொட்டியது. குழந்தைகள், ஊட்டி கான்வென்டில் சேர்க்கப்பட்டு, கோடீஸ்வரர் வீட்டு குழந்தைகளாகவே வளர்ந்தனர்.

படிப்பு என்பது அந்தஸ்தின் அடையாளமாகவே தெரிந்தது செல்வரங்கத்துக்கு. மகனும் - மகளும் டாக்டர்களாக வேண்டும் என்பது அவரது லட்சியம். பணம் கொடுத்து, 'மெடிக்கல் சீட்' வாங்கினார். பேப்பருக்கு இவ்வளவு என்று பணத்தால் அடித்து, 'பாஸ்' வாங்கினார்.

பணம் சேர சேர, ஈவு, இரக்கம் குறைந்தது.

மருத்துவ பட்ட மேற்படிப்புக்கான, 'சீட்'டும், கேட்ட, 'ஸ்பெஷாலிட்டி'யே கிடைக்க, அவர் பணம் வகை செய்தது.

அவர்களது நெருங்கிய உறவு பையன், நல்ல மதிப்பெண் வாங்கியும், மருத்துவ கல்லுாரியை நெருங்க முடியவில்லை. இது, காதில் விழுந்தபோது, 'அது, அவன் செஞ்ச பாவம்...' என்று துச்சமாக பேச முடிந்தது, அவரால்.

சொந்த மருத்துவமனை கட்டி, மகனையும், மகளையும் அதன் இயக்குனர்களாக்க முனைந்தார். உடனே, அவர் மனைவி, ''ஏங்க... இவங்க விஷயம் தெரிஞ்சு, 'பாஸ்' பண்ணலை... எப்படி ஆஸ்பத்திரி நடத்துவாங்க,'' என்றாள்.

பெரிய ஹாஸ்யத்தை கேட்டது போல், வாய் விட்டு சிரித்தார், செல்வரங்கம்.

''சிவகாமி... ஒழுங்கா படிச்ச டாக்டர்களை, 'அப்பாயின்ட்' செய்துடுவேன். அதையெல்லாம் யோசிக்காமலா இதுல இறங்குவேன்?'' என்றார்.

தன்னை போலவே ஒரு பண முதலையின் வாரிசுகளை, மகனுக்கும் - மகளுக்கும் திருமணம் செய்து வைத்தார். திருமண தடபுடலை பார்த்து, ஊரே பிரமித்து போனது. தேனிலவுக்கு சுவிட்சர்லாந்து போய் வந்தனர்.

அந்த சுற்று வட்டாரத்திலேயே, 'மல்டி ஸ்பெஷாலிட்டி' ஆஸ்பிடல், அவருடையதாக இருந்ததால், அதிலும் செல்வரங்கத்துக்கு பணம் கொழித்தது. வரி ஏய்ப்பு செய்வதற்கு, தனி வழிகளை கண்டுபிடித்தார்.

மகனும் - மகளும் ராஜா வீட்டு கன்றுகுட்டிகளாக வலம் வந்தனர்.

இதுவரை எல்லாம், அவர் போட்ட கணக்குபடி மிகச் சரியாகவே நடந்தது.

மகனுக்கும் - மகளுக்கும் சொத்துகளை சரி பாதியாக பிரித்து எழுதியும் ஆயிற்று.

இவர்களின் வயதொத்தவர்களுக்கு கல்யாணம் ஆகி, அடுத்தடுத்து வளைகாப்பு சீமந்தம், மகப்பேறு என்று நடந்தபோது, இவர்கள் வீட்டில் எந்த விசேஷமும் தலை காட்டவில்லை. இதனால், செல்வரங்கம் ரொம்ப பாதிக்கப்படவில்லை. ஆனால், கவலைப்பட துவங்கினாள், சிவகாமி.

நாட்கள் ஓடி, ஆண்டுகள் உருண்டபோதும், மகளும், மருமகளும் கருத்தரிக்கவில்லை என்பது கவலையை அதிகரித்தது.

வெளிப்படையாகவே மிகவும் துயரப்பட்டாள், சிவகாமி. பெண்ணுக்கு கல்யாணமாகி, ஆறு ஆண்டு; பிள்ளைக்கு கல்யாணமாகி, ஐந்து ஆண்டு முடிந்தபோதும், வீட்டில், 'விசேஷம்' எதுவும் வராதது அவளை உருக்கியது.

முதலில் இடக்கு செய்தாலும், மருத்துவ பரிசோதனை செய்ய ஒப்புக்கொண்டனர், பிள்ளைகள். மகனுக்கும், மருமகனுக்கும் விந்தணுக்களே இல்லை என்று, மருத்துவ பரிசோதனை முடிவு சொல்லியது. இரண்டு பேருக்கும், அதே குறைபாடு எப்படி இருக்க முடியும் என்று யோசித்து, மண்டை காய்ந்து, ஒரு வார இடைவெளியில், மீண்டும், 'டெஸ்ட்' செய்ததில், அது உறுதியானது.

செல்வரங்கத்துக்கு தலையில் இடி விழுந்தார் போலிருந்தது. விந்தணு குறைவாக இருந்தால், சரி செய்யலாம். இல்லவே இல்லை என்றால், என்ன செய்ய முடியும்?

ஆனால், வேறொருவரின் விந்தணுவை எடுத்து, செயற்கை முறையில் கருத்தரித்தல் மூலம் குழந்தை உருவாக்க முடியும் என்று மகப்பேறு மருத்துவர் விளக்கம் சொன்னார்.

பல இரவுகள் துாங்காமல், யோசித்து, ஒரு முடிவுக்கு வந்தார், செல்வரங்கம். இந்தியாவிற்குள் எந்த மருத்துவமனையில் இந்த முறையை கையாண்டு குழந்தை தரித்தாலும், எப்படியும் விஷயம் வெளியே கசிந்து விடும். ஆனால், அதற்காக எந்த முயற்சியும் செய்யாமல் விடவும் அவர் விரும்பவில்லை. வெளிநாடு போய், இந்த முறையில் கருத்தரித்து, குழந்தை பிறந்த பின், இந்தியா வந்தால் யாருக்கும் தெரியாது என்று கணக்கு போட்டார்.

இதை சிவகாமியிடம் சொல்லியபோது, 'சாது மிரண்டால் காடு கொள்ளாது' என்பதை அனுபவபூர்வமாகவே உணர்ந்தார். அதிகம் படிக்காத, எதற்காகவும் கணவரை எதிர்த்து ஒரு வார்த்தையும் பேசாத சிவகாமியா இவ்வளவு பேசுவது என்று அதிர்ந்து போகும்படி இருந்தது, அவள் பேச்சு...

''ஏங்க... எவ்வளவு சாதாரணமா சொல்லிட்டீங்க... உங்களை சொல்லி தப்பில்லை. மாட்டுக்கு பருவம் வந்தால், காளைக்கு விடாம, மாட்டாஸ்பத்திரியில போய் ஊசி போட்டு, அந்த வாயில்லா ஜீவனை நோகடிச்சு, தொழுவம் நிறைய கன்னுகுட்டிய வெச்சிருக்கீங்க இல்ல... அந்த புத்தி, இதுலயும் வருது.

''சினை பிடிக்க, ஊசி போடுறதுனால உண்டாகிற மாட்டு இனம், நம் நாட்டு மாடுகளுக்கு இணையாக இல்லைன்னு இப்போ தான் எல்லாரும் பேச ஆரம்பிச்சிருக்காங்க...

''மனுஷன் வேண்டாம்ன்னு ஒதுக்கின வைக்கோலையும், புண்ணாக்கையும் சாப்ட்டுட்டு, நமக்கு தாயை போல, பால் கொடுக்கிறது பசு. அதை, தாயா மதிக்காட்டியும், ஒரு சக ஜீவன்னு கூட மதிக்காம, கலப்பின ஊசி போட்டு, கருவாக்கி, நாலஞ்சு ஈத்து வரதுக்குள்ளே அடிமாட்டுக்கு விக்கிறோம் பாருங்க, அந்த பாவமெல்லாம் தான் நம்ப வம்சம் தழைக்க முடியாம இப்படியெல்லாம் கஷ்டம் வந்திருக்கு...

''ஆறு நெறஞ்சு தண்ணி ஓடறதப் பார்த்து, எத்தனை காலம் ஆச்சு... ஆத்து பாலத்து துாண்கள் எப்போ வெளியில பிச்சுக்கிட்டு வருமோன்னு, அதை சுத்தி இருக்கற மணலை கூட சொரண்டி சொரண்டி, லாரியில ஏத்தி வித்தீங்க... இப்போ, நம்ப வம்ச விருட்சமே ஆட்டங்கண்டு போச்சு...

''விதையில்லா பழங்கள்ன்னு மரபணு மாற்றம் செய்து, பயிராக்கி வித்தீங்க... இப்ப, நம்ம குலம் தழைக்க ஒரு வித்து, நம்ப வாரிசுகளுக்கு இல்ல...

''அந்த மாடுகளும், ஆறுகளும், மரங்களுக்கும் பேசத் தெரியாது தான். ஆனால், இயற்கைக்கு விரோதமா மனுஷன் தனக்கு தான் அதிகாரம் இருக்குன்னு அதுகளை கொடுமைப்படுத்தினதோட விளைவு தான், தெருவுக்கு தெரு செயற்கை முறை கருத்தரிப்பு மையங்கள். அந்த காலத்தில, வீட்டுக்குள்ளேயே கூட இதை பத்தியெல்லாம் சத்தமா பேசியிருக்க மாட்டோம்... ஒரு லஜ்ஜை, விவஸ்தை இருக்கு... இப்போ, நாகரிகம்ங்கற பேர்ல எல்லாம், வெளிப்படையா பேசறோம்...

''ஒரு குழந்தை பெத்துக்கறது, வெறும் அர்த்தமில்லாத விஷயமில்லங்க... அந்த குழந்தை, அப்பா, அம்மா, பாட்டி, தாத்தா, அத்தை மற்றும் மாமான்னு, தன் முன்னோர் தலைமுறை தலைமுறையா கொண்டிருந்த அத்தனை குணாதிசயங்களையும், அடுத்த தலைமுறைக்கு எடுத்து போற தொடர்ச்சி, 'ஏதோ' ஒரு விந்தணுவை கர்ப்பத்துல வெச்சு கருத்தரிக்க வெச்சா, அது எத்தனை பெரிய அனர்த்தத்தை உண்டாக்கும்... கலப்படத்திலேயே இது, பயங்கர கலப்படம் இல்லையா? இது, அடுத்தவங்களை ஏமாத்தற விஷயம் இல்லை; நம்மளை நாமே ஏமாத்திக்கிற கொடுமை...

''உரத்தையும், பூச்சிக்கொல்லியையும் போட்டு, மண்ணை மலடாக்கினோம்... கருத்தரிக்கிற ஊசி போட்டு, மாட்டை சித்ரவதை செய்தோம்... ஆத்து மணலை அள்ளி அள்ளி, நதியை பாலைவனமாக்கினோம்... செடி, கொடிகளை, 'ஹை ப்ரிட்'ங்கற பேர்ல கொடுமைப் படுத்தினோம்... அத்தனைக்கும் சேர்த்து, இயற்கை கொடுத்த சாபம் தான், இது.

''இன்னுமா புரியல... உங்க பணத்தை வெச்சு, வம்சத்த வளர்க்கறதா நெனச்சு, ஒரு பெரிய தப்பை பண்ண நினைக்கறீங்க... அந்த எண்ணத்தை விட்டு, அனாதை ஆசிரமங்களுக்கு உதவி செய்ய ஏற்பாடு செய்யுங்க... இத்தனை நாள் செய்த தவறுகளுக்கு அது தான் பரிகாரம்,'' கண்ணீருடன் பேசினாள், சிவகாமி.

விக்கித்து நின்றார், செல்வரங்கம்.

வி.விஜயலட்சுமி

சித்த மருத்துவத்தில்.எம்.எஸ்., பட்டம் பெற்றவர். புதுச்சேரியில் வசிக்கிறார். இவர் எழுதிய சிறுகதைகள், பல்வேறு தமிழ் இதழ்களில் வெளியாகிஉள்ளன. மனநலம் குறித்த கட்டுரைகளை, நிறைய எழுதியுள்ளார்.

இது தவிர, 'டிவி' சேனலில் பங்கேற்று, மனநலம் சம்பந்தமாக உரையாடியுள்ளார்.

டி.வி.ஆர்., நினைவு சிறுகதை போட்டியில், இவரது சிறுகதை ஆறுதல் பரிசு பெற்றிருப்பது, மன நிறைவை தருவதாக குறிப்பிட்டுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us