PUBLISHED ON : நவ 25, 2018

வி.ராஜேந்திரன், திருச்சி: ஜாதகம், தோஷம் என்றெல்லாம் சொல்லி, தம் மகள்களை, முதிர் கன்னியாக்கும் பெற்றோர் பற்றி...
பணமுடையில் இருப்பவர்களாக இருக்க வேண்டும் அல்லது கஞ்சர்களாக இருக்க வேண்டும்! இப்படிப்பட்ட பெற்றோரை உடைய பெண்கள், தாமே மாப்பிள்ளை தேடிக் கொள்வது தான் சிறந்த வழி!
* என்.ராமேஸ்வரன், ஈரோடு: 'நரகத்தில் வாழ்வது, லண்டன் நகரில் வாழ்வதை போன்றது...' என்று கூறியிருக்கிறார் ஷெல்லி... சென்னையில் வாழ்வது பற்றி நீங்கள் என்ன கூறுகிறீர்கள்?
நரகத்தில், கொதிக்கும் எண்ணெய் கொப்பரை இருக்கும்... பெரும் பாவம் செய்தவர்களை, அதில் போட்டு விடுவர் என்றெல்லாம் கதை கேட்டு இருப்பீர்கள் தானே... அப்படி இருப்பது தான் சென்னை வாழ்க்கை!
எஸ்.நாராயணன், திட்டக்குடி: இன்றைய மாணவர்களிடம் ஒழுக்கம் குறைந்து விட்டதே... அதை எப்படி வளர்ப்பது?
ரொம்ப சிம்பிள்... இதற்கு, ஒரு சட்டம் மட்டுமே போதும். ஒழுக்கம் குறைந்த மாணவன், ஒன்பதாம் வகுப்பில் இருந்தால், அடுத்த ஆண்டு, எட்டாம் வகுப்பிற்கு தள்ளி விட வேண்டும்... இப்படி செய்யும் அதிகாரமிருந்தால், மாணவர்கள் தங்கக் கம்பியாகி விடுவர்!
* சி.லிங்கம்மாள், கோவை: காதல் திருமணம் செய்து கொள்வோர், பெண் போலீசாக இருந்தாலும், பிரச்னைகளை சமாளிக்க முடியாமல் இருப்பது ஏன்?
என்ன தான் சம்பாதித்தாலும், உயர் பதவியில் அதிகாரத்தில் இருந்தாலும், சுய காலில் நின்றாலும், மன திடம், உறுதி, இன்னும், ஆணாதிக்கம் நிறைந்த இந்த சமூகத்தில் பெண்ணுக்கு வளரவில்லை!
* பா.தமிழ்ராணி, மேட்டுப்பாளையம்: எனக்கு ஒரு உபதேசம் செய்யுங்களேன்...
அடடா... ஞானி அளவுக்கு, என்னை, உயர்த்தி விட்டீர்களே... போகட்டும்! 'நாளை செய்யலாம்' என, சோம்பல் பட்டு, எந்த செயலையும் தள்ளிப் போடாதீர்; அந்த, 'நாளை' என்ற நாள், வராமலே போகும் வாய்ப்பு ஏற்படலாம்!
வே.மருதவாணன், காரைக்குடி: காதல் எப்போது உருவாகிறது?
ஒரு ஆணிடம், ஒரு பெண் ஏமாறும் போது... ஒரு பெண்ணிடம், ஒரு ஆண் ஏமாறும்போது!
கே.சஞ்சீவி பாரதி, கடலுார்: சமஸ்கிருதம் இன்னும் வழக்கத்தில் உள்ளதா சார்?
சென்னை, சேலம், ராஜபாளையம் போன்ற சில நகரங்களில், சமஸ்கிருதம் கற்றுத் தருகின்றனர். இவ்வகுப்புகளில் பெண்களே அதிகம். எல்லா இனப் பெண்களும் ஆர்வத்துடன் சேர்ந்து படிக்கின்றனர். அவர்கள், தமக்குள்ளே சமஸ்கிருதத்திலேயே பேசிக் கொள்கின்றனர். எனக்கென்னமோ, அது கஷ்டமான மொழியாகவே படுகிறது!
