தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,


PUBLISHED ON : நவ 25, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 25, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அந்த நடிகை, ஐந்தாறு தமிழ் படங்களில் கதாநாயகியாக நடித்தவர்... நாயகி வாய்ப்பு அத்துடன் நின்று போகவே, தாய்மொழியான மலையாளக் கரையில் ஒதுங்கி, ஜொலிக்க முயன்றார்... அங்கும் குறுகிய காலம் தான் சினிமாவில் நிலைக்க முடிந்தது!

அதன்பின், தமிழ், மலையாளம் சீரியல்கள் சிலவற்றில் தலை காட்டினார்... 'அப்படி, இப்படி' நடந்து கொள்வதில் விரும்பமில்லாதவராக இருந்ததால், கனவுத் தொழிலில் அவர் தொடர்ந்து நிலைக்க முடியாமல் போனது.

மிக நீண்ட நாட்களுக்குப் பின், கடந்த வாரம் போன் செய்து, அழகான, மலையாளம் கலவாத ஆங்கிலத்தில், டின்னருக்கு அழைத்தார்; லென்ஸ் மாமாவையும் கண்டிப்பாகக் கூட்டி வர சொன்னார்.

லென்ஸ் மாமாவுக்கு, கரும்பு தின்ன கூலியா கொடுக்க வேண்டும்... ஸ்பென்சர் பிளாசாவில் உள்ள, 'கலர் பிளஸ்' கடைக்கு சென்று புதிய, 'டி - ஷர்ட்' வாங்கி அணிந்து கொண்டார்... உடல் முழுக்க, 'புரூட்' தெளித்துக் கொண்டார்... சீனிவாசனிடம் கொடுத்து, ஷூவை பாலீஷ் செய்து கொண்டார்...

'நான் ரெடி...' என்றார்!

சென்னை நகர எல்லையை ஒட்டியுள்ள, 'லா மெரிடியன்' நட்சத்திர ஓட்டலை அடைந்தது வண்டி... நட்சத்திரங்கள் மின்னும், 'லாபி'யில் சிறிது நேரம் காத்திருந்த பின், தன் குண்டு தாயாருடன் வந்தார், நடிகை. தாய்க் குலத்தை கண்டதுமே, லென்ஸ் மாமாவின் சுருதி, 50 சதவீதம் குறைந்து விட்டது...

உணவகத்தில் அமர்ந்தோம்... நடிகையின் தாய், 'ரெட் ஒயினும்' நானும், நடிகையும், 'சூப்' சொன்னோம்... 'இண்டியன் பிரிமியர் விஸ்கி' கேட்டார், லென்ஸ் மாமா!

'எங்கே காணாம போயிட்டீங்க... பிரபலமான அந்த, 'ஷூ' ஏற்றுமதியாளரை கல்யாணம் செஞ்சுகிட்டு செட்டிலாகீட்டீங்களா... உள் நாட்டில் இருக்கீங்களா... வெளிநாட்டில் செட்டிலாகீட்டீங்களா?' என, வரிசையாகக் கேள்விக் கணைகளை தொடுத்து, அடிக்கண்ணால் சுற்றுமுற்றும் பார்த்தேன்.

போவோர், வருவோர், பக்கத்து டேபிளில் அமர்ந்திருப்போர் என, நடிகையை நாசுக்காகப் பார்த்து, தமக்குள் அவரைப் பற்றி பேசிக் கொள்வதைக் காண முடிந்தது.

இதற்கிடையே, தூரத்தில் இருந்து எங்களை கவனித்து விட்ட அலுவலக அன்பர் ஒருவர், தம், 'கொலீகிடம்' எங்களைக் காட்டி, என்ன நினைத்தாரோ... தலையைத் திருப்பியபடி நழுவினார்.

இந்த இடைப்பட்ட நேரத்தில், 'ரெட் ஒயினை' ஒரே மடக்கில் முடித்திருந்த தாய்க்குலம், போதை வந்துவிட்டதாக தமக்குத் தாமே நினைத்து, சத்தமாக 'ஒவ்வொரு கேள்விக்கா அது பதில் பறையும்...' என்றார். தாய்க்குலத்தை அடக்கி வாசிக்கச் சொன்ன நடிகை, கொட்டித் தீர்த்தார்...

'மணி... கல்யாண வாழ்க்கையில் எனக்கு நம்பிக்கை இல்லே... அதனால, அந்த, 'பாய் பிரண்ட்'கிட்ட, 'எனக்காக காத்திருக்காதே... வீட்டுல பாக்கற பொண்ண கட்டிக்கோ'ன்னு சொல்லி அனுப்பிட்டேன்... அவனும் கல்யாணம் கட்டிகிட்டான்.

'சுதந்திரமா, இவ்வளவு காலம் வாழ்ந்தாச்சு; கல்யாண வயசும்  தாண்டியாச்சு... சொந்தமா சம்பாதிக்க வழி தெரியும்... இதற்கு மேல், ஒரு ஆம்பளகிட்ட பேச்சு வாங்கி, உத்தரவு வாங்கி, அவன் சொல் கேட்டு, என்னோட ஒவ்வொரு செயலுக்கும், 'பர்மிஷன்' கேட்டு, விளக்கம் கொடுத்து வாழறது நடக்காதுன்னு தோணிப் போச்சு...

'ஊர் பேசுமே... சமூகம் பேசுமேங்கறதுக்காக, ஒரு கல்யாணம் பண்ணிக்கிட்டு, என் வாழ்வையும் தொலைச்சு, அவன் வாழ்வையும் நரகமாக்க விரும்பல.

'அதுக்காக, என், 'செக்ஸ் லைப்'புக்கும் எந்த குறையும் வச்சுக்கல... மனதுக்கு பிடித்த நண்பர் இருக்கிறார்... மணமானவர் தான்! அவரது குடும்ப வாழ்வுக்கு எந்த குந்தகமும் வராத அளவில் நடந்து கொள்கிறேன். அவரது மனைவி, என் தோழி தான்... ஆனால், அவளுக்கு எங்கள் உறவு தெரியாது...

'ஒவ்வொரு சமயம் அவளை பார்க்கும் போது, குற்ற உணர்வு என்னுள் எழுவதுண்டு... அதனால், இப்போதெல்லாம் அடிக்கடி அவளை பார்ப்பதை தவிர்த்து விடுகிறேன்!

'கம்மிங் பேக் டு மை புரொபஷன்... இனி, எனக்கு கதாநாயகி வாய்ப்பு வரப்போவதில்லை... அம்மா, அக்கா, அண்ணி, காமெடி வேடங்கள், நிகழ்ச்சி தொகுப்பு... இதில் எல்லாம் விருப்பம் இல்லை... இதில், பெரிய அளவில் பணமும் பார்க்க முடியாது என்பது தெளிவானது...

'ஒரு விடுமுறையில், அமெரிக்கா போனேன்... போன இடத்தில் வேலை ஏதும் கிடைக்குமா... இறக்குமதி - ஏற்றுமதி செய்ய வாய்ப்புண்டா... தொழில் துவங்கலாமா என, பலவித ஆராய்ச்சிகளில் இறங்கினேன்...

'வேலை பார்க்கும் அளவிற்கு என்னிடம் கல்வித் தகுதி இல்லை... 'சூப்பர் மார்க்கெட்' போன்ற இடங்களில் எடுபிடி வேலை தான் கிடைக்கும் எனத் தெரிந்தது... இறக்குமதி - ஏற்றுமதியிலும், பழம் தின்று கொட்டை போட்டவர்கள் உட்கார்ந்து இருக்கின்றனர்... அதுவும் இல்லை என ஆனது!

'திருவனந்தபுரம், கோட்டையம், கொல்லம், கொச்சி போன்ற நகரங்களில் வசித்த, எனக்கு தெரிந்த குடும்பத்தினர் பலர், சொந்தமாக, 'பெட்ரோல் பங்க்'குகள் வைத்திருப்பது தெரிய வந்தது... அவர்கள் எல்லாம் மெத்த படித்தவர்களும் இல்லை... ஆங்கிலமும் சரளமாக வராதவர்கள்!

'பெட்ரோல் பங்க் நடத்துவது சுலபமான தொழிலாக தெரிந்தது... கையில காசு; வாயில தோச பிசினஸ்... கரன்சி டிரான்ஸாக் ஷன் கிடையாது... எல்லாம் கிரடிட் கார்டு தான். அதனால், திருட்டு பயமில்லை. வேலைக்கு ஆள் தேவையில்லை...

'பெட்ரோல் பங்க்குடன், சிறிய சூப்பர் மார்கெட் வைத்தால், உபரி வருமானம் என்பது தெரிந்தது. கையிலிருந்த பணம், கடன் வாங்கிய பணம் எல்லாத்தையும் போட்டு, 10 பங்க் எடுத்து விட்டேன்... 50 முதல் 60 லட்ச ரூபாய் வருமானம் வருது. ஒவ்வொரு பங்க்கா மேற்பார்வை பண்ணிக்கிறேன்...

'அவ்வப்போது இந்தியா வருகிறேன்... உன்னைப் போல நண்பர்களை சந்திக்கிறேன். வாழ்வு சுகமாக போகுது... நீ எப்போ அமெரிக்கா வர்றே... என்னோட, விருந்தாளியா வா... சொல்லு... உங்க ரெண்டு பேருக்கும் டிக்கெட் வாங்கி அனுப்பறேன்...' என, கோடை இடியாக முழங்கி முடித்தார்!

வாயுள்ள பிள்ளை எங்கானாலும் பிழைத்துக் கொள்ளும் என, நினைத்துக் கொண்டேன்!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us