தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/பகல் வேஷக்காரர்கள் அல்ல; அவர்கள்!

பகல் வேஷக்காரர்கள் அல்ல; அவர்கள்!

பகல் வேஷக்காரர்கள் அல்ல; அவர்கள்!


PUBLISHED ON : நவ 25, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 25, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பவித்ராவும், தங்கம்மாளும், ரயிலை தவற விட்டு விடுவோமோ என்ற பதட்டத்தில், அவசர அவசரமாக திருவள்ளூர் ரயில் நிலையத்திற்கு வந்தபோது, அவர்கள் போக வேண்டிய மின்சார ரயில், கிளம்ப தயாராக இருந்தது.

பெண்கள் பெட்டியில் ஏறப்போன பவித்ராவை, தடுத்து நிறுத்திய, தங்கம்மாள், ''அதுல கூட்டமா இருக்கும் மிஸ்... கடைசி வரைக்கும் நின்னுகிட்டே தான் போக வேண்டியிருக்கும்,'' எனக் கூறி, பக்கத்தில் இருந்த பொது பெட்டியில், இருவரும் ஏறினர்.

மின் ரயில், மெதுவாய் ஊர்ந்து செல்ல துவங்கியபோது, இரண்டு பெண்கள் ஓடி வந்து இவர்களின் பெட்டியில் ஏறினர். அவர்கள் ஏறியதை, ஜன்னல் வழியாக பார்த்த தங்கம்மாள், 'அய்யோ... தவறி விழுந்தால் என்னாவது...' என்று மனசுக்குள் பதறினாள்.

ஓடி வந்து ஏறியவர்கள், உள்ளே வந்த போது தான் தெரிந்தது, அவர்கள், பெண்கள் அல்ல; திருநங்கையர் என்பது. ஒருத்தி வயதானவள், குள்ளமாக இருந்தாள். முகத்திற்கு மஞ்சள் பூசி, நெற்றியில் பெரிய குங்கும பொட்டு, கழுத்து நிறைய கத்தையாய் பாசி மணிகளை அணிந்திருந்தாள்.

இன்னொருத்தி, நெடுநெடுவென ஒல்லியாய், சுடிதார் அணிந்து, எளிமையாய், இளமையாய், வசீகரமாய் இருந்தாள். இருவருமே அசல் பெண்கள் போலவே, குரலில் மட்டும் லேசான ஆண்மை இருந்தது.

உதட்டிற்கு மேல், மீசையை சுத்தமாய் வழித்திருந்த அடையாளம், 'பளீச்'சென தெரிந்தது.

திருநங்கையர் இருவரும் பெட்டியின் இறுதி பகுதிக்கு போய், கை தட்டி, ஒவ்வொருவரிடமும் காசு கேட்டுக் கொண்டிருந்தனர். சிலர், முகஞ்சுளித்தனர். இன்னும் சிலர், அவர்களை கவனிக்காதது போல், பார்வையை ஜன்னலுக்கு வெளியே திருப்பிக் கொண்டனர். ஒரு சில ஆண்கள், சில்லரை கொடுக்க, அவர்களின் தலையில் கை வைத்து, ஆசிர்வதித்து சென்றனர், அந்த திருநங்கையர்.

அவர்களில் சுடிதார் அணிந்திருந்த இளைய திருநங்கை, கை தட்டி, ''ஏதாவது உதவி பண்ணுங்க அக்கா,'' என சொல்லி, பவித்ராவிடம், கை நீட்டினாள்.

முகத்தை வெடுக்கென திருப்பிக் கொண்டாள், பவித்ரா.

''பார்த்துக்கா, கழுத்து சுளுக்கிக்கப் போகுது,'' என, கிண்டலாய் சொல்லி, கடந்து போனாள்.

திருநங்கையை அழைத்த தங்கம்மாள், 10 ரூபாய் தாளை கொடுக்கவும், சந்தோஷமாய் வாங்கிக் கொண்டாள். அவளின் தலையில் கை வைத்து ஆசிர்வதித்து, ரயில் நின்றதும் இருவரும், பெட்டியிலிருந்து இறங்கினர்.

அவர்கள் போனதும், கோபமாய், ''எதுக்கு பணம் குடுத்தீங்க... இவங்கள எல்லாம் நாம ஊக்குவிக்கவே கூடாது மிஸ்,'' என்றாள், பவித்ரா.

''ஏன் மிஸ்... அவங்களும் பாவம் இல்லையா... அவங்களுக்கும் வயிறு இருக்குல்ல,'' என்றாள், தங்கம்மாள்.

கோபம் குறையாமல், ''அவங்களுக்கு வயிறு மட்டுமா இருக்கு... கையும், காலும் தான் இருக்கு... எதுக்கு இப்படி, பொம்பள வேஷங்கட்டி, பிச்சை எடுத்து பிழைக்கணும் மிஸ்,'' என்றாள், பவித்ரா.

''தான் பெண்ணாய் உணர்கிற உண்மையை சொல்றது அவ்வளவு பெரிய குத்தமா மிஸ்... அவங்க, வேஷங்கட்டுறாங்கன்னு இப்படி கொச்சைப்படுத்துறீங்களே... உயிர் பிழைக்க, அவங்களுக்கு எத்தனை வாய்ப்புகள் இருக்கு இந்த உலகத்துல... ஒண்ணு பிச்சை எடுக்கணும், இல்லேன்னா, பாலியல் தொழில் பண்ணனும்... வேற என்ன தான் வழி?'' என்றாள், தங்கம்மாள்.

''அதெல்லாம் சும்மா சப்பைக்கட்டு... எவ்வளவு திருநங்கையர், 'டீசன்டான' வேலைகள் செஞ்சு பொழைக்கிறாங்க தெரியுமா... 'டான்ஸ்' ஆடுறாங்க, 'டிவி'யில, 'ஷோ' பண்றாங்க... சினிமாவில் நடிக்கிறாங்க, போலீசா, நர்சா வேலை செய்றாங்க... ஏன், சமையல்காரரா, டிரைவரா கூட இருக்கிறதா படிச்சிருக்கேன்,'' என்றாள், பவித்ரா.

''வீட்டுல இருந்து விரட்டப்படுற எல்லாருக்கும், அப்படிப்பட்ட வாய்ப்புகள் அவ்வளவு எளிதா கிடைச்சிடுமா மிஸ்... அதோட அவங்களுக்கு, அதுக்கான திறமைகளும் இருக்கணும்ல்ல,'' என்றாள், தங்கம்மாள்.

''வாய்ப்புகள் எதுவும், எப்பவுமே தானா தேடி வராது மிஸ்... அவங்க தான் உருவாக்கிக்கணும்... அதுக்கு முதல்ல, இப்படி பிச்சை எடுக்கிறதுல இருந்து வெளிய வரணும்... உங்கள மாதிரியானவங்க இரக்கம் காட்டுறேன் பேர் வழின்னு, அவங்க பிச்சை எடுக்குறத ஊக்குவிக்காம இருக்கணும்... இப்ப தான் அரசே, இவங்கள, 'மூன்றாம் பாலினமா' அங்கீகரிச்சுட்டாங்கல்ல,'' என படபடத்தாள், பவித்ரா.

பத்து நாட்களுக்கு முன், சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நிகழ்ந்த சம்பவம் ஒன்றை நினைவு கூர்ந்தாள், தங்கம்மாள்.

அன்று, ஏதோ ஒரு விடுமுறை தினம். கணவர் முத்துக்குமாருடன், தி.நகருக்கு போய், 'ஷாப்பிங்' பண்ணி, மதிய வேளையில் திரும்பிக் கொண்டிருந்தாள், தங்கம்மாள்.

அவர்கள் பயணிக்க வேண்டிய மின்சார ரயில், சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்தது. ரயில் பெட்டியின் கடைசி இருக்கையில், ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள், ஒரு பெண். பக்கத்தில் போய் பார்த்தபோது, அது ஒரு திருநங்கை என தெரிந்தது.

இவர்கள் வேறொரு இருக்கையில் உட்கார்ந்தனர்.

கொஞ்ச நேரத்தில் ஒவ்வொருவராக பெட்டியில் ஏறத் துவங்கினர். அரவம் கேட்டதில், விழித்த திருநங்கை, வாரிச்சுருட்டி எழுந்து, இடது கோடியில், ஜன்னல் ஓரத்தில் போய் உட்கார்ந்து கொண்டாள். பெண்கள் சிலர், திருநங்கை அருகில் உட்கார தயங்கி, நின்றபடியே வெறித்தனர்.

'ஏய்... நீ இப்படி ஜம்பமா சீட்டுல உட்கார்ந்திருந்தா, மத்த பொம்பளைங்க எப்படி உட்காருவாங்க... எழுந்து போவியா...' என்றார், கோபமாக, ஒரு பெரியவர்.

அவளுக்கு கோபம் வந்து, 'என்ன... ஏய், ஓய்ங்குற... நானென்ன உன் பொண்டாட்டியா... ஏன், 'பொட்டை'ன்னா சீட்ல உட்காரக் கூடாதா... எப்பவுமே ரயில்ல வாசப்படியில நின்னுகிட்டே தான் பயணம் பண்ணணுமா... இந்த ரயில் என்ன, உன் அப்பன் வீட்டு சொத்தா?' என, பேசிக் கொண்டிருக்கும்போதே, கைகளாலும், உடலாலும், ஆபாசமான சேஷ்டைகள் செய்தாள்.

'பார்த்தீங்களா... ரயில்ல, கை தட்டி பிச்சை எடுத்து பிழைக்குறதுக்கு, என்ன வாய்க் கொழுப்பு...' என்றார், இன்னொரு வயதானவர்.

அவ்வளவு தான்... காது கேட்க, கூசுகிற வார்த்தைகளை வாரி இறைக்க துவங்கினாள், திருநங்கை.

தங்கம்மாளின் கணவர் முத்துக்குமார், திருநங்கைக்கு ஆதரவாய், கூட்டத்தினரை பார்த்து, 'ரயில்ல நமக்கு சமமா, உட்காரக் கூடாதுன்னு அவங்கள எழுந்திரிக்க சொல்லி சண்டை போடுறீங்க... அப்புறம், அவங்க பிச்சை எடுக்குறாங்கன்னு இளக்காரமா பேசுறீங்க...

'எங்க போய் சார் வேலை பார்ப்பாங்க... அவங்களுக்கு, யார் வேலை தர்றாங்க... அவங்க, இப்படி கை தட்டி பிச்சை எடுத்து பிழைக்குறதுக்கு, ஒரு வகையில இந்த சமூகமும், நாம எல்லாரும் தான காரணம்...' என்றான்.

'அவனா நீ...' என்றொரு சினிமா வசனத்தை, வாலிப விடலை ஒருவன், கேலியாய் உச்சரிக்க, எல்லாரும், 'கொல்'லென்று சிரித்தனர்.

கொஞ்ச நேரம் சீட்டிலேயே பிடிவாதமாய் உட்கார்ந்திருந்த திருநங்கை, என்ன நினைத்தாளோ சட்டென்று எழுந்து, எப்போதும் போல வாசலருகே போய் உட்கார்ந்தாள். அவள் முகத்தில், சோர்வும், களைப்பும் அப்பட்டமாய் தெரிந்தது. அவளை பார்க்க, மிகவும் பரிதாபமாக இருந்தது, தங்கமாளுக்கு. உடனே, பெண்கள் எல்லாம், நான், நீ என்று போட்டி போட்டு ஓடி வந்து, அப்பகுதியில் இடம் பிடித்து உட்கார்ந்தனர்.

இச்சம்பவத்தை கூறி, ''அரசு, இவங்களை அங்கீகரிச்சுட்டா போதுமா... சக மனுஷங்க, இன்னும் அவங்கள மனுஷ பிறவியாவே மதிக்கலையே,'' என்றாள், தங்கம்மாள்.

ஆவடியில் இறங்கி, கீரை வாங்குவதற்காக, மார்க்கெட்டை நோக்கி நடக்க துவங்கினர், பவித்ராவும், தங்கமாளும்.

வழியில் நிறைய பெண்கள், கீரை விற்றுக் கொண்டிருந்தனர். அவையெல்லாம் மனசுக்கு ஒப்பவில்லை அவர்களுக்கு. கீரைகள் வாடிப் போயிருந்தன. சிலர், கீரை மீது தண்ணீர் தெளித்துக் கொண்டிருந்ததால், கொஞ்ச தூரம் போகவும், ஒரு பெண், கீரை விற்றுக் கொண்டிருப்பது தெரிந்தது. அவளிடம் எல்லா கீரைகளும் பச்சை பசேலென்று தளதளவென்றிருந்தன.

பக்கத்தில் போனதும் தான், கீரை விற்பவள், பெண்ணல்ல, திருநங்கை என்றதும், தங்கம்மாளுக்கு ஆச்சரியமாக இருந்தது. முதல் முறையாக, இப்படி ஒரு வேலை செய்யும் திருநங்கையை பார்க்கிறாள்.

ஒரு கட்டை எடுத்து, உள்ளே எப்படி இருக்கிறது என்று, தங்கம்மாள் ஆராய்ந்து கொண்டிருக்க, ''உள்ள, நேத்து முந்தாநேத்து பறிச்சு, விற்காம அழுகி போன கீரையை வெச்சு கட்டியிருப்பேன்னு தான பார்க்குறீங்க... அப்படியெல்லாம் ஏமாத்த மாட்டேன்க்கா...

''சாயங்காலம் தான் தோட்டத்துலருந்து பறிச்சு கொண்டாந்து இருக்கேன்... செயற்கை உரம், எதுவும் போடாம, நாங்களே எங்க வீட்டு தோட்டத்துல விளைவிச்ச கீரைங்கக்கா,'' என்றாள், திருநங்கை.

திருப்தியுற்ற தங்கம்மாள், ''சரிங்க... கீரை கட்டு எவ்வளவுங்க?'' என்றாள்.

''ஒரு கட்டு, 10 ரூபாய்க்கா... ரெண்டா எடுத்தீங்கன்னா, 15 ரூபா கொடுங்க,'' என்றாள்.

''உங்களுக்கு என்ன கீரை வேணும், பவித்ரா மிஸ்... அரைக்கீரையா, முளைக்கீரையா?'' என்று தங்கம்மாள் கேட்க, ''எனக்கு எதுவும் வேணாம்... வாங்க மிஸ்... சீக்கிரம் போகலாம்,'' என்று அவசரப்படுத்தி, தங்கம்மாளை எதிர்பார்க்காமல், அங்கிருந்து அவசரமாக நடக்கத் துவங்கினாள், பவித்ரா.

இரண்டு கட்டு கீரைகளுக்கு, 15 ரூபாய் கொடுத்து, வேகமாய் நடந்து, பவித்ராவிடம் போன தங்கம்மாள், ''நீங்கதான மிஸ், கீரை வாங்கணும்ன்னீங்க, அப்புறம் ஏன் வாங்கலை?'' என்றாள்.

முகத்தை அருவருப்பாய் வைத்து, ''அய்ய, போயும் போயும், 'அது'கிட்ட போயா கீரை வாங்குவாங்க... சே,'' என்றாள், பவித்ரா.

''இப்ப புரியுதா பவித்ரா மிஸ்... அவங்க ஏன் பிச்சை எடுக்குறாங்க... யாரு, பகல் வேஷங்கட்டிக்கிட்டு அலையுறதுன்னும்,'' என்ற தங்கம்மாள், அவளிடமிருந்து விலகி, வேகமாய் வீட்டை நோக்கி, நடக்க துவங்கினாள்.

சோ.சுப்புராஜ்

படிப்பு: பி.இ., கட்டட பொறியாளர், கல்லுாரியில் படிக்கும் காலத்திலேயே எழுத ஆரம்பித்து, தற்போது, தமிழ் வார, மாத இதழ்களில், இவரது நூற்றுக்கணக்கான சிறுகதைகள், குறுநாவல்கள் மற்றும் கவிதைகள் வெளியாகியுள்ளன.

பிரபல தமிழ் இதழ்கள் நடத்திய பல சிறுகதை போட்டிகளில் கலந்து, பரிசுகளும் பெற்றுள்ளார்.

இவரது சிறுகதை தொகுப்பு நூல், 2012ல் வெளியாகியுள்ளது.தொடர்ப்புக்கு: 99520 81538

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us