தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,


PUBLISHED ON : அக் 07, 2012

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 07, 2012


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருமணமான பெண்களுக்கு, தம் கணவர் மூலமாக எத்தனை, எத்தனை பிரச்னைகள்... அவர்களது பிரச்னைகளை, கொட்டித் தீர்க்க, அதன் மூலம் ஆறுதல் தேட உண்மையான தோழியோ, உறவினரோ இல்லாது போய் விடுவது கொடுமையானது.

தம் மனச்சுமையை இறக்கி வைக்க, பேனாவையும், பேப்பரையும் எடுத்து எனக்கு எழுதி விடுகின்றனர்; மனபாரத்தில் ஓரளவு மறைந்து விட்டதாக கருதுகின்றனர்.

வாசகியர் எழுதிய கடிதங்களில் சிலவற்றை இங்கே தருகிறேன்; பிரச்னைகளின் பரிமாணங்களை, எல்லா வாசகர்களும் புரிந்து கொள்வதற்காக!

சேலம் மாவட்ட வாசகியின் கடிதம்:

எனக்கு வயது 25. திருமணமாகி, நான்கு ஆண்டுகள் ஆகின்றன. ஒரு பெண் குழந்தைக்குத் தாய். என் கணவர் சொந்தத் தொழில் செய்கிறார். காதலித்து திருமணம் செய்து கொண்டோம். என் வீட்டில் எதிர்ப்பு இருந்ததால், கட்டிய புடவையோடு வீட்டை விட்டு நான் வந்து விட்டேன். என்னோடு பேசுவதில்லை என் பெற்றோர். என் மீது உயிரையே வைத்திருந்த என் கணவர், இப்போது என்னை வெறுக்கிறார். என்னோடு பேசுவதில்லை; அடித்து துன்புறுத்துகிறார்.

என்னை எப்படியாவது டைவர்ஸ் பண்ணி விட்டால், நிறைய நகை போட்டு பெண் தருகிறோம் என்று சொல்கின்றனர். இதை மனதில் வைத்து, என்னை அடிக்கடி அதிகமாக அடிக்கிறார்; வீட்டில் உள்ள பொருட்களை உடைக்கிறார்; வீட்டை விட்டு வெளியே போகச் சொல்கிறார். வீட்டை விட்டு வெளியேறி, நான் எங்கே போவது என்று தெரியவில்லை. இந்தச் சூழ்நிலையில், தற்கொலை தான் எனக்கு சரியானதாக தெரிகிறது.

என் குழந்தையை நினைத்தால், எனக்கு அழுகையாக இருக்கிறது. ஒரு அனாதை இல்லத்தில் என் குழந்தையை சேர்த்து விட்டு, நான் செத்து விடலாம் என்று நினைக்கிறேன். நீங்கள் தான் ஒரு நல்ல யோசனை சொல்ல வேண்டும் ப்ளீஸ்...

வேலூர் மாவட்ட வாசகி:

எனக்கு குழந்தைகள் இருக்கிறது. என் கணவர் மிகவும் கோபக்காரர். என்னையும், என் குழந்தைகளையும் பொறுப்பாக கவனிக்க மாட்டார். இதற்கிடையில், அவர் வேலை பார்க்கும் இடத்தில், ஒரு பெண்ணிடம் நெருங்கி பழகுவதாக தகவல் கிடைத்ததால், அந்த பெண்ணின் அப்பாவிடம் சொல்லி தடுத்தேன். அதை அறிந்து, என்னை மிகவும் கொடுமைப்படுத்துகிறார்.

சீக்கிரமாக வீட்டிற்கு வருவது கிடையாது. என்னை ஊருக்கே கூட்டிப் போக மாட்டேன் என்கிறார். எப்போதும், என்னை பழி வாங்குவதிலேயே குறியாக இருக்கிறார். அந்தப் பெண்ணின் அப்பாவிடம் நான் கண்டித்ததால், என் பெற்றோரையும், சொந்தக்காரர்களையும் மிகவும் அவமானப்படுத்துகிறார்; பேசுவது கிடையாது.

நானும், அவரைப் போல் படித்தவள்; நல்ல குடும்பத்தில் பிறந்தவள் தான். ஏன், என்னை இப்படி பழிவாங்குகிறார். இந்த நிலை மாற என்ன செய்ய வேண்டும்? பொறுமையாக இருந்து நான் சோர்ந்து விட்டேன்.

திருச்சி வாசகி:

பெரியோர் ஆசீர்வாதத்துடன் நடந்த காதல் கல்யாணம் எங்களுடையது. என் கணவர், ஒரு பெண் பொறுக்கி என்பது மட்டும் எனக்கு தெரிந்திருந்தும், கல்யாணம் ஆனதும் சரியாகி விடுவார் என்ற தன்னம்பிக்கையில் என்னை நானே ஏமாற்றி, வாழ்க்கையை அமைத்துக் கொண்டேன்.

இவர் புத்திக்கு ஏற்ப தொழிலும் அமைந்து விட்டது. வாரத்தின் ஏழு நாட்களையும் ஆபீசிலேயே பகலில் பல பெண்களுடன் பொழுதை கழிக்கிறார். பல பெண்களின் தொடர்பு பற்றி, பலமுறை அன்பாக எடுத்துக் கூறியும், இன்று வரை திருந்தவில்லை. நேற்றுக் கூட கருத்தடை சாதனம், ஆபீசில் இருந்து எடுத்தேன்.

இளமை முதல் என்னைப் பற்றி தெரிந்திருந்தும், எந்தப் பெண்ணுடனோ, ஆணுடனோ என் அலுவலகத்தில் பேசக்கூடாது என்கிறார். என்னை அடிமை போல் நடத்துகிறார். குடும்பத்தில், பிள்ளைகளின் படிப்பை தவிர, வேறு பொறுப்புகளோ, பொழுது போக்கோ எனக்கில்லை.

என்னை விட்டு பிரிந்து வாழவும் மனம் இல்லை; சந்தோஷமாக வைத்துக் கொள்ளவும் தெரிய வில்லை! இவரது கெட்ட பழக்கம் குறித்து, ஏதாவது கேட்டால், 'உன்னுடைய சம்பளம் எத்தனை '...'க்கு வரும்!' என்று ஏளனம் பேசுகிறார்.

பட்டதாரியாகி, பதவி பெற்றபின், பிறந்த வீட்டு பாசம் இழந்து, சம்பாதித்துக் கொடுத்தும், சந்தோஷமான வாழ்க்கையை அமைத்துக் கொள்ள தெரியாத முட்டாள் என்று, என்னை நானே நொந்து கொண்டாலும், இவரை எப்படி திருத்துவது என்றே தெரியவில்லை.

பெற்றோரின் பேச்சைக் கேட்காததால், பெண் புத்தி, பின் புத்தி என்பது பொருத்தமாக அமைந்து விட்டது எனக்கு.

இத்தகைய மோசமான ஒருவரை கணவராக ஏற்றுக்கொண்ட நான், பெற்றோரை நினைப்பதா, பிள்ளைகளை நினைப்பதா, என்னை நினைத்து வருந்துவதா எனத் தெரியாமல் குழம்பிக் கொண்டிருக்கிறேன்...

— ஒவ்வொருவருக்கும் உள்ள பிரச்னைகளின் வடிவங்கள் கொஞ்சமாவது தெரிந்ததா?

***

'என்னை யாராலும் ஏமாற்ற முடியாது!' என்று பெருமை அடித்துக் கொண்டான் அப்துல். அதைக் கேட்ட முல்லா நஸ்ருதீன், 'உன்னால் இங்கே ஐந்து நிமிடம் காத்திருக்க முடிந்தால், அதற்குள் உன்னை ஏமாற்றும் வழியைக் கண்டுபிடித்து வருவேன்!' என்றார்.

'ஓ... தாராளமாக!' என்று இறுமாப்புடன் பதில் சொன்னான் அப்துல்.

அவசரமாக எங்கோ சென்றார் முல்லா.

நேரம் சென்றது, ஐந்து நிமிடம் அரைமணியாகியது; ஒரு மணி நேரம்; இரண்டு மணி நேரம் ஓடி விட்டது. முல்லா திரும்பியபாடில்லை; அப்துலுக்கோ ஒரே கோபம்!

நடந்ததைக் கவனித்துக் கொண்டிருந்த அருகிலிருந்த கடைக்காரன், 'என்ன அப்துல்! வெகு நேரமாய் நிற்கிறாய்?' என்று கேட்டான்.

'என்னை ஏமாற்றும் வழியைக் கண்டுபிடித்து வர முல்லா போயிருக்கிறார்; அவருக்காகத் தான் காத்துக் கொண்டிருக்கிறேன்...' என்றான்.

'முட்டாளே! அவர் போனதே உன்னை ஏமாற்றிவிட்டுத் தானே! இப்படியே வீணாக அவரை எதிர்பார்த்து நீ நிற்கப் போகிறாய்!' என்று சொல்லி சிரித்தான் கடைக்காரன்.

— சமீபத்தில் படித்த முல்லா கதை.

***

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us