PUBLISHED ON : அக் 07, 2012

அ நிறம் | அளவு
வாழ்க்கையில் முழுமையான வெற்றி சிலருக்கு மட்டுமே கிடைக்கிறது. அந்த சிலருக்கு மட்டுமே தெரிந்த வெற்றியின் ரகசியம், பலருக்கும் பயன்பட வேண்டும் என்ற நோக்கத்தில் உருவானதுதான் இந்த வழிகாட்டித் தொடர்.
பல்வேறு துறைகளில் சாதனையாளர்களை நேரில் சந்தித்து அறிந்த குணநலன்களையும், வாழ்க்கையில் பல அம்சங்களைத் தெளிவுபடுத்திய சிறந்த நூல்களின் சாராம்சங்களையும், ஒன்று சேர்த்து குழைத்ததில் கிடைத்த வண்ணக் கலவையை, சமூக அக்கறையென்னும் தூரிகையால் வரைந்த ஓவியம் தான்,
'வெற்றியின் ரகசியம்' எனும் இந்தத் தொடர்.திறமை!
எந்தத் துறையிலும் உச்சத்தை அடைவதற்கு, அந்தந்தத் துறைக்கு தேவையான திறமை மிக அவசியம். ஒரு துறையைத் தேர்ந்தெடுப்பதற்கு முன், அந்தத் துறைக்கு தேவையான திறமை நம்மிடத்தில் இருக்கிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும். மேலும், அந்தத் துறையில் சம்பந்தப்பட்டவர்களிடம் ஆலோசனை கேட்கலாம். நம் நலனில் அக்கறை உள்ளவர்களை அணுகலாம்.
எந்த துறையாக இருந்தாலும், சில அடிப்படைத் திறமைகள் தேவைப்படுகின்றன. அவற்றைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
நாம் படிக்கும் மற்றும் கேள்விப்படும் விஷயங்களை மேலோட்டமாக மட்டும் பார்க்காமல், அதன் அடிப்படை சாராம்சத்தை புரிந்து கொள்வதற்கு, புரிந்து கொள்ளும் திறமை அவசியம். மேலும், நம்மைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளை உற்று நோக்கி, உள்ளர்த்தத்தை புரிந்து கொள்ள வேண்டும். காலத்திற்கு ஏற்ப மாறிக் கொண்டே இருக்கும் மக்களின் மனப்பான்மை, தொழில் நுட்ப மாற்றங்கள், அரசியல் சூழ்நிலைகள் மற்றும் புதிய அரசாங்கத் திட்டங்கள் ஆகியவை நம்முடைய தொழிலை எந்த அளவுக்கு மேம்படுத்தும் அல்லது பாதிக்கும் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
புரிந்து கொள்ளும் திறமையை, இரு வகையாகப் பிரிக்கலாம். முதல் வகை, கேட்டுப் புரிந்து கொள்ளும் திறமை. பள்ளிக்கே போகாமல் மேதையானவர்கள் அல்லது முறையாக சங்கீதம் படிக்காமல், பிரபலமான பாடகர்கள், 'எல்லாம் கேள்வி ஞானத்தால் கற்றுக் கொண்டேன்' என்று சொல்லக் கேட்டிருப்போம். இந்தத் திறமையை வளர்ப்பதற்கு, கேட்கும் விஷயத்தில் ஈடுபாடும், ஆர்வமும் அவசியம். வகுப்பில் நடத்தும் பாடத்தில் ஆர்வம் இல்லாத மாணவனும், வேலையில் ஆர்வம் இல்லாத தொழிலாளியும் வளர முடியாது. இந்தத் திறமையை வளர்ப்பதற்கு, தெளிந்த நீரோடை போல, சலனமில்லாத மனம் தேவை. நம்மிடத்தில் இருக்கும் எரிச்சல், கோபம், ஆத்திரம், 'இவனுக்கென்ன தெரியும்' என்ற இருமாப்பு, நம்முடைய கேட்கும் திறனை மட்டுப்படுத்தும்.
இரண்டாம் வகை, படித்துப் புரிந்து கொள்ளும் திறன். இந்தத் திறமையை வளர்ப்பதற்கு, படிக்கும் விஷயத்தில் ஆர்வம், கவனம், ஒருமுகச் சிந்தனை மற்றும் ஏற்கனவே தெரிந்த விஷயத்தோடு தொடர்புபடுத்திப் பார்த்தல் அவசியம். பொதுவாக நிறைய பேர் மேலோட்ட மாக நுனிப்புல் மேய்பவர்களாகத்தான் இருப்பர். ஆனால், ஒரு துறையில் உன்னத நிலையை அடைவதற்கு, ஆழ்ந்த கவனத்துடன், உள்ளர்த்தம் புரிந்து படித்து, உள்வாங்கும் திறமையை வளர்க்க வேண்டும்.
அடுத்து, மிகவும் முக்கியமான திறமையான, கம்யூனிக்கேஷன் ஸ்கில் பற்றிப் பார்ப்போம். ஒரு துறையின் தலைவருக்கும், மேலதிகாரிக்கும், ஆசிரியருக்கும், பெற்றோருக்கும், தங்களது கருத்தை வெளிப்படுத்தும் திறமை அவசியம் தேவை.
நாம் தெரியப்படுத்த வேண்டிய விஷயத்தை பேச்சு மூலம், எழுத்து மூலம், அங்க அசைவின் மூலம், நாம் எடுக்கும் முடிவின் மூலம், செயலின் மூலம், அணியும் உடையின் மூலம், ஏன் மவுனத்தின் மூலம் கூட வெளிப்படுத்தலாம். இதில் முக்கியமாகக் கவனிக்க வேண்டியது, நாம் சொல்ல வந்த கருத்து, சம்பந்தப்பட்டவருக்கு சரியாகப் போய்ச் சேர்ந்ததா என்பது தான்.
சிறந்த கருத்து கம்யூனிகேட்டராக இருப்பதற்கு, மேடைப் பேச்சாளராக இருக்க வேண்டிய அவசியம் இல்லை.
அதற்கு, அடிப்படைத் தேவைகள் எவை என்று பார்ப்போம். முதலில் நாம் என்ன பேசப் போகிறோம், யாரிடம் பேசப் போகிறோம், நாம் பேசுவதால் என்ன விளைவு ஏற்பட வேண்டும் என்பதோடு, எந்த இடத்தில் மற்றும் எந்தச் சமயத்தில் பேசுவது என்பது பற்றிய தெளிவும் இருக்க வேண்டும். நாம் பேசும் விஷயத்தைப் பற்றிய ஆழமான அறிவு வேண்டும். சம்பந்தப்பட்ட விவரங்களைச் சேகரித்து, கோர்வையாக மனதில் ஓட விட்டு, அவசியப்பட்டால் ஒத்திகை பார்த்துப் பேசுவது நல்ல பலனைக் கொடுக்கும். நம்முடைய சொந்த விருப்பு, வெறுப்பு, அந்தத் தருணத்தில் நம்முடைய மனநிலை, நாம் சொல்ல வந்த கருத்தை, எந்த விதத்திலும் பாதிக்கக் கூடாது.
ஒரு சூழ்நிலையை ஆராய்ச்சி செய்த பின், சரியான நேரத்தில், தெளிவான முடிவெடுக்கும் திறமை வேண்டும்.
மேலதிகாரிகளுக்கு கண்டிப்பாக இருக்க வேண்டிய திறமை, கண்காணிக்கும் திறமை, யாரிடம் எப்படி வேலை வாங்குவது என்ற சாதுரியம் தெரிந்திருக்க வேண்டும். 'ஆடுற மாட்டை ஆடிக் கறக்கணும், பாடுற மாட்டைப் பாடிக் கறக்கணும்' என்ற பாடல், கண்காணிப்பாளர்களுக்காகவே எழுதப்பட்டது. தம்மிடம் வேலை பார்ப்பவர்களை உற்சாகமூட்டி, ஊக்கப்படுத்தி முன்னின்று வழி நடத்தி, அலட்சியமா# இருப்பவரைக் கண்டித்து, வேலை வாங்கும் திறமையை வளர்க்க வேண்டும்.
பதவி உயர உயர, தலைமைப் பண்புகள் வளர வேண்டும். வரலாற்று நாயகர்களுக்கு, தம் குழுவை வழி நடத்துவதில் வசீகரம் இருக்கும். மாவீரன் நெப்போலியன், எந்த பின்புலமும் இல்லாமல், தன் சொந்த முயற்சியில் கேப்டன் பதவியை அடைந்தார். அவரை மேலே வளர விடாமல் மேலதிகாரிகள் முட்டுக்கட்டை போட்டுக் கொண்டிருந்தனர். அவரைக் கீழே தள்ளுவதற்காக, பிரிட்டிஷ் கட்டுப்பாட்டிலிருந்த கோட்டையை மீட்கும், கடினமான பணி அவரிடம் தரப்பட்டது. அப்போது, மழை கொட்டிக் கொண்டிருந்தது. ராணுவ வீரர்கள் களைப்புடன் இருந்தனர். 'தாக்குதலைத் தள்ளிப் போடலாமே' என, நெப்போலியனிடம் யோசனை கூறினர். அப்போது நெப்போலியன், 'நான் முன்னே செல்கிறேன். மற்றவர் அனைவரும் என் பின்னால் வந்து, நான் எப்படி கோட்டையைக் கைப்பற்றப் போகிறேன் என்று வேடிக்கை பாருங்கள்...' என்று சொல்லி, முன்னால் செல்ல ஆரம்பித்தார்.
நெப்போலியனிடம் விசுவாசமாக இருந்த வீரர்கள், ஆக்ரோஷமாக அவரைப் பின் தொடர்ந்து சென்று போராடி, கோட்டையைக் கைப் பற்றினர். மெய்சிலிர்க்க வைக்கும் இந்த வரலாற்று நிகழ்ச்சி, தலைமை பண்புக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.
ஒரு குழுவோடு சேர்ந்து வேலை பார்க்கும் போது, அனைவரோடும் சேர்ந்து வேலை செய்யும் குழுத்திறமை வேண்டும். நல்ல திறமையிருந்தும், அடுத்தவருடன் ஒத்துப் போகும் குணம் இல்லாதவர்கள், குழுவினரால் நிராகரிக்கப்படுவர். ஒரு குழுவில் வேலை செய்யும் போது, அந்தக் குழுவின் போக்கைப் புரிந்து கொள்ள வேண்டும். அடுத்தவருடைய விருப்பு, வெறுப்பைப் புரிந்து கொள்ளாமல், தன்னிச்சையாக முடிவெடுப்பது, குழுவின் ஒற்றுமையை பாதிக்கும்.
துரதிர்ஷ்டவசமாக நம்முடைய கல்வித் திட்டத்தில், புத்தகத்தை மனப்பாடம் செய்து ஒப்புவித்தல் மற்றும் தேர்வில் மதிப்பெண் பெறுதல் மட்டும் தான் மாணவப் பருவத்தில் தேவையான திறமை என்று நம்பப்படுகிறது. ஆனால், வளர்ந்து ஆளாகிய பின், நம் வளர்ச்சிக்கு முக்கியமாக தேவைப்படுவது, மேற்சொல்லப்பட்ட திறமைகள் மட்டுமே. சிலர் கடுமையாக உழைத்தும், முன்னுக்கு வர இயலாததற்குக் காரணம், தங்களின் திறமையை வளர்த்துக் கொள்ளாததுதான்.
சமீபத்தில் பள்ளிகளில், 40 சதவீதம் மதிப்பீடு, பல்வேறு திறமைகளுக்காகக் கொடுக்கப்பட வேண்டும் என்ற, அரசின் திட்டம் வரவேற்கப்பட வேண்டியது. வருங்காலத்தில் பள்ளிக்கூடங்கள், 'திறமைக் கூடங்களாக' மாற வேண்டும். வெறும் புத்தகப் புழுக்களை மட்டுமே உருவாக்கக் கூடாது. எந்த நிறுவனத்திலும், நம் திறமை மற்றும் பங்களிப்பை வைத்துத்தான் சம்பளம் மற்றும் பதவி உயர்வு இருக்கும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
ஆகவே, வெற்றி பெற அடிப்படைத் தேவை திறமை. ஆதலால், நம் திறமையைத் தினமும் வளர்த்துக் கொண்டே இருப்போம்.
— தொடரும்.
சி. அருண்பரத், கூடுதல் ஆணையர், வருமான வரித்துறை, மும்பை
