தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,


PUBLISHED ON : மார் 17, 2013

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 17, 2013


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெண் சிசுக் கொலைக்கு எதிரான குரல், பலமாக ஒலித்து கொண்டிருக்கிறது; கருவிலேயே ஆணா, பெண்ணா என்று விஞ்ஞான முறையில் கண்டறிந்து சொல்லவும் தடை! ஆனால், பெண்ணடிமைத்தனத்திற்கு பெரிதும் காரணம், இந்து மதத்தத்துவ கோட்பாடுகளே என்று தர்க்கிக்கிறது, 'பெண்ணியம் தோற்றமும், வளர்ச்சியும்' என்ற நூல். அதிலிருந்து சில பகுதிகள்:

இந்துக் குடும்பங்களில், ஆண் குழந்தைகளுக்குத் தான் மதிப்பு அதிகம். இதற்குப் பல காரணங்கள் சொல்லப்பட்டாலும், அடிப்படைக் காரணம், இந்து மதக் கோட்பாடுகள் தான். இந்தியக் குடும்பங்களில் பெற்றோர் இறந்தவுடன், அவர்களுக்கு இறுதிக் கடன்களை ஆற்றவும், பின், அவர்கள் ஆத்மா சாந்தியடையவும், ஆண்மக்களே தகுதி உள்ளவர்களாகக் கருதப்படுகின்றனர்.

தந்தை வழிக் குடும்பங்களில் குடும்பப் பெயரும், சொத்துரிமைகளும், ஆண் மக்களையே சென்றடையும். அதனால், குடும்பம் வழி வழியாக தழைத்தோங்க, ஆண் மக்களே தேவைப்பட்டனர். ஆண் மக்கள் பிறந்தது முதல் இறப்பது வரை, பெற்றோருடன் வாழ்ந்து வந்ததால், அவர்கள் பொறுப்பாயிற்று இது.

இதற்கு மாறாக, பெண் குழந்தைகள் திருமணமான பின், பெற்றோரைப் பிரிந்து, கணவன் வீடு சென்று, வாழ்ந்து வருகின்றனர்.

பெண் குழந்தைகளை, வளர்த்து ஆளாக்கி, திருமணம் செய்து கொடுப்பதும், பெற்றோருக்கு ஒரு சுமையான பொறுப்பாகி விட்டது. கணவன் இறந்தாலோ, அவனால் கைவிடப்பட்டாலோ, அவர்களை வைத்துக் காப்பாற்றும் பொறுப்பும் பெற்றோரைச் சேர்கிறது.

அதிக பெண்களைப் பெற்ற தந்தையை, சமூகம் தாழ்வாகக் கருதுகிறது. ஆண், தாழ்ந்த ஜாதியில் மணம் புரிந்து கொண்டாலும், அவன் குடும்பம் ஏற்றுக் கொள்கிறது; பெண், தாழ்ந்த ஜாதி ஆணைத் திருமணம் செய்து கொண்டால், குடும்பம் அவளைப் புறக்கணித்து, ஏற்பதில்லை.

— இப்படி இந்து மதக் கோட்பாடுகளே பெண் சிசுக் கொலைக்கு காரணமாகிறது என்கிறது இந்நூல். இது குறித்து நம்மவர்கள் சிந்தித்தால் என்ன?

***

தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளின் செயல்பாடு குறித்து, முன்பே ஒரு முறை கொட்டித் தீர்த்து இருக்கிறேன்.

வங்கி அலுவலர்களின் அலட்சியப் போக்கும், பேச்சும், நடவடிக்கைகளும் மிகுந்த வேதனையையும், எரிச்சலையும் ஏற்படுத்தும்.

ஐந்து ரூபாய், பத்து ரூபாய் கடன் வாங்கியவர்களை விரட்டோ விரட்டு என விரட்டுவர் - கணக்கில் ஊழல் செய்ய, உடன் இருந்தே உதவி செய்வர் - கை கட்டி வாய் பொத்தி, 'சலாம்' அடிப்பர்.

நம் சேமிப்புக் கணக்கில் இருந்து பணம் எடுக்கும் போதோ, போடும் போதோ கூட விரட்டுவர். 'என்னப்பா... கணக்கை, 'ஆப்பரேட்' செய்யவே இல்லைன்னு ஆடிட்டுல எழுதி வச்சிருக்காங்க...' — இது பேங்க் கிளார்க்கின் கேள்வி.

'எங்கண்ணன் ஊரிலிருந்து, 'செக்' அனுப்பினால் தான், இந்த கணக்கை பயன்படுத்துவேன்!' — வாடிக்கையாளர் பதில்.

'நோ... நோ... அப்படியெல்லாம் சொல்லக் கூடாது... 'ரெகுலரா ஆப்பரேட்' செய்யணும்!'

'சரி சார்... இனிமேல் உங்க சொல்படியே நடக்கிறேன். செக் புத்தகத்துல, 20 தாள் இருக்கு... தினமும், 25 ரூபாய்க்கு, 'செக்' போட்டு அனுப்புறேன்...' என, அப்பாவி போல முகத்தை வைத்து அந்த வாடிக்கையாளர் கூறவும், பேங்க் கிளார்க்கின் முகம் போன போக்கை பார்க்க வேண்டுமே...

பேங்கில் வேலை செய்பவர்கள் மீது, பொது மக்கள், வாடிக்கையாளர்களுக்கு வெறுப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. அவ்வப்போது, ஆங்காங்கே அது வெடித்துக் கொண்டும் உள்ளது.

போகட்டும்... பேங்க் நடவடிக்கை பற்றி கேள்விப்பட்ட சுவையான சம்பவங்கள் மூன்று:

* இது கேரளாவில்: தமிழகத்தில் வேலை பார்த்து வந்த வங்கி மேலாளர் ஒருவர், கேரளாவுக்கு மாற்றப்பட்டு இருக்கிறார். அங்கு, அவர் பொறுப்பேற்ற வங்கியில், பல ஊழல்கள் நடந்துள்ளன. அதில் ஒன்று: ஒருவருக்கே பல பெயர்களில், சிறிதும், பெரிதுமாக பத்து லோன் கொடுக்கப்பட்டு இருந்திருக்கிறது. அதே ஆசாமி, பதினோராவது லோன் வாங்க வந்திருக்கிறார். 'முதலில் வாங்கிய பத்து லோனையும் திரும்பச் செலுத்துங்கள்... புது லோன் குறித்து பின்னர் முடிவு செய்யலாம்!' எனக் கூறியிருக்கிறார், தமிழ்நாட்டில் இருந்து கேரளா சென்ற வங்கி மேலாளர்.

சிறிது நாட்களுக்குப் பின், போலீஸ் பாதுகாப்புடன் வங்கி மேலாளர் மற்றும் வங்கி அதிகாரிகள், அந்த ஆசாமியின் வீட்டுக்குச் சென்றுள்ளனர்.

கையில் பெரிய அரிவாளுடன் வீட்டு வாசலில் நின்று, 'உள்ளே காலடி வைத்தீர்கள்... வெட்டிப் போட்டு விடுவேன்!' என மிரட்டியிருக்கிறார் ஆசாமி. போலீசாரிடம், 'என்னங்க... வெட்டி விடுவேன் என்கிறான்... பிடியுங்க... 'அரஸ்ட்' செய்யுங்க...' எனக் கூறியிருக்கிறார் வங்கி மேலாளர்.

'அயாள் வெட்டட்டே... பின்னே நோக்கம்...' — அவன் வெட்டட்டும்... அப்புறம் பார்க்கலாம்... வெட்டினால் தான் கேஸ் போட முடியும் என்பது போல, சாதாரணமாக கூறி முடித்து விட்டனர். பயந்து போன மேலாளர், அன்றே லீவு போட்டு விட்டு மீண்டும் தமிழ்நாட்டுக்கு மாறுதல் வாங்கி வந்து விட்டார்!

* கிணறு வெட்ட கடன் வாங்கி இருந்திருக்கிறார் ஒரு விவசாயி. இதிலிருந்து இதுவரை கிணறு வெட்டப்பட்டு விட்டது என வங்கியின், 'பீல்டு ஆபீசரும்' சர்வே நம்பர் போட்டு சான்றிதழ் கொடுத்து விட்டார். கிணறு வெட்டப்படவேஇல்லை!

வங்கியிலிருந்து கடனாகப் பெற்ற தொகையில் பெருந்தொகை ஒன்று, 'பீல்டு ஆபீசர்' பைக்குச் சென்று விட்டது! மீதிப் பணத்தில், தன் மகளுக்கு திருமணத்தை முடித்து விட்டார் விவசாயி. வங்கி கடனை திரும்ப கட்டவே இல்லை! கடன் கட்டாததால், விவசாயியை சந்திக்க, வங்கி அலுவலர்கள் வரப்போகின்றனர் எனத் தெரிந்து, 'என் கிணற்றை காணவில்லை!' என போலீசில் புகார் ஒன்றை கொடுத்து விட்டார் விவசாயி!

வங்கி அதிகாரிகள் - போலீசுக்கு ஒரே திகைப்பு! — கிணறு காணாமல் போகுமா? 'உங்க வங்கி அதிகாரியே சான்றிதழ் கொடுத்துச் சென்றுள்ளார். சர்வே நம்பர் உட்பட எல்லா விவரங்களும் உள்ளன. ஆனா, இப்ப பாருங்க... என் கிணற்றை காணோம்!' என விவசாயி கூறவும், ஊழல் நடந்திருப்பது அம்பலத்திற்கு வர, கடனைப் பற்றி பேசாமல் வாய் மூடி, திரும்பி இருக்கின்றனர் வங்கி அதிகாரிகள்!

* இது, சமீபத்தில் நடந்தது: லென்ஸ் மாமா, கணக்கு வைத்திருக்கும் வங்கியில், அவரது நண்பரும், கணக்கு வைத்துள்ளார். நண்பருக்கு, 'லாக்கர்' ஒன்று தேவைப்பட்டு இருக்கிறது. இரண்டு வருடங்களாக வங்கி மேலாளரிடம் கேட்டுக் கேட்டுப் பார்த்து சலித்து, பின்னர் ஏதோ சிபாரிசு பிடித்து லாக்கர் வாங்கி விட்டார்.

வங்கி மேலாளர் மீது இருந்த கொதிப்பை தணித்துக் கொள்ள, இரண்டு கிலோ கருவாடு வாங்கி, தம் லாக்கரில் வைத்து பூட்டி விட்டு, வெளியூர் சென்று விட்டார் லென்ஸ் மாமாவின் நண்பர். லாக்கர் ரூம் முழுக்க கருவாடு நாற்றம்... ஏன் பேங்க் முழுவதுமே நாற்றம்... எந்த லாக்கரில் இருந்து நாற்றம் வருகிறது என கண்டுபிடித்த வங்கி அதிகாரிகள், லென்ஸ் மாமாவின் நண்பருக்கு போன் செய்து இருக்கின்றனர். அவர் ஊரில் இல்லை. உடனே, லென்ஸ் மாமாவிடம் தகவல் கூறியுள்ளனர்.

நண்பருக்கு போன் போட்டு, 'அழுகும் பொருட்களை லாக்கரில் வைக்கக் கூடாது எனச் சட்டம் இருக்கிறதாம்... உன் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப் போவதாக மிரட்டி எனக்கு போன் செய்தனர். எதற்கு வம்பு... அதை எடுத்து விடேன்...' எனக் கூறியிருக்கிறார் லென்ஸ் மாமா.

'இந்த பப்பு எல்லாம் என்னிடம் வேகாது... எனக்கும் சட்டம் தெரியாதா என்ன? கருவாடு இனிமே எப்படிய்யா அழுகும்? இன்னும் நாலு நாள் அவஸ்தை படட்டும்... அப்புறம் பார்க்கலாம்...' எனக் கூறி விட்டார்; சொன்னபடியே செய்தும் விட்டார்.

உச்சாணிக் கொம்பில் நின்று கொண்டிருந்த வங்கி அதிகாரிகள், பின்னர் இறங்கி வந்து, பணிந்து கேட்டபின், கருவாட்டை எடுத்து அப்புறப்படுத்தி இருக்கிறார்.

மக்கள் பணத்தை சம்பளமாக பெறும் பலருக்கு, சில நேரங்களில், 'ஷாக் டிரீட்மென்ட்' கொடுத்தால் தான் சரி வரும் போலுள்ளது.

***

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us