தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,


PUBLISHED ON : ஜூலை 30, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 30, 2017


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னையின் சில புறநகர் பகுதிகளில், இன்னமும் குதிரை வண்டிகள் புழக்கத்தில் உள்ளன. ஆட்டோவை விட கட்டணம் குறைவு; அத்துடன், இப்பகுதிகளில் பஸ் வசதி குறைவு என்பதால் குதிரை வண்டிக்காரர்களின் பிழைப்பும் ஓடுகிறது.

நான், குப்பண்ணா மற்றும் இன்னொரு நண்பரும், மற்றொரு நண்பர் வீட்டு கிரகப்பிரவேசத்திற்காக அதிகாலையில், புறநகர் ஒன்றுக்கு போய் சேர்ந்தோம்.

ஒரு குதிரை வண்டிக்காரர், 'என்ன சார், வண்டிங்களா?' என்று கேட்டு, அருகே வந்தார்.

அந்தத் தொத்தல் குதிரையைப் பார்த்து சிரித்தபடி, 'ஜேம்ஸ்வாட் இந்த மாதிரி ஒரு குதிரையை வைத்து, 'ஹார்ஸ் பவர்' கண்டுபிடித்திருக்க மாட்டார்ன்னு நினைக்கிறேன்...' என்றார், குப்பண்ணா.

'ஹார்ஸ் பவர்ன்னா என்ன?' என்று கேட்டார் நண்பர்.

'லிட்டர், ஆழாக்கு, படி என்று முகத்தல் அளவையும், அடி, மீட்டர் என்று நீட்டல் அளவையும் இருப்பது போல், சக்தியை, 'இத்தனை குதிரை சக்தி' என்று கண்டுபிடித்தார், ஜேம்ஸ் வாட். வீடுகளில் தண்ணீர் இறைக்க, 'பம்ப் செட்' போட்டிருக்கிறோமே, அந்த மோட்டாருக்கு அரைக் குதிரை சக்தி இருக்கும்...' என்று விளக்கினார்.

'மனித சக்தியைவிட ஒரு குதிரை சக்தி எத்தனை பங்கு அதிகமிருக்கும்?' என, மீண்டும் கேட்டார், நண்பர்.

'ஒரு மனிதன் எட்டு மணி நேரம் கடுமையாக வேலை செய்தால், ஒரு குதிரை சக்தியில், பத்தில் ஒரு பங்கு உழைத்திருக்கிறான் என்று அர்த்தம்...'

'அடேயப்பா!' நானும் வியந்தேன்.

'ஒரு நிமிடத்துக்கு, 15 ஆயிரம் கிலோ எடையுள்ள ஒரு பொருளை, தரையிலிருந்து ஓர் அடி உயரம் எழுப்பக் கூடிய சக்திதான் ஒரு குதிரை சக்தியின் அளவு...' என்றார், குப்பண்ணா.

எங்களை ஏனோ மேலும் கீழும் ஒரு மாதிரியாகப் பார்த்து போய் விட்டார், குதிரை வண்டிக்காரர்.

கிரஹப்பிரவேச வீட்டை நடந்தே அடைந்தோம்!

'ஆபீஸ் பையன் சோமுவிடம், கட்டு எடுப்பதற்குள் தபாலில் சேர்க்கும்படி ஒரு கடிதம் கொடுத்தனுப்பினேன். அவன் போய் ரொம்ப நேரமாச்சு; இன்னும் ஆளைக் காணோம்...' என்றார், கவலையுடன், குப்பண்ணா.

'புதுப்பையன், பொடியன் சோமு தானே... அவன் படு சூரன்; மாரதன் ரேஸ் மாதிரி, 10 கி.மீ., ஆனாலும் ஓட்டத்திலே போய், ஓட்டத்திலேயே வந்துடுவான்...' என்றேன்.

'பாரதத்திலே ரேஸ் எங்கே வருகிறது?' என்றார், லென்ஸ் மாமா.

'நீர் பாட்டுக்கு என்னவோ காதில் வாங்கி, எதையோ அர்த்தம் பண்ணாதீர்... உ.பா.,வை நினைத்து இப்பவே மனம் பேதலிக்காதீர்...' என்ற குப்பண்ணா, 'ஒரு ஓட்டப் பந்தயத்துக்குப் பெயர் தான், மாரதன்; 10 கி.மீ., - 20 கி.மீ.,என்று ரொம்ப தூரம் ஓடணும்...' என, விளக்கினார்.

'மாரதன்னு ஒரு ஆள் அப்படி ஓடினானாக்கும்... அதனால்தானே இந்தப் பெயர்?' என்று கேட்டார், மாமா.

'மாரதன் என்பது ஆள் பெயர் இல்ல; இடத்தோட பெயர்...' என்று விளக்கிய குப்பண்ணா தொடர்ந்தார்... 'மாரதன் என்னுமிடத்தில் பாரசீகர்களுக்கும், கிரேக்கர்களுக்கும், கி.மு.490ல் போர் நடந்தது.

'அதேசமயம் பாரசீகர்களின் இன்னொரு பிரிவு, ஏதென்ஸ் நகரத்தை தாக்கியது. மாரதனில் கிரேக்கர்கள் ஜெயித்து விட்டனர். அதனால், ஏதென்ஸ் நகரத்துக்கு அந்தச் செய்தியைத் தெரிவித்து, சரணடையாமல் போராடும்படி சொல்லியனுப்ப வேண்டியிருந்தது.

'அதற்காக பிடிப்பிடீஸ் என்ற வீரனை தேர்ந்தெடுத்து அனுப்பினர். அவன் அப்போது தான் ஸ்பார்ட்டா என்ற நகருக்கு ஓடிப் போய் உதவி சேகரித்து வந்திருந்தான்.

'அதாவது, ஏற்கனவே, 130 கி.மீ., ஓடியவனை, மாரதனில் இருந்து, 20 கி.மீ., தொலைவிலுள்ள ஏதென்ஸ்சுக்கு அனுப்பினர். அன்று முதல், தொலை தூரம் ஓடுகிற எல்லாப் பந்தயங்களுக்குமே, 'மாரதன் பந்தயம்' என்று பெயர் ஏற்பட்டு விட்டது...'

'அதற்கு மேல் கதை இருக்கிறதே... தெரியாதா?' என்றேன்.

'ஏதென்சுக்கு படுவேகத்தில் ஓடிச் சென்ற பிடிப்பிடீஸ், இரைக்க இரைக்க, திணறத் திணற வெற்றிச் செய்தியை அறிவித்த மறுவினாடி கீழே விழுந்து இறந்து விட்டான். பிற்காலத்தில், மகாகவி பைரன், அந்த வீரனை வியந்து பாராட்டி, அருமையான கவிதையொன்றை எழுதினார்... இதைத்தானே கேட்டாய்...' என்றார் குப்பண்ணா.

'பேஷ்... பேஷ்...' எனக் கூறி, தலை அசைத்தேன்.

'பணமிருந்தால் போதும்... உலகில் எதையும், யாரையும் விலைக்கு வாங்கி விடலாம். என்ன... ஒவ்வொருவருக்கும், ஒவ்வொன்றுக்கும் தனித் தனி விலை. இதைத் தான், 'பணம் என்றால், பிணமும் வாயைப் பிளக்கும்' என்றனர்...' என்று பிரஸ்தாபித்தார், 'பீச்' நண்பர் ஒருவர்.

அவர் லாரி அதிபர்; 45 லாரிகளின் சொந்தக்காரர். சென்னை துறைமுகத்தில் வந்திறங்கும் சல்பரை பல்வேறு இடங்களுக்கு தம் லாரி மூலம் அனுப்பி வருகிறார். பணத்தைப் பற்றிய அவரது கருத்து அப்படிப்பட்டதாக இருக்கிறது.

நான் சொன்னேன்...

'அமெரிக்க கோடீஸ்வரர்களில் ஒருவரான ஜோசப் பி. கென்னடி, ஜனாதிபதியாக வர வேண்டுமென்று ஆசைப்பட்டார். அது முடியாமல் போகவே, தன் மூத்த பிள்ளை ஜோவை எப்படியாவது ஜனாதிபதியாக்கி விட நினைத்திருந்தார்.

'ஆனால், 'இரண்டாவது உலகப் போரின் போது, ஜோ சென்ற விமானம் ஜெர்மன் பீரங்கிகளால் தாக்கப்பட்டு, வெடித்து சிதற, இறந்து போனார், ஜோ.

'இரண்டாவது பிள்ளையான ஜான் கென்னடியை வெள்ளை மாளிகையில் குடியேற்ற எண்ணினார்; அதில் வெற்றியும் பெற்றார்.

'பணபலம் இருந்தால் எதையும் அடைய முடியும் என்பதில் ஜோசப் பி. கென்னடி, உங்களைப் போல அசைக்க முடியாத நம்பிக்கை வைத்திருந்தார். அவருடைய தந்தை மதுவகைகள் வியாபாரம் செய்து, பெரும் பணக்காரராக ஆனவர்.

'ஜோசப் பி. கென்னடியும், ஜனாதிபதி ரூஸ்வெல்ட்டின் மகனை பங்காளியாகச் சேர்த்து, விஸ்கி வர்த்தகத்தில் மாபெரும் வெற்றி கண்டார்.

'தனக்கு ஜனாதிபதி பதவியில் ஆசை கிடையாது என்று எல்லாரிடமும் அவர் சொன்னாலும், அதற்காக, ரகசியமாகப் பல பிரயத்தனங்கள் செய்து வந்தார்; அவை பலிக்கவில்லை. ஆனால், இங்கிலாந்தில் தூதராக நியமிக்கப்பட்டு, பிரிட்டிஷ் பிரதம மந்திரி சேம்பர்லினின் நெருங்கிய நண்பராக விளங்கினார்.

'ஜோசப் பி. கென்னடி, தன் குழந்தைகளுக்கு திரும்பத் திரும்ப சொல்லித் தந்த தாரக மந்திரம்... 'ஜெயிக்க வேண்டும்; அதுதான் முக்கியம். இரண்டாவதாகவோ, மூன்றாவதாகவோ வந்து புண்ணியம் இல்லை. முதலாவதாகத்தான் வர வேண்டும்.

'மகன் ஜான் கென்னடி, மனத்தால் தைரியசாலி; ஆனால், உடலால் பலவீனமானவர். முதுகுவலி, போரில் பட்ட காயங்கள், ஜலதோஷம், இருமல் - இப்படிப்பட்ட உடல்வாகு. ஆனால், எதையும் சட்டென்று கிரகித்துக் கொள்ளும் புத்தி கூர்மை கொண்டவர். நிமிடத்துக்கு, 1,200 வார்த்தைகளைப் படிக்கும் வேகம் கொண்டவர்.

'சொந்த திறமையினாலும், தந்தையின் செல்வாக்கினாலும், அவரால், நாட்டின் மிக உயர்ந்த பதவியை பிடிக்க முடிந்தது. எனினும், அவருடைய கடைசிக் காலத்தில் பலவகை சோதனைகள் ஏற்பட்டன.

'டிச., 1961ல் அவர் மிகுந்த பிரியம் வைத்திருந்த தந்தை ஜோசப் பி. கென்னடி பக்கவாதத்துக்கு ஆளானார். பின், அதிலிருந்து அவர் மீளவேயில்லை; அறிவு சரியாயிருந்ததே தவிர, பேசும் சக்தி போய் விட்டது.

'மகன் ஜான் கென்னடியின் இல்லற வாழ்க்கை அப்படியொன்றும் வெற்றிகரமாக இருக்கவில்லை; தன் தந்தையைப் போலவே பெண் பித்துக் கொண்டவர் என்று பெயர் பெற்றிருந்தார். அமெரிக்க ஜனாதிபதிகளிலேயே பெண்கள் விஷயத்தில் பலவீனமானவர் அவர் தான் என்று சொல்வர். இதனால், இவர் மனைவி ஜாக்குலினும் ஆடம்பரமான செலவுகளில் மூழ்கினார்; குறிப்பாக உடைகளில்!

'இதனால், ஜான் கென்னடி குடும்பத்தில் பொருளாதார நிலையே பாதிக்கப்பட்டது. ஒரு கட்டத்தில், அவர்களுடைய சொந்தக் கடன்களை தீர்ப்பதற்காக ஜோசப் பி. கென்னடி, 10 லட்சம் டாலர் கொடுத்தார் என்று சொல்வர்.

'மகன் ஜான் கென்னடி சுட்டுக் கொல்லப்பட்ட பின், அந்தத் துயரத்தை தாங்கி, அடுத்த பிள்ளையான ராபர்ட் கென்னடியின் மீது நம்பிக்கை வைத்தார், ஜோசப் பி. கென்னடி; ராபர்ட்டும் கொல்லப்பட்டார்.

'ஆக, மூன்று பிள்ளைகளையும் பறிகொடுத்து, தானும் நடைபிணமாகவே இருக்கலானார், ஜோசப் பி. கென்னடி. பணத்தால் எதையும் சாதிக்க முடியும் என்று நம்பியவர் அவர்... இப்போது என்ன சொல்கிறீர்கள்...' எனக் கேட்டேன்.

பதில் ஒன்றும் இல்லை அவரிடமிருந்து!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us