தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/நான் ஏன் பிறந்தேன்? (28)

நான் ஏன் பிறந்தேன்? (28)

நான் ஏன் பிறந்தேன்? (28)


PUBLISHED ON : ஜூலை 30, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 30, 2017


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு கட்டுரைத் தொடர். ஜன., 17, 1917-2017.

'ஆனந்த விகடன்' இதழில், 'நான் ஏன் பிறந்தேன்?' தொடரை எழுதிய போது, பலரும் எனக்கு கடிதம் எழுதுவர்; நானும், பதில் எழுதுவேன். அப்படி ராணுவ வீரர் ஒருவர் எழுதிய கடிதம், என் மனதில் நீங்கா இடம் பெற்றது.

இதற்கு முன், எத்தனையோ ராணுவ வீரர்கள் எனக்கு கடிதம் எழுதி யுள்ளனர்; நானும், அவர்களுக்கு பதில் அனுப்பியுள்ளேன். ஆனால், இக்கடிதம் என்னை சிந்திக்கவும், நான் யார் மற்றும் இந்த வினாடியிலிருந்து நான் செயல்பட வேண்டிய வழி என்ன என்பதையும், எனக்கு நினைவூட்டுவதாகவும் இருந்தது.

நம் நாடு இன்றிருக்கும் நிலையில், நம் ஒவ்வொருவருடைய கடமையை, நாம் அனைவரும் உணர வேண்டிய அவசியத்தை அது, மிக தெளிவாக எடுத்துக் காட்டியது.

அக்கடிதத்தை, அப்படியே உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்...

அன்புமிக்க மக்கள் திலகம் அவர்களுக்கு —

வணக்கம்; தங்களது, 'நான் ஏன் பிறந்தேன்?' என்ற வினாவிற்கு, உங்களுக்கு விடை கிடைத்ததோ என்னவோ, இன்னும் எங்களுக்கு அதற்கான பதில் கிடைக்கவில்லை.

போர் முனையிலிருந்து இக்கடிதத்தை எழுதுகிறேன்; எங்கள் முன்னேற்றத்தை தடுக்க, குண்டு மாரி பொழிந்தான், எதிரி. விமானத்திலிருந்து வீசிய குண்டு ஒன்றில், வீரன் ராமச்சந்திரன் வீர சொர்க்கம் எய்தினான்.

தகனம் செய்யும் போது, சில வினாடிகள் மவுனமாக நின்றோம். அப்போது, பல எண்ண அலைகள் என் உள்ளத்தில் ஓடும் போது, பெயர் ஒற்றுமையா, வேறு என்னவோ சொல்ல தெரியவில்லை. ஒரு ராமச்சந்திரன் தானே மறைந்தார்... ஒரு கோடி ராமச்சந்திரன்களை உருவாக்கி, உற்சாகம் அளிக்கும் உங்கள் ஞாபகம் வந்தது. வண்ணத்திரையில் பார்த்திருக்கிறேன்... நீங்கள், ஒரு ராணுவத்தை தனிமையில் நின்று, வெற்றி கண்டிருக்கிறீர்கள். நடைமுறையில் அது முடியாத காரியம் தான்; ஆனால், உங்கள் உதவியில், உற்சாக செயலில், அன்பு செய்தியில், ஆயிரமாயிரம் ராமச்சந்திரன்களுக்கு வீர உணர்ச்சியை ஊட்ட முடியும்.

தங்களிடமிருந்து எங்களுக்கு நற்செய்தியோ, அறிவுரையோ, உற்சாக சொற்களோ கிடைத்தால், வீரர்கள் மகிழ்ச்சி அடைவர். நம் நாட்டு ரயில், எதிரியின் தேசத்தில் ஓடுகிறது; தண்ணீரும், உணவும் கொடுக்க!

இருப்பினும், நாங்கள் பின் வாங்கவோ, பயப்படவோ இல்லை. எதிரி நாட்டிலிருந்து, 50 கி.மீ., தூரத்திலிருந்து இக்கடிதத்தை எழுதுவதிலிருந்தே உங்களுக்கு புரிந்திருக்கும். கடமையும், பணியும் நிறைய இருக்கின்றன.

எங்களுக்கு தங்களது ஆசியையும், உற்சாக சொற்களையும் அனுப்பும்படி கேட்டுக் கொள்கிறேன்.

— தங்கள் அன்புள்ள, கேப்டன், சின்னப்பன்.

இதற்கு, நான் அவருக்கு எழுதிய பதில் கடிதம் இதோ...

அன்பு சகோதரர், கேப்டன் எம்.சின்னப்பன் அவர்களுக்கு —

என் வணக்கமும், வாழ்த்தும், நன்றியும் உரித்தாகுக.

தங்களது கடிதம், சிறிது தாமதமாகவே எனக்கு கிடைத்தது. எனினும், தங்களது ஆழ்ந்த நல்லெண்ணம், நாட்டுப்பற்று, தியாக உணர்வு என் மீது உள்ள பாசம் அனைத்தும் அதில் மிக தெளிவாகவும், விரிவாகவும் வெளிப்பட்டுள்ளது.

என் மீது தாங்கள் வைத்துள்ள நம்பிக்கையை நிறைவேற்றும் தகுதி எனக்கு இருக்கிறதோ, இல்லையோ, நானறியேன். எனினும், தங்களது நம்பிக்கை தோல்வியடையாத நிலையில், என் எதிர்கால வாழ்க்கையும், செயலும் அமைய, நிச்சயம் முயலுவேன். நானும், நாட்டு மக்களும் பெருமையும், மகிழ்வும் பெறும் அளவில் தங்களது கடிதத்தில் உள்ள செய்தி உயர்ந்தோங்கி நிற்கிறது என்பதை, பெருமகிழ்வோடு தெரிவித்துக் கொள்கிறேன். 'நாங்கள் பின்வாங்கவுமில்லை; பயந்து விடவுமில்லை...' என்ற வார்த்தைகளில், உங்கள் எண்ணம் தெளிவாக்கப்பட்டு விட்டது.

ராமச்சந்திரன் என்ற நம் ராணுவ தோழர் மறைந்ததையும், அந்த இடத்தில், அவர் சடலத்தை தகனம் செய்து, அவரது ஆத்மா சாந்தி பெற, நீங்களும், ஏனைய சகோதரர்களும் அஞ்சலி செலுத்தியதையும் படிக்கும் போது, என்னை போன்றோர் கண்ணீர் உகுப்பதோடு மட்டுமே, மனநிறைவு கொள்ள வேண்டியவர்களாக இருக்கிறோம்.

அந்த ராமச்சந்திரன் கொடுத்து வைத்தவர்; ஆனால், இக்கடிதத்தை உங்களுக்கு எழுதும் இந்த

எம்.ஜி.ராமச்சந்திரனோ, வீரத்தை கூட விலையாக்கும் ஒருவன் என்பதை எண்ணும் போது வேதனையும், வெட்கமும் என் உள்ளத்தை கவ்வுகின்றன.

எனினும், தங்களுடைய கடிதத்தில் குறிப்பிட்டிருக்கும், 'ஒரு கோடி ராமச்சந்திரன்களை உருவாக்க முடியும்...' என்ற வாக்கியம், என்னை தேற்றி, என் கடமையை செய்ய எழுச்சி பெற செய்கிறது. என் மீது, இவ்வளவு நம்பிக்கை வைத்திருக்கும் உங்களின் அன்பு, என்னை மேலும் உழைக்கத் தூண்டுகிறது.

நாட்டுக்காக வீர மரணம் எய்திய ராமச்சந்திரனை போல், ஒரு கோடி பேரை உருவாக்க என்னால் முடியாமற் போயினும், ஒரு சிலரையாவது உருவாக்க, நிச்சயம் முயற்சி செய்வேன்.

இப்படிப்பட்ட வீரர்களை தோற்றுவிப்பதும், ஊக்குவிப்பதும் மட்டும் தான் என் பணி என்று, என் நாட்டுக்கு ஆற்றும் தொண்டுக்கு முற்றுப்புள்ளி வைக்க மாட்டேன்; இந்த முயற்சியை, துவக்கப்பணியாகவே கருதுகிறேன்.

குண்டு வீச்சுகளுக்கு இடையில் கடிதமெழுதும் உங்களது துணிவில், நாட்டின் மீது அக்கறையுள்ள வீர இளைஞனின், இரும்பு இதயத்தை காண்கிறேன். உங்களை போன்ற நாட்டுப்பற்று கொண்டவர்கள் இருக்கும் வரை, இனி, ஒரு வினாடி கூட, நம் நாடு யாருக்கும் அடிமையாகாது.

அன்பு உடன்பிறப்பே... 'நான் ஏன் பிறந்தேன்?' என்பதற்கு பதில் கிடைக்கவில்லை என்று எழுதியிருக்கிறீர்களே... ஒருவன் தன் நாட்டு மண்ணை காக்க செய்யும் தியாகத்தை விட, வேறு எதை செய்ய பிறக்க வேண்டும்... உங்கள் கடமையை, களத்திலிருந்து நீங்களும், உங்களின் ஆருயிர் தோழர்களும் செய்து கொண்டிருப்பதன் மூலம், 'நான் ஏன் பிறந்தேன்?' என்ற கேள்விக்கான பதிலை பெற்று விட்டீர்!

ஆனால், இக்கேள்வியை எழுப்பி, கட்டுரையின் மூலம், என் வாழ்க்கை குறிப்புகளை எழுதும் நான் தான், அதற்கான பதிலை பெற முடியாது தவிக்கிறேன்.

நான் வீரனாக படங்களில் நடித்து, மக்களின் கடமை உணர்வை மேலும் வலுப்படுத்தலாம். அது, ஒரு வகையில் போலியாக இருப்பினும், வீர உணர்ச்சியை ஊக்குவிக்க, அது உதவுகிறது என்பதில் உங்களை போல் நானும் நம்பிக்கை கொண்டவன். ஆயினும், வீர உணர்ச்சியை வெளிப்படுத்துவதனால், எனக்கு ஒரு வகையில் லாபம் உண்டு. அந்த லாபத்தில், குறிப்பிடத்தக்க ஒரு பகுதியை, போர்க்களத்தில் வீரச்செயலில் ஈடுபட்டவர்களின் குடும்பத்தாருக்கும் பகிர்ந்து கொடுப்பதில், ஓரளவு மன அமைதி பெற விரும்புகிறேன்.

இப்படி எழுதுவதில் நான் முழு ஆறுதலையும் பெற இயலாவிடினும், ஓரளவு மன அமைதி பெற விரும்புகிறேன்.

அன்பு உடன்பிறப்பே... உங்கள் அனைவரின் தியாகத்தின் அஸ்திவாரத்தில் தான், இந்நாட்டு மக்களின் சுதந்திரம், அமைதி, நல்வாழ்வு மற்றும் முன்னேற்றம் இவை அனைத்தும் உள்ளன. இவ்வரிய செயலை களங்கமற்றும், கலக்கமற்றும், பயமற்றும், சுயநலமற்றும் ஆற்றுகிறீர்கள். உங்களை, உங்கள் தியாகத்தை பாராட்டி, வாழ்த்தி, வணங்குகிறேன்.

வாழ்க உம் நாட்டுப்பற்று; வெல்க உங்களது சுதந்திரப் போர்; வளர்க உங்களது வீரம்!

அன்பு அண்ணன்,

'நான் ஏன் பிறந்தேன்?' என்ற தலைப்பை இக்கட்டுரைக்கு வழங்கிய போது, நான் எந்த உட்கருத்தில் அமைத்தேனோ, அதற்கு இவ்வளவு விரைவில் பதில் தந்து விடும் வாய்ப்பு கிட்டும் என்று எதிர்பார்த்ததேயில்லை.

எனினும், கேப்டன் எம்.சின்னப்பன் மற்றும் அவரை போன்ற வீரர்களும் தம் தொண்டின் மூலம் பதில் பெற்று விட்டனர். ஆனால், நான் பெற்று விட்டேனா என்பதை காலம் தான் சொல்ல வேண்டும்!

முற்றும்

நன்றி: கண்ணதாசன் பதிப்பகம், சென்னை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us