sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/இணைப்பு மலர்/வாரமலர்/அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,


PUBLISHED ON : ஏப் 03, 2011

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 03, 2011


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பேக்ஸ், ஈ-மெயில் என, தகவல் தொடர்பு சாதனங்கள் பெருகி விட்ட நிலையில், அமெரிக்கா கலிபோர்னியா மாநிலத்திலிருந்து, கனமான தபால் ஒன்று என் பெயருக்கு வந்தது. கடிதம் எழுதி இருந்த வாசகி பெயர் சவிதா...

கணவர் கம்ப்யூட்டர் துறையில் இருப்பதாக கடிதத்தில் எழுதி இருக்கும் இவர், ஈ-மெயில் செய்யத் தெரிந்தவராகத்தான் இருக்க வேண்டும்... இருந்தும், கையால் எழுதிப் போடுவதில் அன்யோன்னியம் இருக்கும் என நினைத்தார் போலும்...

கடிதத்தில், அவர் கூறியுள்ள விஷயத்தைப் படியுங்கள்...

நான், முன்பு ஒரு முறை உங்களுக்கு எழுதியதுண்டு. இப்போது எழுதுவது, என் போல், மற்றவர்களுக்கும் வருத்தப்படும் நிலை ஏற்பட வேண்டாம் என்ற ஆதங்கத்தால் தான்.

மாறி வரும் நம் சமுதாய பழக்க வழக்கத்தால், வியாதிகள் நம்மை தாக்குவதை பார்க்கிறோம். 40 வயதிற்கு மேல் சர்க்கரை, ரத்தக் கொதிப்பு எல்லாம் சகஜமாகி விட்டது. அதனால், திருமணத்திற்கு முன்பே ஆண், பெண்

இருவரும் மருத்துவ பரிசோதனை செய்து, திரு மணத்தை ஏற்பது நல்லது.

சிறு வயதில் குடும்பத்தின் கஷ்டம் காரணமாக, சரியாக கவனிக்கப்படவில்லை என் கணவர். பின், படித்து எம்.சி.ஏ., முடித்து, பெங்களூருவில் வேலை பார்க்கும் போது கூட, வீட்டிற்கு பணம் அனுப்ப வேண்டும் என்பதற்காக, உடம்பை சரியாக கவனிக்கவில்லை.

தன், 26வது வயதில் அமெரிக்கா வந்து, தனியாக இருந்து உடம்பை மிகவும் அலட்சியப்படுத்தி விட்டார். இத்தனைக்கும் சிகரெட், மது பழக்கங்கள் எதுவுமில்லை. 30 வயதில் திருமணம்; எனக்கு அப்போது வயது 24.

திருமணமாகி வந்த நாள் முதலே, மிகவும் அதிகமாக சாப்பிடுவார்; எனக்கு, அது ஆச்சரியமாக இருந்தது. இத்தனை சத்தான சாப்பாடு சாப்பிட்டு, அடுத்த வேளை சாப்பிடுவதற்குள் வாடி, வதங்கி விடுவார். இரண்டு மாதத்தில் உடம்பு இளைக்க ஆரம்பித்து விட்டது. மருத்துவமனையில் எல்லா பரிசோதனைகளும் செய்தும், ஒன்றுமில்லை என்று அனுப்பி விட்டனர். பரிசோதனை முடிந்த அன்று இரவு, 10.30 மணிக்கு, மருத்துவ பரிசோதனை சாலையிலிருந்து போன் வந்தது. 'உங்களுக்கு சர்க்கரை நோய் இருக்கு, நாளை காலையில் சாப்பிடுவதற்கு முன் ரத்தம், சிறுநீர் கொடுத்து விடுங்க...'ன்னு. தலையில் இடி விழுந்த மாதிரி இருந்தது.

அடுத்த நாள் டாக்டரை பார்த்த போது, 'இது, இப்போது கண்டிப்பாக வந்து இருக்காது. 20, 25 வருடமாக இருந்து இருக்கணும். இப்போ ரொம்ப அதிகமாக இருக்கவும் அறிகுறிகள் தெரிய ஆரம்பித்து இருக்கு. நல்லவேளை... இப்பவாவது வந்தீங்க... இல்லேன்னா, சில நேரம் கோமாவுக்கு போயிடும்...' என்று சொன்னார்.

'கல்யாணத்திற்கு முன், இது தெரிந்து இருந்தால், திருமணத்தை தவிர்த்து இருக்கலாம். இப்போ உன்னையும் கஷ்டப்படுத்தறது எனக்கு வேதனையாக இருக்கு...' என்று புலம்புகிறார் என் கணவர். 'ஒரு விபத்து நடந்து, ஏதாவது ஆனால் விட்டு, விட்டு போகவா முடியும்...' என, அவருக்கு ஆறுதல் கூறி வருகிறேன். இந்த விஷயம் எங்க இரண்டு பேரை தவிர, வேறு யாருக்கும் தெரியாது.

இதே போல் என் குடும்ப நண்பர் வீட்டிலும் நடந்த விஷயம்... நண்பர் இந்தியாவிலிருந்து இங்கே வந்து, 'பிசினஸ்' ஆரம்பித்து, நன்றாக ஓடிக் கொண்டு இருந்தது. அவர், தன் திருமணத்திற்காக, 'வெப்'லேயே பெண்ணையும் தேர்வு பண்ணி விட்டார். பெண்ணும், பிஎச்.டி., முடித்து, அமெரிக்காவின் கிழக்கு கடற்கரை பக்கம் வேலை பார்த்துக் கொண்டு இருந்தார்.

ஒருமுறை ஏதோ, 'விசா' விஷயத்திற்காக மேற்கு கடற்கரை பகுதியிலிருக்கும் இவரை பார்க்க வர, இங்கேயே, 'மாஸ்கில்' (அவர்கள் இருவரும் இஸ்லாமியர்) திருமணத்தை முடித்து கொண்டனர். பெண் குழந்தை பிறந்து, ஒன்றரை வருஷம் கழித்து, இங்கே தன் நண்பர்களுடன் அவர், 'டூர்' செல்லும் போது, உடம்பிற்கு சரியில்லாமல் போய் விட்டது. போன இடத்தில் மருத்துவ வசதி சரியானபடி இல்லைன்னு வீட்டிற்கு வந்தவுடனே ஹாஸ்பிடலில், 'செக்-அப்' செய்யப் போக, உயர் ரத்த அழுத்தம்ன்னு சொல்லி, மருத்துவமனையில், 'அட்மிட்' பண்ணி விட்டனர்.

அமெரிக்க டாக்டர்கள் சின்ன உடல்நலக் கோளாறு என்றாலும் எல்லாத்தையும், 'செக் - அப்' பண்ணுவர். அப்படி பண்ணிய போது தான் தெரிந்தது, இரண்டு சிறுநீரகங்களும் பழுதாகி இருக்குன்னு. 'டயாலிசிஸ்' பண்ணக் கூட முடியாது.

சிறுநீரகம் மாற்றியே ஆகணும்கிற நிலைக்கு போயாச்சு. இத்தனைக்கும் இவரின் அண்ணன் சென்னையில் பிரபல டாக்டர். 'இந்த பிரச்னை கிட்டதட்ட, 20 வருடங்களாக உங்களுக்கு இருக்கணும், இதுவரையில் ஒரு மெடிக்கல் செக்-அப் கூட பண்ணிக்கலையா?'ன்னு டாக்டர் கேட்டாங்களாம்.

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு அமெரிக்காவில் சிறுநீரகம் கிடைப்பது கஷ்டம்ன்னு இந்தியா போகலாம்ன்னு முடிவு செய்தார். அண்ணன், அக்காக்கள் என, 10 பேர் கூட பிறந்தவர்கள். 'நான் தர்றேன்... நான் தர்றேன்...'ன்னு சொன்னவர்கள், இப்போ அவர் இந்தியா போனவுடனே கழண்டு கொண்டனர். அவரின் ஆபிசை இங்கே மூடி விட்டனர். அவர் மனைவி, இங்கே, தான் பார்த்துக் கொண்டு இருந்த வேலையை விட்டு போய் விட்டார். ஒருவேளை, அவர்கள் திரும்பியும் வரலாம், நல்லபடியாக ஆபரேஷன் முடிந்த பிறகு.

திருமணத்திற்கு முன் ஒரு மருத்துவப் பரிசோதனை செய்ய வேண்டியது எத்தனை அவசியம் பார்த்தீர்களா? இன்னமும் எத்தனை பேர் வாழ்க்கை மோசமாக பாதிக்கப்பட்டு இருக்கிறதோ!

இதையெல்லாம் கருத்தில் கொண்டு, கல்லூரியில் படிக்கும் போதும், வேலை தேடும் போதும், வேலைக்கு போகும் போதும், நேரத்திற்கு தூங்கி, சாப்பிட்டு, உடற்பயிற்சி செய்து, உடம்பை பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும்.

இதில் கூட பாரபட்சம் பாருங்கள்... எங்கள் கணவர்களுக்கு எதுவும் வந்தால், நாங்கள் மூட்டை முடிச்சு கட்டிக் கொண்டு, வேலையையும் விட்டு கவனிக்க வேண்டும். எங்களுக்கு தெரிந்த வடமாநில தோழிக்கு குழந்தைகள் தங்காது. ஆகவே, அவருக்கு மனவேதனை. இதுவே பிரச்னையாக இருந்து, பின் வியாதியாகி விட்டது. இவருக்கும் சிறுநீரகம், 50 சதவீதம் பழுது ஆகி விட்டது. அவர் கணவர், 'என்னால் உன்னை கவனிக்க முடியவில்லை; நீ

இந்தியா போ!'ன்னு சொல்லி விட்டார்.

நல்லவேளை... 'உன்னை விவாகரத்து பண்ணிவிட்டு, வேறு கல்யாணம் செய்துக்கப் போறேன்!'ன்னு சொல்லாம விட்டாரேன்னுதான் சந்தோஷப்பட்டுக்கணும். நீங்கள் இதைப் பற்றி உங்களின் பகுதியில் எழுதினால், குறைந்த பட்சம், பத்து பேராவது சிந்திப்பர். அதில், ஒருவராவது மருத்துவப் பரிசோதனை செய்து பார்ப்பர்...

— இப்படி எழுதி இருக்கிறார் வாசகி.

அவர் கூறியது போல், பத்து பேராவது சிந்திப்பீர்களா?

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us