PUBLISHED ON : ஏப் 03, 2011

** ஜான் சஞ்சீவி, திண்டிவனம்: நான் ஒரு பாத்ரூம் பாடகன்; ஓரளவு பாடுவேன். 'ஏதோ ஒரு காலத்தில் வாய்ப்பு கிடைக்காதா?' என்ற எண்ணத்தில், கல்யாணத்திற்கு முன்பும் பாடினேன்; இப்போதும் பாடுகிறேன். இது, என் மனைவிக்கு பிடிக்கவில்லை; அநாகரிகம் என்கிறாள். அவளுக்காக என் குறிக்கோளை அடகு வைப்பதா அல்லது செவிடன் காது சங்காக விட்டு விடலாமா?
இரண்டாவதையே செய்யுங்கள்! வாய்ப்பு கிடைப்பது ஒரு பக்கம் இருக்கட்டும்... பாட்டுப் பாடுவது உங்கள் பொழுது போக்கு... இதனால், மனம் லேசாகிறது, நிம்மதி கிடைக்கிறது. ஏன் விட்டுக் கொடுக்க வேண்டும்? தொடர்ந்து ஜமாயுங்கள், பக்கத்து குடித்தனக்காரர்களுக்கு இடைஞ்சல் இல்லாமல்!
***
*பொ.பொன்மணிகண்டன், பாணம்பட்டு: ஏழைகளுக்கு மீண்டும், மீண்டும் துன்பமும், பணக்காரர்களுக்கு மேலும், மேலும் செல்வமும் கொட்டுகிறதே...
செல்வம் கொட்டுவதால் அவர்கள் துன்பம் இல்லாமல் இருக்கின்றனர் என்றா நினைக்கிறீர்கள்? அவர்களுக்கும், ஏழைகளுக்குள்ளது போன்றே துன்பம் உண்டு. பணக்காரர்களுடன் நெருங்கிப் பழகுபவர்களிடம் பேசிப் பாருங்கள்... விபரம் தெரிய வரும்!
***
** எஸ்.ரவீந்திரன், கம்பம்: கலப்புத் திருமணங்களால் ஜாதிகள் மறையுமா?
வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது. பத்திரிகைகளில் வெளியாகும், 'மணமக்கள் தேவை' விளம்பரங்களைப் பாருங்கள்... கலப்பு மண தம்பதிகளின் பிள்ளைகளுக்கு, அம்மாவின் ஜாதியிலோ, அப்பாவின் ஜாதியிலோ தான் ஜோடி கேட்கின்றனர். 'எந்த ஜாதியும் சம்மதம்' என வெளியாகும் விளம்பரங்கள் மிகக் குறைவே!
***
*எஸ்.வெங்கடசுப்ரமணியம், கோவை: முகம் தெரியாத தங்களிடம் தம் ஆதங்கத்தை கடிதம் மூலமும், தொலைபேசி மூலமும் கூறும் பெண்கள் பற்றி...
சகோதர பாசம் தேடும் சகோதரிகள், என் எழுத்தைப் படித்தே, மனதில் என்னை அவர்களின் அன்பு சகோதரனாக்கிக் கொண்ட பின் தயக்கம் என்ன இருக்க முடியும்?
***
* எஸ்.செல்வராஜ், பல்லடம்: அரசாங்க வேலை வேண்டுமென நினைத்தேன்; கிடைத்தது. ஆனால், நியாயமாக, விதிகளுக்கு உட்பட்டு நாணயமாக இருக்க விடாமல் செய்கின்றனரே சிலர்... வேலையை விட்டு விடலாமா?
காலில் முள் தைத்து விட்டதற்காக காலை வெட்டியா போடுகிறோம்... வேலையைத் துறக்கும் தப்பை செய்து விடாதீர்கள்! நியாயவாதிகளுக்கு ஆயுள் முழுக்கப் போராட்டம்தான். போராட்டம் இல்லாத வாழ்க்கை, 'போர்!' ***
*ஆர்.ராஜேந்திரன், பழனி: பெண்கள் கல்லூரி வாசலில், தவமிருக்கும் ஆண்கள் பற்றி...
கெமிஸ்ட்ரியையும், ஹிஸ்டிரியையும், பிசிக்சையும் தலையில் ஏற்றி, போரடித்து வெளியே வரும் இளம் பெண்களின் கண்களும், மனமும் குளிர்ச்சி அடைய உதவி செய்பவர்கள்!
***
* பி.சரஸ்வதி, கே.புதூர்: காதலிக்கும் பெண்கள், தன் காதலன் செய்யும் தவறுகளைக் கூட பெருமையாக நினைக்கின்றனரே...
எல்லாம் கல்யாணம் வரை இழுத்துச் செல்லத்தான்... அப்புறம் கரண்டியைக் கையில் தூக்கி விட மாட்டார்களா என்ன?
***
