sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/இணைப்பு மலர்/வாரமலர்/உயிரே உனக்காக . . . (17)

உயிரே உனக்காக . . . (17)

உயிரே உனக்காக . . . (17)


PUBLISHED ON : ஏப் 03, 2011

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 03, 2011


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இதுவரை:

நாட்டிய நிகழ்ச்சிக்காக ஆஸ்திரேலியாவிலுள்ள சிட்னி நகருக்கு சென்றிருந்தாள் மதுரிமா. வீட்டில் தனியாக இருப்பது சிரமமாக இருந்ததால், விமான பணிப்பெண்ணான கவிதாவை தேடி, அவளது வீட்டிற்கு சென்றான் மதுரிமாவின் கணவன் நரேன். அவளுடன் பேசிக் கொண்டிருந்த போது, கவிதாவின் மாஜி கணவன் டேவிட் ஆண்டர்சன் அங்கு வந்தான் —

வீட்டிற்குள் நுழைந்த கவிதாவின் மாஜி கணவன், டேவிட் ஆண்டர்சன், நரேனுக்கு வெகு அருகில் வந்து நின்று, அவனை ஒரு தினுசாக உற்றுப் பார்த்தான்.

'என் முன்னாள் மனைவி கவிதாவின் வீட்டிற்குள், விடியற்காலையிலேயே வந்து, அவளோடு அமர்ந்து, இத்தனை சகஜமாக டீ அருந்தியபடி பேசிக் கொண்டிருக்கும் இவன் யாராக இருக்கக் கூடும்...' என, யோசித்தான். கிட்டத்தட்ட அதே மனநிலையில்தான் நரேனும் இருந்தான்.

இதற்கு முன், டேவிட் ஆண்டர்சனை பார்த்ததில்லை நரேன். ஒரு புன்னகையுடன் தன்னை உற்று நோக்கியபடி, தன் அருகே நின்று கொண்டிருக்கும் இவன்தான், கவிதாவின் முன்னாள் கணவன் என்பதை அறியாதவனாய், திடீரென வந்து நிற்கும் இவன் யார் என்ற கேள்வியும், ஒருவேளை இவன்தான் கவிதா சொன்ன டேவிட் ஆண்டர்சனோ என்ற சந்தேகமும், மனதுக்குள் ஒரே நேரத்தில் எழுந்தன.

நரேனின் சந்தேகத்தையும், குழப்பத்தையும் தீர்க்கும் விதமாக, ஆண்டர்சனே, தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான்.

''ஐ ஆம் டேவிட் ஆண்டர்சன்... இதோ இந்தக் கவிதாவின் எக்ஸ்...'' என்று வாக்கியத்தை முடிக்காமலேயே இழுத்தபடி, அவனது கைகளை நீட்டினான்.

''ஐ அண்டர் ஸ்டாண்ட்... ஐ ஆம் நரேன்.''

ஆண்டர்சன் முடிக்காமல் விட்டதைப் புரிந்து கொண்டவனாய் அவனது கைகளைப் பற்றி குலுக்கியபடி, ''வெரி ப்ளீஸ்டு இன் மீட்டிங் யூ!'' என்றதும் மெல்ல சிரித்தான் ஆண்டர்சன்.

''தேங்க் யூ... ஐ டூ பீல் தி சேம்... இதுக்கு முன் நான், உங்கள பாத்தது இல்ல. நீங்க யாருன்னு...''

ஆண்டர்சனின் கேள்விக்கு என்ன பதிலைச் சொல்வது எனத் தெரியாமல், மவுனமாக நிற்கும் நரேனுக்கு உதவியாக குறுக்கே புகுந்தாள் கவிதா...

''அவர் என்னைப் பார்க்க வந்திருப்பவர். அவர் யாராக இருந்தால் உங்களுக்கென்ன?''

கவிதாவின் கேள்வி கோபமாக வெளிப்பட்டது. ஆனால், அவளது கோபத்தை கொஞ்சமும் பொருட்படுத்தாதவனாக, சிரித்தபடியே பதில் சொன்னான் ஆண்டர்சன்...

''கவிதா... பீ கூல். நீ இத்தனை கோபப்படும் படியாக நான், அவரை எதுவும் கேட்கவில்லை.''

''சரி... அவர் யாரென்று நீங்கள் எதற்காக தெரிந்து கொள்ள வேண்டும்... தெரிந்து உங்களுக்கு என்ன ஆகப் போகிறது?''

கவிதாவின் அந்தக் கேள்வியில் அவளுக்கும், தனக்கும் உள்ள இடைவெளியை ஆண்டர்சனால் உணர முடிந்தது. அவனும், அவளும் கணவன் - மனைவியாய் இருந்ததும், குழந்தை பெற்றுக் கொண்டதும் பழைய கதை. விவாகரத்து என்பதன் பெயரால், அந்தக் கதை முடிவுக்கு வந்து வெகு நாட்கள் ஆகிவிட்டன. இப்போது, எது பற்றியும் அவளிடம் கேள்வி கேட்கும் உரிமை அவனுக்கு இல்லை.

''என்ன... பதிலையே காணோம். சரி... நானே சொல்கிறேன். ஹீ ஈஸ் மை கெஸ்ட்... நான் தான் அவரை வரச் சொன்னேன். இது போதுமா, இல்லை இன்னும் வேறு ஏதாவது விஷயம் வேண்டுமா?''

கவிதாவின் இந்தக் கேள்வி, ஆண்டர்சனை கிண்டல் செய்கிற தொனியில் இருந்தது.

'வேறு ஏதாவது விஷயம்...' என்பதில் கவிதா கொடுத்த அழுத்தம், அவளுக்கும், நரேனுக்கும் இடையே, இன்னும் வேறு விஷயங்களும் இருக்குமோ என ஆண்டர்சனை சந்தேகிக்க வைக்கும் விதத்தில் அமைந்து, அவனை இம்சைப்படுத்தும் நோக்கத்தில் இருப்பதை நரேனால் உணர முடிந்தது.

''ஓ.கே., நான் வேண்டாத விருந்தாளி; பிறகு வருகிறேன்.''

திரும்பிப் போக நினைத்த ஆண்டர்சனை தடுத்து நிறுத்தினாள் கவிதா.

''ஒன் மினிட்... பிறகு வருகிறீர்களா, பார் வாட்? முதலில், இப்போது எதற்காக வந்தீர்கள்?''

''அதை மற்றவர்கள் முன்னிலையில் சொல்ல முடியாது... உன்னிடம் தனியே சொல்ல வேண்டும். நோ பிராப்ளம்... ஐ வில் கம் அகெய்ன்.''

அவர்கள் என்னதான் விவாகரத்து பெற்று விட்டாலும், ஒரு குறுகிய காலத்திற்கு கணவன் - மனைவியாக வாழ்ந்தவர்கள். அதன் அடையாளமாக ஒரு குழந்தைக்குத் தாயும், தந்தையும் ஆனவர்கள். சட்ட ரீதியாக விவாகரத்து என்பதன் பெயரால், அவர்கள் இப்போது பிரிந்து வாழ்ந்தாலும், அவர்கள் மறுபடியும் சந்திக்கவும், பேசவும் எத்தனையோ விஷயங்கள் இருக்கலாம்.

கவிதாவிடம் எது பற்றியோ தனியே பேச வந்திருக்கிறான் ஆண்டர்சன். இந்த சூழ்நிலையில் அவர்களுக்கு இடையில் தான் நிற்பது தவறு என்பதை உணர்ந்து, ஆண்டர்சனை தடுத்தான் நரேன்.

''சார்... ஒன் மினிட்... நீங்கள் சொன்ன வேண்டாத நேரத்தில் வந்த, வேண்டாத விருந்தாளி என்பது எனக்குத்தான் பொருந்தும். நீங்கள் ஏதோ முக்கிய விஷயமாகப் பேச வந்திருக்கிறீர்கள். நீங்கள் பேசுங்கள்; நான் புறப்படுகிறேன்.''

''தேங்க் யூ... ரியலி ஐ அப்ரிஷியேட் யுவர் சென்ஸ் ஆப் அண்டர்ஸ்டாண்டிங்.''

ஆண்டர்சனின் கைகளைப் பற்றி குலுக்கிவிட்டு, ''ஹேவ் எ நைஸ் டைம் அண்ட் எ குட் டே,'' என்று சொல்லி நரேன் புறப்பட, அவனை தடுத்து நிறுத்தினாள் கவிதா.

''நரேன்... ஒன் மினிட்... புறப்பட வேண்டியது நீங்கள் அல்ல; இவர்தான்.''

''இல்லை கவிதா... அது சரி அல்ல... நான் தான் புறப்பட வேண்டும்.''

''நோ... இப்போதைக்கு இங்கே யார் இருக்க வேண்டும், யார் போக வேண்டும் என்பதை தீர்மானிப்பவள் நான்தான். நீங்கள் இருங்கள். லுக் மிஸ்டர் ஆண்டர்சன்... எனக்கும், உங்களுக்கும் நடுவே எதுவும் இல்லை; நீங்கள் புறப்படலாம்.''

'பெண் மிகவும் மென்மையானவள் என்று சொன்னது யார்? சில நேரங்களில், சில விஷயங்களில் பெண், ஆணை விடக் கடுமையானவள்...' என்று, கவிதா நடந்து கொண்ட விதம், நரேனை, யோசிக்க வைத்தது.

அதற்கு மேல் அங்கே நிற்பதில் பயனில்லை என்பதை உணர்ந்தவனாய் ஆண்டர்சன் புறப்பட நினைத்த நேரத்தில், படுக்கை அறையில் குழந்தை அழும் சப்தம் கேட்டது. கவிதா, நரேன் மற்றும் ஆண்டர்சனின் பார்வை அந்த அறையின் பக்கம் திரும்பியது.

கவிதாவின் மூன்று வயது குழந்தை அழுதபடியே அறையை விட்டு, அவர்கள் அருகே வந்து நின்றது. அழுகையை நிறுத்திவிட்டு, அந்த மூன்று பேரையும் மாறி, மாறிப் பார்த்தது. கடைசியாக ஆண்டர்சனைப் பார்த்து சிரித்தபடி அவன் அருகே ஓடி வந்தது.

''ஹாய் டார்லிங்...'' என்றபடி குழந்தையை நோக்கி ஆண்டர்சன் நடக்க, ஓடிப் போய் குழந்தையைத் தூக்கியபடி ஆண்டர்சனிடம், சப்தமாகக் கத்தினாள் கவிதா.

''வில் யூ ப்ளீஸ் கோ அவுட்?''

''கவிதா... நான் குழந்தையைப் பார்க்கத்தான் வந்தேன்.''

''பொய்... நிச்சயமாக நீங்கள் குழந்தையைப் பார்க்க வந்திருக்க மாட்டீங்க. எனக்கு தெரியும்.''

''நான் சொல்றத நம்பு கவிதா... நான் குழந்தையைப் பார்க்கவும், அது விஷயமாக பேசவும்தான் வந்தேன்.''

''நோ... நான் உங்களை நம்ப மாட்டேன். உங்களைப் பற்றி எனக்கு நன்றாகத் தெரியும்.''

''வாட் டூ யூ நோ?''

தன்னைப் பற்றி, தன் முன்னாள் மனைவி என்ன தெரிந்து கொண்டிருக்கிறாள் என்ற ஆர்வத்துடன் ஆண்டர்சன் கேட்க...

''நீங்கள் ஒரு சரியான வக்கிரம் பிடிச்ச ஆள்; யூ ஆர் எ சேடிஸ்ட்,'' என்று, மிகவும் தெளிவாகவும், உறுதியாகவும் சொன்னாள் கவிதா.

ஒரு வினாடி அதிர்ந்து போனான் ஆண்டர்சன். அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல், ''வக்கிரம்... சேடிஸ்ட்... அவ்வளவுதானா, இன்னும் வேறு ஏதாவது இருக்கா?'' என்று, ஒருவிதமான சிரிப்புடன் கேட்டான்.

''இருக்கு... நீங்க ஒரு மனுஷனே அல்ல... நீங்க எதுக்காக வந்திருப்பீங்கன்னு நான் இப்ப சொல்லட்டுமா?''

''ம்... சொல்லு.''

''சந்தேகம்... எம்மேல சந்தேகம். விவாகரத்துக்குப் பிறகு, இவ தனியாவே இருக்காளா... இல்ல, வேற யாராச்சும்... நான், என் வாயால சொல்ல விரும்பல.... ப்ளீஸ், கோ அவுட்.''

கவிதா சொன்னதைக் கேட்டு, நரேனுக்குள் லேசாக அதிர்வுகள் தோன்றின.

'இந்த சந்தேகத்தில் இவன் கவிதாவை பார்க்க வந்திருந்தால், நான் இந்த நேரத்தில் இவளுடன் இருப்பதை இவன் தவறாக எண்ணி விடுவானோ!'

நரேன், அவனுக்குள் எதையோ யோசிப்பதை கவனித்தான் ஆண்டர்சன்.

'நரேனின் முன் தன்னை காயப்படுத்தியதற்கு பதிலாக, தன் பங்கிற்கு கவிதாவை காயப்படுத்த வேண்டும்...' என்ற குரூர எண்ணம் அவனுக்குள் எழுந்தது.

'அதே நேரத்தில், நரேன், அவனை மிகவும் கேவலமாக எடை போட்டு விடாமல், நாசூக்காக கவிதாவின் மனதைக் குத்தி காயப்படுத்த வேண்டும். எப்படி?' என்று ஆண்டசர்சனின் மனோவியல் ஆராய்ச்சி மூளை யோசித்தது.

''மிஸ்டர் நரேன்... எனக்கு கவிதாவின் மேல் எந்தக் கோபமும் இல்லை. சொல்லப் போனால் நான் அவளை இப்போதும் நேசிக்கிறேன்.''

''ஸ்டாப் இட்... இதுபோன்ற உளறல்களை நான் கேட்கத் தயாராக இல்லை. நம்மை பொறுத்தமட்டில் எல்லாமே முடிந்து விட்டது,'' கோபமாகவே பேசினாள் கவிதா.

கவிதா, நரேனைத் தேடி அவனது வீட்டிற்கு வந்த போது,< விவாகரத்து பற்றி சொல்லி, தனிமையை நினைத்து அழுதபோது, நரேன் சொன்னது நினைவில் மின்னல் அடித்தது.

'எத்தனையோ பேர் விவகாரத்திற்குப் பின் கூட சேர்ந்து வாழ ஆரம்பிக்கின்றனர்!' இதோ... அதை மீண்டும் வலியுறுத்த ஒரு அருமையான சந்தர்ப்பம்.

''கவிதா... வாழ்க்கை ரொம்பவும் வித்தியாசமானது. நாம் முடிந்து விட்டதாக நினைக்கும் இடத்திலிருந்து கூட அது மறுபடியும் புதிதாக ஆரம்பமாகலாம்,'' என்றான் நரேன்.

''நரேன் சொல்வது ரொம்பவும் சரி... முடிவு என்று எதுவும் இல்லை. வாழ்க்கை, மரணத்தில் முடிந்த பின்பும், ஆன்மா வாழ்ந்து கொண்டிருப்பதாக நம்புகிற ஒரு மண்ணில் பிறந்தவர்கள் நீங்கள் இருவரும்; பட் ஒன்திங்...'' என்றான் ஆண்டர்சன்.

''சொல்லுங்கள்...''

''நான் இப்போது வந்தது கவிதாவிடம் சமாதானம் பேசுவதற்காக அல்ல... நான் இப்படி சொல்லக் காரணம் என்ன தெரியுமா? அவளிடம் நான் எந்தவிதமான சண்டையும் போடவில்லை. அதுதான் உண்மை.''

''பின் எதற்காக விவாகரத்து நீங்களாக கேட்டீர்கள்?''

''அதற்கு ஒரு முக்கிய காரணம் இருக்கிறது. நான் அனைத்திற்கும் மேலாக என் தொழிலை மிகவும் நேசிப்பவன். ஒரு கவிஞன், கவிதையை நேசிப்பது போல, ஒரு ஓவியன், ஓவியத்தைக் காதலிப்பது போல, நானும், என் மனோவியல் ஆய்வை அதிகமாகவே நேசிக்கிறேன்.''

''நத்திங் ராங்... ஆனால், நீங்கள் சொல்ற தொழிலை நேசிப்பதற்கும், மனைவியை விவாகரத்து செய்வதற்கும் என்ன சம்பந்தம் இருக்க முடியும்?''

''இருக்கிறது... என் ஆராய்ச்சியே அதைப் பற்றி அமைந்து விட்டதால்.''

''எதைப் பற்றி?''

''நான் சொல்வதை கொஞ்சம் ஆழமாக யோசியுங்கள். செக்ஸ் என்ற தவிர்க்க முடியாத ஒரு விஷயத்தில் பெண் என்பவளின் நிலைப்பாடு என்ன, பெண் மீதான செக்ஸ் என்பதன் தாக்கம் என்ன, ஒரு பெண்ணை அவளது செக்ஸ் உணர்வுகள் எந்த அளவிற்கு கொண்டு செல்லும், இதில், பெண் என்பவளின் எல்லை அல்லது எல்லை மீறல் எதனால்? இதுதான் என்னுடைய ஆராய்ச்சி.''

''அதற்கான ஆய்வுப் பொருளாக நீங்கள், உங்கள் மனைவியை தேர்வு செய்தீர்கள்... அப்படித்தானே!''

''ரைட்... இது தவறா?''

''நோ... தவறு மட்டுமல்ல... ரிடிகுலஸ்!''

''இது பைத்தியக்காரத்தனம் இல்லை; இதற்காக, நான் வேறு பெண்ணை பயன்படுத்த நினைப்பதுதான் தவறு. இதற்கு உங்கள் கலாசாரத்தையே, பண்பாட்டையே என்னால் உதாரணமாக சொல்ல முடியும்.''

''என்ன சொல்கிறீர்கள்?''

''எஸ்... உங்கள் தேசத்து முனிவர்கள் மேற்கொண்ட வேள்வி மாதிரிதான் என்னுடைய ஆராய்ச்சியும். தங்கள் தவ வலிமைக்காகவும், தாங்கள் வேண்டியதை அடையவும் தங்களுக்கு விருப்பமானதை சோதனைகளுக்குள்ளாக்கியதுடன் இழந்தும் இருக்கின்றனர்.''

''புரியவில்லை.''

''பக்தி என்பதன் பெயரால், கடவுளை திருப்திப்படுத்த, தன் சொந்த மகனையே கொன்று, கறி சமைத்த மாதிரிதான் என் ஆராய்ச்சியும்.''

ஆண்டர்சன் சொன்ன உதாரணம் நரேனையும், கவிதாவையும் அதிர்ச்சி அடைய வைத்தது. எதை, எதனோடு ஒப்பிடுவது? இந்த ஆண்டர்சன் சாதாரணமான ஆள் அல்ல.

''என்ன யோசிக்கிறீர்கள்... கடவுள், பிள்ளைக்கறி கேட்டதற்காக, பக்தன் அடுத்த வீட்டுப் பிள்ளையைக் கொன்று கறி சமைக்கவில்லை; அவன் சொந்தப் பிள்ளையைத்தான் கொன்றான்.''

''உங்கள் உதாரணம் தவறானது. அப்படி தன் பிள்ளையைக் கொன்றதற்குப் பின்பும், அந்த பக்தனால், அவனது பிள்ளையை மீண்டும் உயிருடன் பெற முடிந்தது. ஆனால், உங்கள் ஆராய்ச்சி அப்படிப்பட்டதல்ல. அதற்குப் பின் உங்கள் மனைவியின் மனநிலை பற்றி யோசித்துப் பார்த்தீர்களா?''

''யோசித்துப் பாக்காமல் இந்த ஆய்வில் இறங்க நான் ஒன்றும் முட்டாள் அல்ல. கவிதா என் ஆய்வுக்கு உடன்பட்டிருந்தால், அவளை பற்றிய மதிப்பு என்னுள் இன்னமும் அதிகரித்திருக்கும்; நிச்சயம் குறைந்திருக்காது.''

''இப்போது உங்களால் இப்படி சொல்ல முடிகிறது. கணவனின் விருப்பமும், சந்தோஷமுமே பெரியது என்று கவிதா அதற்கு உடன்பட்டிருந்தால், அதன்பிறகு உங்களிடம் ஏற்படும் மாற்றங்கள் அவளின் வாழ்க்கையையே சீரழித்து இருக்கலாம்.''

''நரேன்... இப்போது புரிகிறதா? புருஷனின் பெருமைக்காகவும், சந்தோஷத்திற்காகவும் தன்னையும், தன் பெண்மையையும் கேவலப்படுத்திக் கொள்ளும் காரியத்தை செய்பவள் தமிழ்ப் பெண்ணாக, இந்திய மண்ணில் பிறந்தவளாக நிச்சயம் இருக்க மாட்டாள் என்பதை நிரூபிக்கவே இவர் கேட்ட விவாகரத்திற்கு நான் சம்மதித்தேன்.''

''மிஸ்டர் ஆண்டர்சன்... கவிதா சொல்ற கோணத்தில் உங்கள் ஆய்வும், அதன் காரணமான தீசிசும் அமையட்டும். அது, இந்த சமூகத்திற்கே நன்மை பயப்பதாக இருக்கும். தயவு செய்து இப்படி எதிர்மறையாக சிந்திப்பதை மாற்றிக் கொள்ளுங்கள். மனோவியலின் பெயரால், பெண்மையைக் கேவலப்படுத்தும் இந்த முயற்சியை இத்துடன் விட்டு விடுங்கள்.''

''இல்லை நரேன்... நீங்கள் சொல்வதில் எனக்கு உடன் பாடில்லை. நானும், கவிதாவும் பிரிந்து கொஞ்ச நாட்களே ஆகின்றன. அவள் வாழ வேண்டிய நாட்கள் இன்னும் அதிகம் இருக்கின்றன. நான் சொல்கிற செக்ஸ், காலப் போக்கில் அவளையே மறு சிந்தனை செய்ய வைக்கும்.''

''ஸ்டாப் இட்... இதற்கு மேல் நீங்கள் ஒரு வார்த்தை பேசவும் நான் அனுமதிக்க மாட்டேன்; நீங்க போகலாம்,'' கோபத்தில் கத்தினாள் கவிதா.

காரில் ஏறி புறப்பட்டான் ஆண்டர்சன். கவிதாவை சமாதானப்படுத்தி, பிறகு வந்து சந்திப்பதாக கூறி, நரேனும் கிளம்பினான்.

கவிதா அவளது மூன்று வயதுக் குழந்தையை மார்பில் இறுக அணைத்தபடி ஹாலில் அமர்ந்திருந்தாள். அவள் விழியோரங்களில் கண்ணீர்த் துளிகள் திரண்டு, அவளது அழகிய கன்னங்களில் வழிந்தது.

'எதற்காக இப்படி ஒருவனை நான் கணவனாகத் தேர்வு செய்தேன். வாழ்க்கை என்னை ஏமாற்றி விட்டதா; இனி, காலத்திற்கும் இப்படி தனியே கண்ணீரிலேயே என் வாழ்க்கை முடிந்துவிடப் போகிறதா! இந்த நரேன் மாதிரி ஒருவன் கணவனாக வாய்த்திருந்தால், வாழ்க்கை எத்தனை சந்தோஷமாக அமைந்திருக்கும்...' நரேனைப் பற்றி மிகவும் உயர்வாக நினைத்துப் பார்த்துக் கொண்டிருந்தாள் கவிதா.

அதே நேரத்தில், ஆஸ்திரேலியாவின் சிட்னியில், 'இப்போது நரேன் என்ன செய்து கொண்டிருப்பான்... போன் போட்டு கேட்கலாம். ஆனால், அவன், என்னிடம் சொல்வது எந்த அளவிற்கு உண்மையாக இருக்கும்?' என்று, அவனைப் பற்றிய வேறு விதமான நினைவுகளோடு அமர்ந்திருந்தாள் மதுரிமா.

'என்ன இருந்தாலும், நீ நரேனை அமெரிக்காவில் தனியே விட்டு,விட்டு ஆஸ்திரேலியாவிற்கு வந்தது தவறு!' என்று வைத்தீஸ்வரன் சொன்னது, மதுரிமாவின் நினைவில் மீண்டும், மீண்டும் ஒலிக்க ஆரம்பித்தது.

'நான் தனியே வந்திருப்பது தவறா அல்லது நரேன் தனியே இருப்பது தவறா?'

புரிந்து கொள்ள முடியாமல் தவித்தாள் மதுரிமா.

பிறகு தான் அந்த முடிவை எடுத்தாள்.

தொடரும்.

- தூர்தர்ஷன் முன்னாள் இயக்குநர் ஏ நடராஜன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us