
பா-கே
ஊறுகாய், பொடி மற்றும் அப்பள வகைகளை ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் நண்பர் ஒருவர், கடந்த பிப்ரவரி மாதம், 'பிசினஸ்' சம்பந்தமாக, சுவீடன் சென்றிருந்தார்.
'கொரோனா' தொற்று காரணமாக இந்தியா திரும்புவதில் தாமதம் ஏற்பட்டு, கடந்த செப்டம்பர் மாத முதல் வாரம் தான், சென்னை வந்திருந்தார்.
அவரிடமிருந்து போன் அழைப்பு.
'மணி... உங்களை எல்லாம் சந்தித்து ரொம்ப நாளாயிற்று. இன்று மாலை என் வீட்டுக்கு நீயும், லென்ஸ் மாமாவும் வர முடியுமா... நம் மற்ற, 'பீச்' நண்பர்களையும் வர சொல்லியிருக்கிறேன்...' என்றார்.
'வீட்டுக்கு வர சொல்கிறாரே...' என்று எண்ணி, 'வீட்டில் மனைவி இல்லையா?' என்றேன்.
'பிள்ளைகளை அழைத்து, ஊரிலிருக்கும் அவ அம்மா வீட்டுக்கு போயிருக்கிறாள். சுவீடனிலிருந்து நான் வரும் வரை, அவளது பெற்றோர் தான் இங்கு, அவளுக்கு துணையாக இருந்துள்ளனர். அவர்கள் ஊருக்கு செல்லும் போது, நாலு நாளாவது ஊரில் இருந்து விட்டு வரட்டும் என்று, நான் தான் அவர்களோடு அனுப்பி வைத்தேன்...' என்றார்.
நண்பர்களை சந்தித்து நாளாயிற்றே என்பதால் சம்மதித்தேன். லென்ஸ் மாமாவிடம் விஷயத்தைக் கூறியதும், துள்ளி குதித்தார்.
'மணி... மதியமே ஆசிரியரிடம், 'லீவு' கேளு. போயிடுவோம்...' என்றார்.
'மாமா... இது, உங்களுக்கே, 'டூ மச்... த்ரீ மச்' ஆக தெரியலையா... ஏகப்பட்ட வேலை கிடக்கு. எல்லாத்தையும் முடிச்சுட்டு, சாயந்திரம் போனால் போதும்...' என்றேன்.
ஏதோ முணுமுணுத்தவாறு அங்கிருந்து நகர்ந்தார், மாமா.
மாலை, 4:30 மணி. வேலை முடிந்ததும், ஆசிரியரிடம், 'பர்மிஷன்' வாங்கி, நானும், லென்ஸ் மாமாவும் கிளம்பினோம்.
சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள, நண்பரின் பங்களாவுக்கு சென்ற போது, மற்றவர்கள் ஏற்கனவே அங்கு ஆஜராகி இருந்தனர். நீண்ட இடைவெளிக்கு பின் சந்தித்ததால், அங்கு ஒரே ஆரவார கூச்சல் எழுந்தது.
நண்பரின் வீட்டில், எப்போதும் குறைந்தது நாலைந்து பணியாளர்களாவது நடமாடிக் கொண்டிருப்பர். இன்று ஒருவரையும் காணோமே என்று, அவரிடம் விசாரித்தேன்.
'சமையல் வேலை முதல், அனைத்து வேலைகளையும் சீக்கிரமாக முடிக்க சொல்லி, மதியமே, எல்லாரையும், 'பாக்' செய்து, வீட்டுக்கு அனுப்பி விட்டேன். இனி, நாளை தான் வருவர்...' என்றார்.
'நண்பர், சகல முன்னெச்சரிக்கையுடன் தான் இருக்கிறார்...' என்று நினைத்துக் கொண்டேன்.
அதற்குள், மாமா படபடத்தார்...
'ஏம்பா... பாரின் சரக்கு எடுத்து வந்திருக்க இல்ல... இரு... நான் போய் கொறிக்க ஏதாவது இருக்கிறதா என்று பார்த்துவிட்டு வர்றேன்...' என்றார்.
'ஏய்... லெஞ்சு... அதெல்லாம் நான் ஏற்கனவே பார்த்துட்டேன். நன்னீர் இறால் வறுவல், 'லெக் - பீஸ்' மற்றும் 'மட்டன்' பிரியாணி, கோழி குருமா, நண்டு பொடிமாஸ் எல்லாம் தயார்...' என்றார், ராமசாமி அண்ணாச்சி.
'எனக்கு ஏதாவது சைவம் உண்டா...' என்றேன்.
'மணி, உனக்காக, இரண்டு தோசை, பூண்டு சேர்த்த மிளகாய் பொடி, புளிக்காத தயிர், வெண்ணெய், பால் சேர்த்து தாளித்த தயிர் சாதம் தயாரா இருக்கு. எல்லாத்தையும், 'ஹாட் - பேக்'கில் வைத்துவிட்டு சென்றுள்ளார், சமையல்காரர்...' என்றார், நண்பர்.
'இந்தா லெஞ்சு... நண்பர் எனக்காக, விரலால் தொடும், 'அண்ட்ராயர்' போன் வாங்கி வந்திருக்கார்...' என்றார், ராமசாமி அண்ணாச்சி.
ஒரு நிமிடம் அவர் என்ன சொல்ல வருகிறார் என்று, எங்களுக்கு புரியவில்லை. சுதாரித்த லென்ஸ் மாமா, கடுப்பாகி, 'ஓய்... அண்ணாச்சி. அது, 'அண்ட்ராயர்' இல்லையா... 'ஆண்ட்ராய்ட் டச் - ஸ்கிரீன்' போன். 'அண்ட்ராயர்'ன்னா, உள்ளே போடுற ஜட்டியா...' என்றார்.
'என்ன இழவோ... எனக்கு அதை எப்படி பயன்படுத்தறதுன்னு சொல்லி கொடு...' என்றார்.
மாடியிலிருந்த தன் அறையின் ஒரு பகுதியிலே, 'பார்' அமைத்திருந்தார், நண்பர். அங்கு அழைத்து சென்றதும், அனைவர் முகத்திலும், 100 வாட்ஸ் பல்ப் எரிந்தது.
சுவீடன் நாட்டு ஸ்பெஷல் சரக்குகளான, 'அப்சோலட் அண்ட் எக்ஸ்ப்ளோரர், வோட்கா, பர்ன் வைன், லாகர் பீர்' மற்றும் 'ஸ்வீட் சிடர்' என, பல வகைகள் அணிவகுத்திருந்தன.
நான் அங்கிருந்து கீழே இறங்கி, ஹாலில் இருந்த, 'டிவி'யை, 'ஆன்' செய்து, செய்தி சேனல் பார்க்க ஆரம்பித்தேன்.
சிறிது நேரத்தில் ஆளுக்கொரு பாட்டிலுடன் கீழே இறங்கி வந்தனர்.
விசாலமான ஹாலில், தரையில் மெத்தை விரிக்கப்பட்டு, இடைவெளி விட்டு திண்டுகள் போடப்பட்டிருந்தன; சமூக இடைவெளியை பின்பற்றவாம்.
லென்ஸ் மாமா, கொறிக்கும் ஐட்டங்களை பெரிய பெரிய தட்டுகளில் எடுத்து வந்து வைத்தார். சோடா, மினரல் வாட்டர் என்று சகலமும் அங்கு அணிவகுத்தன.
எனக்காக, உருளைக்கிழங்கு பிரெஞ்ச் ப்ரை மற்றும் லெமன் ஜூஸ் எடுத்து வந்து தந்தார், நண்பர்.
தொழிலதிபரின் நண்பர், சுவீடன் போய் வந்த கதையை சுவாரஸ்யமாக சொல்ல ஆரம்பித்தார். நானும், அவர் பேச்சை கேட்டபடியும், செய்தி சேனலில் இன்னொரு காதை தீட்டியபடியும் அமர்ந்திருந்தேன்.
மணி, 9:00 ஆகியும், 'கச்சேரி' முடிவதாக தெரியவில்லை. மெதுவாக மாமாவிடம், 'நேரமாச்சு மாமா... பசிக்குது. சாப்பிட்டு கிளம்பலாம்...' என்றேன்.
சாப்பாட்டு கூடத்துக்கு சென்று, அவரவருக்கு வேண்டியதை எடுத்துப் போட்டு, மேலும் கீழும் சிந்தியபடி சாப்பிட ஆரம்பித்தனர். நான் ஒரு மூலையில் அமர்ந்து, தோசையையும், தயிர் சாதத்தையும் சாப்பிட்டு, மாமாவுடன் கிளம்பினேன்.
மறுநாள் காலை, வழக்கம் போல், அலுவலகம் செல்ல, தேடி வந்தார், லென்ஸ் மாமா.
'மணி... நேற்று இரவு, நண்பர்கள் அனைவரும் வீட்டுக்கு சென்று விட, தொழிலபதிபர் நண்பர், மாடியில் இருந்த அறைக்கு சென்று துாங்கி விட்டிருக்கிறார். 'ஏசி' அறை என்பதால், வெளியே என்ன நடந்தது என்று தெரிந்திருக்கவில்லை.
'திருடன் ஒருவன், நண்பர் வீட்டு தோட்டத்தில், 'காம்பவுண்ட்' சுவர் ஒட்டி இருந்த தென்னை மரத்தில் ஏறி, தேங்காய் பறித்து கீழே போட்டுள்ளான். செம போதையில் இருந்திருப்பான் போலிருக்கு. மரத்திலிருந்து இறங்க தெரியாமல், கீழே விழுந்து கால் முறிந்துள்ளது.
'போதையில் இருந்ததால், வலி தெரியாமல் மரத்தடியிலேயே படுத்து துாங்கி விட்டிருக்கிறான்.
'மறுநாள் காலை, பணியாட்கள் அழைப்பு மணி அடிக்க, நண்பர் போய் கதவை திறந்து விட்டிருக்கிறார். அவர்களில் ஒருவன் யதேச்சையாக தோட்டத்து பக்கம் செல்ல, திருடனை பார்த்து, முதலாளியிடம் தகவல் தெரிவித்துள்ளான்.
'போதை முழுவதுமாக தெளியாமலும், கால் முறிந்து இருப்பதையும் பார்த்த நண்பர், ஆட்டோ ஒன்றை வரவழைத்து, சில ஆயிரம் ரூபாய் கொடுத்து, ஏதாவது மருத்துவமனைக்கு அழைத்து செல்ல சொல்லியிருக்கிறார்.
'மேலும் 'வீட்டு அம்மா ஊரிலிருந்து வந்தால், இதுபற்றி மூச்சு விட கூடாது...' என்று, பணியாட்களை எச்சரித்து, திருடன் பறித்து போட்ட தேங்காய்களை உள்ளே வைக்க சொல்லியிருக்கிறார். இது எல்லாவற்றையும் எனக்கு போன் பண்ணி சொன்னாருப்பா...' என்று முடித்தார், மாமா.
எனக்கு சிரிப்பதா, அழுவதா என்று தெரியாமல், 'ஙே' என்று விழித்தேன்.

