sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/இணைப்பு மலர்/வாரமலர்/தடம் தந்த தந்தை தமிழ்வாணன்! (12)

தடம் தந்த தந்தை தமிழ்வாணன்! (12)

தடம் தந்த தந்தை தமிழ்வாணன்! (12)


PUBLISHED ON : நவ 08, 2020

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 08, 2020


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அப்பாவையும், காரையும் அடித்து நொறுக்கியவர்கள்!

அப்பாவை ரத்தக் காயங்களுடன் பார்க்கும் துரதிர்ஷ்டம் எந்த மகனுக்கும் வாய்க்கக் கூடாது; அதுவும் ஒருமுறைக்கு மேல். ஆனால், போரூர் கார் விபத்திற்கு பிறகு, அப்பாவை மீண்டும் ரத்தக் காயங்களுடன் கண்ட துரதிர்ஷ்டசாலியாக நான் ஆனேன்.

அந்தக் காலத்தில், தேனாம்பேட்டையில், ஆபர்ட்ஸ்பரி என்று ஒரு திருமண மண்டபம். இன்றைக்கு இது, 'ஹயாத் ரீஜென்ஸி' என்கிற ஓட்டலாக மாறியிருக்கிறது. அறிவாலயத்திற்கு அடுத்த கட்டடம் இது.

அப்பாவுக்கு ஆதித்தனார் ஐயாவோடு நெருங்கிய தொடர்பு இருந்தது. 'நாம் தமிழர் இயக்கம்' ஆதித்தனார் அவர்களால் தோற்றுவிக்கப்பட்டபோது, அதன் தளபதிகளுள் ஒருவராக அப்பாவும் இருந்தார். அப்பா, தன் காரின் முன் பகுதியில், 'நாம் தமிழர் இயக்கம்' என்கிற கொடியையும் பொருத்தியிருந்தார். நிறம் கூட எனக்கு நன்றாக நினைவில் இருக்கிறது. மஞ்சள் கொடியில் நீல நிற எம்பிராய்டரி எழுத்துகள்.

சொல்ல வந்த செய்தி, இங்கு தான் ஆரம்பிக்கிறது. ஆதித்தனார் அவர்களுக்கு, ஆபர்ட்ஸ்பரியில் பாராட்டு விழா. ஐயா பற்றி நன்கு அறிந்தவர் என்கிற வகையில், அப்பாவை, இந்த பாராட்டு விழாவில் பேசுவதற்கென அழைத்திருந்தனர். எதற்காக இந்தப் பாராட்டு விழா என்பதை, என் போன்ற வயதானவர்கள் தான் நினைவுபடுத்திச் சொல்ல வேண்டும். எனக்கு நினைவில்லை.

கட்சித் தொண்டர்களும், பொது மக்களுமாய், மிகப்பெரிய மண்டபமே நிரம்பி வழிய, வெளியிலும் பெருந்திரளாய் பலர் கூடி நிற்க...

ஆதித்தனார் ஐயாவை பாராட்டி பேசும்போது, 'ஆதித்தனார் ஐயா சிலரைப் போல தோள் வலி கொண்டவரல்லர், தோள் வலிமை கொண்டவர்...' என்று அப்பா குறிப்பிட, வந்தது வினை!

தோள் வலிக்காகத் தமிழகத்தின் மிகப்பெரிய தலைவருக்கு, அமெரிக்காவில் சிகிச்சை நடந்து கொண்டிருந்த நேரம் அது.

'எங்கள் தலைவரைத்தானே தாக்கிப் பேசினீர்கள்...' என்று, அவர் கட்சியைச் சார்ந்தவர்கள் திரண்டு எழுந்து, மேடையிலிருந்து அப்பா இறங்கியதுமே, அவரைத் தாக்க ஆரம்பித்து விட்டனர்.

இனி, இதன் விவரிப்பை அப்பாவுடன் உடன் சென்ற நண்பரான, தியாகு வழியாக தெரிந்து கொள்வோமா...

'உன் அப்பா, மேடையை விட்டு இறங்கியதுமே, நிறைய பேர் அவரை நெருங்கி வந்து, கைகளால் தாக்க ஆரம்பித்து விட்டனர். ஒரு தொண்டர், அப்பாவின் சட்டையைக் கிழித்தார்.

'இத்தகையத் தாக்குதல்களைச் சந்திக்கிற எவரும் தடுப்பர், ஓடி ஒளிவர். காரை நோக்கி நடந்தபடி இருந்தார், அப்பா. அவர் முகத்தில் கலவர உணர்வே இல்லை.

'சிலர் மட்டும் முன் வந்து தடுத்தனர். 'இது, உங்கள் கட்சிக் கூட்டமல்ல. எவர் பெயரையும் அவர் குறிப்பிடவில்லை. ஐயாவின் விழாவில் இப்படி நடந்தால், விழாவின் நோக்கம் அர்த்தமற்றதாகப் போய்விடும். நிறுத்துங்கள் உங்கள் தாக்குதலை...' என்று, பாதுகாப்பு வளையம் அமைத்தபடி, அப்பாவை சூழ்ந்து, காரில் ஏற்றி அமர வைத்தனர்.

'அன்றைக்கென்று பார்த்து, தான் குடியிருந்த வீட்டுக்காரரின் அம்பாசிடர் காரில் வந்திருந்தார், உன் அப்பா. காரையும், கட்டையால், செங்கல்லால் அடித்து நொறுக்கினர். காருக்குக் கடுமையான சேதம்.

'ஆபர்ட்ஸ்பரி மண்டபத்திற்கும், வாசலுக்கும் இடையே நீண்ட துாரம். வழி நெடுகிலும் தாக்குதல்கள் நடந்தன. நான் பயந்து நடுங்கியபடி அமர்ந்திருக்க, உன் அப்பா கூலாக காருக்குள் அமர்ந்திருந்த விதம், அவர் எப்பேர்ப்பட்ட தைரியசாலி என்பதை எனக்கு உணர்த்தியது...' என்று முடித்தார்.

வீட்டிற்குள் அப்பா நுழைந்தபோது, குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஆஜர்.

'என்னப்பா இது...' என்றோம், ஒரே குரலாய்!

ரத்தம் சொட்டவில்லையே தவிர, சிராய்ப்புகளும், உடல் வீக்கங்களும் நன்கு தெரிந்தன. சட்டை நிச்சயம் தேறாது.

'என்னங்க நடந்துச்சு... இந்தக் கோலத்துல வந்து நிக்குறீங்க?' -அம்மா.

'இன்றைய விழாவில், ஆதித்தனார் ஐயா தான், 'ஹீரோ!' நான் தான், செகண்ட் ஹீரோ!' என்று சொல்லிச் சிரித்தாரே பார்க்கலாம்.

துணிவு என்பது அவருக்கு

வெறும் போதனைச் சரக்கு அல்ல. அவரது இயல்பே அது தான் என்று எங்களுக்கு மேலும் உணர்த்திய சம்பவம் இது.

பல கூட்டங்களில், இப்படித்தான் வெளிப்படையாக பேசி விடுவார். எந்தக் கூட்டத்திற்கு கிளம்பினாலும் அவர் என்ன கோலத்தில் திரும்புவாரோ என்று, குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் கவலையுடன் பேசிக் கொள்வோம்.

ஒருநாள், என்ன நினைத்தாரோ தெரியவில்லை. 'இனிமேல் நான் பேசும் கூட்டங்களுக்கு பிள்ளைகள் எல்லாரும் வாங்க. எல்லாருக்கும் ஐஸ்கிரீம் உண்டு...' என்றார்.

இப்படிப் பெற்ற பிள்ளைகளை அழைத்து மேடைகளுக்குப் பேசப் போன பொது வாழ்வுப் பிரபலம் என்று யாரேனும் உண்டா... தெரியாமல் தான் கேட்கிறேன் வாசகர்களே... சொல்லுங்கள்!

நாங்கள் என்ன கறுப்புப் பூனைப் படையா, அப்பாவை அடிதடியிலிருந்து காப்பாற்ற... ஆனால், அப்பாவின் இந்த அழைப்பு பல நோக்கங்களை உள்ளடக்கியதாக இருந்தது.

கூட்டத்தில் எங்களைப் பரவலாக இடம் தேடி அமரச் சொல்வார். கடைசி வரிசையில் நான். (வகுப்பிலும் இந்த இடம் தானே!) ரவி, முன் வரிசை. அக்கா லஷ்மி, இடதுபக்கம். தங்கை சகுந்தலா, வலது மூலை.

குட்டித் தமிழ்வாணன்கள் அரங்கில் இப்படிப் பரவியிருக்க, கூட்டம் முடிந்ததும், நேரே மவுண்ட் ரோடு புகாரியில் ஐஸ்கிரீம் பிரிவிற்கு வண்டி போகும்.

வழியெங்கும், 'ம்! லேனா, முதல்ல நீ சொல்லு! எப்படிப் பேசினேன்... கடைசி வரிசையில் ரசிச்சாங்களா... 'கமென்ட்' எதுவும்?'

'விழுந்து விழுந்து சிரிச்சாங்கப்பா...'

'எந்த இடத்துல?'

'ம்... ம்ம் வந்து...'

'டேய்! சும்மா அளக்கப்புடாது! சரியா சொல்லு, எதிர்மறை, 'கமென்ட்' ஏதும் அடிச்சாங்களா?'

'இல்லப்பா! உண்மையில நல்லா ரசிச்சாங்கப்பா...'

'ம்ம்! லஷ்மி, நீ சொல்லு...'

மெல்ல மெல்ல சகோதரிகள் கழன்று கொள்ள, நானும், ரவியும் நிழலாய் ஒவ்வொரு கூட்டத்திற்கும் போவோம்.

ஒரு மாணவன் தேர்வு எழுதி விட்டு வெளியே வந்தால் அவனுக்கே தெரியும், தான், 'பாஸா, பெயிலா, டிஸ்டிங்ஷனா, சென்டமா' என்று!

அப்பாவுக்கா தெரியாது தம் பேச்சை எடை போட?

ஆனாலும், எங்களிடம் சின்னப் பிள்ளை போலக் கேள்வி கேட்டு, அவர் காட்டிய ஆர்வம் எங்களுக்கு வியப்பாக இருக்கும், என்ன இப்படித் துருவித் துருவிக் கேட்கிறாரே என்று.

தொடரும்

லேனா தமிழ்வாணன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us