
பா - கே - ப
தேர்தல் நடந்து முடிந்த இரண்டு நாட்களுக்கு பின், மதிய உணவுக்கு அழைத்திருந்தார், நண்பர் ஒருவர். நான், லென்ஸ் மாமா, குப்பண்ணா, திண்ணை நாராயணன் மற்றும் ராமசாமி அண்ணாச்சி அனைவரும் ஆஜரானோம்.
நண்பர், மல்யுத்த பிரியர். சில காலம் மல்யுத்த பயிற்சியும் எடுத்தவர். மல்யுத்தம் பற்றி பேச ஆரம்பித்தால், மணிக்கணக்கில் பேசுவார். மல்யுத்த போட்டி எங்கு நடந்தாலும், முதல் ஆளாக, டிக்கெட் வாங்கி, சென்று விடுவார். உலக புகழ்பெற்ற மல்யுத்த வீரர்களின் புகைப்படங்களை பிரேம் செய்து, வீட்டு கூடத்தில் மாட்டியிருந்தார்.
'ஏலே லெஞ்சு... எப்பப்பாரு, கேமராவும் பையுமா சுற்றி வருவீரே... இவர (நண்பரின் பெயரை குறிப்பிட்டு) மல்யுத்தம் செய்வது போன்ற ஒரு, 'போட்டோ' எடுத்திருக்கிறீரா... 'மர்பி'ன்னு என்னமோ சொல்றாங்களே... அது மாதிரி, யாராவது ஒரு மல்யுத்த வீரர் உடம்புல, இவர் தலையை வெச்சு, 'போட்டோ' பண்ணி கொடும்ல... சந்தோஷப் படுவாரு...' என்றார், ராமசாமி அண்ணாச்சி.
'ஓய் பெரிசு... அது, 'மர்பி' இல்ல... 'மார்பிங்...' உம்ம வாயில் கொள்ளிக் கட்டையை சொருக. பொத்திட்டு போவீரா...' என்று கடுப்படித்தார், லென்ஸ் மாமா.
'அப்பப்பா... உம்ம சண்டையை அப்புறம் வெச்சுக்குங்க... மல்யுத்தம் என்று சொன்னதும், எழுத்தாளர் சாவி எழுதிய ஒரு கட்டுரை நினைவுக்கு வருதுப்பா. சமீபத்தில் நடந்து முடிந்த புத்தக திருவிழாவில், அவர் புத்தகத்தை வாங்கினேன். படிச்சு காட்டட்டுமா...' என்றார், திண்ணை நாராயணன்.
'ஓய்... நாணா, இங்க வந்தும், உன், 'திண்ணை' பள்ளிக்கூடத்தை ஆரம்பிச்சுடாதீர்... நாங்க கொஞ்சம், 'ரிலாக்ஸ்' பண்ணிக்கிறோம்...' என்று கூறி, அண்ணாச்சியுடன் ஒதுங்கினார், மாமா.
மல்யுத்தம் பற்றிய கட்டுரை என்றதும், ஆர்வமானார், நண்பர். நாராயணனிடம் அதை படிக்க சொன்னார்.
'எழுத்தாளர் சாவியின், 'பழைய கணக்கு' என்ற நுாலில், 'கிங்காங் சிந்திய ரத்தம்' என்ற தலைப்பில் உள்ள கட்டுரை இது...' என, படிக்க ஆரம்பித்தார், நாராயணன்:
மதுரையில், கிங்காங் - தாராசிங் மல்யுத்த போட்டி நடக்க இருந்தது. சின்ன அண்ணாமலையும், நானும் அந்த போட்டி பற்றிய விளம்பர வேலைகளை கவனிக்க சென்றோம்.
மதுரை போனதும், 'மல்யுத்த மலர்' என, ஒரு பத்திரிகையை துவக்கினேன்.
வாரத்தில் மூன்று நாட்கள், மல்யுத்த போட்டி நடக்கும். அந்த மூன்று நாட்கள் மட்டுமே பத்திரிகை வரும். அச்சிட்ட, 15 ஆயிரம் பிரதிகளும், 'ஸ்டேடியத்'திலேயே விற்று விடும்.
தமுக்கம் மைதானத்தில், 'ஸ்டேடியம்' அமைத்தோம். வெவ்வேறு நாடுகளிலிருந்தும் மல்யுத்த வீரர்கள் வந்திருந்தனர்.
சீனாவிலிருந்து வந்திருந்த, வாங் பக்லி என்ற மல்யுத்த வீரர், மிக திறமைசாலி. 'ரெப்ரி'யாக இருந்து நியாயம் வழங்குவதில் வல்லவர்.
கிங்காங்கும், தாராசிங்கும் ஒருவரை ஒருவர் மலைப் பாம்புகளை போல் பின்னி பிணைந்து, பிடிவாதம் காட்டும் நேரங்களில், கிங்காங் காதருகில் போய் அழுத்தமாக விசிலை ஊதுவார், வாங் பக்லி. அப்போதும் தன் பிடியிலிருந்து தாராசிங்கை விட மாட்டார், கிங்காங்.
வாங் பக்லிக்கு கோபம் வரும். ஒரு, 'ஜம்ப்' செய்து, கிங்காங் தோள் உயரத்துக்கு மேலே கிளம்பி, தம் இரு கால்களாலும் அவரை உதைத்து கீழே தள்ளி, தானும் விழுவார்.
வாங் பக்லி அப்படி மேலே கிளம்பும்போது, ஆகாயத்தில் பறப்பது போல் இருக்கும். இந்த அபூர்வ காட்சியை காண்பதற்காகவே பலர் டிக்கெட் வாங்கி, மல்யுத்த போட்டியை காண வருவர்.
நானும், சின்ன அண்ணாமலையும், 'வானத்தில் பறக்கும் சீனத்து வீரர்' என, வாங் பக்லிக்கு ஒரு பெயர் சூட்டினோம்.
'நண்டு பிடி' என்பது, சர்வதேச மல்யுத்த வகையில் ஒன்று. போட்டியின்போது, எதிரியின் தலை முடியை பிடித்து இழுக்கக் கூடாது என்பது விதி. அடிக்கடி தாராசிங்கின் தலைமுடியை பிடித்து இழுப்பார், கிங்காங். அப்போதெல்லாம் நான் ஒலிபெருக்கியில், 'தாராசிங் போடுவதோ, நண்டுப்பிடி; கிங்காங் போடுவதோ, சிண்டுப்பிடி...' என்பேன்.
எல்லாரும் சிரிப்பர்.
மல்யுத்த போட்டியை பார்ப்பதற்கு, அதில் ஈடுபாடு இருந்தால் மட்டும் போதாது. அதை ஒரு பரபரப்போடு நடத்த வேண்டும் என்று, நானும், சின்ன அண்ணாமலையும் விரும்பினோம். தினம் தினம் புதுப்புது உத்திகளை புகுத்தி, வசூலை பெருக்குவதில் கவனம் செலுத்தினோம்.
ஒருநாள், கிங்காங்கை தனியாக சந்தித்து, அன்று மாலை நடக்க வேண்டிய நிகழ்ச்சி பற்றி விவாதித்தோம். எங்கள் திட்டப்படி, மூன்றாவது ரவுண்டில், கிங்காங், தாராசிங்கை வலுச்சண்டைக்கு இழுத்து, மேடையிலிருந்து கீழே தள்ள வேண்டும்.
கீழே விழும் தாராசிங், கோபமுற்று, மேடை மீது தாவி கிங்காங்கை தன் இரு கைகளாலும் உயர துாக்கி, தலைக்கு மேல் மூன்று முறை தட்டாமாலையாய் சுற்றி கீழே போட வேண்டும். போட்டதும், கிங்காங் மீது அமர்ந்து, அவர் நெற்றியில் ஓங்கி அடிக்க வேண்டும்.
அந்த ரத்தத்தை வலது உள்ளங்கையில் ஒற்றி எடுத்து, குறுக்கே வரும் ரெப்ரியின் பனியன் மீது அப்ப வேண்டும். ரெப்ரி அணிந்துள்ள வெள்ளை வெளேரென்ற பனியன் மீது படியும் அந்த ரத்தம், சூரிய ஒளி போன்ற விளக்கு வெளிச்சத்தில் சுற்றி உள்ள மக்களுக்கும் பளிச்சென தெரியும்.
ரசிகர் கூட்டம், இதை உண்மை சண்டை என்றே நம்பி விடும். அந்த நேரம் பார்த்து, கிங்காங் எழுந்து, தாராசிங்கை சவால் போட்டிக்கு அழைத்தால், மறுநாள் வசூல் இரண்டு மடங்கு கூடும் என்பது, எங்கள் யோசனை.
கிங்காங்கின் நெற்றிச் சதை, மூன்று மடிப்புகள் கொண்டது. அந்த மடிப்புகளுக்கிடையே அன்று, மேடைக்கு செல்லும் முன், பிளேடால் லேசாக கீறிக் கொண்டார், கிங்காங்.
அன்று மாலை, மேடையில், கிங்காங் நெற்றியில் தாராசிங் அடித்தபோது, ஏற்கனவே கீறி வைத்திருந்த இடத்தில் ரத்தம், 'குபுகுபு'வென பெருகியது.
நாங்கள் திட்டமிட்டபடியே, தாராசிங், அந்த ரத்தத்தை எடுத்து ரெப்ரியின் பனியனில் அப்பினார். 'ஸ்டேடியத்தில்' உட்கார்ந்திருந்த ரசிகர்கள், ரத்தத்தை கண்டதும், கூச்சலிட்டனர். போதாகுறைக்கு, ரெப்ரி மீது பாய்ந்து, அவர் பனியனை பிடித்திழுத்து சுக்குநுாறாக கிழித்து போட்டார், கிங்காங். 'ஸ்டேடியமே' அமளி துமளிப்பட்டது...
'அடாடா... பனியனை கிழிச்சுட்டான்யா. உண்மை சண்டையில்லேன்னா அப்படி கிழிப்பானா...' என்று, அவ்வளவு பேரும் பேசிக் கொண்டனர்.
அன்று வசூலான தொகை, 32 ஆயிரம் ரூபாய். பனியன் விலையோ, 10 ரூபாய். 32 ஆயிரம் வசூல் ஆகும்போது, 10 ரூபாய் பனியனை கிழிப்பது பெரிய விஷயமா என்ன!
- படித்து முடித்தார், நாராயணன்.
'அடாடா... இப்படியெல்லாமா, 'செட்' செய்தனர். குட்டீஸ், 'டிவி' சேனல் ஒன்றில், 'டபிள்யூ டபிள்யூ... இ' என்று ஒரு நிகழ்ச்சி ஒளிபரப்புவர். அதில் இப்படித்தான், மலை போன்ற இருவர் ஆவேசமாக அடித்து, உதைத்து கொள்வர்... அதுதான் நினைவுக்கு வருது...' என்றார், குப்பண்ணா.
நாங்கள் பேசி முடிக்கவும், மாமாவுடன் அண்ணாச்சியும் வந்து சேர்ந்து கொண்டனர்.
ஏகப்பட்ட ஐட்டங்களுடன் இருந்த மதிய உணவை, ஒரு பிடி பிடித்து கிளம்பினோம்.

