தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,


PUBLISHED ON : மே 16, 2021

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 16, 2021


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பா-கே

லண்டனில் வசிக்கும் டாக்டர் நண்பரைப் பற்றி, இப்பகுதியில் அவ்வப்போது குறிப்பிட்டுள்ளேன், அல்லவா... சமீபத்தில், சிங்கப்பூரில் நடந்த, 'கான்பரன்ஸ்' ஒன்றில் கலந்து கொண்டவர், அப்படியே சென்னைக்கும் வந்திருந்தார்.

அவரைச் சந்திக்க நானும், லென்ஸ் மாமாவும் அவர் வீட்டுக்குச் சென்றிருந்தோம்.

வீட்டினுள் நுழைந்ததுமே, 'ஏம்பா டாக்டர், 'ஜெமிசன்' கொண்டு வந்திருக்கிறாயா...' என்று கேட்டார், மாமா.

'ஜெமிசன்' என்பது, அயர்லாந்து நாட்டின் மிக உயர்ரக மதுபானம். அதை ருசித்தவர்கள், வேறு எதையும் சீந்த மாட்டார்கள் என்று, மாமா கூற கேட்டுள்ளேன்.

'கம்மிங் பேக் டு த பாயின்ட்!'

மாமா இப்படி கேட்டதும், 'ஓய் லென்ஸ், உமக்கு வயசாயிட்டே போகுதுங்கறத நினைக்கவே மாட்டீரா... இந்த கர்மத்தை விட்டொழித்தால் என்ன...' என்று கடிந்து கொண்டார், டாக்டர்.

நான் பேச்சை மாற்றும் விதமாக, டாக்டரின் குடும்பம் மற்றும் சமீபத்தில் இறந்த இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் கணவர் பிலிப் பற்றி பேச ஆரம்பித்து, பல பொதுவான விஷயங்களை பேசினோம்.

'சரி... மதியத்துக்கு என்ன சாப்பிடுறீங்க... சுண்டைக்காய் காரக்குழம்பு, பருப்பு சாதம், எல்லா காய்கறிகளும் சேர்த்த கூட்டு, பாகற்காய் பிட்லை, கேரட் - வெள்ளரி தயிர் பச்சடி, பிரண்டைத் துவையல் மற்றும் ரசம் தயார் செய்ய எடுத்து வைத்துள்ளேன்...' என்றார், டாக்டர்.

'என்னது... இங்கே யாருக்கு, 'கொரோனா' பாதிச்சிருக்குன்னு, ஒரே பத்திய சாப்பாடா இருக்கு. ஒரு முட்டை கூட இல்லையா...' என்று அங்கலாய்த்தார், மாமா.

'நம் பழங்கால உணவு பழக்கத்தை மறந்து, அவஸ்தைபடுறது போதாதா... இன்று ஒருநாள், நான் செய்து போடுறதை சாப்பிடறீங்க...' என்று கடுமையாக கூறி, உள்ளே சென்றார், டாக்டர்.

ஒரு கிண்ணம் நிறைய, வேக வைத்த வேர்க்கடலை, மற்றொன்றில், பழத்துண்டுகள் எடுத்து வந்தார். கூடவே, மாமா கேட்ட, 'ஜெமிசன்' பாட்டிலும், பூப்போட்ட கிளாசும் வந்தது.

'இவ்ளோ, 'அட்வைஸ்' செஞ்சுட்டு, இந்த கர்மத்தை ஏன் எடுத்து வந்தீங்க...' என்று, 'பிகு' செய்தார், மாமா.

'சரி, சரி... இதுதான் கடைசி முறை. இனி நான், இந்தியா வரும் போது, இதெல்லாம் எடுத்து வரவே மாட்டேன்...' என்று கூறி, கிளாசை நிரப்பி, மாமாவிடம் கொடுத்தார்.

சூழ்நிலையை மாற்றும் விதமாக, 'ஏன் டாக்டர், 'கான்பரன்ஸ்'சில் என்னதான் விவாதிச்சீங்க?' என்றேன்.

'ஒண்ணும் புதுசா இல்லை மணி... தொற்று பரவலை தடுக்க, நம் பாரம்பரிய பழக்கவழக்கங்களை மேற்கொள்வது பற்றியும், ஆங்காங்கு திரட்டிய பல தகவல்களை பற்றி தான் பேசினோம். அதுபற்றி சுருக்கமாக சொல்லட்டுமா?' என்றார்.

'கரும்பு தின்ன கூலியா... சொல்லுங்க டாக்டர்...' என்றேன்.

தொடர்ந்தார், அவர்:

பாமர மனிதனை விட, படிப்பறிவுள்ளவன் விரைவில் இறப்பது ஏன்?

அடுப்பு புகையை பல மடங்கு சுவாசித்த கிழவிகளை விட, சிகரெட் புகைத்த பலருக்கு புற்றுநோய் வருவது ஏன்?

கள்ளச்சாராயம் குடித்த கிழவனை விட, கலர் சாராயம் குடிக்கும் குமாரர்கள் பலருக்கு கல்லீரல் பாதிப்பு ஏன்?

தேள் கொட்டினால், வெறும் வெங்காயத்தை தேய்த்துவிட்டு வேலையை தொடர்பவன் எங்கே; எறும்பு கடிக்கு, மருத்துவமனைக்கு விரைபவன் எங்கே?

நெல் அறுவடை செய்யும்போது, விரலை அரிவால் வெட்டி விட்டால், கையில் களிமண்ணை அப்பி, வேலை பார்ப்பவன் எங்கே; பிளேடு கிழிக்கு, 'ஆன்ட்டிபயாடிக்' இட்டு, கட்டு போடுபவன் எங்கே?

அழுக்கு மணலில் விழுந்து புரண்டு விளையாடிய குழந்தையை விட, மணலையே தொட்டிராத குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு ஏன்?

உண்ட கையோடு ஓடி வந்து பிரசவம் பார்த்து, ஆரோக்கிய குழந்தையை அள்ளி கொடுத்த கிழவிகளின் கையை விட, ஆயிரம் முன்னெச்சரிக்கையோடு கையுறை போட்டு, அறுவை சிகிச்சை செய்த குழந்தை, ஐ.சி.யூ.,வில் இருப்பது ஏன்?

காரணம் மிக சிறிது.

முதலாவது, இயற்கைக்கும் நமக்குமான தொடர்பு இல்லாமல் போனது தான்.

அடுத்து, நோயை பற்றிய அதிக அறிவோடு இருப்பது.

எங்கள் கிழவிகளுக்கு தெரிந்தது எல்லாம் தலைவலி, நெஞ்சு வலி, வயிற்று வலி, கை கால் வலி அவ்வளவு தான். ஆனால், இன்னும் சில ஆண்டுகளில் உடம்பில் உள்ள, 6,000 கோடி செல்களுக்கும், தனித்தனியே மருத்துவம் பார்க்கப்படும். அதைப்பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.

மனிதனின் ஆயுள் அதிகபட்சம், 30 ஆக குறைக்கப்படும்.

எந்த நோயும் மனிதனை கொல்வதில்லை. அதைப்பற்றிய பயம் தான், அவனை கொல்கிறது. இயற்கை, தன் கோட்பாடுகளில் இருந்து ஒருபோதும் மீறுவதில்லை.

உடலை அதன் போக்கில் விட்டு விட்டு, உங்கள் வேலையை பாருங்கள். அது, எதற்காக வடிவமைக்கப்பட்டதோ அதை மிகச் சிறப்பாக செய்யும்.

என்னை பொறுத்தவரை, எவர் ஒருவர் இயற்கையோடும், மனமும், உடலும் இணைந்து செயல்படுகிறாரோ. அவர்களுக்கு நோய்களும் வருவதில்லை; அப்படியே வந்தாலும் ஓரிரு நாட்களில் குணமாகி விடுகிறது.

நல்ல மழையில் நனையுங்கள், பயந்து, ஓடி ஒளியாதீர்; வெயிலை கண்டு அச்சப்படாதீர்; காற்றை கண்டு பயப்படாதீர்; குளிரில் ஸ்வெட்டர் போட்டு பதுங்காதீர்; சுடு தண்ணீரில் தொடர்ந்து குளியாதீர்; சின்ன சின்ன பிரச்னைகளுக்கெல்லாம் மருத்துவரிடம் செல்லாதீர்.

இப்படி வாழ்ந்து பாருங்கள். வாழ்வே இனிமையாகும். இயன்றவரை இயற்கையோடு ஒன்றி வாழ்ந்தால், நோயின்றி வாழலாம்.

- என்று கூறி முடித்தார்.

'சபாஷ் டாக்டர், 'நச்'சென்று புரிய வைத்து விட்டீர்களே...' என்றேன்.

'சரியாத்தான் பேசியிருக்கீங்க, டாக்டர். யோசிக்க வேண்டிய விஷயம் தான்...'

என்று கூறி, தன் வேலையில் கண்ணாக இருந்தார், மாமா.



அவர் ஒரு அரசியல்வாதி. ஊழலில் மூழ்கி, பல ஊர்களை ஒருமிக்க அடித்து ஒரே உலையில் போடுபவர். கட்சிக்கும், நாட்டுக்கும், சளைக்காமல் துரோகம் செய்து வருபவர். தன் கடற்கரை பங்களாவில் ஓய்வில் இருந்தார்.

மாலை நேரத்தில், கடற்கரையோரமாய் கடல் நீரில் காலை நனைத்தபடி நடந்து கொண்டிருந்தார். திடீரென வந்த பேரலை ஒன்று, அவரை உள்ளே இழுத்துப் போனது.

அலறினார், அரசியல்வாதி.

இதைப் பார்த்த பக்கத்திலிருந்த இளைஞன், பாய்ந்து சென்று அவரை காப்பாற்றி, கரையில் விட்டான்.

'தம்பி... என் உயிரையே காப்பாற்றி இருக்கிறாய். என் செல்வாக்கு உனக்கு தெரியுமே... எதுவானாலும் கேள் தருகிறேன்...' என்றார், அரசியல்வாதி.

'ஐயா... என் இறுதிச் சடங்கை, ராணுவ மரியாதையுடன் செய்ய வேண்டும்.

இதுவே என் ஆசை...' என்றான், இளைஞன்.

அதிர்ச்சியடைந்த அரசியல்வாதி, 'என்ன தம்பி இது, எவ்வளவு சின்ன வயசு உனக்கு. இப்போதே சாவை பற்றி பேசுகிறாயே...' என்றார்.

'என்ன ஐயா செய்யிறது... நான் யாரை காப்பாற்றியிருக்கிறேன் என்று வெளியே தெரிந்தால், என் உயிருக்கு ஏதுங்கையா உத்தரவாதம்...' என்றான்.

எங்கோ, எதிலோ, எப்போதோ படித்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us