PUBLISHED ON : ஏப் 10, 2022

பா - கே
வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், இனி வாராவாரம், 'பீச்' செல்வதென்று முடிவு செய்த நண்பர் குழுவினர், சனிக்கிழமை மாலை என்னையும் அழைத்துச் சென்றனர். வழக்கமான இடத்தில் அமர்ந்திருந்தோம். லென்ஸ் மாமா மட்டும் கார் முன்பகுதியின் மீது அமர்ந்தபடி, 'உலகம் பிறந்தது எனக்காக... ஓடும் நதிகளும் எனக்காக... மலர்கள் மலர்வது எனக்காக...' என்ற வாத்தியார் பாடலை சத்தமாக பாடிக் கொண்டிருந்தார். அவ்வழியே சென்றவர்கள், திரும்பி மாமாவை ஒரு, 'லுக்' விட்டு, சிரித்தபடி கடந்து சென்றனர்.
'என்ன மாமா... 'சரக்கு' உள்ளே போவதற்குள், படு உற்சாகமாக இருக்கிறீரே...' என்றேன்.
'அட, போ மணி... ஆயிரம் பிரச்னை இருக்கட்டுமே... அதுக்காக தேவாங்கு மாதிரி மூஞ்சை வெச்சிக்கிட்டு அலையணுமா! இதோ... குப்பண்ணாவை பாரு, பஸ்சில் கூட்ட நெரிசல் அதிகமாம்; புலம்பிட்டு வர்றாரு. அரை மணி நேர பயணம், அதுக்கே இவ்வளவு அலுத்துக்கிறாரு. இதுவும் கடந்து போகும்ன்னு, போய்க்கிட்டே இருக்கணும். அதை விட்டுட்டு... அதாம்பா, நாம 136வது இடத்தில இருக்கிறோம்...' என்றார், மாமா.
'எதுல, 136வது இடம்?' என்றார், ராமசாமி அண்ணாச்சி.
'உலகத்திலேயே மகிழ்ச்சியான நாடுகள் எவை என்று, சமீபத்தில், 'ஐக்கிய நாடுகளின் நிலையான வளர்ச்சி தீர்வுகள்' என்ற அமைப்பு ஆய்வு செய்து, பட்டியல் வெளியிட்டிருக்கு. அதுல தான், இந்தியாவுக்கு, 136வது இடம் கிடைத்துள்ளது. கடந்தாண்டு, 139வது இடத்தில் இருந்த நாம், இந்தாண்டு முன்னேறி உள்ளோம்.
'உலகின், 150 நாடுகளில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. உலக மகிழ்ச்சி தினமாக ஒவ்வொரு ஆண்டும், மார்ச் 20ம் தேதி கொண்டாடப்படுகிறது. அதற்காகத்தான் இந்த ஆய்வு. இதில், முதலிடம் பிடித்திருப்பது ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான, பின்லாந்து...'
'மகிழ்ச்சியான நாடு என்று, எந்த அடிப்படையில் தேர்ந்தெடுக்கிறாங்க...' என்று கேட்டார், குப்பண்ணா.
'தனி நபர் வருமானம், உள்நாட்டு உற்பத்தி, ஆரோக்கியம், மக்களின் ஆயுட்காலம், சுதந்திர மனப்போக்கு, ஊழல் இல்லாமை என, பல காரணிகளை ஆராய்ந்து, மக்களிடையே கருத்துக்கணிப்பு நடத்தப்படும். இதில் எல்லாவற்றிலும் எந்த நாடு முதலிடம் பிடிக்கிறதோ, அதுதான் மகிழ்ச்சியான நாடாக தேர்ந்தெடுக்கப்படும்.
'அதுமட்டுமல்ல... கடந்தாண்டு, டாப் 10 பட்டியலில் இருந்த பல நாடுகள் பின்தங்கியுள்ளன. ஆஸ்திரியா நாடு, இந்தாண்டு, டாப் 10 பட்டியலில் இருந்து வெளியேறி உள்ளது...'
'மகிழ்ச்சியே இல்லாத நாடு என்று ஏதாவது பட்டியலில் உள்ளதா?' என்றார், 'திண்ணை' நாராயணன்.
'ஏன் இல்லாமல்... ஆப்கானிஸ்தான், உலகிலேயே மகிழ்ச்சியற்ற நாடாக பெயர் தட்டிச் சென்றுள்ளது...'
'இப்ப, போர் நடந்து வரும் ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகள், எத்தனையாவது இடத்தில் உள்ளன...' என்றார், அண்ணாச்சி.
'ரஷ்யா, 80வது இடத்திலும், உக்ரைன், 98வது இடத்திலும் உள்ளன...' என்ற மாமா, 'என்ன மணி... பேச்சே காணோம்...' என்றார்.
'அது ஒண்ணுமில்ல மாமா, ஐரோப்பிய நாடுகளுக்கு நாம் சுற்றுலா போன போது, பின்லாந்து நாட்டில் ஒரு பகல் பொழுதை கழித்தது, ஞாபகம் வந்தது; அதைப் பற்றி நினைத்துக் கொண்டிருந்தேன்...'
'பின்லாந்து, அவ்வளவு அழகான நாடா, மணி... அதைப் பற்றி கொஞ்சம் சொல்லேன்...' என்றார், குப்பண்ணா.
'அங்கு போய் பல ஆண்டுகள் ஆகிவிட்டனவே, இப்போது நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கலாம். நாங்கள் பார்த்ததில் நினைவில் இருப்பதை மட்டும் சொல்கிறேன்...
'மற்ற ஐரோப்பிய நாடுகளை போன்றது தான் இதுவும். மக்கள் தொகை குறைந்த நாடு. தலைநகர் ஹெல்சிங்கியில் மட்டும் மக்கள் சற்று அதிகம் இருப்பர். இவர்கள், சைக்கிள் பிரியர்கள். எங்கு செல்வதாக இருந்தாலும், சைக்கிளில் செல்வதையே விரும்புவர். சைக்கிள் ஓட்டிகளுக்காகவே, தனிப்பாதை அமைக்கப்பட்டிருக்கும். மற்ற வாகனங்கள் இதில் போகக் கூடாது...
'பின்னீஷ் மற்றும் ஸ்வீடிஷ் மொழி பேசுகின்றனர். ஆங்கிலமும் நன்றாக பேசுவர். இங்கு குழந்தைகளுக்கு, 7 வயது ஆன பிறகே பள்ளியில் சேர்க்க வேண்டும். தாய் மொழியுடன் ஆங்கில மொழியையும் கட்டாயம் கற்க வேண்டும்.
'நம்மூர் ஆசிரியர்கள் மற்றும் நர்ஸ்களுக்கு இங்கு அதிக வரவேற்பு உள்ளது. அடிப்படை கல்வியுடன் தொழில் கல்வி மற்றும் பல்வேறு துறைச்சார்ந்த படிப்புகளும் கற்றுக் கொடுக்கப்படுகிறது. உலகத்தரமான பல பல்கலைக் கழகங்கள் இங்கு உள்ளன. இந்திய மாணவர்களில் பலர் இதில் படித்து பட்டம் பெறுகின்றனர். படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பும் நிறைய உள்ளது.
'விளையாட்டிலும் சளைத்தவர்கள் அல்ல, இவர்கள். ஒலிம்பிக் போட்டியில் பல பதக்கங்களை பெற்று வருவதை பார்க்கிறோம். முதியவர்களுக்கு வீடு, உதவித் தொகை போன்ற பல சலுகைகளை அளிக்கிறது, அரசு...' என்று பழைய நினைவுகளை கூறி முடித்தேன்.
'என்னமோ மணி... உலகம் எங்கேயோ போயிட்டிருக்கு. நம்மை கிணற்றுத் தவளைகளாக அடைத்து, 'ஷென்டன்' ஆகவே வைத்துள்ளனர்...' என்று அலுத்துக் கொண்டார், அண்ணாச்சி.
'ஓய் பெரிசு... அது, 'ஷென்டன்' இல்ல, 'டென்ஷன்!' பதட்டம் என்று தமிழில் சொல்றதுக்கென்ன...' என்று லென்ஸ் மாமா எகிற, சமாதானப்படுத்தினேன்.
சற்று இருட்டத் தொடங்கியதும் மற்றவர்கள் தங்கள் உலகத்திற்குள் புகுந்து கொள்ள, நான் வேடிக்கை பார்க்க ஆரம்பித்தேன்.
ப
வாசகி ஒருவர் எழுதிய கடிதம்:
ஒருநாள், காய்கறி கடைக்கு சென்றிருந்தேன். அங்கு, வெங்காய மூட்டைகள் வந்து இறங்கியதும், இரண்டு பெண்கள் மூட்டையை பிரித்து வெங்காயங்களை புடைத்து, சருகுகளை தனியாக, ஒரு பெரிய கோணிப் பையில் அடைத்து வைத்தனர்.
'இது எதற்கு?' என அவரிடம் கேட்டேன். அப்பெண் சொன்ன பதில் ஆச்சரியம் அளித்தது.
'ஆட்டோ, வாடகை வண்டி ஓட்டுபவர்கள், பஸ் மற்றும் லாரி ஓட்டுனர்கள் நாள்முழுக்க உட்கார்ந்தே வேலை செய்வதால் சூடு அதிகமாகி, அல்சர் மற்றும் மூலநோய் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. இந்த வெங்காயச் சருகுகளை தலையணை போல் தைத்து அவர்களுக்கு கொடுத்து விடுவோம். அதில் அமர்ந்து சென்றால் பாதிப்பு ஏதும் இருக்காது.
'ஒரே இடத்தில் நீண்ட நேரம் அமர்ந்து வேலை செய்பவர்களுக்கு இது சிறந்த பாதுகாப்பு அளிக்கும். உடல் சூடு சார்ந்த நோய்கள் தாக்காது. இத்தலையணையை மூன்று மாதங்கள் வரை பயன்படுத்தி, பிறகு வேறு மாற்றி விட வேண்டும்.
'எனக்குத் தெரிந்தவர்களுக்கு கொடுத்து, உடல்நிலை சரியானதை கண்கூடாக பார்த்துள்ளேன். வெப்பமான இடங்களில் வேலை செய்பவர்களும் வாங்கி செல்வர்...' என்று கூறினார், அப்பெண். அதை, தங்களிடம் பகிர்ந்து கொண்டேன்.
- இவ்வாறு எழுதியுள்ளார். தேவைப்படுபவர்கள் பயன்படுத்தி பார்க்கலாமே!
