
பா-கே
'ஆந்த்ரோபாலாஜி' - மானுடவியல் சம்பந்தமான படிப்பு இது. இதில், பி.எச்டி., பட்டம் பெற்று, பல்கலைக் கழகம் ஒன்றில் பேராசிரியராக பணியாற்றும் நண்பர் அவர், எனக்கும், லென்ஸ் மாமாவுக்கும் நன்கு பழக்கமானவர்.
மனிதர்களின் பரிணாம வளர்ச்சி, இயல்பு, பழக்க வழக்கம், கலாசாரப் பண்புகள் ஆகியவற்றை பற்றி படிக்கும் அத்துறையில், குறிப்பிடத்தக்க பேராசிரியர்களில் இவரும் ஒருவர். இது குறித்து நிறைய ஆய்வு கட்டுரைகளும் எழுதியுள்ளார்.
வெளிநாட்டு பல்கலைக் கழகங்களில் நடைபெறும் மானுடவியல் தொடர்பான கருத்தரங்கில் கலந்துகொள்ள அடிக்கடி சென்று வருவார்.
சமீபத்தில், வெளிநாட்டில் நடந்த கருத்தரங்கு ஒன்றில் கலந்துகொண்டு, இந்தியா திரும்பியிருந்தார். என்னையும், மாமாவையும் சந்திக்க, அலுவலகம் வந்திருந்தார்.
'என்ன சார்... திடீர் விஜயம். ஏதாவது விசேஷம் உண்டா?' என்றேன்.
'இந்த முறை ஒரு புது விஷயம் பற்றி அறிய முடிந்தது, மணி. அதை சொல்லத்தான் வந்தேன்...' என்றார், பேராசிரியர்.
பக்கத்து கேபினில், ஆங்கில இதழ் ஒன்றை மேய்ந்து கொண்டிருந்த லென்ஸ் மாமா, காதைத் தீட்டியபடி எங்களையே பார்த்துக் கொண்டிருந்தார். புகைப்படம் ஒன்றை கையில் பிடித்தபடி, லென்ஸ் மாமாவிடம் எதையோ கேட்க வந்த உதவி ஆசிரியை ஒருவரும், பேராசிரியருக்கு வணக்கம் வைத்து, அவர் கூறப்போவதை கேட்க ஆவலாக இருந்தார்.
'ஆல்பா ஆண்கள் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா?' என்று கேட்டார், பேராசிரியர்.
நாங்கள், விழிப்பதை பார்த்து அவரே சொல்ல ஆரம்பித்தார்:
'ஆல்பா' வகை ஆண்கள், எல்லா விஷயத்திலும் சிறந்தவர்களாக இருப்பர். இவ்வுலகில், 3 சதவீத பசங்க தான், இந்த மாதிரி இருப்பராம். 99.99 சதவீத பெண்களுக்கு இந்த மாதிரி பசங்களைத்தான் ரொம்ப பிடிக்குமாம். மற்றவர்களை எளிதில் கவரும் வகையில் கம்பீரமாக இருப்பராம், ஆல்பா வகை ஆண்கள்.
மேலாதிக்கம், கூர்மையான பார்வை மற்றும் தன்னம்பிக்கை உள்ள வலிமையான பண்பை கொண்டவர்களாக இருப்பர். தன் வாழ்க்கையை, லட்சியத்தோடு வாழும் மனிதர்களாம் இவர்கள்.
ஆல்பா வகை ஆண்கள், பெண்களைத் துரத்த மாட்டார்கள். அவர்களை தான், பெண்கள் துரத்தித் துரத்தி காதலிப்பர்.
ஆல்பா ஆண்கள், மற்றவர்கள் சொல்வதை பொருட்படுத்த மாட்டார்கள். அவர்கள் பணிகளில் மட்டுமே அதிக கவனம் செலுத்துவர். அதிக தைரியமாக இருப்பது ஆல்பா ஆணுக்கான இலக்கணம். எந்த வேலையையும் சிறப்பாக செய்து முடிக்கக் கூடியவர்கள்.
தங்களின் முடிவுகளைப் பற்றி மற்றவர்கள் என்ன நினைப்பர் என்று எண்ண மாட்டார்கள். தங்களுக்கு பிடித்த செயலை, கச்சிதமாகவும், மகிழ்ச்சியாகவும் செய்வர். எல்லாரையும் எதிர்கொள்ளும் திறமை உள்ளவர்களாக இருப்பர். ஆல்பா ஆண், ஒரு தலைவனை போல், மற்றவர்களை வழிநடத்தக் கூடிய திறமையுள்ளவனாக இருப்பான்.
இவர்கள், தங்கள் வாக்குறுதிகளில் இருந்து மாற மாட்டார்கள். கொடுத்த வாக்குறுதிகளை எப்பாடுபட்டாவது நிறைவேற்றுவர்.
இவர்களுக்கு, 'ரிஸ்க்' எடுப்பது, 'ரஸ்க்' சாப்பிடுவது போல். எத்தனை தடங்கல் வந்தாலும், எல்லாவற்றையும் சமாளித்து தங்கள் வெற்றியை நிரூபிப்பர்.
இவர்களை நம்பி வரும் நண்பரையோ அல்லது காதலியையோ கடைசி வரைக்கும் காப்பாற்றும் எண்ணம் கொண்டவர்கள். எக்காரணத்திற்காகவும், தன் செயல்களில் இருந்தும், முடிவுகளில் இருந்தும் பின்வாங்க மாட்டார்கள்.
இந்த உலகில் பிறக்கும் எந்த ஆணும், ஆல்பாவாக பிறப்பதில்லை. வளர வளர, சமுதாய அமைப்பும், வாழ்க்கை சூழலுமே அவனை ஒரு ஆல்பா ஆணாக மாற்றும்.
ஒருபோதும் தங்களது தோல்வியை ஒப்புக்கொள்ள மாட்டார்கள், ஆல்பா ஆண்கள். தாங்கள் வெற்றி பெறும் வரை விடா முயற்சியுடன் அதை செய்து கொண்டே இருப்பர்.
இந்த உலகில் இருக்கும் வெற்றி பெற்ற, புகழ்பெற்ற மனிதர்கள் அனைவரும், ஆல்பா ஆணாகத்தான் இருப்பர்.
- பேராசிரியர் இப்படி கூறி முடித்ததும், 'எல்லாம் சரி. ஆல்பா ஆண் பற்றி சொன்னீர்கள். ஆல்பா பெண்களின் இயல்பு என்ன?' என்று கேட்டார், உதவி ஆசிரியை.
'அதுபற்றி ஆராய்ச்சி எதுவும் இன்னும் செய்யவில்லை என்று நினைக்கிறேன். அப்படி ஏதாவது ஆராய்ச்சி செய்த தகவல் கிடைத்ததும், உனக்கு சொல்கிறேன்...' என்றார், பேராசிரியர்.
'இதுக்கு எதுக்கு ஆராய்ச்சி எல்லாம். இங்கு வெற்றி பெற்ற பெண்கள் எல்லாம் ஆல்பா பெண்கள் தான். அவர்களின் வாழ்க்கையை பார்த்து, ஆல்பா பெண்ணாக மாற பாரும்மா...' என்று அறிவுறுத்தினார், மாமா.
'உமக்கு ரொம்ப தான்
குசும்பு...' என்றபடி அங்கிருந்து எழுந்து சென்றார், உதவி ஆசிரியை.
ப
ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடிக் கொண்டிருந்தது.
ஓடத்துலே ஏறி, அக்கரைக்குப் போறதுக்காக காத்துக்கிட்டிருக்கார், ஒருத்தர். அவரு ரொம்ப படிச்சவர். அதுமட்டுமில்லே, அதிகமாப் படிச்சிருக்கோம்ங்கிற நினைப்பும் உள்ளவர். ஓடம் வந்து சேர்ந்தது, ஏறி உட்கார்ந்தார்.
ஓடக்காரன் தள்ள ஆரம்பிச்சான். இவரு மெதுவா, அந்த ஓடக்காரன்கிட்ட, 'என்னப்பா தம்பி... நீ இதிகாசமெல்லாம் படிச்சிருக்கியா?'ன்னு கேட்டார்.
'இல்லீங்க...' என்றான், ஓடக்காரன்.
'அய்யோ பாவம்... உன் வாழ்க்கையிலே, கால்வாசியை நீ வீணாக்கிட்டியே...' என்றார்.
கவலைப்படாம, ஓடத்தை தள்ளறதுலேயே இருந்தான், ஓடக்காரன்.
இவரு மறுபடியும், 'என்ன தம்பி... நீ புராணங்களாவது படிச்சிருக்கியா?' என, கேட்டார்.
'அதுலாம் இல்லீங்க...' என்றான், அவன்.
'அய்யோ பாவம்... உன் வாழ்க்கையிலே, அரைவாசியை வீணாக்கிப்புட்டியே...' என்றார்.
கொஞ்ச நேரம் ஆச்சு. இவரு மறுபடியும், 'ஏம்ப்பா... நீ, இலக்கணம், இலக்கியம் எதுவுமே படிக்கலையா?'ன்னு கேட்டார்.
'படிக்கலீங்க...' என்றான், அவன்.
'அய்யோ பாவம்... உன் வாழ்க்கையிலே, முக்கால்வாசியை வீணாக்கிப்புட்டியே...' என்றார்.
ஓடம் இப்போ நடு ஆற்றுலே போய் கொண்டிருந்தது. திடீர்ன்னு ஒரு சுழல், ஓடம் அதுலே சிக்கி மூழ்க ஆரம்பித்தது.
அந்த ஓடக்காரன் இவரைப் பார்த்து, 'ஏங்க பெரியவரே... உங்களுக்கு நீச்சல் தெரியுமா?'ன்னு கேட்டான்.
'அய்யோ... தெரியாதே...' என்றார்.
'அய்யோ பாவம்... உங்கள் வாழ்க்கை பூராவையும் இப்ப வீணாக்கப் போறீங்க...' என்றபடி, ஆத்துலே குதிச்சு, 'கிடுகிடு'ன்னு நீந்திப் போயி கரையேறிட்டான், ஓடக்காரன்.
இந்த இடத்துலே, படிச்ச படிப்பு கரை சேர உதவல; அனுபவம் தான் உதவியிருக்கு.
அதனால, படிப்பு, அனுபவம் இரண்டுக்குமே மரியாதை குடுக்கணும்.
எங்கோ, எதிலோ, எப்போதோ படித்தது.

