
பா - கே
அலுவலகம்-
மதிய உணவு இடைவேளை. 'அசைன்மென்ட்' ஒன்றுக்காக வெளியே சென்றிருந்த லென்ஸ் மாமாவுக்காக காத்திருந்தேன், நான்.
உதவி ஆசிரியைகள், கதை அளந்தபடி சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.
'தீபாவளிக்கு மறுநாள், சூரிய கிரகணம் வந்தாலும் வந்தது. தீபாவளியை, 'என்ஜாய்' செய்ய முடியல. ஆள் ஆளுக்கு கருத்து சொல்றேன் பேர்வழின்னு, சமூக வலைதளங்களில் சகட்டு மேனிக்கு உளறி கொட்டி, கிளறி மூடிட்டாங்க.
'இதோ, இன்னொரு அக்கப்போர்... நவ., 8ம் தேதி, சந்திர கிரகணம் வரப்போவுது. என்ன கூத்து நடக்கப் போகுதோ...' என்று அலுத்துக் கொண்டார், சீனியர் உதவி ஆசிரியை ஒருவர்.
'நயன்தாராவின் வாடகை தாய் விவகாரம் ஓய்வதற்குள், இன்னொன்று... இவன்களுக்குன்னே, ஏதாவது ஒரு விஷயம் வந்து மாட்டுது...' என்றார், இன்னொரு, உ.ஆ.,
'சூரிய கிரகணம் வந்தால், அடுத்து, சந்திர கிரகணமும் வருவதுதானே வழக்கம். இதுல என்ன புதுசு...' என்றேன், நான்.
'புதுசோ, குழப்பமோ எதுவுமில்லா விட்டாலும், அதை பிரித்து மேய்ந்து, வில்லங்கமா மாத்துறதுதானே நம்மவர்களின் பழக்கம்...' என்றார், அருகிலிருந்த சீனியர் செய்தி ஆசிரியர்.
அப்போது, உள்ளே வந்தார், நாளிதழில் நாள்பலன் எழுதும் ஜோதிடர்.
இவர்களது பேச்சை கேட்டவர், 'அப்படி, 'அசால்ட்டா' எடுத்துக்க முடியாது. நிலாவுக்கும், பூமிக்கும் சம்பந்தம் இருப்பதை, ஜோதிட சாஸ்திரமும் கூறுகிறது; விஞ்ஞானிகளும் ஆராய்ச்சிகள் மூலமா அதை உறுதிபடுத்தி இருக்காங்க.
'நிலாவுக்கும், நம் வயிற்றுக்கும் தொடர்பு இருப்பதை, அமெரிக்காவின், இல்லினாய்ஸ் பல்கலை கழகத்தைச் சேர்ந்த, ரால்ப் மோரிஸ் என்ற ஆராய்ச்சியாளர், ஐந்து ஆண்டுகளாக நுாற்றுக்கும் மேற்பட்டவர்களிடம் சோதனை செய்து, நிரூபித்துள்ளார்.
'நிலாவுக்கும், வயிற்று வலிக்கும், குறிப்பாக, அல்சருக்கும், பவுர்ணமிக்கும் சம்பந்தம் இருக்குன்னு சொல்றார். அவரது ஆய்வு முடிவின்படி, பவுர்ணமி நாளில், இவர் சோதனை செய்தவர்களுக்கு மார்பு வலியும், அல்சரால் ஏற்படும் ரத்தப் போக்கும் அதிகமாக இருந்ததாக பதிவு செய்துள்ளார்...'
'அது சரி... எத்தனையோ லட்சம் ஒளி ஆண்டு துாரத்தில் இருக்கிற நிலவுக்கும், இங்கே இருக்கிற இத்துணுான்டு வயித்துக்கும் என்ன சம்பந்தம் இருக்க முடியும்...' என்றார், உ.ஆ.,
'பூமிக்கும், நிலவுக்கும் இடையே ஏற்படக்கூடிய காந்த ஈர்ப்பு சக்தி தான் காரணம். சந்திரன் தான் மனுஷனின் உடலையும், மனதையும் பாதிக்கிறது...' என்று கூறியுள்ளார்.
'காந்த சக்தின்னா, அது இரும்பைதானே ஈர்க்கும். நம் உடலை எப்படி பாதிக்கும்?' என்று அப்பாவியாக கேட்டார், இன்னொரு உ.ஆ.,
'மனுஷ உடம்புலேயும் இரும்பு இருக்கே... அதனால, அந்த ஈர்ப்பு சக்தி, நம் உடலையும் பாதிக்குதாம். இதை நிரூபிக்க, ஒரு கூண்டு தயார் செய்து, அதில் ஒரு எலியை பிடிச்சு விட்டார். ஆரம்பத்தில் அந்த எலி சுறுசுறுப்பா கூண்டுக்குள்ள சுத்தி, சுத்தி பரபரப்பாக ஓடிக் கொண்டிருந்ததாம்.
'அதன்பின், அந்த கூண்டுக்குள், காந்த சக்தியை உண்டாக்கினாராம். உடனே அந்த எலி, தன் இயக்கத்தை நிறுத்திக் கொண்டதாம். காந்த சக்தி அந்த எலியின் உடலையும், செயல்பாட்டையும் பாதித்திருக்கிறது என்பதை நிரூபித்துள்ளார்.
'இதே கருத்தை, மனோதத்துவ மருத்துவர் ஒருவர் ஒப்புக் கொண்டுள்ளார். புத்தி சுவாதீனம் இல்லாதவர்கள், பவுர்ணமி நாளில், மூர்க்கத்தனமாக நடந்து கொள்வது, இதனால் தான் என்று கூறியுள்ளார்.
'இதையே தான், நம் கிராமத்து பெரியவர்கள், 'அமாவாசை, பவுர்ணமி நாளில் மருந்து சாப்பிடாதே...' என்று அறிவுறுத்துவர். இந்நாட்களில், 'பீச்'சுக்கு சென்றோமானால், கடல் அலைகள் ஆக்ரோஷமாக மிக உயரமாக எழும்புவதை பார்க்கலாம்...' என்று கூறி முடித்தார், ஜோதிடர்.
அச்சமயம் உள்ளே வந்த லென்ஸ் மாமா, அனைவரையும் ஒரு தினுசாக பார்த்து, 'வா மணி, சாப்பிடலாம்...' என்று என்னை அழைத்துச் சென்றார்.
ப
பரந்தாமன் என்பவர் எழுதிய, 'கலைவாணர் கதை' என்ற புத்தகத்தில் ஒரு அத்தியாயத்தில்...
சினிமாவுக்கு வருவதற்கு முன், என்.எஸ்.கிருஷ்ணன் நடத்திய நாடகங்களில், 'ஐம்பதும் அறுபதும்' என்ற நாடகம் மிகவும் பிரபலமானது.
'ஐம்பதும் அறுபதும்' நாடகம் எப்படி பிறந்தது தெரியுமா?
ஒருசமயம், கலைவாணரையும், மதுரத்தையும் திருச்சிராப்பள்ளியில் நாடக விழாவுக்கு அழைத்திருந்தனர். டிரைவர் காரை ஓட்ட, கலைவாணர், மதுரமுடன், நடிகர் சி.எஸ்.பாண்டியனும் மற்றொரு நண்பரும் உடன் சென்றிருந்தனர்.
கூட பயணம் செய்த நண்பர், வழியில், கடைகளில் மக்கள் நீண்ட வரிசையில் நின்று கொண்டிருந்ததை பார்த்து, 'என்ன அரசாங்கம் வேண்டிக்கிடக்கிறது... மக்கள் இப்படி அரிசிக்கும், பருப்புக்கும் மணிக்கணக்கில் காத்துக் கிடக்க வேண்டியிருக்கிறதே...' என்று அரசாங்கத்தை குறை கூறும் முறையில் பேசத் துவங்கினார்.
கலைவாணருக்கு அந்த நண்பரின் பேச்சு பிடிக்கவில்லை.
'உலக சரித்திரம் தெரியுமா உங்களுக்கு... அந்நிய ஆதிக்கத்திலிருந்து விடுபட்ட எந்த நாடும், ஆரம்பத்தில் பற்றாக்குறை காரணமாக, அல்லல் அடைந்திருக்கிறது. இன்னும், 10 ஆண்டுகளுக்கு பிறகு பாருங்களேன். இந்த நாடு சுபிட்சமடையும்...' என்றார், என்.எஸ்.கிருஷ்ணன்.
திருச்சியில் நாடக விழாவை முடித்து, திருக்குற்றாலத்தை நோக்கி பயணமாகினர். ஓடிக்கொண்டிருந்த காரில், அவரது சிந்தனையும் ஓடத் துவங்கியது.
அருகிலிருந்த மதுரம் சில நிமிடங்களுக்கு பிறகு மவுனத்தை கலைத்தார்.
'என் சிந்தனைக்கு பிரேக் போடாதே... நான் இப்போது, அறுபதில் போய்கிட்டிருக்கேன்...' என்றார்.
சட்டென்று பின்பக்கம் திரும்பி, 'இல்லீங்க, நான் ஐம்பதில் தான் போய்கிட்டிருக்கேன்...' என்றார், டிரைவர்.
'அட, நான் அதைச் சொல்லலேப்பா. நான், 1960ம் ஆண்டில் இருக்கிறேன்...' என்ற கலைவாணர், உற்சாகத்தோடு, 'ஆ, கண்டுபிடிச்சுட்டேன்...' என்றார்.
'என்ன கண்டுபிடிச்சுட்டீங்க...' என்று கேட்டார், மதுரம்.
'ஐம்பதும் அறுபதும்' - இது தான் நான் அடுத்து போடப் போற நாடகத்தின் தலைப்பு. குத்தாலம் போய் இறங்கியதும் முதல் வேலை, அந்த நாடகத்தை அமைப்பது தான்...' என்றார்.
இப்படித்தான், 'அம்பதும் அறுபதும்' நாடகம், ஓடிக்கொண்டிருந்த காரிலேயே பிறந்தது. அந்த அருமையான நாடகத்தை அவரும், அவரது நாடக குழுவினரும், 1950ம் ஆண்டில் பல இடங்களில் நடித்துக் காட்டினர்.
விடுதலை பெற்ற பாரதத்திற்கு, பல புது நம்பிக்கைகளை தர, கலைவாணரின் அந்த நாடகம் உறுதுணையாக அமைந்தது.

