sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 25, 2025 ,ஐப்பசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

திரையுலக கர்ணன் ஜெய்சங்கர்! (8)

/

திரையுலக கர்ணன் ஜெய்சங்கர்! (8)

திரையுலக கர்ணன் ஜெய்சங்கர்! (8)

திரையுலக கர்ணன் ஜெய்சங்கர்! (8)


PUBLISHED ON : அக் 30, 2022

Google News

PUBLISHED ON : அக் 30, 2022


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

படப்பிடிப்பின் இடையில், அடுத்த, 'ஷாட்' வரும் வரை, ஊஞ்சலில் அமர்ந்திருந்தார், ஜெய். அதன் மற்றொரு முனையில் வந்து அமர்ந்தார், ஜெயலலிதா.

'மிஸ்டர் ஜெய், உங்க படங்களை நான் பார்த்திருக்கிறேன். 'பென்டாஸ்டிக்'கா இருக்கு. பஞ்சவர்ணக்கிளி எனக்கு ரொம்ப பிடிச்ச படம். உங்க நடிப்பும் பிரமாதம்...' என, சகஜமாக ஜெய்சங்கருடன் பேசத் துவங்கினார், ஜெயலலிதா.

அதன்பிறகு இருவருக்கிடையேயும் இருந்த சங்கோஜம் விலகி, இயல்பாக பேசத் துவங்கினர். பின்னாளில் ஐந்து படங்களில் இணைந்து நடிக்கும் அளவுக்கு ஆரோக்கியமாக வளர்ந்தது, அந்த நட்பு.

'சினிமாவில் நான் சந்தித்த புத்திசாலிப் பெண்களில் ஜெயலலிதாவும் ஒருவர். எந்த விஷயம் குறித்தும் நன்றாக தெரிந்து வைத்துக் கொண்டுதான் பேசுவார். இயல்பிலேயே சூட்டிகையாக வளர்ந்த பெண் என்பதால், அது, படங்களில் அந்த கதாபாத்திரங்களில் ஜொலிக்க உதவுகிறது.

'படப்பிடிப்பில் சோர்வு என்பதை, அவரிடம் காணவே முடியாது. அவரிடம் உள்ள இன்னொரு வியக்கத்தக்க ஆற்றல், படத்துக்கான வசனங்களை ஒருமுறை படித்துக் காட்டிவிட்டால், ஒரு வார்த்தையையும் விடாமல் கேமரா முன் சரியாக பேசி விடுவார். என்னுடன் நடித்த கதாநாயகியரில் தனித்து தெரிந்தவர்...' என்று, ஒரு பேட்டியில், ஜெயலலிதா குறித்து கூறியிருந்தார், ஜெய்சங்கர்.

இதே உயர்வான மதிப்பை ஜெய்சங்கர் மீது, ஜெயலலிதாவும் கொண்டிருந்தார்.

ஒருமுறை தன்னுடன் நடித்த கதாநாயகர்கள் பற்றி ஒரு பத்திரிகையில் கருத்து தெரிவித்த அவர், 'ஜெய்சங்கர், நல்ல கலைஞர் மட்டுமல்ல... நல்ல மனிதரும் கூட. படப்பிடிப்பு தளத்தில் ஏதாவது கலாட்டா செய்து கொண்டே இருப்பார். எதைப் பற்றியும் அலட்டிக் கொள்ளாத சுபாவம் கொண்டவர்.

'நடிப்பு தொழிலில் அசாத்திய ஆர்வம் உண்டு. அநாவசியமான, 'பாலிடிக்ஸ்' அவரிடம் கிடையாது. மற்றவர்களை பற்றியும் அநாவசியமாக பேச மாட்டார்...' என, ஜெய்சங்கர் குறித்து கூறியிருந்தது, குறிப்பிடத்தக்கது.

கடந்த, 1966, 'பொம்மை' சினிமா இதழில், 'நட்சத்திரம் கண்ட நட்சத்திரம்' என்ற தலைப்பில் பிரபலங்களை பிரபலங்களே பேட்டி எடுக்கும் பகுதி, வெளி வந்து கொண்டிருந்தது.

ஜெயலலிதாவை பேட்டி காணும் பிரபலமாக, யாரை தேர்ந்தெடுப்பது என, மண்டையை பிய்த்துக் கொண்டிருந்தது, ஆசிரியர் குழு. அப்போது, ஜெயலலிதா பரிந்துரைத்த பெயர், ஜெய்சங்கர்!

கடந்த, 1966ம் ஆண்டு, ஜெய்சங்கரின் திரை வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்தது. ஆம், பின்னாளில், 'தென்னகத்து ஜேம்ஸ்பாண்ட்' என, புகழடைய காரணமான, 'மாடர்ன் தியேட்டர்ஸ்' என்ற பாரம்பரியமான திரைப்பட நிறுவனத்தின் வளாகத்திற்குள் கால் பதித்தார்.

டி.ஆர்.சுந்தரம் மரணம் அடைந்த பிறகு, வெளிநாட்டில் படித்து வந்த அவரின் மகன் ராமசுந்தரம், ஸ்டுடியோ நிர்வாகத்தை ஏற்றார்.

கடந்த, 1960களின் மத்தியில் இளைஞர்கள் சிந்தனையில் புதிய மாற்றங்கள் உருவாகியிருந்தன. வழக்கமான தமிழ் சினிமா கதைகளிலிருந்து, அவர்களின் ரசனை வேறு திசையில் பயணிக்க துவங்கியிருந்தது.

அப்போது, இந்தியா முழுவதும், ஹாலிவுட் நடிகரான சீன் கேனரி நடிப்பில் வெளியான, ஜேம்ஸ்பாண்ட் பாணி ஆங்கில படங்கள் பெரும் வரவேற்பை பெற்றுக் கொண்டிருந்தன.

வெளிநாட்டில் படித்ததாலும், ஆங்கில படங்களை பார்ப்பதில் ஆர்வம் கொண்டிருந்ததாலும், ராமசுந்தரத்துக்கு தமிழ் சினிமாவை தாண்டிய நவீன சிந்தனை இயல்பாகவே இருந்தது.

ஜேம்ஸ்பாண்ட் பாணி படங்களை அவர், தமிழில் தயாரிக்க திட்டமிட்டார். ஜெய்சங்கரின் நடிப்பு பாணி, அந்த நம்பிக்கைக்கு உரம் போட்டது.

அன்றே, இரு வல்லவர்கள் படத்தின் கதையை சொல்லி, சம்பளமும் முடிவு செய்யப்பட்டது. பேசிக் கொண்டிருந்த போதே ஒப்பந்த பத்திரம் வந்தது. நிர்வாக ஒழுங்கை கண்டு, முதல் நாளே ஆச்சரியமடைந்தார், ஜெய்சங்கர்.

ஒப்பந்தத்தை படித்தபோது, ஆச்சரியம், அதிர்ச்சியாக மாறி விட்டது. ஆம், அவ்வளவு கெடுபிடியான நிபந்தனைகள். கையெழுத்திட மறுத்து விட்டார். பிறகு, சில மாற்றங்களுடன், 'மாடர்ன் தியேட்டர்' படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார்.

இந்த காலகட்டத்தில், ராமசுந்தரத்துக்கு ஆத்ம நண்பராகவும் ஆனார், ஜெய்சங்கர். ஜேம்ஸ் பாண்ட் பாணியில் ஜெய்சங்கர் நடித்த முதல் படம், இரு வல்லவர்கள்.

இரு வல்லவர்களில் இன்னொரு வல்லவர், மனோகர். ராமசுந்தரத்தின் கணிப்பு, வீண் போகவில்லை. முதலாளி டி.ஆர்.சுந்தரத்தின் காலத்திற்கு பிறகு, 'மாடர்ன் தியேட்டர்ஸ்' பெற்ற முதல் மாபெரும் வெற்றிப் படமாக, இரு வல்லவர்கள் அமைந்தது.

படத்தின் வெற்றியை கூட்டிய அம்சங்களில் ஒன்று, ஜெய்சங்கர் - எல்.விஜயலட்சுமி ஜோடி. இந்த ஜோடியின் காதல் காட்சிகள், இளைஞர்களை சொக்க வைத்தன. காரணம், அதுவரை ஜெய்சங்கருடன் நடித்த நாயகிகள், சினிமாவில் அவருக்கு சீனியர்களாக இருந்ததால், காதல் காட்சிகளில் நெருங்கி நடிப்பதில் ஒருவித சங்கடமும், சிக்கலும் இருந்தன.

படத்தின் வெற்றியால் மளமளவென இந்த ஜோடி, ஏழெட்டு படங்களுக்கு ஒப்பந்தமானது. கூடவே பத்திரிகைகளுக்கு அவலாகி, அது, எம்.ஜி.ஆர்., அழைத்து விசாரிக்கும் அளவுக்கு போனது, தனி கதை.

அடுத்து ஜெய்சங்கருக்காக, பேங்க் இன் பாங்காக் என்ற ஆங்கில கதையை மாற்றி தமிழில், வல்லவன் ஒருவன் என பெயர் சூட்டினார், ராமசுந்தரம். இந்த படத்தின் வெற்றி ஜெய்சங்கருக்கு, 'தென்னகத்து ஜேம்ஸ்பாண்ட்' என்ற நிரந்தர புகழை பெற்றுத் தந்தது. தொடர்ந்து ஏராளமான பெண் ரசிகைகளை, ஜெய்சங்கருக்கும் சம்பாதித்துக் கொடுத்தது.

இந்த காலகட்டத்தில் என்ன நடந்தது தெரியுமா?

— தொடரும்

திரையுலகில், ஜேம்ஸ்பாண்டாக, ஜெய்சங்கர் புகழ்பெற்றிருந்த காலகட்டம் அது. 'ஜேம்ஸ்பாண்ட் வேடத்தில் இவர்...' என, பொம்மை இதழ், ஜெய்சங்கரிடம் பேட்டி கண்டது.தமிழ் திரை உலகின், ஜேம்ஸ்பாண்ட் என்று உங்களை, ரசிகர்கள் அன்புடன் அழைக்கின்றனர். அதை நீங்கள் திரையில் எந்த வகையில் பிரதிபலிக்கிறீர்கள்... அந்த வேடத்தை எந்த அளவுக்கு நீங்கள் விரும்புகிறீர்கள்?நான் நடித்து வெளிவந்த, இரு வல்லவர்கள், சி.ஐ.டி., சங்கர், மற்றும் காலம் வெல்லும் போன்ற படங்களை கண்டு மகிழ்ந்த ரசிகர்கள், என்னை, 'ஜேம்ஸ்பாண்ட்' ஜெய்சங்கர் என்று, அன்புடன் அழைக்கின்றனர். வீரதீர செயல்களில் தன்னிகரற்று விளங்கும் பாத்திரப் படைப்புக்கு மறு பெயர் தான், ஜேம்ஸ்பாண்ட். இவ்வித குணாதிசயங்கள் என்னை மிகவும் கவர்வதால் நான் ஜேம்ஸ்பாண்ட் பாத்திரப் படைப்பில் நடிப்பதை மிகவும் விரும்புகிறேன்.

- இனியன் கிருபாகரன்






      Dinamalar
      Follow us