
வாகனத்துக்குரிய எரிபொருள்...
வெளியூரில் நடந்த உறவினர் திருமணத்திற்கு சென்றிருந்தேன். வழக்கம்போல், அங்குள்ள சிலரை சந்திப்பதற்காக, உறவினர் ஒருவரிடம், இரு சக்கர வாகனத்தை இரவல் கேட்டேன்.
சாவியை கொடுத்து, 'மாப்ளே... நீங்க, 10 கி.மீ., ஓட்டினா, 20 கி.மீ.,கான பெட்ரோல் போட்டுக் கொடுக்கிறது நல்ல விஷயம் தான். ஆனால், போன முறை நீங்க போட்ட பெட்ரோலுக்கும், நான் வழக்கமா ஊத்துற பெட்ரோலுக்கும் ஏதோ வாய்க்கால் தகராறு ஆகிவிட்டது.
'ஸ்பார்க் பிளக், இன்ஜின்னு, 2,000திற்கும் மேல செலவு. அதனால, நான் வழக்கமா போடுற கம்பெனி பெட்ரோலையே போடுங்க...' என்று, நிறுவனத்தின் பெயரை சொன்னார்.
கார், இரு சக்கர வாகனம் எதுவாக இருந்தாலும், ஒரே நிறுவன தயாரிப்பு எரிபொருளை நிரப்புவது தான், இன்ஜினின் செயல்பாட்டுக்கு நல்லது என்று, வாகன உற்பத்தி நிறுவனங்கள் அறிவுறுத்துவது, நினைவுக்கு வந்தது.
வாகனங்களை இரவல் பெற்று செல்பவர்கள், எரிபொருளை நிரப்பி கொடுப்பது நல்ல பண்பாடு தான். ஆனால், அது வாகன உரிமையாளரின்,'பர்சு'க்கு வேட்டு வைக்காமல் இருக்க வேண்டும்.
ஆதலால், அவர்கள் எந்த நிறுவனத்தின் எரிபொருளை வழக்கமாக பயன்படுத்துவர் என்பதை கேட்டு, அதையே போட்டுக் கொடுப்பது நல்லது.
கே. சரவணன், திருவாரூர்.
அச்சமின்றி வாழ...
நாங்கள் நகர்புறம் தாண்டி வீடு கட்டி குடியேறியுள்ளோம். வீட்டின் அருகே ஏரி ஒன்று உள்ளது. மழை காலங்களில், ஏரி நிரம்பி வீட்டை சுற்றிலும் தண்ணீர் தேங்கி நிற்கும். அது வடிய பல மாதங்களாகும்.
அச்சமயம், மீன்கள் மட்டுமல்லாது விஷ ஜந்துகளும் சரமாரியாக சுற்றித் திரியும். சில நேரங்களில் அழையா விருந்தாளிகளாய், பாம்புகளும் வரும். வீட்டில் செடி, கொடிகள் இருப்பதால், நாங்கள் பயந்தபடி தான் வெளியே வருவோம்.
ஊரிலிருந்து வந்த எங்கள் உறவினர் ஒருவர், சில ஆலோசனை கொடுத்தார். தற்போது, பாம்பின் வருகை குறைந்து, பயமின்றி இருக்கிறோம்.
இதோ உங்களுக்காக அந்த டிப்ஸ்:
* பூண்டை நசுக்கி, தண்ணீரில் கரைத்து செடிகள் மீது ஊற்ற வேண்டும். பூண்டு வாசனை, பாம்பிற்கு அலர்ஜி
* நசுக்கிய பூண்டு, சிறிதளவு மஞ்சள் துாள், கல் உப்பு சேர்த்து, சிறு சிறு மூட்டைகளாக கட்டி, வீட்டின் மூலைகளில் போட வேண்டும்
* புதினா செடிகள், பாம்புகளை அண்ட விடாது. சிறு தொட்டிகள் அல்லது பழைய பாட்டில்களில் கூட வளர்க்கலாம். சிறியா நங்கை மற்றும் திருநீற்று பச்சிலைகளும் வைக்கலாம்
* சிறு சிறு பொந்துகள் இருந்தால் அடைத்து விட வேண்டும். இல்லையெனில் அவை, பாம்புகளுக்கு நிரந்தர தங்குமிடமாக மாறி விடலாம்
* நாட்டு நாய்களை வளர்க்கலாம். செல்ல பிராணியாகவும் இருக்கும்; சிறந்த காவலனாகவும் செயல்படும்
* நாட்டு மருந்து கடைகளில், ஆகாச கருடன் கிழங்கு கிடைக்கும். அதை, வீட்டின் முன்புறம் தொங்கவிட்டால், அது, ஈர காற்று பட்டே வளரும். கருடன், பாம்பிற்கு எதிரி. உபரி தகவல்: கண் திருஷ்டி போக, ஆகாச கருடன் கிழங்கை கட்டுவர்.
இவை எல்லாம் தோட்டக்கலை அதிகாரிகள், ஆலோசனையாக கூறியதாக தெரிவித்தார்.
நீங்களும் பின்பற்றி, பாம்பு அச்சமின்றி வாழலாமே!
எம். ஜான்சி ராணி, சென்னை.
'சென்ட்' வேண்டாமே!
தோழி குழந்தையின் பிறந்த நாள் விழாவிற்கு சென்றிருந்தேன். நிறைய பேர் வந்திருந்தனர்.
விழாவில், 'கேக்' வெட்டி முடிந்ததும், வந்திருந்தவர்களில் சிலர், குழந்தையை துாக்கி வைத்தும், முகத்தோடு முகம் வைத்தும், 'செல்பி' மற்றும் புகைப்படம் எடுத்தனர்.
இதனால், குழந்தை மிகவும் களைத்து போனது. விருந்து முடிந்து, அனைவரும் கிளம்பி வந்தோம்.
மறுநாள் தோழிக்கு போன் செய்து, 'விழா சிறப்பாக இருந்தது...' என்றேன்.
'நான் இப்ப, குழந்தைகள் கிளினிக்கில் இருக்கிறேன்...' என்றாள்.
பதறிய நான், அவளிடம் விசாரித்தேன்.
'குழந்தை, இரவு முழுதும் அழுதுக் கொண்டிருந்ததால், மருத்துவரிடம் காட்ட வந்துள்ளேன். 'விழாவிற்கு வந்தவர்கள் விதவித, 'சென்ட்' அடித்து வந்திருப்பர். 'சென்ட்' வாசனை, குழந்தைக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தி, தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. மருந்து சாப்பிட்டால் சரியாகி விடும்...' என்று கூறியுள்ளார், மருத்துவர்.
'விழாவில், நிறைய பேர் வித வித 'சென்ட்' அடித்து வந்திருந்தது நினைவுக்கு வந்தது. 'சென்ட்' வாசனையில் இப்படி ஒரு ஆபத்து இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தேன்...' என்றாள், தோழி.
ஒரு காலத்தில், விழாக்களின் போது, வாசலில் பன்னீர் தெளிப்பதை வாடிக்கையாக கொண்டிருந்தனர். இது, பக்க விளைவுகள் இல்லாமல் இருந்தது. தற்போது, அந்த முறையை எங்கும் காண முடிவதில்லை.
தோழர், தோழியரே... குழந்தைகளின் பிறந்தநாள் விழாவுக்கு செல்வோர், தயவுசெய்து வாசனை திரவியங்களை தவிர்த்திடுங்கள்!
அ. சாரதா, தருமபுரி.

