sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/இணைப்பு மலர்/வாரமலர்/அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,


PUBLISHED ON : ஜூலை 16, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 16, 2023


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பா - கே

'பீச் மீட்டிங்' களை கட்டியிருந்தது. நீண்ட இடைவெளிக்கு பின், வங்கி அதிகாரியான நண்பரும் வந்திருந்தார்.

மறுநாள் பக்ரீத் என்பதால், அன்வர்பாய்க்கு, 'சுப்ரியா... சுப்ரியா...' என்றார், ராமசாமி அண்ணாச்சி.

தலையில் அடித்துக் கொண்ட, லென்ஸ் மாமா, 'ஓய்... அது சுப்ரியாவும் இல்ல; சுகப்ரியாவும் இல்ல... சுக்ரியா! சுக்ரியான்னா நன்றின்னு அர்த்தம். அர்த்தம் தெரியாம, எங்கோ, யாரோ சொல்றதை அரைகுறையா காதில் வாங்கிட்டு, வாய்க்கு வந்ததை உளறாம, 'பக்ரீத் வாழ்த்து'ன்னு, தமிழில் சொல்லித் தொலைக்க வேண்டியதுதானே...' என்றார்.

'அது என்னமோ போப்பா... ஒண்ணும் வாய்க்குள் நுழைய மாட்டேங்குது. அது சரி, நாளை மதியம் பிரியாணிக்கு துாக்குச் சட்டி கொடுத்து விடவா...' என, அன்வர் பாயிடம் கேட்டார், அண்ணாச்சி.

'துாக்கும் வேண்டாம், சட்டியும் வேண்டாம்... எல்லார் வீட்டுக்கும் நானே பிரியாணி அனுப்பிடறேன். உனக்கு வெஜிடபிள் பிரியாணி அனுப்பிடறேன், மணி...' என, என்னை பார்த்து கூறினார், அன்வர் பாய்.

பேச்சு எங்கெங்கோ சென்ற பின், திடீரென, 'நம்ம ஜனங்களுக்கு, யாரிடம் எப்படி நடந்து கொள்வது என்றே தெரியலைப்பா... இன்று பஸ்சில் வரும்போது, கூட்ட நெரிசலில் தெரியாமல் ஒருவரது காலை லேசா மிதிச்சுட்டேன். உடனே, 'காச்மூச்'ன்னு கத்தினான்.

'ஒரு கட்டத்தில் பொறுக்க முடியாமல், இடிபடாம போகணும்ன்னா, காரில் போக வேண்டியது தானே கூச்சல் போட்டேன். கொஞ்சம் அடங்கி, முணுமுணுத்துக் கொண்டே வந்தான். 'மூடே' சரியில்லைப்பா...' என்றார், குப்பண்ணா.

'இதெல்லாம் ஒரு விஷயமாப்பா... தினமும் நடக்கிறது தானே. மனுஷங்களோட இயல்பை புரிஞ்சுக்கிட்டு, அமைதியா போறது தான் நல்லது...' என்ற வங்கி அதிகாரி, தொடர்ந்து, 'மனிதர்களின் இயல்பு. அதாவது ஆளுமை பண்பை பற்றி விரிவாக ஆராய்ச்சி கூட செஞ்சிருக்காங்க...' என்றார்.

'எப்படி, நல்லவன், கெட்டவன் என்பதை பற்றியா?' என்றார், அப்பாவியாக ராமசாமி அண்ணாச்சி.

'அதில்லப்பா...' என்றவர் கூற ஆரம்பித்தார்:

ஒருத்தன் எப்படி நடந்துக்கிறான்ங்கிறதை வச்சு தான், அந்த ஆள் எப்படிங்கறதை நாம முடிவு பண்ண முடியும். ஆளுமைன்னு சொல்றோம்ல, அதுக்கு, 'சூழ்நிலைகளை ஆளுகிற தன்மை'ன்னு விளக்கம் கொடுக்கிறார், ஒரு உளவியல் நிபுணர்.

சரி, ஒரு மனிதனுடைய ஆளுமையை உருவாக்குகிற விஷயங்கள் என்னென்ன?

பிறப்பு, வளர்க்கப்படற விதம், படிப்பு, நண்பர்கள், சமுதாயம் இப்படி நிறைய உண்டு.

ஆளுமையின் அடிப்படையில், சில மனநோய்கள் உண்டாகும். அதெல்லாம் என்னென்னங்கிறதை தெரிஞ்சு வச்சுக்கிட்டோம்ன்னா, நம் கூட இருக்கிறவங்களை அடையாளம் கண்டுபிடிக்கிறதுக்கு, அது ரொம்ப உபயோகமாக இருக்கும்.

பரனாய்டு ஆளுமைன்னு ஒண்ணு.

இந்த கோளாறு உள்ளவங்க எப்படி இருப்பாங்க தெரியுமா?

அதிக உணர்ச்சி, சந்தேகம், பொறாமை அதிகமா இருக்கும். வளைஞ்சு கொடுக்க மாட்டாங்க. அடுத்தவங்களோட இணக்கமான உறவு இருக்காது. அவங்க செய்யுற தப்புக்கெல்லாம் அடுத்தவங்களை குறை சொல்லிக்கிட்டு இருப்பாங்க.

அடுத்தது, ஸ்கிசாய்டு ஆளுமை

இந்த கோளாறு உள்ளவங்க, அடுத்தவங்களோட பழக கூச்சப்படுவாங்க. சின்ன வயசுலயே இது ஆரம்பமாயிடும். பகல் கனவுல சஞ்சரிப்பாங்க. அவங்களுடைய விரோதம், கோபம் ஆகிய உணர்வுகளை வெளியே காட்டிக்க முடியாமல் இருப்பாங்க. பிரச்னைகளிலிருந்து ஒதுங்கிக் கொள்ள, எதுலயும் ஈடுபாடு இல்லாதவங்களா இருப்பாங்க.

சைக்லோ தைமிக் ஆளுமை

உணர்ச்சிகள்ல ஏற்றத்தாழ்வு அதிகமா இருக்கும். ஒரு சமயம் பார்த்தா மகிழ்ச்சியா இருப்பாங்க. சில சமயம் சோகமா உட்கார்ந்திருப்பாங்க. அவங்க மனநிலைக்கு தகுந்த மாதிரி சமூக நிகழ்ச்சிகள்ல பங்கெடுத்துக்குவாங்க.

எண்ணப் பீடிகை ஆளுமை

இவங்களுக்கெல்லாம், 'கரெக்ட்'டா இருக்கணும். சட்ட திட்டம் எதுலயும் ஒரு ஒழுங்குமுறையை எதிர்பார்க்கிற மனோபாவம். இவங்க எதிர்பார்ப்புக்கும், வன்முறைக்கும் மற்றவங்க கட்டுப்படணும்ன்னு நினைப்பாங்க. இந்த நிலைமை நீடிச்சா என்னாகும் தெரியுமா... அலைக்கழிக்கிற எண்ணங்கள், திரும்ப திரும்ப ஒரே செயலை செய்யத் துாண்டற மனத்தளர்ச்சிக்கு ஆளாயிடுவாங்க.

ஹிஸ்டீரியா ஆளுமை

சின்ன விஷயத்தை எல்லாம் பெரிசு படுத்துவாங்க. இவங்க, உணர்ச்சி அதிகம் உள்ளவங்க. இவங்க மன எழுச்சியில பக்குவமின்மை, குழந்தைத்தனம், முதிர்ச்சியின்மை எல்லாம் இருக்கும். தன்னலமிக்க குணம், பிறர் தன்னை மட்டுமே கவனிக்கணும்ன்னு நினைச்சு செயல்படுவாங்க.

வளர்ச்சியற்ற ஆளுமை

அடுத்தவங்களோடு இணங்கிப் போக முடியாதவங்க. அறிவு, மனவெழுச்சி மற்றும் சமூக உறவு... இதில் எல்லாம் போதுமான வளர்ச்சியையும், நிறைவையும் பெற முடியாதவங்க. இவங்களால, வாழ்க்கையில முன்னேற முடியாது.

சோர்வுடைய ஆளுமை

எதுலயும் உற்சாகம் இல்லாம சோர்ந்து போய் இருப்பாங்க. 'அதுக்கெல்லாம் நமக்கு வலிமை இல்லேப்பா'ன்னு சொல்லிக்கிட்டு இருப்பாங்க. சின்ன விஷயங்களுக்கெல்லாம் அதிர்ச்சி அடைவாங்க. வாழ்வின் சுவையை அனுபவிக்க முடியாதவங்க.

கொதித்தெழும் ஆளுமை

எதுக்கெடுத்தாலும் ஆத்திரம், குரோதம், வன்செயல் ஆகியவற்றில் ஈடுபாடு உள்ளவங்க.

நத்தை வகை ஆளுமைன்னு ஒண்ணு.

அடுத்தவங்க மேல விரோதம் இருக்கும், அடிக்கணும்ங்கிற எண்ணம் இருக்கும். ஆனால், அதை அப்படியே வெளியே காட்டாம அதே சமயம், அமைதியான முறையில வெறுப்பை காட்டற ரகம். இவங்கள்லாம் அமைதியா இருந்துகிட்டே நினைச்சதை நிறைவேத்திக்குவாங்க.

முன் ஜாக்கிரதை ஆளுமை

பாதுகாப்பின்மை, சந்தேகம், முழுமையின்மை, அரைவேக்காட்டுத்தனம். இந்த மனபோக்கு அதிகம் இருப்பதால், அகம்பாவம், பிடிவாதம், எச்சரிக்கை எல்லாம் அளவுக்கு மீறி இருக்கும்.

இதுவரைக்கும் நாம பேசிக்கிட்டிருந்த ஆளுமைப் பண்புகள் அளவுக்கு அதிகமா போயிட்டுதுன்னா, ஆளுமைக் கோளாறுகள் ஏற்படும். அதன் அடிப்படையில மன வியாதிகள் வரும்.

அதனால, இணக்கமான, எல்லாரும் விரும்பற இயல்பான ஆளுமையைப் பெற நாம முயற்சி செய்யணும்.

- இவ்வாறு கூறி முடித்தார், வங்கி அதிகாரி.

'நமக்கு எதுக்குப்பா இந்த மாதிரியான ஆளுங்களோட சகவாசம் எல்லாம். நம்ம நட்பு வட்டாரமே போதும்...' என்றார், அண்ணாச்சி.

இதை ஆமோதித்த அனைவரும், அவரவர் வேலையில் மும்முரமாயினர்.

நானும், வங்கி அதிகாரி நண்பரும் தண்ணீரில் கால் நனைக்க, பேசியபடி மணலில் நடக்க ஆரம்பித்தோம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us