தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/இணைப்பு மலர்/வாரமலர்/அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,


PUBLISHED ON : செப் 03, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 03, 2023


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பா -- கே

ஒன்பது லட்சம் மக்கள் தொகையை கடந்த நகரம் அது. பெரிய பெரிய தொழில் நிறுவனங்கள் முளைத்து, பலருக்கு வேலை கொடுத்தும், நிறைய வருமானமும் ஈட்டி வருகின்றன. அந்நிறுவனத்தில் பணிபுரிய, வெளி மாநிலங்களில் இருந்து ஆட்களின் வருகையும் அதிகமாகியுள்ளது.

ஒருநாள் மாலை மயங்கிய நேரம்...

அங்குள்ள நிறுவனம் ஒன்றின் நிர்வாகி, கட்டட கான்ட்ராக்டர் ஒருவர், நான், லென்ஸ் மாமா ஆகியோர் குழுமி இருந்தோம்.

'பன்னாட்டு நிறுவனங்கள் பலவும் இங்கு வர ஆரம்பித்து விட்டனவே, உங்கள் தொழில் எப்படி இருக்கிறது...' என்று கேட்டேன், நிறுவன தலைவரிடம்.

'அதை ஏம்ப்பா கேட்கறே... போட்டி அதிகமா தான் இருக்கிறது. வேலைக்கு ஆட்கள் கிடைப்பதும் அரிதாகி விட்டது...' என்று கூறிக் கொண்டிருக்கும் போதே, இடையில் புகுந்த கட்டட கான்ட்ராக்டர், 'அதான் வட மாநிலத்தவர்கள் நிறைய பேர், வேலை கேட்டு வருகின்றனரே... அவர்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டியது தானே...' என்றார்.

'உடல் உழைப்பு தேவைப்படும் பணியில் அவர்களை ஈடுபடுத்தலாம். கம்ப்யூட்டர் அறிவு, ஆங்கில அறிவு, நிறுவனத்தின் வேலையை பற்றி அறிந்து, அதற்கு ஈடுகொடுப்பவர்கள் கிடைப்பது கொஞ்சம் கஷ்டமாக இருக்கிறது.

'நிறைய படித்திருப்பதாக கூறுபவர்கள் கூட, நெருக்கடி நேரத்தில் சமயோஜிதமாக நடந்து கொள்ள முடியாமல் தவிக்கின்றனர். இப்படித்தான், ஏதாவது வேலை கிடைத்தால் தேவலை என்று அலைந்து கொண்டிருந்தான், பட்டதாரி இளைஞன் ஒருவன்.

'அவனுக்கு வேலை கொடுத்தேன். கொஞ்ச காலம் ஆயிற்று. 'இப்போ வேலையை விட்டுட்டா தேவலை...' என்று புலம்புவதை அறிந்தேன்.

'அவனை அழைத்து, 'என்ன காரணம்...' என, விசாரித்தேன். 'என்னங்க பண்றது... சூப்பர்வைசர், பெரிய கோபக்காரனா இருக்கான். எதுக்கெடுத்தாலும் கோபப்படறான். அவனை அனுசரிச்சுப் போறது ரொம்ப கஷ்டமா இருக்கு. அதுதான், இந்த வேலையை விட்டுட்டு, வேறு வேலை தேடலாமான்னு பார்க்கறேன்...' என்றான்.

'இவனை மாதிரி ஆட்கள் என்ன வேலை செய்தாலும் புலம்புவர்...' என்றார், நிறுவனர்.

'இதைக் கேட்டதும், ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது...' என கூற ஆரம்பித்தார், கட்டட கான்ட்ராக்டர்:

அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில், மனநல மருத்துவ நிபுணர் ஒருவர் இருந்தார். ஒருநாள், அவரைத் தேடி, ஒரு பெண் வந்தாள்.

'டாக்டர்... உங்ககிட்ட ஒரு முக்கியமான ஆலோசனை கேட்கலாம்ன்னு வந்திருக்கேன்...' என்றாள்.

'என்னம்மா விஷயம்?' என்று விசாரித்தார்.

'டாக்டர், நான் ஒரு தொழிற்சாலையில், தலைமை அதிகாரியின் செயலாளராக வேலை பார்க்கிறேன். அந்த அதிகாரி ஒரு சிடுமூஞ்சி. அவர் மூஞ்சியும், அவரும் குரங்கு மாதிரி. அவரைப் பார்க்கிறதுக்கே எனக்குப் பிடிக்கல.

'எதற்கெடுத்தாலும் கோபப்படுகிறார். அவரது கோப தாபங்களை என்னால் சமாளிக்க முடியல. மனசுக்கு ரொம்ப சங்கடமா இருக்கு. இரவு பூராவும் சரியாத் துாங்கவும் முடியலை. அந்த அளவுக்கு வேதனையா இருக்கு.

'அலுவலகத்துல அவர் கூட வேலை பார்க்கிற ஒவ்வொரு வினாடியும், எனக்கு ஒரு யுகம் போல இருக்கு. ஒருநாள் முழுவதும் அவரோட இருக்கிறது, பெரும்பாடா இருக்கு. அதனால, இந்த வேலையை விட்டுடலாம்ன்னு பார்க்கிறேன். அதுக்கு முன், உங்களோட ஆலோசனையை கேட்கலாம்ன்னு வந்திருக்கேன். என்ன சொல்றீங்க?' என்றாள்.

அந்த பெண் சொல்வதையெல்லாம் பொறுமையாக, கவனமாக கேட்டு, 'அம்மா, நான் ஒரு யோசனை சொல்றேன். அதன்படி, மூன்று மாசம் நடந்து கொள். அதுக்கப்புறம் என்னிடம் வா... அப்புறமா ராஜினாமா பண்ணலாமா, வேண்டாமாங்கிறதை பற்றி யோசிப்போம்...' என்றார், டாக்டர்.

'என்ன செய்யணும் சொல்லுங்க?'

'இதோ பாரும்மா... சிடுமூஞ்சியிடம் சில நல்ல குணங்கள் பதுங்கியிருக்கும். அதையெல்லாம் கண்டுபிடிச்சு வாயாரப் பாராட்டு. ஒரு நாளைக்கு ஒரு பாராட்டுன்னு வச்சுக்கோ... இப்படியே தொடர்ந்து செய் பார்க்கலாம்...' என்றார்.

'சரி...' என சொல்லி புறப்பட்டாள், அந்த பெண்.

மறுநாள் வழக்கம் போல் அலுவலகம் போய், சுருக்கெழுத்துக்காக அந்த அதிகாரியின் அறைக்கு போனாள். அந்த அதிகாரி போட்டிருந்த சட்டை அழகாக இருந்தது.

'சார்... உங்க சட்டை ரொம்ப நல்லாயிருக்கு...' என்றாள்.

அடுத்த நாள், அவரது ஆங்கில எழுத்து நடையை பாராட்டினாள்.

இப்படியாக தினமும் ஒரு பாராட்டு. பாராட்டு ஏற ஏற, சிடுமூஞ்சித்தனம் கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பித்தது.

மூன்று மாதங்களுக்கு பின், அந்த பெண், மறுபடி, மன நல மருத்துவரிடம் வந்தாள்.

'என்னம்மா, வேலையை ராஜினாமா பண்ணிட்டியா?' என்றார்.

'அது எப்படிங்க முடியும்...' என்றாள்.

'ஏன்?'

'நான், அவரை கல்யாணம் பண்ணிக்கப் போறேன். இப்ப, அவர் என் காதலர். இதோ போட்டிருக்கேனே வைர மோதிரம். இது, அவர் எனக்கு பரிசாக கொடுத்தது...' என, நாணத்தோடு சொன்னாள், அந்தப் பெண்.

- இவ்வாறு கட்டட கான்ட்ராக்டர் கூறியதும், சிரிப்பால் அந்த இடமே கலகலப்பானது.



லென்ஸ் மாமா மேஜை மீது இருந்த பிரபல ஆங்கில எழுத்தாளரான, ராபின் ஷர்மா எழுதிய, 'நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்?' என்ற ஆங்கில புத்தகம் கண்ணில் பட்டது. எழுத்துக் கூட்டி படித்தபோது கிடைத்த தகவல் இது:

'நீ பிறந்தபோது, நீ அழுதாய்; உலகம் சிரித்தது. நீ இறக்கும்போது, பலர் அழுதால் தான், உன் ஆத்மா மகிழும்...' என, 'சென்டிமென்டாக' பேசும் ராபின் ஷர்மா, இந்த புத்தகத்தில் சொல்லியுள்ள சில விஷயங்கள்...

* எந்த ஒரு புது பழக்கமும் உங்களுக்குள் முழுதும் உள்வாங்கி, அது உங்கள் வாடிக்கையாக மாற, 21 நாட்களாவது ஆகும்

* தினமும் நல்ல இசையை கேளுங்கள். துள்ளலான நம்பிக்கை தரும் இசை, புன்னகையையும், உற்சாகத்தையும் தரும்

* புது மனிதர்களிடமும் தயங்காமல் பேசுங்கள். அவர்களிடமிருந்து கூட, உங்களை ஒத்த சிந்தனையும், நல்ல நட்பும் கிடைக்கலாம்

* பணம் உள்ளவர்கள் பணக்காரர்கள் அல்ல; மூன்று சிறந்த நண்பர்களையாவது கொண்டவனே பணக்காரன்

* எதிலும் வித்தியாசமாக இருங்கள்; பிறர் செய்வதையே நீங்களும் செய்யாதீர்கள்

* நீங்கள் படிக்கத் துவங்கும் எல்லா புத்தகமும், முழுவதுமாய் படித்து முடிக்க வேண்டியவை அல்ல; முதல் அரை மணியில் உங்களை கவராவிட்டால், அதை மேலும் படித்து, நேரத்தை வீணாக்காதீர்கள்

*       உங்கள் குடும்பத்தின் முக்கிய நிகழ்வுகளை, அவசியம் புகைப்படம் எடுங்கள். பிற்காலத்தில், அந்த இனிய நாட்களுக்கு நீங்கள் சென்று வர, அவை உதவும்

* அலுவலகம் முடிந்து கிளம்பும்போது, வீட்டிற்கு சென்றதும் சில நிமிடங்கள் மனைவி மற்றும் குழந்தைக்கு என்ன செய்ய வேண்டுமென யோசியுங்கள்

*        நீங்கள் எவ்வளவு வெற்றி அடைந்தாலும், எளிமையான மனிதராய் இருங்கள். வெற்றிகரமான பல மனிதர்கள், எளிமையானவர்கள் தான் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us