PUBLISHED ON : செப் 03, 2023

திரைப்பட நடிகர், மறைந்த, எஸ்.எஸ்.ராஜேந்திரன் எழுதிய சுய சரிதை!
சில பழைய படங்களை பார்ப்பதில் ஆர்வம் எனக்கு உண்டு. ஒரு ஞாயிற்றுக்கிழமை, எனக்கு படப்பிடிப்பு இல்லை. காமதேனு தியேட்டரில், தேவதாஸ் பகல் காட்சி பார்த்துக் கொண்டிருந்தேன்.
என் வீட்டுக்கு போன் பண்ணி, நான் எங்கே போயிருக்கிறேன் என்பதை அறிந்து, 'உங்களை ஏ.எல்.சீனிவாசன், அவர் வீட்டுக்கு அழைத்து வரச்சொன்னார்...' என்றபடி, நேரில் வந்தார், அவரது டிரைவர்.
புறப்பட்டு போனேன். அங்கே, கோபால கிருஷ்ணன் இருந்தார்.
'என்னப்பா ராஜா, தம்பி கோபால கிருஷ்ணன் உன்கிட்ட, சாரதான்னு ஒரு கதை சொன்னானாமே. அது உனக்கு ரொம்ப பிடிச்சிருந்ததாமே...' என்றார்.
'ஆமாம். நல்ல கதை தான். ஆனால், கம்பி மேல் நடந்து போகிற மாதிரி, மிக எச்சரிக்கையுடன் எடுக்க வேண்டும்...' என்றேன்.
'நீ சரி சொன்னால், நான் தயாரிக்கிறேன்...' என்றார்.
'சரி...' என்றேன்.
என்னுடன் இல்லம் வந்தார், கோபாலகிருஷ்ணன்.
'அண்ணே, ஒரு வேண்டுகோள். இந்த படத்தை நானே இயக்குகிறேன். ஏ.எல்.எஸ்.,சிடம் சொல்லி ஏற்பாடு செய்யுங்கள். படத்தில் நீங்களே நடிக்கிறீர்கள். இது போதாதா எனக்கு...' என்றார், கோபால கிருஷ்ணன்.
சினிமா துறையில், சில அருமையான கதை கொடுப்பர். அதை இயக்குபவர்கள், ஏதோ தங்கள் விருப்பத்துக்கு சில மாறுதல்களை செய்து, படத்தை கெடுத்து விடுவர். அந்த அனுபவம் எனக்கும் இருக்கிறது. எனவே, சாரதா படத்தை, கோபால கிருஷ்ணனையே இயக்க வைத்தேன்.
சாரதாவும், தமிழ் ஆசிரியரும் ஒருவரை ஒருவர் விரும்பி, திருமணம் செய்து கொள்கின்றனர். சாந்தி முகூர்த்தத்தன்று, பள்ளியில் ஒரு விழா நடத்த ஏற்பாடாகிறது. மூன்றாவது மாடியில் ஏறி, விளம்பரத் தட்டியை கட்டும், நம் கதாநாயகனான தமிழ் ஆசிரியர், கால் தடுக்கி கீழே விழுகிறான்.
டாக்டர்கள் பரிசோதனை செய்து சிகிச்சையளிக்க, குணமடைகிறான். இவன் அம்மாவையும், மனைவியையும், டாக்டர் அழைத்து, 'பூரண குணம் அடைந்து விட்டார். ஆனால், ஒரு கடுமையான நிபந்தனை. இனிமேல், இவர் தாம்பத்திய வாழ்வில் கலந்து கொள்ளவே கூடாது. மீறி ஈடுபட்டால், அவருக்கு உறுதியாக மரணம் சம்பவிக்கும்...' என்று சொல்கிறார்.
வீட்டுக்கு வந்ததும், மனைவியை படுக்கையறைக்கு அழைப்பான். அவள் சம்மதிக்க மாட்டாள். அடிப்பான், பலமுறை துன்புறுத்துவான். சம்மதிக்கவே மாட்டாள். திமிறி ஓடி அவளுடன் படுத்துக் கொள்வான். இது தினமும் நடக்கும். அவன் அம்மாவும் தாங்க முடியாத வேதனைப்படுவாள்.
ஒருநாள், இவனுக்கு உண்மை தெரிந்து, துடிப்பான். வேதனைப்படும் மனைவியின் நிலையை எண்ணி அழுவான்.
அதன்பின், ஒரு முடிவுக்கு வந்து, 'உனனை தொட்டு தாலி கட்டியதை தவிர, வேறு எதுவும் நடக்கவில்லை. அந்த தியாக திரு உருவத்துக்கு மறு வாழ்வு அமைத்துக் கொடுப்பேன். அந்த மாசில்லா மங்கைக்கு நான் செய்யும் முடிவு இதுதான்...' என்று அழுது, துடித்து, கதறுவான்.
அவளிடமே கேட்பான். அவள் மறுத்து விடுவாள். இவன் கெஞ்சுவான், அழுவான். அவள் மறுத்து, கடைசியாக ஒத்துக்கொள்வாள். இவன் நண்பனையே மணமகனாக்குகிறான்.
'எனக்கு ஆசி வழங்குங்கள்...' என சொல்லி காலில் விழுவாள். துாக்கி நிறுத்துவான். அப்படியே பிணமாகி விடுவாள்.
மிக எச்சரிக்கையாக படத்தை எடுக்க ஒத்துழைத்தேன்.
ஒரு தவறு செய்து விட்டார், இயக்குனர்.
கதாநாயகி, விஜயகுமாரி விரக தாபம் தாங்க முடியாமல், பச்சை தண்ணீரில் குளித்து விடுகிற மாதிரி படத்தை எடுத்து விட்டார்.
நான் பார்த்துவிட்டு, 'கதையே போச்சு...' என்று உடனே கத்தரிக்க சொன்னேன். அவரும் அக்காட்சியை நீக்கினார்.
முழு படத்தை போட்டுப் பார்க்கும் போது, நானே அழுதேன். தமிழில் நான் நடித்த, சாரதா படம், 100 நாட்களுக்கு மேல் ஓடி, பெரு வெற்றி பெற்றது.
அதில் நடித்ததற்காக, ஜனாதிபதி பரிசு பெற்றேன். இந்த படத்தை தயாரித்த ஏ.எல்.சீனிவாசன், தன் ஸ்டூடியோவிற்கு, 'சாரதா ஸ்டூடியோ' என, பெயர் சூட்டினார்.
சில படங்கள் கதைகளால் வெற்றி பெறுகிறது. சில படங்கள், நடிகர் - நடிகையரால் வெற்றி பெறுகின்றன; சாரதா படமும் கதைக்காக வெற்றிப் பெற்றது.
இளங்கோ அடிகள் எழுதிய, சிலப்பதிகார காவியம், பூம்புகார் என்ற பெயரில், கருணாநிதியால் திரைக்கதை வசனம் எழுதப்பட்டது. கோவலனாக சிவாஜி கணேசனும், பத்மினியை கண்ணகியாகவும் நடிக்க வைத்து, ஏவி.எம்., தயாரிப்பதாக இருந்தது.
ஏற்கனவே இந்த கதை, கண்ணகி என்ற பெயரில் பி.யு.சின்னப்பா, பி.கண்ணாம்பா ஆகியோர் நடித்து, அக்காலத்தில் மிக வெற்றிகரமாக ஓடிய படம்.
அதேபோல், எம்.கே.தியாகராஜ பாகவதர் நடித்த, அம்பிகாபதி; பி.யு.சின்னப்பா நடித்த, உத்தமபுத்திரன் மற்றும் ஆரியமாலா ஆகியவை பெரு வெற்றியை குவித்த படங்களாகும். பிற்காலத்தில், அதே அம்பிகாபதி படத்தை, சிவாஜி கணேசன், பானுமதியை நடிக்க வைத்து பெரும் செலவில் எடுத்தனர். படம் தோல்வியை கண்டது.
ஆரியமாலா, காத்தவராயன் என்ற பெயரிலும், உத்தமபுத்திரன் அதே பெயரிலும், சிவாஜி கணேசன் இன்னும் பல நட்சத்திர நடிகர்களை நடிக்க வைத்து, ஏராளமான செலவில் தயாரித்து திரையிடப்பட்டன. அந்த படங்களும் படுதோல்வியை சந்தித்தன.
இந்நிலையில், பூம்புகார் பட உரிமையை திரும்பப் பெற்று, மேகலா பிக்சர்ஸ் சார்பில் தானே தயாரிக்க முடிவெடுத்தார், கருணாநிதி. ப.நீலகண்டன் இயக்கத்தில், கோவலனாக நானும், கண்ணகியாக, விஜயகுமாரியும், மாதவியாக, ராஜஸ்ரீயும், நாகேஷ், மனோரமா ஆகியோர் நடிப்பதென தீர்மானிக்கப்பட்டது.
பூம்புகார் படத்தில், முக்கிய பாத்திரங்களில் ஒன்று, கவுந்தியடிகள். அந்த வேடத்தை, ஜி.சகுந்தலாவை நடிக்க வைத்து, பின்னணி பாடகியை பாட வைத்து படமாக்கி விடலாம் என தீர்மானித்திருந்தனர்.
கருணாநிதியும், தம்பி மாறனும் என்னிடத்தில் இதை தெரிவித்தபோது, என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
பெரும்பாலும் நகைச்சுவை வேடங்களில் அப்போது நடித்து வந்த, ஜி.சகுந்தலா, கவுந்தியடிகளாக வந்து, கோவலனாக நடிக்கிற என்னை, மகனே என்றும், விஜயகுமாரியை மகளே என்றும் அழைத்துப் பேசினால், அது நகைச்சுவையாக மாறிவிடாதா!
அதற்காக, மாற்று யோசனை ஒன்று கூறினேன். அது...
-தொடரும்
- எஸ்.எஸ். ராஜேந்திரன்
