தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/இணைப்பு மலர்/வாரமலர்/இது உங்கள் இடம்!

இது உங்கள் இடம்!

இது உங்கள் இடம்!


PUBLISHED ON : செப் 03, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 03, 2023


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மொய்ப்பணம் கேட்டதன் காரணம்!

எங்கள் உறவினர் ஒருவர், தன் பெண் திருமண அழைப்பிதழில், 'மொய் செய்பவர்கள் பணமாக செய்யவும். துணிமணி, பாத்திரம் பண்டங்களை தவிர்க்கவும்...' என, அச்சிட்டு இருந்தார்.

இருந்தாலும் அத்தை, மாமா மற்றும் முக்கியமான உறவினர்கள் பெண்ணின் மாமி, கொழுந்தி ஆகியோர் பாத்திரங்கள் மற்றும் அலங்கார பொருட்கள், பெட்ஷீட் என்று அவரவருக்கு பிடித்தமானதை பரிசளித்திருந்தனர்.

மொய் எழுதுபவரிடம், யார் யார் என்னென்ன செய்திருக்கின்றனர் என்பதை நோட்டில் எழுதச் சொன்னார்.

மொய் பணத்தை மட்டும் தன் கையில் எடுத்துக்கொண்டு, பாத்திரங்கள் மற்றும் பரிசு பொருட்களை மண்டபத்தில் ஒரு ஓரமாக அடுக்கி வைத்தார்.

அங்கு இருந்தவர்களிடம், 'யார் யாருக்கு என்னென்ன பொருட்கள் பிடித்திருக்கிறதோ அவரவர் இஷ்டப்படி எடுத்துச் செல்லலாம்...' என்று கூறினார், பெண்ணின் அப்பா.

மற்றவர்களும் அதை எடுத்துச் சென்றனர். எங்கள் ஊரில், கோவில் தேரும், பள்ளிக்கூடமும் கட்டிக் கொண்டிருந்தனர். மொய் பணத்தை இரண்டிற்கும் பங்கிட்டு கொடுத்தார்.

அவரின் நற்பண்புகளை கவனித்தவர்கள், அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு நடந்த, அவரது மகனின் திருமண பத்திரிகையில் எதுவும் குறிப்பிடா விட்டாலும், பரிசுப் பொருட்களை தவிர்த்து, பணமாக மொய் செய்தனர்.

மக்களை நல்வழிப்படுத்த வேண்டும் என்றால் கொஞ்சம் கறாராக இருந்தால் தான் முடியும். ஊரின் நன்மைக்காக செய்தால், மற்றவர்கள் அதை நல்ல விதமாக புரிந்து கொள்வர் என்பதையும் அவர்கள் வீட்டுத் திருமணம் உணர்த்தியது.

- இந்திராணி தங்கவேல், சென்னை.

குழந்தைகள் சிறப்பாக செயல்பட...

நம் குழந்தைகளுக்கு, படிப்பு, பாட்டு, நடனம் மற்றும் விளையாட்டு என, ஊக்குவித்தால், அவர்கள் சிறப்பாக செயல்படுவர் என்பது, பொதுவான கருத்து.

மேலும், நம் குழந்தைகள் எது செய்தாலும், 'நீதான் இந்திரன், சந்திரன், ரொம்ப சூப்பரா பண்றே. உன்னைப் போல் யாராலும் பண்ண முடியாது...' என்று, சற்று ஓவராக புகழ்ந்து விடுகிறோம்.

இது சம்பந்தமாக ஆசிரியை ஒருவர் கொடுத்த அறிவுரை:

குழந்தைகள் ஏதாவது சாதித்தால், அவசியம் நாம் பாராட்ட வேண்டும்.

'நீ, இதற்காக எவ்வளவு பயிற்சி செய்தாய். இடைவிடாமல் எவ்வளவு உழைத்தாய். உன் முயற்சிக்கு பலன் கிடைத்துள்ளது. இதேபோல் தொடர்ந்து முயற்சி செய். இன்னும் நிறைய கற்றுக்கொள்...' என்று சொல்லி, ஊக்கப்படுத்த வேண்டும்.

அப்போதுதான் பயிற்சி செய்வதன் அவசியம் குழந்தைகளின் மனதில் பதியும். வெறுமனே புகழ்ந்தால், தம்மைப் பற்றி ரொம்ப உயர்வாக எண்ணி, சிறு தோல்வியைக் கூட தாங்க முடியாதவர்களாகி விடுவர்.

அதனால், எப்போதாவது சரியாகப் பண்ண முடியாத போது, பொய் சொல்ல ஆரம்பிக்கின்றனர், என்றார்.

அனைவருக்கும் மிகவும் பயனுள்ள, நாம் அவசியம் பின்பற்ற வேண்டிய அறிவுரை!

மீனலோசனி பட்டாபிராமன், சென்னை.

முயற்சி, ஆர்வம் வெற்றிக்கு அடித்தளம்!சென்னையில், தனியார் அடுக்கு மாடி குடியிருப்பில் வசித்த சகோதரன் இல்லத்திற்கு சென்றிருந்தேன். அவன் மூலம் அறிந்த செய்தி, மட்டற்ற மகிழ்ச்சியை தந்தது.

'அவ்வளவாக பொருளாதார வசதி இல்லாததால், ஒரு சில வீடுகளில் வேலை செய்து சம்பாதித்தாள், ஒரு பெண். தானும் இங்கு ஒரு வீடு வாங்க வேண்டும் என்கிற ஆசை மட்டும் அவள் மனதில் துளிர் விட்டுக் கொண்டிருந்தது.

'நாளடைவில் சில வீடுகளுக்கு சமையல் செய்ய ஒப்புக்கொண்டதோடு, ஐந்தாறு வீடுகளுக்கு துணி துவைக்க, வீடு பெருக்கி மெழுக, பாத்திரங்கள் தேய்க்க என, காலை முதல் மாலை வரை தொடர்ந்து அக்குடியிருப்பிலேயே வேலை செய்தாள்.

'மாதம், 60 ஆயிரம் வரை ஊதியம் பெறுகிறாள். மேலும், அவளுக்குதேவையான பகல் உணவும், வேலை செய்யும் வீடுகளில் கிடைத்தது.

'குடியிருப்பில் உள்ள சிலரின் வழிகாட்டுதலோடு, ஊதியத்தில் கணிசமான தொகையை, மாதா மாதம், இ.எம்.ஐ., செலுத்தும் வகையில், வங்கி ஒன்றில் வீட்டுக் கடன் பெற்றாள். அதன் பலன், 12 ஆண்டுகளில், அவள் வேலை செய்த அதே குடியிருப்பில், ஒரு இல்லத்திற்கு சொந்தக்காரியாகி விட்டாள்...' என்று, உணர்ச்சி பொங்க கூறினான், சகோதரன்.

பொதுவாக, சேமிக்க வேண்டும் என்ற முனைப்பும், ஆர்வமும் பெண்களுக்கு இருக்குமானால், நினைத்ததை சாதிப்பது எளிது. வாழ்க்கையில் சேமிப்பு எவ்வளவு முக்கியம் என்பதை ஒவ்வொருவரும் உணர, இந்நிகழ்வு உதவும்.

- என். கிருஷ்ணமூர்த்தி, சென்னை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us