PUBLISHED ON : ஜூன் 12, 2022

பக்கத்து பிளாட்டிற்கு குடி வந்தவர், சில நாட்களில் என் வீட்டிற்கு வந்தார்.
''சார்... என் பேர் அர்த்தநாரி. ஓய்வுபெற்ற மத்திய அரசு ஊழியர். உங்க பக்கத்து வீட்டுக்காரர். ப்ளீஸ் டு மீட் யு,'' என்று சரளமாக பேசி, கை கூப்பியபடியே, ''கை குடுக்கணும்ன்னு ஆசை. ஆனா, 'கோவிட்' காலமாச்சே,'' என்று சிரித்தார்.
நானும் தலையாட்டி, அவரை வரவேற்றேன்.
''சார்... நான் பேச்சுக்கு சொல்லல. 'பர்ஸ்ட் இம்ப்ரஸ் பெஸ்ட் இம்ப்ரஸ்'ன்னு சொல்வாங்க. நீங்க பார்க்கறதுக்கு நல்லவரா தெரியறீங்க. ஐ ஆம் லக்கி சார்,'' என்றார், அர்த்தநாரி.
அவர் பாராட்டு கூச்சமாக இருக்கவே, நெளிந்தபடி, ''இதுல என்ன சார் இருக்கு... நாம ஒரே பிளாட்டுக்காரங்க ஆயிட்டோம்,'' ஏதோ பேச வேண்டுமென்று பேசினேன்.
அப்போது தான் துாங்கி எழுந்து வந்து, ''தாத்தா!'' என்று காலை கட்டிக்கொண்டாள், என் பேத்தி.
அலேக்காக அவளை துாக்கி, ''ஓ நைஸ்... உங்க கிரான்ட் டாட்டரா?''
''ஆமாம்!''
''பேரு?''
''ஸ்ரேயா!''
''வெரிகுட் நேம். வெரி ரீசனபிள். எவ்வளவு அர்த்தம் தெரியுமா? வெற்றி, அதிர்ஷ்டம், செல்வம் இப்படி சொல்லிக்கிட்டே போகலாம். குழந்தை முகத்தை பார்த்தாலே தெரியுது,'' புகழ்ந்தார், அர்த்தநாரி.
''சாரி... ஏதாவது சாப்பிடறீங்களா?'' என்று கேட்டபடியே, மனைவி விஜயாவை அழைத்தேன்.
அவசரமாக தடுத்து, ''ப்ளீஸ்... யாரையும் தொந்தரவு பண்ண வேண்டாம். 'செல்ப்' அறிமுகம் செய்துக்க வந்தேன்,'' என்றபடியே ஹாலில் உள்ள சோபாவில் உரிமையோடு அமர்ந்தார்.
என் மனைவி விஜயா, சமையலறையில் இருந்து வெளிப்பட்டு, இவர் யாரென்று கண்ணால் கேட்டாள்.
''பக்கத்து பிளாட்டுக்கு புதுசா வந்துருக்கார். கலகலப்பான மனுஷர்,'' என்றேன்.
''இருங்க, காபி எடுத்து வரேன்,'' என, பதில் எதிர்பாராது உள்ளே சென்றாள், விஜயா.
''ஓ... என்னால் சிரமம்,'' வருத்தப்பட்டார், அர்த்தநாரி.
காபி வந்தது, குடித்தபடியே, ''உங்க காபிய குடிச்சுட்டுதான், உசிலைமணி, 'ஆஹா... ஓஹோ... பேஷ் பேஷ்'ன்னு சொல்லி இருப்பார்ன்னு நினைக்கிறேன். நல்ல காபிக்கு, பால், டிகாஷன், சர்க்கரை மட்டுமில்ல, ஒரு அக்கறை வேணும் சார்... அப்பதான் இதுமாதிரி ருசி வரும்,'' என்றார்.
'புகழ்ச்சி திலகம்' என்று பட்டம் கொடுக்கலாம் என்பது போல் புகழ்ந்தார்.
விஜயா பார்த்த பார்வையில், 'நீங்களும் இருக்கீங்களே ஜடமாட்டம். கடமைக்கு குடிக்கிற ஜென்மம்...' என்ற அர்த்தம் புரிந்தது.
''ஓ.கே., சார்... நான் கிளம்பறேன். நீங்களும் என் பிளாட்டுக்கு வரணும்,'' அழைப்பு விடுத்து கிளம்பினார். மறக்காமல், ஸ்ரேயாவிடம், 'பை!' சொல்லி சென்றார். நான் என் வேலையில் மூழ்கினேன்.
சில நாட்களிலேயே அந்த குடியிருப்பில் பிரபலமானார், அர்த்தநாரி.
'இவ்வளவு, 'பாசிட்டிவிட்டி'யா?' என, அனைவரும் ஆச்சரியப்பட்டனர்.
குடியிருப்பின் கீழ் வீட்டில் இருந்த விஸ்வா என்ற இளைஞனுக்கு திருமண நிச்சயதார்த்தம். மொட்டை மாடியில் ஷாமியானா போடப்பட்டு, விமரிசையாக நடந்தது. அனைவரும் பங்கேற்று வாழ்த்தினர்.
ஒரு படி மேலே போய், ''நம்ம விஸ்வா எவ்வளவு, 'ஸ்மார்ட்' தெரியுமா... சினிமா பக்கம் போயிருந்தா, இன்னொரு அஜித்தா மாறியிருப்பார்... பொண்ணு மட்டும் என்னவாம், விஸ்வாவுக்காகவே படைக்கப்பட்ட, 'அப்சரஸ்' மாதிரி கலக்குறா... ஆயிரத்துல ஒரு ஜோடி தான் இப்படி இருக்கும்,'' என வாழ்த்தினார், அர்த்தநாரி.
அந்த ஜோடி விழித்தது.
வெண்ணிற ஆடை மூர்த்தியை, எனக்கு ஞாகப்படுத்தினான், விஸ்வா.
இன்னொரு சமயம் மார்க்கெட்டில், என் மகனையும், மருமகளையும் தற்செயலாக அர்த்தநாரி பார்க்க, மரியாதை நிமிர்த்தமாக இவர்கள், 'ஹலோ!' சொல்லினர்.
'உங்க குடும்பமே சூப்பர்; சின்ன கூட்டுக்குடும்பம்...' என்று பத்து நிமிடங்களுக்கு மேல் புகழ்ந்து தள்ளி விட்டாராம், அர்த்தநாரி.
'என்னப்பா இவரு... ரொம்ப வெட்கமாயிடுச்சு...' என்றான், மகன்.
'சரிப்பா... கேட்கறப்ப சந்தோஷமாத்தான் இருக்கு. விடு...' என்றேன்.
நாட்கள் மெல்ல கடந்து செல்ல, ஒருநாள் மாலை, நான் வெளியே சென்று திரும்பினேன். அப்போது, பொது வாசலில், அர்த்தநாரி அமைதியாக நிற்க, வாட்ச்மேன் அவரிடம் பேசிக் கொண்டிருப்பதை கண்டேன்.
'என்னது, அதிசயமாக இருக்கு... இந்த மனிதர், மற்றவர் பேச கேட்டுக் கொண்டிருக்கிறார்...' என நினைத்து, சற்று மறைவாக நின்று கவனித்தேன்.
''சொல்லுங்க சார்... நான் பார்க்க ராணுவ வீரர் மாதிரியா இருக்கேன்,'' வாட்ச்மேன் கேட்டது, காதில் விழுந்தது.
''எதுக்கு சந்தேகம்... என் கண்ணுக்கு நீங்க ராணுவ வீரன் தான். இந்த, 18 பிளாட்டுக்கும் பாதுகாப்பு கொடுக்கறீங்களே,'' தன் பாணியில் புகழ்ந்தார், அர்த்தநாரி.
''சார், காது அறுந்து போகுது. உங்களுக்கு தெரிஞ்ச பழமொழி ஒண்ணு சொல்றேன். 'அளவுக்கு மிஞ்சினா அமிர்தமும் நஞ்சு' சார்... கொஞ்சம் கூட உடம்புக்கு பொருந்தாத யூனிபார்ம் மாட்டிக்கிட்டு, உள்ளுக்குள்ள, 'சுகர், பிபி'யோட சோடாபுட்டி கண்ணாடி மாட்டிக்கிட்டு, இந்த, 70 வயசுல, எட்டாயிரம் ரூபாய்க்கு, 12 மணி நேரம் இங்க விழுந்து கிடக்கேன்.
''நான் ராணுவ வீரனா... இப்படி என்னை மாதிரி எல்லாரும் ராணுவத்துல இருந்தா, இந்தியா இந்நேரம் இருந்திருக்காது சார்... புகழ்றதுக்கு ஒரு அளவு வேண்டாம்? சில பேர், நியாயமா புகழ கூட மனசில்லாம அதிசயபிறவியா இருக்காங்களோ, அது மாதிரி நீங்க எதிர் துருவத்தில இருக்கீங்க... அந்த காலத்து புலவர்களையும் மிஞ்சிட்டீங்க போங்க... என்கிட்ட தான் ராஜா மாதிரி அள்ளிக் கொடுக்க எதுவுமில்ல,'' என்றான், வாட்ச்மேன்.
சற்று திகைப்பும், வியப்புமாக பார்த்தவர், ''சரிப்பா, நான் அதிகப்படியாவே புகழ்ந்தேன்னு வச்சுக்க... ஒருத்தர பாராட்டுறதால அவங்களுக்கு புத்துணர்ச்சியும், ஒரு நேர்மறையான எண்ணமும் தான் ஏற்படும். அது நல்லது தானே,'' தன் பங்குக்கு கேட்டார், அர்த்தநாரி.
வாட்ச்மேனும் விடவில்லை.
''அட சரி தான் சார்... இது யாருக்கு பயன்படும்; குழந்தைகளுக்கு தான். நாமெல்லாம் வாழ்க்கைய பார்த்து சலிச்சு போனவங்க. நம்ம அனுபவத்துக்கு எது நிஜம், எது பொய்ன்னு தெரியாதா? இந்த வயசுலயும் இந்த போதைக்கு ஏங்குறவங்க கொஞ்ச பேர் தான் இருப்பாங்க. எல்லாரையும் புகழ்றவங்க, யாரையும் உண்மையா புகழ்வதில்லைன்னு ஒரு தத்துவம் உண்டு சார்.
''நீங்க பேசறது கேட்க நல்லாருக்கு. நேரம் போகும். கொஞ்சம் யோசிச்சு பார்த்தா இவ்வளவு பொய்யான்னு தோணும். இன்னும் யோசிச்சா, ஒருவேளை கிண்டல் பண்றாரோன்னு கூட தோணும் சார்... கால் ஊனமானவனை பார்த்து, 'நீதான் ஓட்டப்பந்தய சாம்பியன்'னா, அதுல என்ன சார், 'பாசிட்டிவிட்டி' இருக்க முடியும்? நேர்மறையான வார்த்தைகள்னா, 'வாழ்த்துக்கள், கண்டிப்பா நடக்கும்'ன்னு பேசறது சார்...
''நீங்க என்னடான்னா, எல்லாரையும் காந்தி, புத்தர்னு புகழ்றீங்க... எல்லாம் சாதித்த மாதிரி மெடல் தர்றீங்க... இது மாதிரி நீங்க உங்க மனைவிகிட்ட பேசுவீங்களா... மனசாட்சிபடி சொல்ல முடியுமா?'' வாட்ச்மேன் கேட்க, சற்று யோசித்தார், அர்த்தநாரி.
''ம்... அவ அவ்வளவா விரும்ப மாட்டா. நானும் கூட ரொம்ப இது மாதிரி பேச மாட்டேன். உண்மைதான்,'' என்றார்.
''பார்த்தீங்களா சார்... அதுதான், 'ரியல் லைப்!' மசாலாங்கிறது தேவைதான்; அதிகமா போனா என்னவாகும்? மொதல்ல நீங்க, 'டிவி' பார்க்கறத விடுங்க... ஓடாத, உருப்படாத படத்தைக் கூட, 'சூப்பர் ஹிட்'ன்னு சொல்வான். ஏதாவது நிகழ்ச்சி நடந்தா, இவன் அவனை புகழ்றதும், அவன் இவனை புகழ்றதும்...
''போனவன் வந்தவனை எல்லாம், 'லெஜன்ட்'ன்னு துாக்கறதும், 'அவார்டு'ன்னு சொல்லி மாத்தி மாத்தி கொடுக்கறதும் அவ்வளவும் போலியா பண்றது; 'டிவி'க்கு வேணா சரியா இருக்கும். இத நம்பற மாதிரி துக்கடா பிரபலங்களும் நடிக்கறது கூட, தொடர்ந்து வாய்ப்பு கிடைக்கும்கிறதுக்குதானே தவிர, யாரும் உண்மையா நம்ப மாட்டாங்க.
''நாம வாழறது ரியல் சார்... எதுக்கு எல்லார்கிட்டயும் நீ சூப்பர், நான் சூப்பர்ன்னு அள்ளி விடணும்? இதுல இன்னொரு பாவம்... உண்மையா திறமை உள்ளவங்க, நல்லவங்க காணாமல் போயிடுவாங்க. அது தனி கதை. சரி சரி, நான் ரொம்ப பேசிட்டேன், உடனே என்னை அறிஞர் அண்ணாதுரைன்னு புகழாதீங்க.
''வாழ்க்கையில பொய் சுவாரஸ்யம் தான். கொஞ்சமா இருக்கிற வரைக்கும்... நான் தப்பா சொல்லியிருந்தா சாரி சார்... அதுக்காக, நீ கம்முன்னு இருன்னு சொல்லல... பாராட்டு நியாயமா இருக்கணும்,'' பேச்சை முடித்துவிட்டு, அர்த்தநாரியை பார்த்தான், வாட்ச்மேன்.
சில நொடி மவுனத்திற்கு பிறகு, மெதுவான குரலில், ''எனக்கும் ஓரளவு இது புரியும். ஆனாலும், இப்படி பாராட்டறது ரொம்ப தப்பா. என்னை மாதிரி யாருமே பேச மாட்டாங்களா,'' அப்பாவியாக கேட்டார், அர்த்தநாரி.
சிரித்தபடியே, ''எதிரில் உள்ளவங்க ஒத்துப்பாங்களா இல்லையான்னு தெரிஞ்சுக்காம பேசறது, ரொம்ப தப்பு தான். 'காக்காய் பிடிக்கிறான் பாரு'ன்னு பின்னால பேசுவாங்க. போலித்தனம் எவ்வளவு நாள் எடுபடும்? முதலாளிய, தொழிலாளி ஓவரா புகழ்ந்தா என்ன அர்த்தம்... தர்மப் பிரபுவேன்னு யாராவது புகழ்ந்தா என்ன அர்த்தம்...
''அப்படி உங்களுக்கு என்ன தேவை. நாம பழகற எடத்த கலகலப்பா வெச்சுக்க, நல்ல விஷயங்கள் பேசலாம்; ஜோக் அடிக்கலாம். மத்தவங்களை சும்மா ஏத்தி விடணும்ன்னு அவசியம் இல்ல. கூடிய வரைக்கும் உண்மையா பழகலாம். அதுதான் நல்லது,'' என்று சொல்லி நகர்ந்தான், வாட்ச்மேன்.
யோசித்தபடியே பிளாட்டை சுற்றி, 'வாக்கிங்' போக ஆரம்பித்தார், அர்த்தநாரி.
வாட்ச்மேனின் வார்த்தைகள் எனக்கும் புது விஷயங்களை புரிய வைத்தது. ஒரு பாராட்டில் உண்மை இருக்க வேண்டும். அதுதான் தகுதியுள்ளவர்களுக்கு பிடிக்கும்.
குழந்தைகளுக்கு கிளுகிளுப்பை காட்டுவது போல் எல்லாருக்கும் புகழுரைகள் குஷி ஏற்படுத்தும். ஆனால், வாழ்க்கையில் நிறைய அடிபட்டு பக்குவமடைந்துள்ள வாட்ச்மேன் போன்றவர்களிடம், இந்த ஏமாத்து மொழிகள் செல்லுபடி ஆகாது. அதேபோன்று யாரையும், எதற்கும், நியாயமாக கூட பாராட்டாது இருக்கும் குணம் கூட தவறுதான் என்றும் புரிந்து கொண்டேன்.
கீதா சீனிவாசன்
