PUBLISHED ON : ஜூன் 12, 2022

அ நிறம் | அளவு
மலை போல் உயர்ந்து நிற்போம்!
பொங்கி வரும் கோபத்தை
பொறுமையை கொண்டு
பொசுக்கித் தள்ளுங்கள்
பொறுமை இழந்தால்
வம்பு, வழக்குகள்
வரிசை கட்டி நிற்கும்!
எடுத்தெறிந்து பேசுவதை
சிந்தனை உணர்வால்
அறுத்தெறிந்து போடுங்கள்
பிறர் மனம் புண்பட்டால்
சாபத் தீ பற்றி எரியும்!
குற்றம் காண்பதை
முடிந்தவரை
குறைத்துக் கொள்ளுங்கள்
காண்பன யாவும்
குற்றமென நினைக்கையில்
சுற்றங்கள் சுருங்கி
தனிமை வறுத்தெடுக்கும்!
பேச நினைப்பதை
ஒருமுறைக்குப் பலமுறை
சிந்தித்துப் பேசுங்கள்
சிந்தனையில் சறுக்கல் விழுந்தால்
சந்திச் சிரிக்க
வாழ்க்கை நாற்றமடிக்கும்!
எல்லா உயிர்களிடத்திலும்
அளவற்ற அன்பை
மழையாக பொழியுங்கள்
மனித நேய உணர்வால்
விண்ணைத் தொடும்
மலையாக
உயர்ந்து நில்லுங்கள்!
எல். மூர்த்தி, கோவை.
