தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/இல்லறத்தில் இணைவோம்!

இல்லறத்தில் இணைவோம்!

இல்லறத்தில் இணைவோம்!


PUBLISHED ON : ஜூன் 12, 2022

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 12, 2022


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

யோசிக்க யோசிக்க மனக்குழப்பம் அதிகமாகியது, நித்யாவுக்கு.

'கடவுளே என்ன செய்யப் போகிறேன். கல்யாணத்துக்கு இன்னும் இரண்டு மாதம் தான் இருந்தது. பார்க்க அழகாக இருக்கிறான். படித்திருக்கிறான். ஐ.டி., கம்பெனியில் நல்ல சம்பளத்தில் வேலை. ஒரே பிள்ளை. சிறிய குடும்பம். வாழ்க்கை அழகானதாக இருக்கும் என்று நம்பி திருமணத்திற்கு சம்மதித்தது, இமாலயத் தவறாகுமோ...' என்று, இப்போது நித்யாவுக்குத் தோன்றியது.

மூன்று மாதம் முன், பெண் பார்க்கும் படலம் நடந்து, இரு குடும்பத்தாருக்கும் பிடித்து, பையன், பெண் சம்மதத்துடன் வீட்டில் சிம்பிளாக நிச்சயம் பண்ணினர்.

திருமண தேதி, ஐந்து மாதம் கழித்து முடிவாகி, மெல்ல வேலைகள் நடைபெற்றன. நிச்சயம் செய்த உரிமையில், கணவனாக வரப்போகும் விக்ரமுடன் போனில் அடிக்கடி பேச ஆரம்பித்தாள், நித்யா.

'இன்ஜினியரிங் படிச்சிருக்க. வேலைக்குப் போக முயற்சி பண்ணலையா நித்யா?' என, யதார்த்தமாக விக்ரம் கேட்க, 'எனக்கு வேலைக்குப் போவதில் துளியும் இஷ்டமில்லை. நாள் முழுக்க கம்ப்யூட்டருடன் போராடி, அப்புறம் அலுத்துப் போய் வீட்டுக்கு வந்து, வீட்டு வேலையும் பார்த்து... அதுக்கு அழகா வீட்டில் இருக்கலாம்...' என்றாள்.

'இந்தக் காலத்தில் நீ இப்படி யோசிக்கிறது ஆச்சரியமாக இருக்கு. எனக்கென்னவோ வெளியே வேலைக்குப் போனால் தான், உலகம் புரியும்ன்னு தோணுது. நான் நல்லா சம்பாதிக்கிறேன். பணம் பெரிசில்லை. இருந்தாலும், நீயும் வேலைக்குப் போனால் நல்லா இருக்கும். சரி, உன் இஷ்டம்...' என்றான், விக்ரம்.

'என்ன சொல்ல வருகிறான். கல்யாணமானதும் வேலைக்குப் போகச் சொல்வானா... கை நிறைய சம்பாதிப்பவனை கல்யாணம் பண்ணி நிம்மதியாக இருக்கலாம் என்று பார்த்தால், இவன் எண்ணம் வேற மாதிரி இருக்கிறதே...' என, நினைத்தாள்.

இன்னொரு சமயம், 'எனக்கு சுடிதார் தான் பிடிக்கும்...' என்றாள்.

'பெண்களுக்கு புடவை தான் அழகு. நீ புடவை கட்டினால் இன்னும் அழகாக இருப்பே, நித்யா...'

அவனுடன் பேசப் பேச, இருவருக்கும் இடையில் ரசனைகள், விருப்பங்கள், எண்ணங்கள் எல்லாவற்றிலும் நிறைய வேறுபாடு இருப்பதை உணர ஆரம்பித்தாள், நித்யா.

'நல்லா சம்பாதிக்கிறேன்னு ஜாலியாக ஊர் சுத்திக்கிட்டு எல்லாத்தையும் செலவு பண்றது சரியில்லை, நித்யா. நாளைக்குன்னு ஒரு சேமிப்பு கட்டாயம் வேணும். நமக்கு குழந்தை பிறந்தா பொறுப்பான அப்பா, அம்மாவாக நாம் செய்ய வேண்டிய கடமைகள் நிறைய இருக்கு...

'உனக்கு ஹோட்டலில் சாப்பிட பிடிக்குமா... ஓ.கே., போகலாம். இருந்தாலும், என் மனைவி கையால் அப்பளம் பொரித்து, சூடாக ரசம் வைத்து தந்தால் கூட போதும். அமிர்தமாக இருக்கும்; செய்து தருவியா, நித்யா...'

'என் எதிர்பார்ப்புகளுக்கு இவன் சரி வருவான் என்று தெரியவில்லை. நாளைக்கு திருமணமாகி இருவருக்கும் பிரச்னை ஏற்பட்டு வாக்குவாதத்துடன் வாழ முடியுமா... அதற்கு, இப்பவே விலகிவிடுவது நல்லது...'

ஒரு முடிவுக்கு வந்தாள், நித்யா.

''என்ன நித்யா, ஒரு வாரமாக போன் பேசலை... கல்யாண வேலையில், 'பிசி' ஆகிட்டியா?'' என்றான், விக்ரம்.

''அதெல்லாம் இல்லை. நானே போன் பண்ணணும்ன்னு இருந்தேன். முக்கியமான விஷயம் சொல்லணும், விக்ரம்.''

''என்ன விஷயம், நித்யா.''

''நமக்குள் இந்த கல்யாண பந்தம் சரியாக வரும்ன்னு தோணலை. நாம் விலகிடறது நல்லது.''

ஒரு நிமிடம் எந்த பதிலும் இல்லாமல், விக்ரம் மவுனமாக இருக்க, ''விக்ரம்... நான் சொல்றது காதில் விழுந்ததா?'' என்றாள்.

''என்ன நித்யா, ஏன் இந்த முடிவு. கல்யாணத்துக்கு இரண்டு மாசம் தான் இருக்கு. மண்டபம் பிடிச்சு, பத்திரிகை கொடுத்தாச்சு,'' அவன் குரலில் பதட்டம் தெரிந்தது.

''இருக்கட்டும். அதுக்காக நான் என் வாழ்க்கையை பலி கொடுக்க முடியாது. உங்களுக்கும், எனக்கும் எந்தவிதத்திலும் ஒத்துப் போகாதுன்னு தோணுது. என்னுடைய ரசனை, எதிர்பார்ப்புகளுக்கும் உங்களுடைய ரசனை, எதிர்பார்ப்புகளுக்கும் நிறைய வேறுபாடு இருக்கு.

''கல்யாணமாகி பிரச்னையாகி, பிரியறதை விட இப்பவே விலகிடலாம்ன்னு முடிவுக்கு வந்திருக்கேன். அம்மா, அப்பாகிட்டே என் முடிவை சொல்லப் போறேன். இந்தக் கல்யாணத்தை நிறுத்திடலாம். சாரி விக்ரம்.''

சிறிது நேர மவுனத்திற்குப் பிறகு, ''ஓ.கே., நித்யா. நீ இப்படியொரு முடிவுக்கு வந்தபின், நான் கட்டாயப்படுத்த மாட்டேன். இருந்தாலும் உன் அம்மா, அப்பாகிட்டே சொல்றதுக்கு முன், ஒரே ஒருமுறை நாம் இருவரும் நேரில் சந்தித்துப் பேசலாமா?''

''எதுக்கு விக்ரம், வேண்டாம்ன்னு முடிவு பண்ணிய பின், எதுக்கு இந்த சந்திப்பு?''

''ப்ளீஸ், எனக்காக. மூணு மாசமாக, போனில் பேசறோம். ஒரு நட்போடு பிரிவோம்.''

அரை மனதாகச் சம்மதித்தாள்.

''நாளைக்கு ஈவினிங் அக் ஷயா ரெஸ்டாரன்ட் வந்துடு, வித்யா. சின்னதா டிபன் சாப்பிட்டு, 'பீச்'சுக்குப் போகலாம்.''

''வேண்டாம். ஏதாவது, 'பார்க்'கில், அரைமணி நேரம் சந்தித்துப் பேசினால் போதும். 'பீச்'சுக்கெல்லாம் எதுக்கு?''

''நட்போடு பிரியலாம்ன்னு சொன்னேன். அதுக்காக தான் சின்ன, 'டிரீட்!' மறுக்க வேண்டாம், நித்யா,'' என்ற விக்ரம், போனை வைத்தான்.

நித்யாவுக்கு கோபம் வந்தது. இந்த சின்ன விஷயத்தில் கூட, அவன் தான் முடிவு செய்கிறான். இவனுடன் காலமெல்லாம் போராடத்தான் வேண்டியிருக்கும்.

சுடிதாரில் வந்திருக்கும் நித்யாவை புன்னகையுடன் பார்த்தான், விக்ரம்.

''இதுக்கு முன், ஒருமுறை கோவிலில் சந்திச்சோம் இல்லையா?''

புருவத்தை உயர்த்தி எதிரில் நிற்கும் விக்ரமைப் பார்த்தாள்.

'இந்த புன்சிரிப்பு, அழகான திருத்தமான முகம். என்னை ஈர்த்தது உண்மை. இருந்தாலும் வேறு வேறு ரசனைகள், எதிர்பார்ப்புகள் இருக்கும், நாங்கள் இணைவது சாத்தியமில்லை...' என, நினைத்துக் கொண்டாள்.

''என்ன யோசனை, நித்யா. கல்யாணம் பண்ணிக்க போறோம்ன்னு நினைச்சேன். இப்ப அது இல்லைன்னு முடிவாயிருச்சு. ஒரு நண்பனாக உன்னோடு சில விஷயங்கள் பேசலாம்ன்னு தான் கூப்பிட்டேன். பயப்படாமல் வா... சாப்பிடலாம்.''

அவனுடன் உள்ளே போனாள்.

பேரர் வர, ''என்ன சாப்பிடற நித்யா... எனக்கு மசாலா தோசை போதும். உனக்கு?''

''எனக்கு மசாலா தோசை பிடிக்காது. ரவா தோசை கொண்டு வாங்க.''

விக்ரமின் முகம் மாறுவதைப் பார்த்தாள்.

'எனக்கு மசாலா தோசை பிடிக்காது என்பதைச் சொல்லியிருக்க வேண்டாமோ... இருக்கட்டும் சாப்பாட்டில் இருந்து எதிலுமே நீ என்னுடன் ஒத்துப் போகலை என்பதைத் தானே தெரியப்படுத்தி இருக்கிறேன்...'

'பீச்' மணலில் உட்கார்ந்தனர். அலைகள் ஒன்றையொன்று துரத்தி விளையாடுவதை சிறிது நேரம் வேடிக்கை பார்த்தவன், ''எனக்கு அலையில் கால் நனைக்க ரொம்பப் பிடிக்கும், நித்யா. நம் பாதத்தில் சில்லென்ற தண்ணீர் பட்டு மெதுவாக வருடிச் செல்லும்போது, மனதில் சின்ன சந்தோஷம் வரும்.''

இதழ்களில் சிரிப்பு படர, ''எனக்கு கால் நனைக்க சுத்தமாகப் பிடிக்காது. கால்கள் ஈரமாகி மண் துகள்கள் ஒட்டி... ஈரப்பதத்துடன் நசநசன்னு... அலை பக்கமே போக மாட்டேன்,'' என்றாள், நித்யா.

''இந்த கல்யாணம் நின்னு போச்சுன்னா... பெரியவங்க ரொம்ப வருத்தப்படுவாங்க, இல்லையா?''

''அவங்க வருத்தப்படுவாங்கன்னு என் வாழ்க்கையை நான் விட்டுத்தர முடியாது,'' தீர்க்கமாகச் சொன்னாள், நித்யா.

''என்னைப் பொறுத்தவரை உன் முடிவை, தப்பு சொல்ல முடியாது. நிறைய விதத்தில் இரண்டு பேர் கருத்துகளும் மாறுபாடாகத்தான் இருக்கு. நான் இதை உன்னோடு பேசும்போது கவனிக்கவே செய்தேன். அஞ்சு விரல்களும் ஒன்றாக இல்லையே... அதுபோலதான் மனிதர்களின் எண்ணமும், குணங்களும்.

''ஆனால், ஒரு விஷயம். ஒரே எண்ணம், ரசனைகள் உடையவங்க கல்யாணத்தில் இணைந்தால் வெற்றி பெறுவாங்க. நம்மை மாதிரி வேறுபட்ட கருத்துகளோடு இணைபவர்கள் வாழ்க்கையில், நிம்மதி இருக்காதுன்னு நினைப்பது தப்புன்னு என் மனசுக்குப் படுது.''

நேருக்கு நேர் கண்களைப் பார்த்து பேசுபவனைப் பார்த்தாள்.

''கணவன், மனைவிங்கிற பந்தத்திற்குள், முன்பின் தெரியாத ஆணும், பெண்ணும் இணைகிறோம். அவங்களை இணைப்பது எது தெரியுமா, அன்போடு இணைந்த பாசக்கயிறு.

''அவர்கள் பிடித்திருக்கும் அந்த பாசக்கயிறு, அவர்களுடைய கருத்து வேறுபாடுகளைக் கொஞ்ச நாளில் ஒன்றுமில்லாமல் செய்திடும். அன்புக்கும், பாசத்துக்கும் கட்டுப்பட்டு அவனுக்காக அவளும், அவளுக்காக அவனும் நிறைய விட்டுக்கொடுத்து போவாங்க...

''தனக்கு பிடிக்காட்டியும் அன்பு மனைவிக்காக செய்ய துவங்குவான், கணவன். தனக்கு இஷ்டமில்லாட்டியும் பாசமிக்க கணவனுக்காக விட்டுக் கொடுத்து வளைந்து கொடுப்பாள், மனைவி.

''என்னைக் கேட்டால் மாறுபட்ட கருத்துகள், ரசனைகளுடன் இணையும் தம்பதியின் வாழ்க்கையில் அன்பும், பாசமும் கூடுதலாகி, அந்த பாசக்கயிறு இருவரையும் ஒருத்தரையொருத்தர் பிரியாமல் கட்டிப் போடும்ன்னு நம்பறேன்.

''என் மனதில் பட்டதைச் சொன்னேன். நீ தப்பாக நினைக்க வேண்டாம், நித்யா. நான் உன்னை எந்த விதத்திலும் கட்டாயப்படுத்த மாட்டேன். இஷ்டமில்லாத கல்யாணம் நிம்மதியை மட்டுமில்லை, சந்தோஷத்தையும் தராது,'' என்றான்.

சிறிது நேர மவுனத்திற்குப் பின், அமைதியாக உட்கார்ந்திருந்தவளிடம், ''கிளம்பலாம் நித்யா?'' என்றான்.

கிளம்பலாமா என்று கேட்காமல், கிளம்பலாம் என்று சொல்லும் விக்ரமை, தீர்க்கமாக பார்த்தாள்.

'இவனுடன் என் வாழ்க்கை நிச்சயமாக சுவாரசியமானதாக தான் இருக்கும். இருவருக்குமான புரிதலும், விட்டுக் கொடுத்தலும் இருந்தால்...' என நினைத்தபடி, மணல் தட்டி எழுந்தவள், ''கொஞ்ச நேரம் கடல் அலையில் கால் நனைச்சுட்டு போகலாம், விக்ரம்,'' என்றாள்.

கண்கள் மலர, காதலுடன் பார்க்கும் நித்யாவின் மனதைப் புரிந்து கொண்டான். தனக்காக தன் சந்தோஷத்திற்காக இறங்கி வரும், மனைவியாக வரப்போகும் நித்யாவை உரிமையுடன் தோள் சேர்த்து அணைத்தான், விக்ரம்.

பரிமளா ராஜேந்திரன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us