தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!


PUBLISHED ON : ஜூன் 12, 2022

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 12, 2022


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அன்பு சகோதரி —

நான், 50 வயது பெண்மணி. திருமணமாகி, கணவர், குழந்தைகள் உள்ளனர். செல்வாக்கான குடும்பத்தில், பிறந்த ஒரே மகள். என் அப்பா, தன் கண்ணுக்குள் வைத்து, என்னை பாசத்துடன் வளர்த்தார். அம்மாவும் அன்பை பொழிந்தார்.

நான் கல்லுாரியில் படிக்கும்போது, ஒருவரை சந்தித்தேன். அவரை பார்த்ததுமே, இவர் தான் எனக்குரியவர் என்ற எண்ணம் தோன்றியது. ஏதோ ஜென்மத்தில், விட்டக்குறை தொட்டக் குறையாக என் வாழ்வில் வந்துள்ளான் என்ற எண்ணமே எனக்குள் தோன்றியது.

அடிக்கடி இல்லாவிட்டாலும், வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம், சந்தித்து பேசுவோம். 'பீச்'சுக்கு, சினிமாவுக்கு எப்போதாவது செல்வோம். ஆனால், கண்ணியமாக நடந்து கொள்வார்.

இந்நிலையில், என் திருமண பேச்சை எடுத்தார், அப்பா. அவரிடம் என் கதையை சொல்ல முயன்றும், தைரியம் வரவில்லை. அக்காலத்தில், காதலை அவ்வளவு சுலபமாக ஏற்கும் மனநிலை யாருக்கும் இல்லை.

அதுமட்டுமல்லாமல், தன் அந்தஸ்துக்கு சமமான இடத்தில் மாப்பிள்ளை பார்த்தார், அப்பா. திருமண நாளுக்கு முந்தைய நாள் கூட, அவரிடம், நான் காதலித்த விஷயத்தை சொல்ல முற்பட்டேன். ஆனால், உறவினர்களுடன் என் திருமணம் பற்றி சந்தோஷமாக பேசியதை கேட்டதும், சொல்ல தைரியம் வரவில்லை. காதலுக்கு சமாதி கட்ட வேண்டியதாகி விட்டது.

என் திருமண நாளன்று, காதலர், விஷம் குடித்து விட்டதாக கேள்விப்பட்டு, நொந்து போனேன். ஆனால், சரியான நேரத்தில் காப்பாற்றி விட்டதாக, தகவல் கிடைத்தது.

என் மீது அன்பை பொழிந்தார், கணவர். எள் என்பதற்குள், எண்ணெயாக நின்றார். என்னை மேற்கொண்டு படிக்கச் சொல்லி, தன் கம்பெனியிலேயே நிர்வாகியாக அமர வைத்தார். ஆண் - பெண் என, இரு குழந்தைகள் பிறந்தனர். காலம் ஓடி விட்டது. பெண்ணுக்கு திருமணமாகி, அமெரிக்கா சென்று விட, மகன், கம்பெனியை கவனித்துக் கொள்கிறான்.

அவ்வப்போது என் பழைய காதல் நினைவுக்கு வந்து போகும்.

சமீபத்தில், வணிக வளாகம் ஒன்றில், பழைய காதலரை சந்திக்க நேர்ந்தது. தாடியும், மீசையுமாக தேவதாஸ் போல் இருந்தார். அவர் என்னை பார்த்த பார்வை, குற்றவாளியை பார்ப்பது போல் இருந்தது.

அன்று முழுவதும் மன சோர்வாய் இருந்தேன். அதை பார்த்து கணவர், 'அப் - செட்' ஆனதால், மனதை தேற்றி, சகஜமாக இருப்பது போல் காட்டிக் கொண்டேன்.

திரும்ப திரும்ப அந்த முகம் நினைவில் வந்து, என்னை துாங்க விடாமல் செய்கிறது. மனநோயாளி ஆகிவிடுவேனோ என்று பயமாக இருக்கிறது.

சகோதரி, இதிலிருந்து மீள்வது எப்படி?

— இப்படிக்கு,

உங்கள் சகோதரி.


அன்பு சகோதரி —

ஏறக்குறைய, 25 ஆண்டுகளுக்கு பின், பழைய காதலரை சந்தித்துள்ளாய். உன் காதலரும் திருமணம் செய்து குழந்தைக் குட்டிகளை பெற்றிருப்பார் அல்லது திருமணம் செய்து கொள்ளாமல் பிரம்மசாரியாக கூட வாழ்ந்து வரலாம்.

நீயும், அவரும் சேர்ந்து ஒரு பந்தியில் சாப்பிட போனீர்கள். பிரிந்து விட்டீர். நீ, தனி பந்தியிலும், உன் காதலர், தனி பந்தியிலும் சாப்பிட்டு பசியாறி விட்டீர்கள். இன்னும் ஏன் சாப்பிட்டு முடித்த எச்சில் இலையை வெறித்து பார்க்கிறாய்?

உனக்கும், காதலருக்கும் இடையே ஒரே ஒருமுறை கூட தாம்பத்யம் நடக்கவில்லை. காதலருக்கு துரோகம் செய்துவிட்டு நீ வேறொருவரை திருமணம் செய்து கொள்ளவில்லை. இதயம் பட முரளி போல் காதலை உரக்க சொல்லாமல் மவுனித்து விட்டாய் அவ்வளவு தான்.

கோழையாய் தற்கொலைக்கு முயன்றது, காதலர் குற்றம். அதற்கு நீ எப்படி பொறுபேற்க முடியும்? உன் திருமணம் வெற்றிகரமான திருமணம். அன்பான கணவர், அறிவான இரு குழந்தைகள். குழந்தைகளும் வாழ்க்கையில், 'செட்டில்' ஆகி விட்டனர்.

உன் காதலரை பார்த்ததும், மெலிதான புன்னகை செய்துவிட்டு விலகி வந்திருக்க வேண்டும். கணவரின் நிறுவனத்தை கவனி. திருமணமாகி போன மகளிடம் போனில் பேசி மகிழ். மகனுக்கு வரன் பார்.

திரும்ப திரும்ப காதலரின் முகம் நினைவில் வந்து துாங்க விடாமல் செய்வது அபஸ்வரம். இது உன் சுயநலத்தையும், திருப்தி இன்மையையும், கெட்டதை மறக்க தெரியாத மனபோக்கையும் அப்பட்டமாக்குகிறது.

வாராவாரம் கோவிலுக்கு போ. மாதம் ஒருநாள் முதியோர் இல்லம், அனாதை இல்லம் செலவை, 'ஸ்பான்சர்' செய். இசை கேள். வீட்டில் கிளிகளும், மீன்களும், நாய்களும் வளர். காதலர் தொடர்பான குற்றஉணர்ச்சியை துாக்கி எறி.

உனக்கு சிறப்பான திருமண வாழ்க்கை பரிசளித்தமைக்கு இறைவனுக்கு நன்றி கூறு.

'உண்ட உணவில், உடுத்திய உடையில், இருக்கும் வீட்டில், கொண்ட வாழ்க்கைத் துணையில் திருப்திபடு மனமே...' என, கண்ணாடி முன் நின்று சுயவசியம் செய்.

பழைய காதலரை மீண்டும் பார்க்க எவ்வகையிலும் முயற்சிக்காதே. அவர் வாழ்க்கையில் நீ தேவைப்படாமல், உன் வாழ்க்கையில் அவர் தேவைப்படாமல் இலக்கு நோக்கி வெகுதுாரம் பயணித்து விட்டீர்கள். திரும்பி பார்க்காதே.

உன் மன மாளிகையின் எல்லா ஜன்னல்களையும் திறந்து வை. மனநோய் எனும் வவ்வால் பறந்து விடும்.

— என்றென்றும் பாசத்துடன்,

சகுந்தலா கோபிநாத்.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us