தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/தர்க்கம் செய்பவரா நீங்கள்?

தர்க்கம் செய்பவரா நீங்கள்?

தர்க்கம் செய்பவரா நீங்கள்?


PUBLISHED ON : ஜூன் 03, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 03, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தர்க்க சாஸ்திரம், வாழ்க்கைக்கு தேவையாக இருப்பினும், எல்லா இடங்களிலும் அதை உபயோகிக்கக் கூடாது; எங்கு, எதை உபயோகப்படுத்த வேண்டுமோ, அங்கே உபயோகப்படுத்த வேண்டும்.

மகான்களிடமும், தெய்வ அனுக்கிரகம் உள்ளவர்களிடமும் தர்க்க சாஸ்திரத்தை காண்பிக்கக் கூடாது; விளைவு விபரீதமாகும்.

திருநெல்வேலி கம்பா நதி மண்டபத்தில், தங்கி இருந்தார், மகான் ஒருவர். ஏராளமானோர் அவரை தரிசித்து ஆசி பெற்று வந்தனர்.

அன்று, தீபாவளித் திருநாள்... குஜராத்தில் இருந்து ராமசந்திர மேத்தா என்பவர் சில அடியார்களுடன், மகானைத் தரிசனம் செய்ய வந்தார். மேத்தா அணிந்திருந்த விலை உயர்ந்த பட்டு மேலாடை, அனைவர் கண்களையும் கவர்ந்தது.

அடியார்கள் கூட்டத்தில், உபதேசித்துக் கொண்டிருந்த மகான், 'சாப்பிடும் போது, அன்னம், வலது உள்ளங்கையில் படாமல் உண்பது உத்தமம்; ஏனென்றால், வலது உள்ளங்கையில் நெருப்பு இருக்கிறது...' என்றார். அச்சமயம், கம்பா நதி மண்டபத்தில் எழுந்தருளி இருக்கும் அன்னை காமாட்சி அம்மன் கோவில் அர்ச்சகர், சுப்பிரமணிய பட்டர் அங்கு வந்தார்.

தள்ளாத வயதில், பூஜை பொருட்களையும், ஒரு பாத்திரத்தில் நெருப்பையும் எடுத்து வந்தார். வழியில் மழை பெய்ததன் காரணமாக, அவரிடம் இருந்த அக்னி, அணைந்து விட்டது.

அதை அறிந்த மகான், தன் அருகில் இருந்த ஆவுடைய பிள்ளையை அழைத்து, 'பட்டர், பூஜை செய்ய வேண்டும்; பக்கத்தில் உள்ள தடி வீரய்யன் கோவில் தெருவுக்குப் போய், யார் வீட்டிலாவது நெருப்பு கொண்டு வந்து பட்டரிடம் கொடுங்கள்...' என்றார்.

அதன்படி ஆவுடைய பிள்ளை சென்றதும் உபதேசத்தைத் தொடர முற்பட்டார், மகான்.

அப்போது, மேத்தா, 'சுவாமி... சிறிது நேரத்திற்கு முன், வலது உள்ளங்கையில் நெருப்பு இருப்பதாக சொன்னீர்கள். அப்படியிருக்க, அக்னி கொண்டு வரும்படி, இன்னொருவரை ஏன் ஏவ வேண்டும்... தாங்களே தங்கள் வலது உள்ளங்கையில் உள்ள நெருப்பை வெளிப்படுத்தி, பட்டருக்கு உதவக்கூடாதா...' என்று கேட்டார்.

'அதற்கென்ன... அப்படியே செய்தால் ஆயிற்று; உங்கள் மேலாடையைக் கொடுங்கள்...' என்றார் மகான்.

'இவர் எதற்கு நம் மேலாடையைக் கேட்கிறார்...' என்ற குழப்பத்தோடு, தன் விலை உயர்ந்த பட்டு மேலாடையை எடுத்துக் கொடுத்தார், மேத்தா. அதை வாங்கிய மகான், அதன் ஒரு பகுதியை, தன் உள்ளங்கையில் வைத்துத் தேய்த்தார். மின்னல் மின்னியதைப் போல, மேலாடையில் தீப்பிடித்து எரியத் துவங்கியது.

திடுக்கிட்ட மேத்தா, மேலாடையில் பற்றிய தீயை அணைக்க முயன்றார்; ஆனால், மகானோ, 'விடுங்கள்... அதை அக்னி பகவானுக்கே அர்ப்பணம் செய்வது தான் நல்லது...' என்றார்.

அந்த அக்னியே, அர்ச்சகரின் பூஜைக்குப் பயன்படுத்தப்பட்டது. தன் தவறை உணர்ந்து, மகானின் திருவடிகளில் விழுந்து, மன்னிப்பு வேண்டினார், மேத்தா.

மகானும் ஆசி வழங்கினார்; அந்த மகான், கோடக நல்லுார் ஸ்ரீ சுந்தர சுவாமிகள்.

கடந்த, 19-ம் நுாற்றாண்டின் பிற்பகுதியில் நிகழ்ந்த சம்பவம் இது.

அன்பு செலுத்த வேண்டிய மகான்களிடம் தர்க்கம் பேசி, ஆராய்ச்சி செய்து பலனில்லை. அன்பைச் செலுத்துவோம்; அம்பாய் தாக்கும் வினைகளை விலக்குவோம்!

பி.என்.பரசுராமன்

அறிவோம் ஆன்மிகம்!

வன்னி மரத்தை வணங்கி, வழிபடுவது ஏன்?

பாண்டவர்கள் வனவாசத்தின்போது, தங்கள் ஆயுதங்களை வன்னி மரத்தில் ஒளித்து வைத்திருந்து, பின் எடுத்துச் சென்று போரிட்டு வெற்றி பெற்றனர். அதேபோல், சீதையை மீட்க ராமர் புறப்படுவதற்கு முன், வன்னி மரத்தை வலம் வந்து வணங்கிச் சென்றதால் தான் வெற்றி கிடைத்தது. எனவே, வன்னி மரம் தெய்வ விருட்சமாக கருதி வழிபடப்படுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us