தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/திண்ணை!

திண்ணை!

திண்ணை!


PUBLISHED ON : ஜூன் 03, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 03, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அருணகிரி எழுதிய, 'விடுதலை போரில் தமிழ் இலக்கியம்' நுாலிலிருந்து: வ.வே.சு.ஐயரின், 'கம்ப ராமாயண ஆராய்ச்சி' கட்டுரை, கம்பன் மீது அவருக்கு இருந்த மாறாத காதலை வெளிப்படுத்தும். வ.வே.சு.ஐயர், வெளிநாடு சென்றபோதும் உடன் சென்றது, கம்பராமாயணம். அவர் பல கொடுமைகளுக்கு உள்ளாகி, தாய் நாடு திரும்பிய போதும் உடன் வந்தது. தாம் எழுதிய நுால்களை தாமே அச்சிட்டு விற்பனை செய்ய, புதுவையில், 'கம்ப நிலையம்' என்ற நிறுவனத்தை ஏற்படுத்தினார்,

வ.வே.சு.ஐயர். அதன் முதல் வெளியீடு, 'கம்பராமாயண பால காண்டம்' என்னும் ஆராய்ச்சி நுால்.

'தேச பக்தன்' இதழின் ஆசிரியர் பொறுப்பில் இருந்தபோது, அவர் எழுதிய காரசார கட்டுரைக்காக, அவரை சிறையில் அடைத்தது, வெள்ளையர் அரசு. ஒன்பது மாத சிறை வாசத்தின் போது அவர் கம்பராமாயணத்தை ஆங்கிலத்தில் ஆய்வு நுாலாக எழுதினார்.

கம்பராமாயணத்தில், 'இரணியன் வதை படலம்' அவருக்கு மிகப் பிடித்தமான படலம். வால்மீகி ராமாயணத்தில் இல்லாத, கம்பனால் படைக்கப்பட்ட இரணியன் வதை படலத்தில், ஐயரின் உள்ளம் ஈடுபட்டதற்கு காரணம் உண்டு. இரணியனை, அடக்குமுறை ஆட்சி புரியும் ஆங்கிலேயருக்கும், பிரகலாதனை, இன்னல் பலி ஏற்கும் இந்திய மக்களுடனும் ஒப்பிட்டுப் பார்த்தால், 'இரணியன் வதை படலம்' வ.வே.சு.ஐயரின், உள்ளம் கவர்ந்ததற்கான காரணம் விளங்கும்.

'மேதைகள் வாழ்விலே' நுாலிலிருந்து: நுாறு ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்த மேதை, விஸ்வேஸ்வரய்யா சொன்னது... 'என்னை பார்ப்பதற்கு அல்லது அழைத்துப் போவதற்கு பலமுறை வந்திருக்கிறான், எமன். மெதுவாக, என் அறையின் கதவை திறந்து பார்ப்பான் எமன். நான் ஏதாவது வேலை செய்தபடி இருப்பேன்... 'சரி, ஏதோ வேலையாக இருக்கிறான்; தொந்தரவு செய்யக் கூடாது...' என்று போய் விடுவான்; இப்படி பலமுறை வந்து ஏமாற்றத்தோடு சென்றிருக்கிறான்...'

- ஓயாமல் உழையுங்கள் என்பதை அவர் எவ்வளவு நயமாக சொல்லி விட்டார்.

'அமரர் கல்கி' எனும் நுாலிலிருந்து: கல்கியின் தலைமையில் நடந்தது, தமிழ் எழுத்தாளர் மாநாடு. அப்போது, சென்னை மாகாண முதல் மந்திரியாக இருந்த ராஜாஜி, மாநாட்டிற்கு வருகை தந்தார். பொதுக் கூட்டங்களுக்கு தலைவர்கள் வரும்போது ஏற்படும் கலகலப்போ, கரகோஷமோ ராஜாஜி வந்தபோது எழுத்தாளர்களிடமிருந்து எழவில்லை. மனித இயல்பை துல்லியமாக அறிந்திருந்த கல்கி, ராஜாஜிக்கு மன வருத்தம் ஏற்பட்டிருக்கலாம் என்பதை உணர்ந்து, 'ராஜாஜி நம்மிடையே வந்தபோது, யாரும் கை தட்டவில்லை. ராஜாஜி, முதல் மந்திரி தான்; சந்தேகமில்லை. ஆனால், நாம் மட்டும் சாதாரண ஆட்களா... எல்லாரும், 'பேனா மன்னர்'கள் ஆயிற்றே!' என்ற போது, ராஜாஜியின் முகமும், மற்றவர்களுடன் மலர்ந்தது.

மறைந்த எழுத்தாளர், சி.சு.செல்லப்பா, 'என் சிறுகதை பாணி' நுாலில் சொல்கிறார்: 'தினமணி கதிர்' துவங்கப்பட்டபோது, ஏ.என்.சிவராமன்கிட்ட போய், 'என்ன பேரு வைக்கிறது'ன்னு கேட்டேன்... 'வார சனி'ன்னு வை என்றார். அப்போது, 'சுதேசமித்திரனி'ல் சனிக்கிழமை இணைப்பு இதழ் நன்றாக விற்பனை ஆயிற்று. அதை வெல்வதற்காகவே என்னைக் கொண்டு வந்தார், சிவராமன்.

இரண்டு ஆண்டு கழித்து, துமிலனை ஆசிரியராக்கினார். நான் ராஜினாமா எழுதி வெச்சிருந்தேன். பி.எஸ்.ராமையாகிட்டே காண்பிச்சேன். 'அவசரப்படாதே...' என்று அதை வாங்கி கிழித்தார். அப்புறம் மூன்று, நான்கு ஆண்டுகள் இருந்தேன்.

துமிலனுக்கு நான் இருந்தது இடைஞ்சலாக இருந்தது. ஒருநாள், 'எனக்கு லுாஸ் மோஷன்'ன்னு சொல்லிட்டு வீட்டுக்கு போயிட்டேன். மறுநாள் வந்தப்போ, 'நீங்க என்ன, நேத்திக்கு சொல்லாம போயிட்டேள்?' என்றவர், 'இப்போ எல்லாம் நீ ஒண்ணுமே எழுதறதில்ல...' என்று ஒருமையில் பேசினார். பதிலுக்கு நானும், 'நீ' போட்டு பேசினேன். அப்புறம், இது பெரிய பிரச்னையாகி, நான் ராஜினாமா கொடுத்துட்டேன்.

நடுத்தெரு நாராயணன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us