sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

எம்.ஆர்.ராதா - கலகக்காரனின் கதை! (24)

/

எம்.ஆர்.ராதா - கலகக்காரனின் கதை! (24)

எம்.ஆர்.ராதா - கலகக்காரனின் கதை! (24)

எம்.ஆர்.ராதா - கலகக்காரனின் கதை! (24)


PUBLISHED ON : ஜூலை 26, 2015

Google News

PUBLISHED ON : ஜூலை 26, 2015


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இரவு, 2:00 மணி; சாரதா ஸ்டுடியோ வாசலில் ராதாவின் கார் வந்து நின்றது. முகத்தில் களைப்பு தெரிந்தாலும், உற்சாகமாக செட்டுக்குள் நுழைந்தார் ராதா.

'நெல்லூர்ல ஒரு நாடகம்; முடிச்சிட்டு வர லேட் ஆயிருச்சு...' என, அங்கே காத்திருந்த நடிகர் ஸ்ரீகாந்திடம் சொன்னார் ராதா.

'அண்ணே... நீங்க ஏன் இப்படி சிரமப்படணும்?'

'இது என் தொழில்; என்னை நம்பி காசைப் போட்டுருக்கிற புரொடியூசரை ஏமாத்தக் கூடாது...' என்றார்.

பஞ்சபூதம் என்ற படப்பிடிப்பில் நடந்த சம்பவம் இது! அப்போது, அவர், வயது 71.

இப்படத்தில், ஓதுவார்கள் சிலருடன் ராதாவும் இணைந்து, 'பொன்னார் மேனியனே...' என்ற சுந்தரமூர்த்தி சுவாமிகளின் தேவாரத்தைப் பாடி நடிப்பது போல ஒரு காட்சி. இசை சங்கர் கணேஷ்; பாடல் பதிவுக்காக ரெகார்டிங் ஸ்டுடியோ சென்று பாடலைப் பாடினார் ராதா.

அது, வெறும் தேவாரப் பாடல் அல்ல, அன்றைய அரசியல் நிலவரங்களை எல்லாம் எடுத்துக்காட்டிய நையாண்டி தர்பார்!

ராதா: நம பார்வதி பதயே...

மற்றவர்கள்: ஹர ஹர மகாதேவா...

ராதா: பொன்னார் மேனியனே... புலித் தோலை...

என்னடா அர்த்தமில்லாம 'ஈ...'ன்னு இழுக்குறீங்க... கூட்டு சர்க்கார் நடத்துனாத்தான் நல்லாயிருக்கும்ன்னு இன்னிக்கு நினைக்குறாங்கடா. அதேமாதிரி பாட்டுலயும் கூட்டு சேர்ந்தாத் தான் ஒழுங்கா இருக்கும். அது தெரியலயா உங்களுக்கு... அறிவுகெட்ட பசங்களா!

மண்ணே மாமணியே...

'மணியே ஏ...'ன்னு இழுக்கணும். நீ என்ன கலைமாமணின்னு நினைச்சுக்கிட்டிருக்கியா... இது மாமணி! அதுதாண்டா உயர்ந்த மணி; ஆண்டவன் கழுத்துல தொங்குற மணி. அப்பேர்ப்பட்ட மணியை நாம சொல்லுகிறோம்.

யாரை நினைத்தேனே...

'யாரை நினைத்தேனே'ங்கிறதை அழுத்திச் சொல்லணும்; இந்த நாட்டுல நாம எவன நினைக்கிறோம்... ஆண்டவனைத் தவிர வேற எவனை நினைக்க முடியும்! எல்லாருக்கும் சொல்றேன்... அரசு உத்தியோகத்துல இருக்கறவங்களுக்கும் சொல்றேன். டிபார்மென்ட்டை கவனிக்க வேணாம்; சதா அவனையே நினைச்சுக்கிட்டு இருங்கோ. பகல் பூரா ஆண்டவனையே நினைச்சு பக்தி செய்யுங்கோ. ராத்திரில மட்டும் கொஞ்ச நேரம் வேலை செய்யுங்கோ. ஆகையினாலே நீங்க எல்லாரும்... மண்ணே மாமணியே...

பரமேஸ்வரா பரமேஸ்வரா பரமேஸ்வரா!

இப்படியாகப் பாடல் முடியும்.

இப்படத்தின் படப்பிடிப்பின் போதே ராதாவுக்கு, உடல் நிலை அவ்வளவாக ஒத்துழைக்கவில்லை. அன்றைய படப்பிடிப்பின் போது எழுந்து நடப்பதற்குக் கூட சிரமப்பட்டார். ஆனாலும், கால்ஷீட் கொடுத்திருந்ததால், படப்பிடிப்பில் தவறாமல் கலந்து கொண்டார்.

இரண்டு பேர் கைத்தாங்கலாகப் பிடித்துச் சென்று கேமரா முன் நிற்க வைக்கும் அளவுக்கு உடல் தளர்ந்திருந்தார். 'டேக்' என்ற குரல் கேட்டவுடன் நெஞ்சை நிமிர்த்தி வழக்கமான கம்பீரத்துடன் பேச ஆரம்பிப்பார்; காட்சி ஓ.கே., ஆனதும், 'டேய் பிடிங்கடா... பிடிங்கடா...' என்று அலறுவார்.

உடனே, இருவர் ஓடிச் சென்று அவரைத் தாங்குவர். அன்றைய படப்பிடிப்பு இப்படித் தான் நடந்தது. படக் குழுவினர் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும், பிடிவாதமாக நடித்துக் கொண்டிருந்தார் ராதா.

மதிய உணவு நேரம், தயாரிப்பாளர் சாகுலை அழைத்தார் ராதா.

'ஏம்பா சாகுலு... அடுத்து எப்ப ஷூட்டிங் வச்சிருக்க?'

'அடுத்த மாசம்ண்ணே...'

'அடுத்த மாசமா! அடப் போப்பா... நான் நாளைக்கோ, நாளன்னைக்கோ எப்ப புட்டுக்குவேன்னு எனக்கே தெரியல. சீக்கிரம் வைச்சு முடிச்சுக்கடா...' என்றார்.

'அது வந்து... காசில்ல; அதான்...'

'காசில்லயா... டேய் கஜபதி அவனுக்கு என்ன வேணுமோ கொடுடா...' என்றார் ராதா.

மறுநாள், ராதா நடிக்க வேண்டிய மீதிக் காட்சிகள் எடுக்கப்பட்டன. அதில், மாடு முட்டி, ராதா இறந்து போவதாக ஒரு காட்சி.

'அண்ணே... உங்க போர்ஷன் எல்லாம் முடிஞ்சுது...' என்றதும், 'அப்ப நான் கிளம்பவா...' என்று கூறி, பஞ்சபூதம் படக் குழுவினரிடம் விடை பெற்றுக் கிளம்பினார் ராதா.

அன்று மாலை, நடிகர் எம்.ஆர்.ராதாவுக்கும், எம்.ஜி.ஆருக்கும் பாராட்டு விழா நடந்தது.

வி.ஜி.பன்னீர்தாஸ் ஏற்பாடு செய்திருந்தார். ராணி சீதை ஹாலில் நடந்த அந்த விழாவில் கலந்து கொண்ட ராதா, பின் திருச்சி கிளம்பினார்.

சங்கிலியாண்டபுரம் வீட்டை அடைந்தார். நாடகத்தால் சம்பாதித்த பணத்தைக் கொண்டு கட்டப்பட்ட வீடு என்பதால், அது, அவருக்கு மிகவும் பிடித்த வீடு. உடல் நிலை மோசமாகிக் கொண்டே வந்தது.

ராதாவின் குடும்பத்தினர் அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். மஞ்சள் காமாலை என்றனர் டாக்டர்கள். கவனிக்காமல் விட்டதில் முற்றிப் போயிருந்தது. மூன்று முறை ரத்த வாந்தி எடுத்தவர், நினைவு இழந்து, மரணத்தை தழுவினார்.

அன்று, செப்., 17, 1979; திராவிடர் கழகத்தினர் ஈ.வெ.ரா.,வின் நூற்றாண்டு நிறைவு விழாவைக் கொண்டாடிக் கொண்டிருந்தனர்.

திரையுலகினர் சிலர் ராதாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். கறுப்புத் துணி போர்த்தப்பட்டிருந்த அவரது உடலுக்கு திராவிடர் கழகத்தினர் பலர் மரியாதை செலுத்தினர். திருச்சி மக்கள் லட்சக்கணக்கானோர் வந்து இறுதி மரியாதை செலுத்தினர்.

சங்கிலியாண்டபுரம் வீட்டிலிருந்து ராதாவின் இறுதி ஊர்வலம் காவேரிக் கரை ஓயாமாரி இடுகாடு நோக்கிக் கிளம்பியது. வழிநெடுக சுவர்களில் அன்று நடைபெறவிருந்த, ரத்தக்கண்ணீர் நாடகத்துக்கான போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன!

அடுத்த இதழில் முடியும்.

நன்றி: சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்,

சென்னை.

- முகில்






      Dinamalar
      Follow us