PUBLISHED ON : அக் 31, 2021

வேன் கண்ணாடி வழியே, தேனியை தொட்டுச் செல்லும் மேற்கு தொடர்சி மலை தெரிய ஆரம்பித்ததும், கண்ணாடியை இறக்கி விட்டேன்.
''சார், 'ஏசி' வண்டி,'' என்றார், டிரைவர்.
''இந்த ஊரே, 'ஏசி' தான். எல்லாருமே கண்ணாடியை இறக்கி விடலாம். அருமையான தென்மேற்கு பருவக்காத்து வீசும்,'' என்று நான் சொன்னதும், அனைவரும் கண்ணாடிகளை இறக்கி, ஈர வாசம் பிடித்தனர்.
'மீட்டிங்' என்ற பெயரில் ஆசிரியர்கள், 10 பேர், மூணாறுக்கு, 'விசிட்' வந்திருந்தனர்.
''பத்து வருஷத்துக்கு முன், இந்த ஏரியாவில் தான் ஆசிரியரா வேலை பார்த்தேன்,'' என்றேன்.
''அப்போ, உங்களுக்கு பருவக்காத்து வீசிய இடம்ன்னு சொல்லுங்க,'' ஒருத்தர் கிண்டல் அடிக்கவும், வேனுக்குள் சிரிப்பு.
அப்போது, முருகனின் நினைவு வந்து போனது. என் முதல், 'பேட்ச்' பிளஸ் 2 மாணவன். படிப்பில் சுமார் தான். ஆனால், மற்ற விஷயங்களில் கில்லாடி. இயற்கையிலேயே புத்திசாலி. விவசாய குடும்பம்.
நான் இங்கிருந்து மாற்றலாகி வரும்போது, கல்லுாரி முடித்திருந்தான். காதலில் விழாத வரை, ஒழுக்கமான பையன்.
நினைவைக் கலைத்தது, தேனி டவுன்; சந்தைக்கு பெயர் போன ஊர்.
''வண்டியை நிறுத்துப்பா... இங்குள்ள ஹோட்டலில் புரோட்டா நல்லா இருக்கும். அதோ அங்கே ஓரமா நிறுத்து,'' என்றேன்.
''சார் இருந்த ஊர் வேற... அவர் வாங்கிக் கொடுத்து, நாம் சாப்பிடலைன்னா கோவிச்சுக்குவார்,'' ஒருத்தர் கிண்டலடிக்க, மீண்டும் சிரிப்பு.
''அதுக்கென்ன வாங்கிக் கொடுத்துட்டா போச்சு.''
எல்லாரும் உள்ளே சென்றோம்.
'ஆர்டர்' கொடுத்ததும், எனக்கு மீண்டும் பழைய நினைவு.
அன்று பள்ளிக்கூடம் கிளம்பும்போது, மொபைல்போன் சிணுங்கியது.
முருகனின் அம்மா.
'காரணம் இல்லாமல் போன் செய்ய மாட்டாங்களே. முருகன் ஏதாவது...' நினைத்தபடியே எடுத்தேன்.
சின்னதாக ஒரு கேவல் ஒலியை தொடர்ந்து, அழ ஆரம்பித்தார்.
'சார்... திரும்பவும், முருகன் பூச்சி மருந்து குடிச்சிட்டான். பயமா இருக்கு, கொஞ்சம் வர்றீங்களா?'
நான் நினைத்தது தான் நடந்துள்ளது.
'ஏம்மா... அவனுக்கு இதே வேலையா போச்சு இந்த தடவை எவ?'
'அவளே தான் சார். ஏதோ சொன்னாளாம், மருந்தை குடிச்சிட்டான். நீங்க சொன்னா தான் கேட்பான்...'
'சரி வர்றேன்... எந்த ஆஸ்பத்திரி?' என்று கேட்டு, பள்ளிக்கு விடுப்பு சொல்லி, கிளம்பினேன்.
போன மாதம் தான் கயிற்றை மாட்டி, தொங்கப் போனான். மரக்கிளை ஒடிந்து, காப்பாற்றி பாதுகாத்து வைத்திருந்தனர். அதுக்குள்ள அடுத்த முயற்சி.
கையில் குளுக்கோஸ் ஏற, நைந்து போன மெத்தை போல சோர்ந்து படுத்திருந்தான். என்னைப் பார்த்ததும், கண்களில் பயமும், மரியாதையும் தெரிந்தது. முகத்தை திருப்பிக் கொண்டான்.
அந்த மரியாதை மட்டும் இல்லை என்றால் அப்படியே கிளம்பி இருப்பேன்.
சென்ற முறை வரும்போது, திட்டியதுடன் போய் விட்டேன். ஆனால், இது திட்டும் விஷயமல்ல, புரிய வைக்க வேண்டிய விஷயம்.
அவனுக்கு அருகே சேரை இழுத்து போட்டு அமர்ந்தேன். அவன் அம்மா வெளியே போனார். சற்று அமைதிக்கு பின், 'அந்தப் பொண்ணு அவ்வளவு அழகாடா?'
நான் பொதுவாகவே ஜோவியலாக பேசுவது அவனுக்கு தெரியும், பிடிக்கும்.
அவன் கண்களில் ஒரு தெளிவு, முகத்தில் மலர்ச்சி, வெட்கம். 'ஆமாம்...' என்பது போல இறுகிய கன்னத்தில் ஒரு புன்னகை.
'திட்டும் அளவுக்கு என்ன சொல்லி அவளை வெறுப்பேத்தின?'
'வெறுப்பேத்தலை சார்... கவிதை ஒன்று எழுதிக் கொடுத்தேன். எங்க காலேஜில் முதல் பரிசு வாங்கியது. அப்போ கூட அவளை நினைச்சு தான் எழுதினேன்...' மடமடவென பேசினான்.
'அது அப்போ... நீ காலேஜ் முடிச்சே ரெண்டு வருஷம் ஆயிருச்சே...'
'ஆனாலும், இன்னமும் அவளை தானே காதலிக்கிறேன்...' என்றவன் தானாகவே தலையை கவிழ்ந்தான்.
'இப்போ ஏன் தலையை குனிஞ்ச?'
'வெட்கமா இருந்தது...'
'இல்லை, அதுக்கு பெயர் சங்கடம். அந்த தகுதி இல்லைன்னு உனக்கே தெரியுது...' சற்றே காட்டமானேன்.
எதுவும் பேசவில்லை, முருகன்.
'முருகா... கவிதைக்கோ, உடைக்கோ மயங்கும் வயசை அந்தப் பெண் தாண்டிட்டா. உன் வயசு தானே அவளுக்கும். ஒரே வயதில் இருக்கும் ஆணை விட, பெண்ணுக்கு நாலு வருஷம் அறிவு அதிகம்...'
திடுக்கிட்டு, என்னை பார்த்தான்.
'என்ன பார்க்குற... அழகில் மயங்கும் பருவம், ஒரு பெண்ணுக்கு, 'டீன் ஏஜில்' தான் இருக்கும்.
20 வயதை கடந்துட்டா, அவங்க யதார்த்த வாழ்க்கைக்குள் வந்திருவாங்க. தன்னை காப்பாற்றுவானா, மரியாதையா நடத்துவானா, கவுரவமா காப்பாத்தி வைச்சிருப்பானா, சமூகத்தில் நமக்கான அங்கீகாரம் கிடைக்குமா...
'இதெல்லாம் தான் ஒரு பெண்ணின் தேவையாகவும், எதிர்பார்ப்பாகவும் இருக்கும். அவங்களை பொறுத்தவரை, இவைகளை கொடுக்கும் ஆண் தான் அழகு. இப்போ சொல், உனக்கு இதில் எந்த அழகு இருக்கு?'
குனிந்திருந்த அவன் கண்களில் சிந்தனை தெரிந்தது. இதில் எந்த அழகும் தன்னிடம் இல்லை என்பது அவனுக்கு அவமானமாக இருந்தது.
'நான் என்ன பண்றது... வேலை கிடைக்கலை...' என்று சமாளித்தான்.
'யார்கிட்ட கொடுத்து வைச்சிருந்த உன் வேலையை?'
நக்கலான என் பதிலை புரிந்து கொண்டவன், அதை ரசித்து சிரிக்கும் மன நிலையில் இல்லை.
'உனக்கு வேலை கொடுக்கணும்ன்னு யாருக்கும் அவசியம் கிடையாதே... இப்போ புரியுதா உன் நிலைமை... வேலை வேணும்ன்னு ஏன் இன்னொருத்தர்கிட்ட பிச்சை எடுக்குற... இதோ பார், உனக்கு, 23 வயதாகுது. ஆனால், ஒரு பெண்ணுக்கு இது கல்யாண வயசு. அவ தன்னை காப்பாற்றும் ஒருத்தனை தான் தேடுவா. கவிதை பாடுபவனை இல்லை.
'ஆனால், உனக்கு இது அஸ்திவாரம் போடும் வயசு. யோசிச்சு பார், முதல் முறை நீ கயிறு கட்டி தொங்கும்போது, கிளை முறிஞ்சு விழுந்து தப்பிச்ச... தற்கொலை செஞ்சுக்க கூட, ஒரு முதிர்ச்சியான மரம் தேவைப்படுது. அப்படி இருக்கும்போது, தான் சேர்ந்து வாழ, கல்யாணம் செய்பவனின் மனமும், பணமும் முதிர்ச்சியா இருக்கணும்ன்னு பெண்கள் நினைப்பதில் என்ன தவறு...' என்றேன்.
'இப்போ கூட அவள் உன்னை நினைக்க மாட்டா... ஏன்னா, நீ ஒரு கோழைன்னு முடிவு செஞ்சிருப்பா... உன் வாழ்க்கையை இன்னும் துவங்கவே இல்லை. நீ திறமையானவன். உனக்குள்ளே மிகப்பெரிய ஆற்றல் ஒண்ணு வெளிவர துடிக்குது... அது எதுன்னு தெரியாம நீ காதல் பக்கம் போயிட்ட... அது தப்பா இருப்பதால் தோத்துட்ட...' என்று நிறுத்தினேன்.
எழுந்து சென்று பிளாஸ்க்கிலிருந்து சுடு தண்ணீர் ஊற்றி கொடுத்தேன்.
வாங்கி இரண்டு மடக்கு குடித்தவன், டேபிளில் வைத்தான்.
'அந்த ஆற்றல் உனக்கான வாழ்க்கையை தேடுது; உன்னை வழி நடத்த ஒரு பாதையை தேடுது. அந்த பாதை தான் ஒரு ஆணுக்கே உரிய அழகான சம்பாத்தியம், தொழில். நீ, உனக்கான தொழிலை கண்டுபிடி; உத்தியோகம் புருஷ லட்சணம்.
'வேலை கிடைக்கலைன்னா, நீயே முதலாளி ஆயிரு... விழுந்தா உன்னை தாங்கிக் கொள்ள உன் பெற்றோரும், நாங்களும் இருக்கோம். அவளுக்கு முன் சம்பாதிக்கும் ஒரு ஆண் மகனா வந்து நில்... அப்போ பாரு என்ன சொல்றான்னு...' எழுந்தேன்.
'நான் சொல்வது உனக்கு புரிஞ்சா, உன்னைப் பத்தி கவலைப்படும் என்னை வந்து பாரு. இல்லைன்னா, உன்னை கொஞ்சம் கூட நினைச்சுப் பார்க்காத ஒரு பெண்ணை நினைச்சு சாவு. நீ யாருன்னு நீயே முடிவு செஞ்சுக்கோ...' என சொல்லி, கிளம்பி விட்டேன்.
ஒரு மாதம் கழித்து வீட்டுக்கு வந்தான். எனக்கும், அப்போது பணி மாற்றல் வந்திருந்தது.
'சொல்லுப்பா... நல்லா இருக்கியா, என்ன செய்யப் போற?'
'உழைச்சு பெரிய ஆளாகி, உன்னை வந்து சந்திக்கிறேன்னு அவகிட்ட சவால் விட்டுட்டு வந்திருக்கேன்...' என்றான்.
அவனுக்குள் ஒரு வெறி, உறுதி இருப்பது தெரிந்தது. இந்த பொறி போதும், தீப்பந்தம் ஆக்கிடலாம்.
'உனக்கு என்ன தெரியும்?'
'வண்டி ஓட்டுவேன்...'
'வெரிகுட்... உங்க வீட்டில் இரண்டு மாடு இருக்குல்ல, அதோடு, இன்னும் இரண்டு பசு மாடு வாங்கு. சின்னதா டெம்போ வாங்கு; பால் வியாபாரம் துவங்கு.தற்போது, சுத்தமான பாலுக்கு தான் கிராக்கி. மத்த நேரத்தில், வண்டியை வாடகைக்கு விடு...'
எதுவும் பேசாமல் இருந்தான்.
'வீட்டுக்கு பின்னால் இடம் இருக்குல்ல, அதில் கீரை போடு. தினமும் பணம் வரும். கவுரவம் பார்க்காதே, சும்மா இருப்பது தான் அசிங்கம். ஒருமுறை விற்று, பணத்தை கையில் வாங்கிப்பார். அப்போ தெரியும் அந்த சுகமும், பெருமையும்... வங்கியில் கடன் வாங்கு. நான் கேரண்டி கையெழுத்து போடுறேன்...' என்று உறுதி அளித்தேன்.
வங்கியில் பார்மாலிட்டி முடிந்து, கடனில் வண்டி வாங்கி கொடுத்ததோடு, நான் மாற்றலாகி வந்து விட்டேன். பின், அவ்வப்போது போனில் பேசுவான். குரலில் ஒரு மலர்ச்சி, பேச்சில் தெளிவு இருக்கும்.
பிறகு, மொபைல் நம்பர், காலம், வேலைகள், மனிதர்கள், கவனம் எல்லாம் மாற, நான் அவன் தொடர்பிலிருந்து நெடுந்தொலைவு பிரிந்து வந்து விட்டேன்.
''சார், உங்க பிரிய புரோட்டா வந்து நேரமாகுது... கடைசியா சாப்பிட்டு எழுந்தா, 'பில்' கொடுக்க வேண்டியிருக்கும்ன்னு தெரியாதா...'' என, 'கமென்ட்' களை கட்டியது.
முதல் கை எடுத்து வாயில் வைக்கும்போது தான் அவனை பார்த்தேன்.
முருகன்.
அவன் வந்திறங்கியது, 'பொலிரியோ' கார். உயர் ரக வெள்ளை கதர் சட்டை, வேட்டி. முழுக்கை சட்டையை மடித்து, கையில் ஐபோன் பிடித்தபடி, தொழிலுக்கும், அரசியலுக்கும் இடைப்பட்ட நிலையில் இருக்கும் ஒரு இளநிலை பணக்காரனாக தெரிந்தான்.
பார்சல், 'ஆர்டர்' கொடுத்து திரும்பும்போது, என்னை பார்த்தவன், ஒரு கணம் தடுமாறி, பின் சுதாரித்து ஓடி வந்து கைகளை பற்றிக் கொண்டான்.
''முருகா... எச்சி கை,'' என்றேன்.
''பரவாயில்லை சார்... எப்படி இருக்கீங்க, எவ்வளவு நாளாச்சு.''
''என் வேலை அப்படி. நேரம் அமையலை, என்ன செய்வது... ஒவ்வொரு ஊரிலும் ஒரு முருகன்,'' என்றேன்.
''அப்படியே இருக்கீங்க... இது தான் சார், உங்க அடையாளமே,'' என்றான்.
''ஆமா, கல்யாணம் ஆயிருச்சா?''
''ம்.'' என்றான்.
நெற்றி சுருக்கி, ''அப்போ...'' என்றேன்.
''ஆமாம் சார்... அவ இல்லை,'' என்றான்.
''ஏம்ப்பா, அவள் ஒத்துக்கலையா?''
''நான் ஒத்துக்கலை.''
சற்றே அதிர்ந்தேன்.
''என்ன சொல்ற... அப்போ அந்த சவால் எல்லாம்?''
''சவால், சவாலா தான் இருந்தது. வியாபாரத்தில் நான் நல்ல நிலைக்கு வர வர... அவளே என்னை விரும்ப ஆரம்பித்தாள்.''
''அப்புறம் என்ன, பழம் நழுவி பால்ல விழுந்திருச்சே.''
''ஆனா, நான் விலகிட்டேன்.''
''ஏன்?''
''நான் தற்கொலை பண்ண முயற்சி செஞ்சபோது, அவ எங்கே சார் போனாள்,'' என்றவன் தொடர்ந்து, ''அன்னைக்கு நான் சாகக்கிடக்கும்போது, என்னிடம் வந்து, 'நீ ஆம்பளைன்னா, சம்பாதிச்சு காட்டு'ன்னு சொல்லியிருந்தா, நான் எவ்வளவு சந்தோஷமா இருந்திருப்பேன்.
''ஆனா, நான் சம்பாதிக்க ஆரம்பிச்ச பிறகு, சிரிச்சுக்கிட்டு வந்தா சார்... அது, காதல் இல்லை; சுயநலம். ஒரு விதத்தில் அது வியாபாரம். ஒருவேளை, என் முயற்சியில் தோல்வியாகி ஒண்ணும் இல்லாம போயிருந்தா, வந்திருப்பாளா?''
என்னால் பதில் சொல்ல முடியவில்லை.
''பெண்கள், தங்களை காப்பாற்றுபவனை விரும்புறாங்கன்னா அது தப்பில்லை. ஆனா, பணத்தை மட்டும் விரும்புவது தப்புதானே சார்.''
''ம். இல்லைன்னு சொல்றதுக்கில்லை; அப்புறம் என்ன பண்ண?'' என்றேன்.
''என் உழைப்புக்கு கூடவே இருந்து ஊக்குவித்த, முக்கியமா என்னை விரும்பிய ஒரு பெண்ணை கல்யாணம் பண்ணிக்கிட்டேன். சரி தானே சார்,'' என்றான்.
'ஆமாம்...' என்பது போல தலையசைத்து, புன்னகைத்தபடியே, கைகழுவ சென்றேன்.
''ஸாரி சார்... உங்க முகவரி கிடைக்கல, கூப்பிடவும் தயக்கம்.''
''புரியுது, ரொம்ப சந்தோஷம். அப்போ, நான் வரவா,'' என்று சொல்லி அவன் மொபைல் எண் வாங்கி, 'பில்' கொடுக்க சென்றேன்.
''எல்லாருக்கும் சார் கொடுத்துட்டார்,'' என்று, முருகனை கை காட்டினார், ஹோட்டல் காசாளர்.
புன்னகையோடு கை அசைத்தான், முருகன்.
கிளம்பினேன்.
மூணாறு செல்லும் வழி முழுவதும், 'என்னை விரும்பிய ஒரு பெண்ணை...' என்று சொல்லும் போது, அவன் கண்களில், சாதித்த ஒரு திருப்தி மின்னல் போல வந்து போனது மட்டும் நினைவுக்கு வந்து கொண்டே இருந்தது.
எல்லா கேள்விகளுக்கும் காலத்திடம் பதில் இருப்பதை, ஒரு ஆசிரியராக என்னால் புரிந்து கொள்ள முடிந்தது.
கி. ரவிக்குமார்
வயது 52.
நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் பொறியாளராக பணி புரிகிறேன். 15 ஆண்டுகளாக பல்வேறு பத்திரிகைகளில் கதை, கவிதை மற்றும் தமாசு எழுதி வருகிறேன். 'மரக்குட்டி' என்ற சிறுகதை தொகுப்பு வெளியிட்டுள்ளேன்.
டி.வி.ஆர்., நினைவு சிறுகதை போட்டியில் பரிசு வாங்க வேண்டும் என்பது லட்சியம்! அந்த முயற்சியில் இப்போது வெற்றி கிடைத்துள்ளது. முதல் மூன்று பரிசுக்குள் வருவதற்கு மேலும் முயற்சி செய்வேன்.
கதை உருவான விதம்:
இளைஞர்கள் தங்கள் சக்தியையும், சுயமதிப்பையும் அறியாமல் சாதிக்க வேண்டிய வயதில், காதல் மற்றும் இனக் கவர்ச்சியில் விழுந்து வீணாவதை பார்த்து, இந்தக் கதையை எழுதினேன். ஒரு சரியான வழிகாட்டுதல் இருந்தால், அவர்களை நல்வழிப்படுத்தலாம் என்பதே கதையின் கரு!
