தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அழிவை தரும் ஆணவம்!

அழிவை தரும் ஆணவம்!

அழிவை தரும் ஆணவம்!


PUBLISHED ON : மே 06, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 06, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஞானம் என்ற சொல், தெளிந்த அறிவை குறிக்கும்; என்ன தான், உயர் கல்வி கற்று, உயர்ந்த இடத்தில் இருந்தாலும், 'உயரத்தில் பறக்கும் கழுகின் புத்தி, கீழே கிடக்கும் செத்த எலியின் மீதுதான் இருக்கும்...' என்பதைப் போல், சிலரின் புத்தி, தான் எனும் ஆணவத்தில், கீழ்மை செயல்களிலேயே செல்லும். அவர்களுக்கான புராணக் கதை இது:

ஒருசமயம், பிரம்ம வனத்தில், மயில் வடிவத்தில் சிவபெருமானை மனம், மொழி, மெய்களால் வழிபாடு செய்தாள், பார்வதி தேவி.

அவளின் வழிபாட்டில் மனம் குளிர்ந்த சிவபெருமான், தேவிக்கு அருள, கைலாயத்திலிருந்து ரிஷப வாகனத்தில் புறப்பட்டார். தேவர்களும் தங்களது வாகனங்களில், அவரை பின் தொடர்ந்தனர்.

வேகமாக சென்று, பிரம்ம வனத்தை அடைந்தது, ரிஷப வாகனம். அதன் வேகத்தோடு போட்டி போட முடியாமல், மற்றவர்களின் வாகனங்கள் பின் தங்கி விட்டன. அதை அறிந்ததும் ரிஷபத்திற்கு தன் ஆற்றலை எண்ணி, ஆணவம் ஏற்பட்டது.

அதன் ஆணவத்தை அடக்கும் பொருட்டு, அதற்கு தண்டனை அளிக்க தீர்மானித்த சிவபெருமான், ரிஷபத்தை தம் விரலால், சற்றே அழுத்தினார்.

பாதாளம் வரை சென்று விட்டது, ரிஷபம். அப்போது தான், அதற்கு புத்தி வந்தது. 'இறைவனின் வாகனம் என்ற அகங்காரத்தில் என் மனம் விழுந்து விட்டதே...' என்று வருந்தி, 'கயிலை மலை வாசா... கங்காதரா... அடியேன் செய்த குற்றத்தை பொறுத்தருளுங்கள்...' என, உளம் உருக பிரார்த்தித்தது.

எத்தனையோ பேருக்கு அருள் புரிந்த, கருணை உள்ளம் கொண்ட இறைவன், ரிஷபம் திருந்தி, வருந்தி வேண்டும்போது, அருள மறுப்பாரா... 'ரிஷப தேவா... எழுந்திரு...' என்றார். பாதாளத்தில் இருந்து மேலே வந்து, காவிரியாற்றின் நடுவில் நின்றார், ரிஷப தேவன்.

'காவிரித் துறையின் நடுவே, நீ மேற்கு நோக்கி நிற்கும் இந்த இடத்தில், காவிரியில் முறைப்படி நீராடுவோர், மற்ற புண்ணிய தீர்த்தங்கள் அனைத்திலும் நீராடிய பலனைப் பெறுவர்; எம்மைத் தாங்கும் பேறு பெற்று, நலம் பல பெறுவாயாக...' என்று அருளிய சிவபெருமான், 'ஐப்பசி மாத அமாவாசையன்று, கங்கை முதலான புண்ணிய நதிகள் அனைத்தும், காவிரியில் வந்து சேரும்; அப்போது, யாம், உனக்கு ஞானோபதேசம் அளிப்பதற்காக, காவிரி துறையின் வட திசையில் காட்சியளிப்போம். அந்த இடம், 'உத்தர மாயூரம்' என அழைக்கப்படும். யாம், ஞான ஆசிரியனாக தெற்கு நோக்கி அமர்ந்து, உனக்கு உபதேசம் அளிப்போம்...' என்று அருளினார்.

அதை ஏற்ற ரிஷபம், ஐப்பசி மாத அமாவாசை வரை, அங்கேயே தவம் செய்தது; அதனால், அந்த இடம், 'ரிஷப தீர்த்தம் மற்றும் இடப தீர்த்தம்' என்று அழைக்கப்படுகிறது.

ரிஷபம் எதிர்பார்த்த அத்திருநாள் அன்று, புண்ணிய நதிகள் அனைத்தும், மாயூரத்தில், காவிரியை வந்தடைந்தன. தேவர்கள் சூழ, லிங்க வடிவில், தென் திசையில் அருள்பாலித்தார், காசி விஸ்வநாதர். தொடர்ந்து விசாலாட்சி, அன்னபூரணி, டுண்டி விநாயகர், பைரவர், கயா தீர்த்தம், ஆல மரம், விஷ்ணு பாதம் என, அனைவரும், மாயூரத்தில் எழுந்தருளினர்.

காசிக்கும், கயாவிற்கும் செல்ல முடியாதோர், மாயூரத்தில், காவிரித் துறையில் நீராடி, பலன் பெறுகின்றனர்.

ஆணவம், யாரையும் விட்டு வைக்காது; கீழே தள்ளி விடும். அதிலிருந்து தெய்வ அருளால் மட்டுமே மீண்டு, உயர முடியும்.

கொம்பாதி கொம்பர்கள் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் போய் விட்டனர்; ஆணவத்தை தலையில் துாக்கி வைத்து, ஏன் அல்லல் படவேண்டும்?

பி.என்.பரசுராமன்

அறிவோம் ஆன்மிகம்!

நவக்கிரகங்களை வேண்டினால் என்ன நன்மை?

புகழை - சந்திர பகவானும், ஆரோக்கியத்தை - சூரியனும், பூமி யோகத்தை - செவ்வாயும், கூர்மையான அறிவை - புதனும், நற்குணத்தை - குருவும், வசீகர பேச்சை - சுக்கிரனும், திடமான பேச்சை - சனியும், சத்ருவை ஜெயிக்கக் கூடிய தன்மையை - ராகுவும், ஞானத்தை - கேதுவும் தருவர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us