தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/திண்ணை!

திண்ணை!

திண்ணை!


PUBLISHED ON : மே 06, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 06, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஆர்.சி.சம்பத் எழுதிய, 'உலக அதிசயங்கள்' நுாலிலிருந்து: இங்கிலாந்தில் உள்ள சிறு நகரம், சபோக்; இங்குள்ள, சூட்டன் ஹு என்ற பகுதியில், எலிசபெத் பிரெட்டி என்ற பெண்மணி வசித்து வந்தார்.

ஒருநாள், தன் வீட்டு ஜன்னல் வழியே வெட்ட வெளியை பார்த்தபடி இருந்தாள், எலிசபெத். அப்போது, அவள் பார்வையில் அங்கிருந்த மண் மேடுகள் தெரிந்தன. ஒன்று, இரண்டல்ல; 16 மண் மேடுகள் அடுத்தடுத்து வரிசையாக தென்பட்டன; அவளுக்கு ஆச்சரியமாக தெரிந்தது.

அது, 1938ம் ஆண்டு; இரண்டாம் உலகப்போர் துவங்கியிருந்தது. எல்லார் கவனமும் யுத்தத்தின் மீது இருந்ததால், யாரும் இந்த மண் மேடு பற்றி பெரிதாக யோசித்ததில்லை. அவள் அடிக்கடி ஜன்னல் பக்கம் வரும்போதெல்லாம் அந்த மண் மேடுகள் அவள் கண்ணில் பட்டு, கவனத்தை ஈர்க்கவே, ஒரு மியூசியத்திற்கு சென்று, அங்குள்ள பொறுப்பாளரிடம், மண் மேடுகள் பற்றி சொன்னாள்.

மியூசிய பொறுப்பாளர், புதை பொருள் ஆராய்ச்சியாளர் பிரவுனுக்கு சொல்ல, அவர், மண் மேடுகளை பார்வையிட வந்தார். மூன்று மண் மேடுகளை பார்வையிட்டு, நான்காவது மேட்டையும் கூர்ந்து கவனித்தார். மற்ற மூன்று மண் மேடுகளை விட, அது சற்று வேறுபட்டதாக தெரிந்தது.

அந்த நான்காவது மண் மேடு, 30 மீட்டர் நீளம், 24 மீட்டர் குறுக்களவு, 3 மீட்டர் உயரமும் இருந்தது. எனவே, அது ஒரு கல்லறையாக இருக்க முடியாது என ஊகித்தார்.

ஆட்களை வரவழைத்து தோண்டிய போது, உள்ளே ஒரு பெரிய கப்பல் தென்பட்டது.

ஆதி காலத்தில், மன்னரோ, படை அதிகாரிகளோ இறந்து விட்டால், அவர்களை கப்பலில் வைத்து, பூமியில் புதைத்து விடுவர். அப்படி புதைக்கப்பட்ட கப்பலாக இருக்கலாம் என்று எண்ணினார், பிரவுன்.

மேலும், தோண்டியபோது, அது ஓர் ஆங்கிலோ - சாக்ஸன் மன்னருக்கு சொந்தமான கப்பல் என்பது தெரிய வந்தது.

அந்த கப்பலில் துடுப்பு, போர் தளவாடங்கள், தங்கும் பெரிய அறை ஒன்றும் இருந்தது. அப்படியானால், அந்த கப்பலில் மிகுந்த செல்வங்கள் இருக்குமே என எண்ணினார், பிரவுன்.

அப்போது தான், அவருக்கு இன்னொரு உண்மையும் புலப்பட்டது. அதாவது, புதை பொருள் திருடர்கள், அந்த கப்பலை ஏற்கனவே ஆராய்ந்திருக்கின்றனர். ஆனால், அவர்கள் கைக்கு எதுவும் கிடைக்கவில்லை. செல்வம் இருக்கும் இடம் தெரியாமல் தேடி, ஏமாந்து போயிருக்கின்றனர்.

நீண்டகால அனுபவம் வாய்ந்தவரான பிரவுன், தன் புத்திக்கூர்மையால், கப்பலில் செல்வங்கள் புதைக்கப்பட்டு இருக்கும் இடத்தை கண்டறிந்தார்.

கப்பலின் அடித்தளத்திற்கு கீழே மற்றொரு அடித்தளம் இருந்தது. அதில், போர் வீரர்கள் அணியும் தலைக்கவசம், தங்கத்தாலான சிம்மாசனம், வெள்ளி தட்டுகள், தங்க உறையிலிடப்பட்ட வாள், தங்கக் கட்டிகள், நவரத்தின குவியல்கள் மற்றும் ஆபரணங்கள் என, ஏராளமான செல்வக் குவியல்கள் இருந்தன. அரசன் உணவருந்தும் தங்கத் தட்டும் கிடைத்தது.

அதை ஆராய்ந்ததில், 1,300 ஆண்டுகளுக்கு முன், ஆட்சி புரிந்த, ரெட்வால்டு எனும் அரசனுக்குரியது என விளங்கியது. இந்த அரசன், கி.பி., 625ல் காலமாகியுள்ளான். அவன் உடலை தான், அவனது திரண்ட செல்வங்களுடன் இதில் வைத்து புதைத்துள்ளனர். ஆனால், அரசனின் ஒரு எலும்பு கூட, காணப்படவில்லை. அதனால், மன்னன் ரெட்வால்டின் நினைவுச் சின்னமாக, இக்கப்பலை இவ்வாறு புதைத்திருக்கலாம் என்று கருதுகின்றனர், வரலாற்று ஆராய்ச்சியாளர்கள்.

நடுத்தெரு நாராயணன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us