PUBLISHED ON : மே 06, 2018

அன்புள்ள அம்மாவுக்கு —
நான், 22 வயது பெண்; என் ஐந்து வயதில், ஆதரவற்றோர் இல்லத்தில் இருந்து, என்னை தத்து எடுத்தனர், என் வளர்ப்பு பெற்றோர். நான்கு ஆண்டுகளுக்கு பின், அவர்களுக்கு ஒரு மகள் பிறந்தாள். ஆனாலும், சொந்த மகளாக கருதி தான், என்னை வளர்த்து வருகின்றனர். தற்போது, பல் மருத்துவம் படிக்கிறேன்.
என் தங்கை மீது அதிக பாசம் வைத்துள்ளேன்; அவளும் என் மீது அன்பை பொழிவாள். இதெல்லாம், கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன் வரை தான்.
ஆதரவற்றோர் இல்லத்தில் இருந்து, தத்து பிள்ளையாக வந்தவள் என்ற விபரம், அவளுக்கு தெரிந்ததிலிருந்து, என்னை ஒதுக்க ஆரம்பித்தாள்; என்னுடன் பேசுவதையும், பழகுவதையும் தவிர்க்க ஆரம்பித்தாள். எவ்வளவு தான் பணிந்து போனாலும், என்னை உதாசீனப்படுத்துகிறாள்.
பெற்றோருக்கு நாங்கள் இருவருமே, இரண்டு கண்கள் தாம்; அவர்களாலும், அவளுக்கு புரிய வைக்க முடியவில்லை.
தங்கையின் செயல், என்னை மிகவும் பாதிக்கிறது. எந்த உறவுமே இல்லாமல் இருந்த எனக்கு, அருமையான பெற்றோர் மற்றும் தங்கையை கொடுத்த இறைவன், ஏன் இந்த சோதனையை தருகிறான் என்று புரியவில்லை. மீண்டும் தங்கையுடன் அன்பும், ஆதரவுமாக இருக்கவே ஆசைப்படுகிறேன்.
அவளை என் பக்கம் எப்படி திருப்புவது... நீங்கள் தான் நல்ல பதிலை சொல்ல வேண்டும்.
— இப்படிக்கு,
உங்கள் மகள்.
அன்பு மகளுக்கு —
தத்து எடுக்கும் பெற்றோருக்கு, குழந்தை பிறந்து விட்டால், ஒன்று, தத்து குழந்தை வந்த ராசியில் தான் தமக்கு குழந்தை பிறந்துள்ளது என்ற சந்தோஷத்தில், அக்குழந்தையை தலையில் வைத்து கூத்தாடுவர்.
இரண்டு - நமக்கு குழந்தை இல்லாததால் தான் ஒரு குழந்தையை தத்தெடுத்தோம். இப்போது, நமக்கே, குழந்தை பிறந்து விட்ட நிலையில், இரவல் குழந்தை எதற்கு என்கிற மனோபாவத்துடன் தத்து குழந்தையை உதாசீனப்படுத்துவர் அல்லது அக்குழந்தை அவ்வீட்டில் வேலையாளாக வளரும் அல்லது துரத்தியடிக்கப்படும்.
உன் விஷயத்தில், தத்து எடுத்த பெற்றோர் உன்னை உதாசீனப்படுத்தவில்லை. எப்போதும் போல் பாசமாய் உள்ளனர். உனக்கு நல்ல கல்வியையும் கொடுக்கின்றனர்.
உன் தங்கை, பிளஸ் 1 அல்லது பிளஸ் 2 படிக்கலாம் என நினைக்கிறேன். 'டீன் ஏஜ்' பருவத்தில் இருக்கும் அவள், வாழ்க்கையின் போக்கை அறியாதவள். அதனால், அவளிடம், அம்மா வழி பாட்டியோ, அப்பா வழி பாட்டியோ அல்லது அவளுக்கு பிடித்த உறவினர்களையோ வைத்து, 'குழந்தை பிறப்பு தாமதமாகிறதே என்ற பயம் கலந்த எதிர்ப்பார்ப்புடன் இல்லற வாழ்வில் இணைவோருக்கு, குழந்தை பிறப்பு தள்ளிப் போகிறது; எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் இல்லற வாழ்வில் இணைவோருக்கே, கர்ப்பம் தங்குகிறது என்பது விஞ்ஞான பூர்வமாய் நிரூபிக்கப் பட்ட உண்மை.
'குழந்தை பிறக்காது என்ற தவிப்பில் இருந்தவர்களுக்கு, தத்துக் குழந்தையாக அவள் வந்த பின், அந்த மகிழ்ச்சி மற்றும் மன அமைதியின் காரணமாக, நீ இந்த பூமியில் பிறந்தாய். தன் உதிரத்தில் பிறக்காத எந்த குழந்தையையும் குறைந்தபட்சம், 10 ஆண்டுகள் முழுமையான பாசத்தை கொட்டி, பாராட்டி, சீராட்டி வளர்த்தால், அந்த குழந்தை சொந்த உதிரத்தில் பிறந்த குழந்தை ஆகிவிடும். அந்தப் பிள்ளைக்கு பெற்றோரின் முகச்சாயல், 90 சதவீதம் வந்துவிடும்.
'பெற்ற பாசத்தை விட வளர்ப்பு பாசம் மிக வீரியமானது. ஒரு பொமேரியன் நாய் குட்டியை வளர்த்து பார். இரண்டே ஆண்டுகளில் அந்த நாய் குட்டி, நம் கர்ப்பத்தில் தரித்த குழந்தைக்கு சமமாகி விடும். நீங்கள் இருவரும் வெவ்வேறு கர்ப்பப்பைகளில் பிறந்திருந்தாலும், வீடு, பள்ளி, உணவு, துாக்கம், பெற்றோர் வாங்கிக் கொடுத்த ஆடை என, ஒரே பெற்றோரின் அரவணைப்பில் வளர்ந்தவர்கள்.
'சித்தப்பா, பெரியப்பா மகள்களை, அக்காள் என்றும் தங்கை என்றும் கொண்டாடுவதில்லையா... அங்கு, பாகுபாடா பார்க்கிறோம்... இரு வேறு கர்ப்பப்பையில் பிறந்த பெண்களை, சகோதரிகளாக்கி மகிழ்ந்திருக்கிறது பரம்பொருள். கடவுள் போட்ட உறவு முடிச்சை மதிப்போம்.
'முன்பதிவு செய்யப்பட்ட இரட்டை இருக்கையில், ஒரு இருக்கையில் நாம் அமர்ந்திருக்க, இரண்டாவது இருக்கைக்கு ஓர் அந்நியர் வந்து பயணிக்க எவ்வளவு ஒத்துழைப்பு தருகிறோம். நீ பிறப்பதற்கு நான்கு ஆண்டுகளுக்கு முன், சட்டப்படி தத்தெடுக்கப்பட்டு பெற்றோரின் ஒரே மகளாக இருந்த அவள் பொறாமை இல்லாமல் உன் வருகையை கொண்டாடவில்லையா?
- என்று நாசுக்காய் சொல்லச் சொல். உன் அன்பை முழுமையாக புரிந்து கொள்வாள், தங்கை.
— என்றென்றும் தாய்மையுடன்
சகுந்தலா கோபிநாத்.
