தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/சுத்தமாகும் அரசு மருத்துவமனை!

சுத்தமாகும் அரசு மருத்துவமனை!

சுத்தமாகும் அரசு மருத்துவமனை!


PUBLISHED ON : மே 06, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 06, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அரசு மருத்துவமனை என்றாலே, சுத்தம், சுகாதாரம் அப்படி இப்படி தான் இருக்கும் என முகம் சுழிக்கும் நிலையில், தனியார் மருத்துவமனைகளை மிஞ்சும் வகையில், சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையின், புற்றுநோய் சிகிச்சை பிரிவு, சுத்தம், சுகாதாரத்தில் சிறந்து விளங்குகிறது.

காரணம், ஏழை, எளிய நோயாளிகள் புழங்கக்கூடிய கழிப்பறைகளை சுத்தம் செய்யும் மகத்தான பணியை, இலவசமாக செய்து வருகிறது, 'விஸ்வா ஜெயம்' என்ற தொண்டு நிறுவனம்.

யாரும் செய்யத் தயங்கும் இத்தகைய சேவையை செய்து வரும், இந்த தொண்டு நிறுவனத்தின் நிர்வாகி, சேகர் விஸ்வநாதன். சென்னையை சேர்ந்த இவர், தனியார் நிறுவனம் ஒன்றின் மேலாளர்.

இவருக்கு வேண்டிய ஒருவர், புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, ராயப்பேட்டை புற்றுநோய் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். அவரை பார்ப்பதற்காக வந்தபோது, மருத்துவமனையில், சுத்தமும், சுகாதாரமும் சொல்லிக் கொள்ளும்படி இல்லை.

'மற்ற நோயாளிகளை விட, புற்று நோயாளிகள் சுத்தமான சூழலில் இருக்க வேண்டியது அவசியம் என்ற நிலையில், நிலைமை நேர்மாறாக இருக்கிறதே...' என மனம் வருந்தியவர், மறுநாளே தீர்க்கமான முடிவு எடுத்தார். மருத்துவமனையின் சுத்தம் மற்றும் சுகாதாரத்திற்கான பொறுப்பை, முறைப்படி ஏற்றுக் கொண்டார்.

தன் மாத வருமானம் மற்றும் கையிருப்பில் இருந்து பணம் போட்டு, கடந்த, 2012ல் இந்த பொறுப்பை ஏற்றார்.

ராயப்பேட்டை புற்றுநோய் மருத்துவமனை, 90 ஆயிரம் சதுர அடி பரப்பளவில், ஆறு மாடிகளுடன் உள்ளது. ஒவ்வொரு நாளும் வரக்கூடிய வெளி நோயாளிகள், உள் நோயாளிகள், நோயாளிகளின் உதவியாளர்கள் மற்றும் மருத்துவமனையை சார்ந்தோர் என, 700 பேர் இங்குள்ள கழிப்பறைகளை உபயோகிக்கின்றனர். கழிப்பறைகளும், தரைப்பகுதியும், நோயாளிகள் புழங்கும் வார்டு அறைகளும், ஒரு நாளைக்கு, எட்டு முறை சுத்தம் செய்யப்படுகின்றன.

பதினைந்து ஊழியர்கள், சுழற்சி முறையில் 24 மணி நேரமும், பணிபுரிகின்றனர். சுத்தம் செய்ய, நாட்டு மாட்டின் கோமியம் உள்ளிட்ட சுற்றுச் சூழலுக்கு கேடு விளைவிக்காத கிருமி நாசினி பொருடகளே உபயோகிக்கப்படுகின்றன.

சேகர் விஸ்வநாதனின் நேர்மையான சேவையை பார்த்து, குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் பலர், இவரது சேவையில் தங்களையும், நன்கொடையாளர்களாக இணைத்துக் கொண்டுள்ளனர். ஊழியர்களின் சம்பளம் மற்றும் உபகரணங்களின் தேவை என, மாதம் ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வரை செலவாகிறது.

நன்கொடையாளர்களின் ஆதரவு காரணமாக, தரையை விரைந்தும், ஈரமில்லாமலும் சுத்தம் செய்ய, மழை நேரத்திலும், நோயாளிகளின் படுக்கை விரிப்புகளை துவைத்து காய வைக்க, 24 மணி நேரமும் சுகாதாரமான குடிநீர் வழங்கக்கூடிய மற்றும் அறுவை சிகிச்சைக்கு தேவைப்படும் உபகரணங்களை ஸ்டெரிலைஸ் செய்து தரக்கூடிய நவீன இயந்திரங்கள் நிறுவப்பட்டு, செயல்பட்டு வருகிறது.

ஏழை எளிய மக்களின் சுகாதாரத்தில், மருத்துவத்தில் அக்கறை கொண்டு செயல்படும் சேகர் விஸ்வநாதனின் சேவையை அங்கிகரித்து, மேலும் ஊக்கம் தந்தால், தன் சேவையை, இன்னும் பல அரசு மருத்துவமனைகளுக்கு விரிவுபடுத்த எண்ணம் உள்ள அவருக்கு ஊக்கமாக இருக்கும்.

தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல் எண்: 93800 22773.

எல். முருகராஜ்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us