தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/ஆட்டிசம் - மதி இறுக்கம் நோயல்ல...

ஆட்டிசம் - மதி இறுக்கம் நோயல்ல...

ஆட்டிசம் - மதி இறுக்கம் நோயல்ல...


PUBLISHED ON : ஏப் 02, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 02, 2017


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

உலகம் முழுவதும், ஏப்., 2ம் தேதியை, உலக ஆட்டிச தினமாக அனுசரிக்கின்றனர்.

கடந்த, 1940ல் முதன்முதலாக, 'ஆட்டிசம்' பற்றி கண்டறியப்பட்டது. அன்றிலிருந்து இதுகுறித்து ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. அமெரிக்காவைச் சேர்ந்த, லியோ கேனர் என்ற மருத்துவர், 1943ல், ஆட்டிசம் பாதிக்கப்பட்ட 11 குழந்தைகளை ஆய்வு செய்து, பல கட்டுரைகள் எழுதியுள்ளார்.

'டிஸ்லெக்சியா' போன்று, ஆட்டிசமும் மரபணு குறைபாடு தானே தவிர, அது நோயல்ல. தமிழில் இதை, மதிஇறுக்கம் என்று குறிப்பிடுவர்.

பொதுவாக, இக்குறைபாடு, குழந்தை பிறந்த மூன்று ஆண்டுகளுக்குள் ஏற்படும். இந்தியாவில், 125 குழந்தைகளில், ஒரு குழந்தைக்கு ஆட்டிசம் குறைபாடு உள்ளது.

இவர்களுக்கு உடலில் வெளிப்படையாக எந்த பாதிப்பும் இருக்காது. ஆனால், அவர்களது செயல்பாடுகளை உற்று நோக்கினால், குறைபாடுகளை புரிந்து கொள்ளலாம். உதாரணமாக, பிறரோடு கண்ணோக்கி பேச மாட்டார்கள். சிலர், கால் கட்டை விரல் நுனியில் நடப்பவர்களாக இருப்பர்.

இதுதவிர, மூளையில் தகவல் பரிமாற்றம் செய்யும் பகுதியில் பாதிப்புகள் இருந்தால், நடத்தை குறைபாடு, அறிவுத்திறன் வளர்ச்சி பாதிப்பு மற்றும் நரம்பியல் குறைபாடுகளும் இருக்கும்.

இவர்களுடைய செய்கைகளை ஆரம்ப காலத்திலேயே கண்டறிந்து சீர்படுத்தினால், முன்னேற்றம் காணலாம்.

ஆட்டிசம் பாதிக்கப்பட்ட குழந்தைகளை எப்படி கண்டுபிடிப்பது?

* இரண்டு ஆண்டுகளுக்கு மேல் குழந்தைகளின் விளையாட்டு, பேச்சு மற்றும் சமூகத்திறன்களில் காணப்படும் பின்தங்கிய நிலை.

* கையால் சுட்டி பொருளை காண்பித்தால், பொருளை பார்க்காமல், சுட்டும் கையைப் பார்ப்பது.

* பெயரைச் சொல்லி அழைத்தால், திரும்பி பார்க்காமல் இருத்தல்.

* கண்ணோடு கண் தொடர்பு கொள்ளாமை.

* சொற்கள் மூலம், தேவையை வெளிப் படுத்தாமை. (அடுத்தவரின் அல்லது தன் கையின் ஆட்காட்டி விரலை பயன்படுத்தி சுட்டிக்காட்டுவது.)

* மற்றவர்களுடன் சேர்ந்து செயல்களை செய்வதில் அல்லது கவனிப்பதில் குறைபாடு.

* பிடித்தமான வேலையிலிருந்து கவனத்தை திசை திருப்புவது கடினம்.

* தன்வயதொத்தவர்களுடன் சேர்ந்து விளையாடு வதில் சிக்கல்.

* வாயால் ஊதுவதில் பிரச்னை - இயலாமை.

* சைகை அல்லது பிற அசைவுகளின் மூலம், தேவைகளை வெளிப்படுத்துவதில் பிரச்னை.

* சொற்கள் மூலம், பிறருடன் தொடர்பு கொள்ளும் திறன் இல்லாதிருத்தல்.

* விளையாட்டுகளை கற்பதில் பிரச்னை.

* பொருட்களை ஒன்றன்பின் ஒன்றாக அடுக்குவதில் திறமை வாய்ந்தவர்கள்.

* ஒரு குறிப்பிட்ட பொம்மை மற்றும் பொருளை மட்டுமே பயன்படுத்துவர்.

* சுழலும் பொருட்களுடன் அதிக நேரம் விளையாடுவது, சுழற்சியை ரசிப்பது, விளையாட்டு பொம்மையின் ஒரு பகுதியில் மட்டும் முழு கவனம் செலுத்துவது - உதாரணம்: காரின் சக்கரம்.

* அடுத்தவர்களை பார்த்து சிரிக்காதிருப்பது.

* சில நேரங்களில் காது கேளாதவர் போல இருப்பது.

இது போன்ற அறிகுறிகள் தென்பட்டால், உரிய மருத்து வரை அணுகுவது நல்லது. ஆரம்ப நிலையில் உரிய சிகிச்சை அளிப்பதன் மூலம், சுயமாக தங்கள் வேலையை தாங்களே செய்து கொள்ளும் நிலையை உருவாக்க முடியும். மேலும், மற்ற குழந்தைகளை போல, பள்ளிக்கு சென்று படிக்க முடியும்.

பெரும்பாலான பெற்றோர், தங்களின் குழந்தைகளுக்கு உள்ள குறைபாடுகளை ஏற்க மறுக்கின்றனர். அத்துடன், ஆட்டிச குழந்தைக்கு மருத்துவம் செய்வதின் மூலம், எந்தவிதமான முன்னேற்றமும் இருக்காது என்று தாங்களாகவே முடிவு செய்து, அவர்களை அப்படியே விட்டுவிடுகின்றனர். உங்கள் காலத்திற்கு பின், உங்கள் குழந்தை தன்னிச்சையாக வாழ வேண்டும்; அதற்கு அவர்கள் திறமைகளை கண்டறிய, முயற்சி எடுங்கள்.

சில வீடுகளில், குழந்தைகள் பேச தாமதிக்கும் போது, 'உங்க ஆத்தா, அப்பன் கூட, ஐந்து வயசுக்கு அப்புறம் தான் பேசினான்; கம்முன்னு இரு... குழந்தை தானா பேச ஆரம்பிச்சுடும்...' என்பர், வீட்டில் உள்ள பெரியவர்கள். அதையெல்லாம் கேட்டு, உங்கள் குழந்தையின் சிகிச்சை காலத்தை நீட்டித்து விடாதீர்கள்; தயவு செய்து தாமதிக்காதீர்கள்!

எஸ். அருண்குமார்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us