தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/சமூக நிகழ்வுகளை தவிர்ப்பதா?

சமூக நிகழ்வுகளை தவிர்ப்பதா?

சமூக நிகழ்வுகளை தவிர்ப்பதா?


PUBLISHED ON : டிச 18, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 18, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

எந்த நல்லது, கெட்டதுகளிலும் கலந்து கொள்ளாதவர்களை பற்றி, 'எல்லாரும் இருந்தும், ஏன் இப்படி, தங்களை, தனிமைப் படுத்திக் கொள்கின்றனர்...' என, நினைப்போம்.

நல்லது, கெட்டதுகளில் கலந்து கொள்ளும் நம்பிக்கையற்று, ஏன் இப்படி நடந்து கொள்கின்றனர் என்பது பற்றி சிந்தித்து பார்ப்போம்...

தோற்றம், குடும்பம், தொழில் மற்றும் சமூகம் என, ஏதாவது பாதிப்பு தங்களுக்கு நேர்ந்திருந்தால், 'பார்ப்பவர் இது பற்றி கேட்பரே...' என்று தயங்குவது, முதலாவது காரணம்.

'உங்க மகனுக்கு, ஏன் இன்னும் திருமணம் ஆகலை... ஏன் இப்படி மெலிஞ்சு, உருத்தெரியாம போயிட்டீங்க... முகத்துல, ஏன் இவ்வளவு பரு; மருத்துவரை பாக்கலையா... பொண்ணு அவளா திருமணம் செய்துகிட்டான்னு (ஓடிப் போயி) கேள்விப்பட்டோம்; பலர் வீட்லயும் (?) இது நடக்கிறது தான்; இப்பெல்லாம் இது சகஜம்...' என்று உள்குத்து பேச்சுகள், வரத்தான் செய்யும். இவற்றை, நாம் எப்படி எடுத்துக் கொள்கிறோம் என்பதை தெரிந்து கொள்ளவே, இத்தகைய கேள்விகளை கேட்டும், பேசியும், நம்மை ஆழம் பார்க்கிறது இச்சமூகம்.

நம் பாதிப்புகள் பற்றி, நாம் அக்கறையாக இருக்கிறோமே தவிர, கவலைப்பட்டு, முகவாய் கட்டைக்கு, முட்டுக் கொடுக்கவில்லை என்பதை, இச்சமூகத்திற்கு சொல்லவாவது, இவர்களை நாம் சந்திக்க வேண்டும்.

இதற்கான களங்களே நல்லதும், கெட்டதும் நடக்கும் இடங்கள்.

'உள்ளுக்குள் எவ்வளவோ கவலைகள் இருந்தாலும், அவற்றை வெளிக்காட்டி கொள்ளாத, மென்று ஜீரணிக்கிற பக்குவம், நமக்கும் சிறிது இருக்கிறது...' என, மற்றவர்களை நம்ப வைக்க வேண்டும்.

இது தவிர, நமக்காக பரிந்து பேச, ஆறுதல் சொல்ல, தைரியம் அளிக்க முன்வருவோரும் உண்டு. இவர்கள் தரும் ஊக்கம், நம்மை, புது மனிதர்களாக ஆக்கும். அடைந்து கிடந்தால், இது நடக்குமா?

அடுத்து, நல்லது, கெட்டதுகளில் கலந்து கொள்ளும் போது, இச்சமூகத்தால், நாம் எப்படி பார்க்கப்படுகிறோம், மதிக்கப்படுகிறோம் என்பது, நமக்கே புரிய வரும்.

வசதி மிகுந்தவருக்கு, தடபுடல்; வசதி குறைந்தவருக்கு சம்பிரதாய வரவேற்பு என்று வழங்கப்படும் போது, 'இதை, எப்படியும் காப்பாற்றிக் கொள்ள வேண்டும்...' என்கிற எண்ணம் அந்த செல்வந்தருக்கும், 'இவர்கள் எல்லாரும், என்னை இன்னும் மதிக்க வேண்டும்...' என்கிற உணர்வு, சராசரி மனிதருக்கும் வரும். இது, மிக பெரிய உந்து சக்தியாக அமையும்.

இத்தகைய மன எழுச்சியை, வேறு எந்த சந்தர்ப்பத்திலும், நாம் பெற முடியாது. நம் நண்பர்கள், நல விரும்பிகள், நம் குடும்பத்தினர் மற்றும் நம் தொழில் வட்டமும் தர முடியாத மன எழுச்சியை, உத்வேகத்தை, ஒரு நிகழ்வு தருமானால், அதை எப்படி நாம் தவிர்க்கலாம்.

நாம் கலந்து கொள்ளும் நிகழ்வுகளில் கிடைக்கும் அறிமுகங்கள், நமக்கு, பல வகையிலும், என்றாவது ஒரு நாள் உதவக் கூடும். 'இவர், போலீஸ் கமிஷனர் ஆபீஸ்ல, பி.ஏ.,வா இருக்காரு; இவரு, பிரபல மருத்துவமனையில் அக்கவுன்டன்ட்; இவர், என் கூட படிச்சவரு... தலைமை செயலகத்துல, அதிகாரியா இருக்காரு; இவருக்கு, மலேஷியாவுல நகைக் கடை இருக்கு...' என்று 'மளமள'வென்று அறிமுகமாகும் போது, பின்னால், ஒருநாளில் அது பயன்படும் பாருங்கள்... அதை, எழுத்தால் எழுதி மாளாது.

அழைப்பிற்கு செல்வது என்பது சுப காரியம்; அழையாமலேயே செல்வது, இறுதிச்சடங்கு. 'தகவல் இல்லை, எனக்கு யாரும் சொல்லவில்லை...' என்பதெல்லாம், ஏற்க முடியாத வாதம். துக்க வீட்டினரின் அதிர்ச்சி அலை, அந்த வீட்டையே புரட்டிப் போட்டிருக்கும். யாருக்கு வரும், நம் நினைப்பு!

நல்லவற்றில் பகிர்ந்து கொள்ள கூட தவறலாம்; ஆனால், தவறியவர் வீட்டில், தவறாது கலந்து கொண்டு ஆறுதலும், தேறுதலும் கூறி, முடிந்தால், நான்கு தோள்களும், ஒரு தோளாகி துணையிருந்தால், அது, காலமெல்லாம் நெஞ்சில் சுமந்து, உரியவர்களால் போற்றப்படும்.

மேலும், மன கேள்வியையும், கோணத்தையும் மாற்றுங்கள். 'நான் ஏன் கலந்து கொள்ள வேண்டும்...' என்று, நமக்கு நாமே எதிர் கேள்வி கேட்டு, அதற்கு காரணங்களும், நியாயங்களும் தேடுவதை விட்டு, நாம் கலந்து கொள்வதில் இருக்கக் கூடிய நியாயங்களையும், காரணங்களையும் தேடிப் பழகுவோம்.

இனியும், நல்லது, கெட்டதுகளில் கலந்து கொள்ள, எதிர்மறையான காரணங்களை, தேட வேண்டாம்.

லேனா தமிழ்வாணன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us