PUBLISHED ON : டிச 18, 2016

தமிழக முன்னாள் அமைச்சர், காளிமுத்து எழுதிய, 'வாழும் தெய்வம்' என்ற நூலிலிருந்து:
ஒருமுறை, எம்.ஜி.ஆர்., திருச்சிக்கு செல்லும் போது, வழியில் ரயில்வே கேட் குறுக்கிட, அவரது கார் நின்றது. அப்போது, அருகில் வயல்களில் வேலை செய்த மக்கள், ஓடி வந்து, எம்.ஜி.ஆரின் காரை சூழ்ந்து கொண்டனர். அவர்களின் பாசத்தில் திக்குமுக்காடி போனார்
எம்.ஜி.ஆர்.,
'எல்லாரும் நல்லா இருக்கீங்களா...' என்று, எம்.ஜி.ஆர்., விசாரித்த போது, அவர்கள், 'மகராசா நீங்க நல்லா இருந்தாலே போதும்; நாங்க நல்லா இருப்போம்...' என்று சொல்லி, கையெடுத்துக் கும்பிட்டனர். அவர்களின் கைகளை பற்றி நெகிழ்ந்து போனார், எம்.ஜி.ஆர்.,
அவர்களிடம் விடைபெற்று காரில் பயணித்த போது, நெகிழ்ந்த குரலில், 'நான் நல்லா இருந்தாலே, தாங்களும் நல்லா இருப்போம்ன்னு சொல்ற இந்த மக்களுக்கு, நான் என்ன கைமாறு செய்யப் போறேன்...' என்றார்.
மக்கள், தன் மீது காட்டிய பாசத்தை போலவே, அவரும் மக்கள் மீது காட்டிய அன்பையும், அக்கறையையும் அன்று நேரில் பார்த்தேன்.
அவரது ஆட்சியின் போது, ஒருமுறை, ராமேஸ்வரத்தில் கடுமையான புயல் மழை; குடியிருப்பு பகுதிகளில் பலத்த சேதம். தகவல் கிடைத்ததும், உடனே பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்றார் எம்.ஜி.ஆர்., அவருடன் நானும் சென்றேன்.
சேறும், சகதியுமான வீதிகளில் கண்ணீரும், கம்பலையுமாக நின்றிருந்தனர் மக்கள். அவர்களை பார்த்ததுமே, காரிலிருந்து இறங்கிய எம்.ஜி.ஆர்., சிறிதும் யோசிக்காமல், வேட்டியை மடித்துக் கட்டி, முழங்கால் அளவு தண்ணீரில் நடக்க, பதறிப் போன மக்கள், 'அய்யா... எங்களுக்கு ஒண்ணும் பிரச்னையில்ல; உங்கள பாத்ததே போதும்; சகதியில் நடக்காதீங்க...' என்று தடுத்தும் கேளாமல், அவர்கள் அருகில் சென்று, ஆறுதல் கூறினார்.
பின், மின்னல் வேகத்தில், நிவாரணப் பணிகளுக்கும் உத்தரவிட்டார். மக்களின் குறைகளை கோட்டையில் உட்கார்ந்து கேட்டவர் அல்ல; தெருவுக்கே வந்து தீர்த்து வைத்தவர், எம்.ஜி.ஆர்.,
முதல்வராக ஆட்சிப் பொறுப்பேற்றது முதல், அமரராகும் வரையிலான, 11 ஆண்டுகளில், ஒரு சென்ட் நிலமோ, வீடோ அவர் வாங்கியது கிடையாது. அதேசமயம், திரையுலகில் தான் சம்பாதித்த சொத்துகளை, மாற்றுத்திறனாளி குழந்தைகளின் நலனுக்கும், கட்சிக்கும் என, தமிழக மக்களிடமே திருப்பிக் கொடுத்தார். அவர் போல் மக்களின் இதயங்களில் இடம் பிடித்தவர், வேறு யாரும் இல்லை. ஏனெனில், தான் சம்பாதித்த மாபெரும் சொத்து, மக்களின் செல்வாக்கு என நினைத்தார்; அதை மதித்ததுடன், கடைசி வரை கட்டிக்காக்கவும் செய்தார்.
இதற்கு உதாரணமாக, இன்னொரு சம்பவத்தையும் கூறலாம்.
ஒருமுறை எம்.ஜி.ஆருடன் காரில் சென்றேன். அவரது காரைப் பார்த்ததும், சாலையின், இருபுறமும் திரண்ட மக்கள், 'தலைவா வாழ்க! எம்.ஜி.ஆர்., வாழ்க...' என்று கோஷமிட்டனர். இதைப் பார்த்த எம்.ஜி.ஆர்., என்னிடம், 'இவங்க எல்லாருமே எம்.ஜி.ஆர்., வாழ்கன்னு வாழ்த்தறாங்களே தவிர, ஒருத்தர் கூட, முதலமைச்சர் வாழ்கன்னு ஏன் சொல்லலன்னு தெரியுமா?' என்று கேட்டார்.
'உங்க மூன்றெழுத்து பெயர்; அவங்களுக்கு மந்திரம் மாதிரி; அதனால் தான்...' என்றேன்.
'அதுமட்டுமல்ல; முதலமைச்சர் வாழ்கன்னு சொன்னா, அது பதவியை வாழ்த்துற மாதிரி.
எம்.ஜி.ஆர்., வாழ்கன்னு சொன்னா தான், என்னை வாழ்த்துற திருப்தி. இதுதான் நான் சம்பாதிச்ச சொத்து. இதை நான் பத்திரமா காப்பாத்தியாகணும்...' என்றார்.
இறுதி வரை, அவர் சொன்னது போலவே நின்றார்.
கடந்த, 1969ல், 'ஆனந்த விகடன்' இதழுக்கு ஜெயலலிதா, அளித்த பேட்டியிலிருந்து: சர்ச் பார்க் கான்வென்ட்டில், பள்ளிப்படிப்பை முடித்ததும், என்னை சினிமாவில் நடிக்க அழைத்தனர். என் தாயார் என் விருப்பத்தை கேட்ட போது, 'கல்லூரியில் சேர்ந்து படிக்க தான் ஆசை...' என்றேன். அவர், என் விருப்பத்திற்கு தடை சொல்லவில்லை.
ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் சேர விண்ணப்பித்தேன்; கல்லுாரியில், எனக்கு இடமும் கிடைத்தது.
கல்லூரி திறந்ததும், ஆர்வத்துடன் சென்றேன். முதல் நாள் வகுப்பு; ஆசிரியை வந்து பாடம் நடத்தினார்; நானோ, அதை கவனிக்காமல், பக்கத்தில் இருந்த தோழியுடன் பேசிக் கொண்டிருந்ததை கவனித்த ஆசிரியை, 'பாடத்தை கவனிக்காமல் அங்கென்ன பேச்சு...' என்று கடிந்தார்.
பின், பாடத்தை கவனிப்பது போல் பாசாங்கு செய்தேன்.
ஆசிரியை கரும்பலகையில் ஏதோ எழுதி, 'எல்லாரும் நோட் புக்கில் இதை குறித்துக் கொள்ளுங்கள்...' என்றார். முதல் நாள் என்பதால், நான், நோட்டோ, பேனாவோ எடுத்துச் செல்லவில்லை. நான் குறிப்பு எழுதாமல் அமர்ந்திருப்பதை கண்ட ஆசிரியை, காரணம் கேட்டார்; சொன்னேன்.
'நோட்டும் இல்லை; பேனாவும் இல்லை... எதற்கு தான் கல்லுாரிக்கு வந்தாய்...' என்றார், கோபமாக!
மதிய உணவுக்காக வீட்டுற்கு வந்த நான், மீண்டும் கல்லுாரி செல்லவில்லை. சினிமாவுக்கு நடிக்க வந்து விட்டேன். என் கல்லுாரி வாழ்க்கை, அரை நாளோடு முடிந்தது.
அ.தி.மு.க., வேட்பாளரான அவர், தேர்தல் வேலை செய்யும் கட்சி ஆட்களுக்கு, உணவு கூட வாங்கி தருவதில்லை என்று, கட்சி தலைவி ஜெயலலிதாவிடம் புகார் சொல்லப்பட்டது. உடனே, போயஸ் கார்டனுக்கு அழைக்கப்பட்டார், அந்த வேட்பாளர்.
'என்னப்பா... உன் மீது நிறைய புகார் வருதே, கட்சிக்காரங்களுக்கு சாப்பாடு கூட உன்னால வாங்கி தர முடியாதா?'
'அம்மா... நான் தாழ்த்தப்பட்ட ஜாதியை சேர்ந்தவன். என் வீட்ல சாப்பாடு செஞ்சு போட்டா, யாரும் சாப்பிட மாட்டேங்கிறாங்க; செஞ்சதெல்லாம் கீழே வீணா கொட்ட வேண்டியிருக்கு; எல்லாருக்கும் கடையில வாங்கி கொடுக்கிற அளவுக்கு எனக்கு வசதி இல்ல; என்ன மன்னிச்சிருங்க...' என்று அழுதார், அந்த வேட்பாளர்.
'அப்படியா விஷயம்... சரி, நீ போய் கவலைப்படாம தேர்தல் வேலைகளை கவனி...' என்றார், ஜெயலலிதா.
அந்த வேட்பாளர், வெற்றி பெற்று, சட்டசபை உறுப்பினர் ஆனார். யாரும் எதிர்பாராத விதமாக, அவர் உணவுத்துறை அமைச்சராக அறிவிக்கப்பட்டார்.
ஊடகங்களை பொறுத்த வரை, அது எப்போதும் போல், அவரின் விசுவாசிக்கு வழங்கப்பட்ட பதவி; மக்களை பொறுத்தவரை, அந்தாளுக்கு மச்சம். ஆனால், அந்த செயலின் உண்மையான அர்த்தம், 'நீ தாழ்ந்த ஜாதின்னு சொல்லி, உன் வீட்டு சாப்பாட்டை வேணாம்ன்னு சொன்னாங்களா... இனி, நாட்டுக்கே நீ தான் சோறு போட போற...' என்பது தான்!
ஜெ.,வின் ஒவ்வொரு அதிரடி முடிவிற்கு பின், இப்படி ஒரு தாயுள்ளம் கொண்ட சிந்தனை இருந்திருக்கிறது.
அந்த அமைச்சர் வேறு யாருமில்லை, இப்போதைய சபாநாயகர் தனபால் தான்!
'பொம்மை' சினிமா இதழின் உதவி ஆசிரியர், ஏ.சுவாமிநாதன் எழுதிய, 'திரைக்குப் பின்னால்' நூலிலிருந்து:
விஜயா கார்டனில், ராமன் தேடிய சீதை படப்பிடிப்பு; எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் ஆடி, பாடும் காட்சி முடிந்ததும், பேட்டி காண சென்ற என்னை, உடன் வர சொன்னார், எம்.ஜி.ஆர்., ஒரு மரத்தடியில், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவுடன், நானும், அமர்ந்தேன்.
'பேட்டியை அப்புறம் வைத்துக் கொள்வோம்...' என்று கூறி, சில பொது விஷயங்களை பற்றி பேசிய எம்.ஜி.ஆர்., 'சினிமாவில் மட்டுமல்ல, அரசியலிலும் பல மாறுதல்கள் வரும்; இப்போது சொல்கிறேன், குறித்து கொள்ளுங்கள்... அம்மு (ஜெயலலிதா) இன்று, 'டாப்' ஸ்டார்; வருங்காலத்தில், அரசியலில் ஈடுபட்டு, அதிலும், 'டாப்' ஆக வருவார்...' என்றார்.
உடனே, 'க்ளுக்'கென்று சிரித்த ஜெயலலிதா, என்னை பார்த்து, 'சார்... நான் சினிமாவை விட்டால், நாட்டியம், நாடகத்துறையைத் தான் தேர்ந்தெடுப்பேன். நானாவது, அரசியலுக்கு வருவதாவது...' என்றார்.
'நீ, கட்டாயம் அரசியலுக்கு வந்து, புரட்சி செய்யத் தான் போறே...' என்றார் எம்.ஜி.ஆர்.,
நடுத்தெரு நாராயணன்
