PUBLISHED ON : டிச 18, 2016

பனிக்காலத்தில், உடம்பில் இருக்கும் சூடு, வெளியேறாமல் உள்ளேயே தங்கி விடும். அதனால், உடம்பு, 'கண கண'வென்று இருப்பதுடன், அதிகமாக பசிக்கும். அதனால், பசியை தூண்டும் காரம், உப்பு மற்றும் புளி போன்றவற்றை உணவில் குறைக்க வேண்டும். உடல் கதகதப்புக்கு, இம்மூன்று சுவைகளை தான், நாக்கு தேடும். இதைத் தவிர்த்து, இனிப்பு பொருட்களை உட்கொள்வதன் மூலம், பசி மட்டுப்படும்.
* பனிக்காலத்தில், பாதங்களில் வெடிப்பு ஏற்படுவதை தடுக்க, தேங்காய் எண்ணெயும், உதட்டு வெடிப்புக்கு வெண்ணெய் பூசுவதும் நல்லது.
* பனிக்காலத்தில் குழந்தைகளுக்கு மூச்சிரைப்பு ஏற்படும். இதற்கு, வேப்பெண்ணெயை சூடுபடுத்தி மார்பு, தோள் பட்டை, முதுகு பகுதியில் தடவி, கொள்ளு பயரை, பொடி செய்து, ஒரு துணியில் எடுத்து, மெல்லிய சூட்டில், ஒத்தடம் கொடுக்கலாம். ஆனால், இதயம் இருக்கும் பகுதியை தவிர்த்து, முதுகு மற்றும் விலாப்பகுதியில் ஒத்தடம் கொடுக்கவும்.
* அதிகாலையில் எழுந்து, கோலம் போடவோ, பால் வாங்கவோ வெளியே வரும் போது, காதுகளை மறைத்து, 'மப்ளர்' கட்டியபின், வெளியே வருவது நல்லது.
* பனிக்காலத்தில், ஒருவித தசை இறுக்கம் ஏற்படும். இதைத் தவிர்க்க, சுடு தண்ணீரில் அவ்வப்போது வாய் கொப்பளிக்கலாம்.
* மிஸ்ட் மாலிக்யூல்ஸ் எனப்படும் பனித்துளிகள் காற்றில் கலந்திருக்கும். அது, மூக்கின் உள் சென்று, நம்மை படுத்தி எடுக்கும். அதைத் தவிர்க்க, மூக்கில், இரண்டு சொட்டு நல்லெண்ணெயை விட்டு, நன்றாக காறித் துப்புவதன் மூலம், உள்ளே தேங்கி இருக்கும் பனித்துளிகள் வாய் வழியாக, வெளியேறி விடும்.
* நுரையீரலில் படிந்த, பனி துகளை வெளியேற்ற, தண்ணீரில், நான்கு மிளகுடன், கைப்பிடியளவு கருந்துளசி போட்டு காய்ச்சி, வடிகட்டி வைத்து, அவ்வப்போது குடிக்கலாம்.
* குளிர் வாடையால், சிலருக்கு தலை பாரம் ஏற்படும். அதற்கு, வெற்றிலைச் சாறில், ஏலக்காய் - கிராம்பு சேர்த்து அரைத்து சூடு செய்து, நெற்றியில் பற்று போட்டால், தலைபாரம் விலகும். மேலும், பிடறிவலி மற்றும் கழுத்து வலிக்கு கூட, இந்த பற்று போடலாம்.
* வெண்ணெய் எடுத்த தயிரில், மஞ்சள் கலந்து, நல்லெண்ணெயில், ஓமம் தாளித்து ஊற்றி, சாப்பிடுங்கள். மஞ்சள் மற்றும் ஓமம் சீதளத்தை முறித்து விடும்.
* குளிர்காலத்தில், வீட்டில் சாம்பிராணி புகை போடுவது, மிகவும் நல்லது; இது, சிறந்த கிருமிநாசினி.
* குளிர்காலத்தில், துணிகள் சரியாக காயாது; அப்படியே, மடித்து வைத்தால், வாடை வரும். இதைத் தவிர்க்க, வேப்பிலை, புங்க மரத்து இலையை, பீரோவில் போட்டு வைக்கலாம்.
* கறிவேப்பிலை, முருங்கை இலை, புதினா, கொத்துமல்லி, மிளகு, சீரகம் மற்றும் இஞ்சி போன்றவை, ஜீரண தன்மைக்கு ஏற்றவை.
* குளிர்காலத்தில், குறைந்தபட்சம் கால் மணி நேரமாவது வெயிலில் அமர்வதுடன், சூடான உணவு சாப்பிட வேண்டும். மேலும், ஸ்வெட்டர் அல்லது சால்வை அணிந்து, உடம்பை கதகதப்பாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பனிக்காலத்தில், உடம்பை சீராக்க, நீராவிக் குளியல் நல்லது. நொச்சி, மஞ்சள், வேப்பிலை, திருநீற்றுப்பச்சிலை, கற்பூரவல்லி மற்றும் யூக்கலிப்டஸ் இதில் ஏதாவது ஒன்றை போட்டு, ஆவி பிடிக்கலாம்.
* குளிர் காலத்தில், நிலவேம்பு கஷாயம் குடிப்பது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும்.
* ஆரஞ்சு, மஞ்சள், சிவப்பு நிற உடைகள் உடலுக்கு உஷ்ணத்தை தரும்.
பருவ மாற்றங்கள் எல்லாம் நம் உடலை உரமேற்றுவதற்காக இயற்கை செய்யும் சமன். இயற்கையோடு இணைந்து வாழப் பழகிவிட்டால், உடலை உறுதியாக வைத்து, எல்லா காலத்திலும் நன்றாக இருக்கலாம்.
