PUBLISHED ON : டிச 18, 2016

அ நிறம் | அளவு
பூமிப் பந்தை கிழித்தெறி!
உனக்கான கதவுகள்
தட்டினால் திறக்காதெனில்
உடைத்து திற!
உனக்கான உரிமைகள்
கேட்டால் கிடைக்காதெனில்
தட்டிப் பறி!
உனக்கான பாதைகள்
மூடப்படுமெனில்
புதிய பாதை உருவாக்கு!
உனக்கான உணவுகள்
பறிக்கப்படுமெனில்
பறித்தவனை பட்டினி போடு!
உனக்கான கனவுகள்
கலைக்கப்படுமெனில்
கலைத்தவனை உறங்க விடாதே!
உனக்கான உறவுகள்
துன்பப்படுமெனில்
உன் உதிரத்தை உணவாக்கு!
உனக்கான லட்சியம்
நிராகரிக்கப்படுமெனில்
வியர்வையால் விலை பேசு!
உனக்கான மொழி
முடக்கப்படுமெனில்
உலகே எதிர்த்தாலும்
உயிர்பெற செய்!
உனக்கான மேடைகள்
மறுக்கப்படுமெனில்
நிலவை மேடையாக்கு!
உனக்கான தேசம்
அடிமைப்படுமெனில்
பூமிப்பந்தை கிழித்தெறி!
மொத்த பூமியும்
வெள்ளைக்கொடி ஏந்தும் போது
நீயதை ஏற்று - உன்
சமாதானக் கொடியை ஏற்று!
- நீ. தமிழ் அமுதன், சென்னை.
