தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/முழுமையாய் நம்புங்கள்!

முழுமையாய் நம்புங்கள்!

முழுமையாய் நம்புங்கள்!


PUBLISHED ON : டிச 18, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 18, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

டிச.,24 மானக்கஞ்சாறர் குருபூஜை

நம்மில் பலர், சில சோதனைகளை சந்திக்கும் போது, 'கடவுள் இருக்கிறாரா இல்லையா... இருந்தால், நம் கோரிக்கையை ஏன் ஏற்க மறுக்கிறார்...' என்று, புலம்புவர். 'கடவுள் இருக்கிறார்; அவர், நமக்கு சோதனைகளைத் தந்தாலும், கடைசியில், நல்லதையே செய்வார்...' என்று, அவரை ஆழமாக நம்புவோர் குறைவு.

இறைவனை முழுமையாக நம்பியதன் மூலம், அவரது திருக்காட்சியைக் கண்டவர், மானக்கஞ்சாறர்.

சோழநாட்டில், கஞ்சாறு என்ற ஊரில், மானகாந்தன்- என்பவர் வசித்து வந்தார். இவரது மனைவி கல்யாண சுந்தரி. சிவபக்தர்களான இவர்களுக்கு நீண்ட காலமாக குழந்தை இல்லை. அதனால், தாங்கள் வணங்கும் சிவன் மீது நம்பிக்கை வைத்து, குழந்தை வரம் வேண்டினர். இறைவனும் அவர்களது வேண்டுதலுக்கு செவி சாய்க்க, கல்யாண சுந்தரிக்கு பெண் குழந்தை பிறந்தது.

அக்குழந்தை வளர்ந்து பெரியவள் ஆனாள். அவளுக்கு மாப்பிள்ளை தேடிய பெற்றோர், கலிக்காமர் என்பவரை மணமகனாக தேர்ந்தெடுத்தனர்.

திருமணத்துக்கு முதல் நாள் மானகாந்தன் வீட்டுக்கு, சிவனடியார் ஒருவர் வந்தார். அவரை வரவேற்று உபசரித்த மானகாந்தன் தம்பதியினர், தங்கள் மகளின் திருமணத்தை ஒட்டி, அவர் தங்கள் இல்லத்திற்கு வந்தது, தாங்கள் பெற்ற பேறு என்று கூறி மகிழ்ந்தனர்.

மானகாந்தனின் மகள், சிவனடியாரின் பாதங்களில் விழுந்து, தன் மணவாழ்க்கை சிறப்பாக அமைய வாழ்த்தும்படி வேண்டினாள். அப்போது அவரது பார்வை, அவளது நீண்ட கூந்தல் மீது செல்ல, 'ஆகா... எவ்வளவு நீளமான கூந்தல்; இது மட்டும் என்னிடம் இருந்தால், இந்த முடியைத் திரித்து, என் மார்பில் பஞ்சவடியாக (முடியில் செய்து மார்பில் அணியும் ஒரு வகை பூணுால்) அணிந்து கொள்வேனே...' என்றார்.

இது, மானகாந்தன் காதுகளில் விழ, 'ஐயனே... இவளது கூந்தல் தானே உங்களுக்கு வேண்டும்... சற்று பொறுங்கள்...' என்று கூறி, வாளை எடுத்து வந்து, மகளின் ஜடையை இழுத்து, அறுக்கப் போனார். உடனே, வாள் மறைந்தது; அந்த அடியவர், சிவனாக மாறி, மானகாந்தன் முன் நின்றார். திருமணத்துக்கு வந்த எல்லாருக்கும், அந்த அருட்காட்சி கிடைத்தது.

'மானகாந்தனே... உன் சிவபக்தியை உலகத்தார் அறியும் பொருட்டே, இத்தகைய சோதனையை உனக்கு தந்தேன். நீ நாயன்மார்களில் ஒருவனாவாய். உன் மகளுக்கு, இதையும் விட அழகான கூந்தல் கிடைக்கும்...' என்று வாழ்த்தினார். அன்றிலிருந்து மானகாந்தன், 'மானக்கஞ்சாற நாயனார்' என்று அழைக்கப்பட்டார்.

இதையறிந்த மணமகன் கலிக்காமர், இறையருள் பெற்றவள், தனக்கு மனைவியாகப் போவது பற்றி மகிழ்ந்தார். அவர்களுக்கு, சிவன் முன்னிலையில் இனிதே திருமணம் நடந்தது.

பக்தி என்பது அரைகுறையாகவோ, சுயநலம் கருதியோ இருக்கக் கூடாது. முழுமையாக கடவுளை நம்பினால், மானக்கஞ்சாறரைப் போல இறைக்காட்சி நேரிலேயே கிடைக்கும்.

இவரது குருபூஜை மார்கழி மாத சுவாதி நட்சத்திரத்தன்று நடைபெறும்.

தி.செல்லப்பா

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us