தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!


PUBLISHED ON : டிச 18, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 18, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அன்பு சகோதரிக்கு --

நான், ஓய்வு பெற்ற அரசு அலுவலர்; அடிக்கடி பணி சம்பந்தமாக வெளியூர் செல்வேன். எனக்கு திருமணமாகி, மகன் மற்றும் மகள்கள் இருக்கின்றனர். அவர்களுக்கும் திருமணமாகி, வெவ்வேறு ஊர்களில் வசிக்கின்றனர்.

பல ஆண்டுகளுக்கு முன், என் மனைவியின் நடத்தையில், சந்தேகம் ஏற்படும்படியாக, சில நிகழ்வுகள் நடந்தன. அது, என் மன அமைதியை, சீர்குலைக்க, சபல புத்தியை, கைவிடுமாறு அமைதியான முறையில் எடுத்துக் கூறினேன். ஆனால், அவளோ குழந்தைகள் முன், ஆர்ப்பாட்டம் செய்ய ஆரம்பித்தாள்; அதனால், நான் அமைதியானேன். ஆனாலும், அவள் திருந்துவதாக இல்லை.

என் வாழ்க்கையில், முதன் முதலில் ஸ்பரிசித்த பெண் என்பதாலோ என்னவோ, என்னால் அவளை வெறுக்கவோ, ஒதுக்கவோ முடியவில்லை. வேதனையை மனதில் அடக்கி, வெளியே சிரித்து வாழ்கிறேன்.

இப்போதும், அவளது மனநிலையில் எவ்வித மாற்றமும் இல்லை. பிற ஆண்களிடம், தொடர்பு வைக்க ஆசைப்படுவதுடன், அதற்கான, சந்தர்ப்பங்களையும் ஏற்படுத்தி கொள்கிறாள்.

குடும்ப கவுரவம் கருதி, அமைதி காக்கிறேன். சில சமயம், யாரிடமும் கூறாமல், கண் காணாத இடத்திற்கு போய் விடலாமா என்று எண்ணுவதுண்டு.

மன உளைச்சலால், நல்ல தூக்கம் என்பதே மறந்து போயிற்று. தங்களது ஆறுதலான அறிவுரைகள், எனக்கு தெம்பளிக்கும் என்ற நம்பிக்கையால், தங்களிடம் முறையிடுகிறேன்.

-- இப்படிக்கு,

உங்கள் அன்பு சகோதரன்.


அன்பு சகோதரருக்கு --

உங்களுக்கு, 60க்கு மேலும், மனைவிக்கு, 55 வயதுக்கு மேலும் இருக்கக்கூடும். திருமணமாகி, குறைந்தபட்சம், 33 - 35 ஆண்டுகளாவது ஆகியிருக்கலாம்.

மனைவியின் நடத்தையை ஒரு ஆண் அவதானிக்க, முதல் ஆறு மாதங்கள் போதும். ஆனால், நீங்களோ ஒரு விஷ விதை, விருட்சமாகும் வரை, வேடிக்கை பார்த்துள்ளீர்கள்.

நீங்கள் அலுவலக பணியாக, அடிக்கடி வெளியூர் சென்றதன் காரணமாக ஏற்பட்ட தனிமை, உங்கள் மனைவியை தவறு செய்ய தூண்டியிருக்கலாம். பொதுவாக, 35 - 40 வயதுக்குட்ட சொற்ப சதவீத பெண்களே, திருமண பந்தம் தாண்டிய உறவில் ஈடுபடுகின்றனர். ஆனால், 55 வயதிலும் உங்கள் மனைவி தவறு செய்கிறாள் என்று குற்றம் சாட்டுகிறீர்கள். இது உண்மையா அல்லது பழைய தவறுகளை, அசை போடுகிறீர்களா என்பது உங்களுக்குத் தான் தெரியும்.

திருமண பந்தம் மீறிய உங்கள் மனைவியின் உறவுகளை காரணம் காட்டி, குடும்ப நீதிமன்றம் மூலம், விவாகரத்து பெற்று, மகன் மற்றும் மகள்கள், யார் உங்களை ஆதரிக்கின்றனரோ, அவர்களுடன் உறவு பாராட்டுங்கள்.

* நீங்கள் இருவரும் ஒரே வீட்டில் வசித்தாலும், பேச்சு வார்த்தை இல்லாமல், தனித்தனி சமையல் என்று, மனைவி ஸ்தானத்தை, மானசீகமாக உதாசீனப்படுத்துங்கள்.

* உங்கள் மனைவியின் தவறுகளுடன், உங்கள் தவறுகளையும் ஒப்பிடுங்கள். தவறு உங்கள் மீது என்றால், அவளை மன்னியுங்கள். தண்டித்தல் மனித குணம்; மன்னித்தல் இறை குணம்.

* மனைவியை விவாகரத்து செய்து, மறுமணம் செய்யும் ஆசையும், உடல் தகுதியும் இருந்தால், கணவனை இழந்த பெண்ணை, மறுமணம் செய்யுங்கள்.

* தவறு செய்த மனைவியும் வேண்டாம்; மகன், மகள்களும் வேண்டாம் என்றால், பேசாமல் சன்னியாசம் மேற்கொள்ளுங்கள் அல்லது பணம் கட்டி தங்கும், முதியோர் இல்லத்திற்கு சென்று விடுங்கள்; அங்கிருக்கும் பலதரப்பட்ட முதியோர், உங்களுக்கு வடிகாலாய் அமைவர்.

-- என்றென்றும் தாய்மையுடன்

சகுந்தலா கோபிநாத்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us