PUBLISHED ON : பிப் 20, 2011

கதவுக்கு பூட்டு இல்லாத வங்கி பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? எங்கோ, வெளிநாட்டில் அல்ல, இந்தியாவில் தான் அந்த வங்கி உள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் அகமத் நகர் மாவட்டத்தில், ஷனி ஷின்க்நாபூர் என்ற சிறிய கிராமம் உள்ளது. இந்த ஊரில் உள்ள பிரபலமான கோவிலில் முக்கிய தெய்வம் ஷனி. தினமும், இந்த கோவிலுக்கு ஐந்தாயிரம் பக்தர்கள் வருகின்றனர். சனி, ஞாயிற்று கிழமைகளில் ஒரு லட்சம் பேர் வரை வருவர். இந்த ஊரில் உள்ள எந்த வீட்டிற்கும் கதவே கிடையாது. பல ஆண்டுகளாக இந்த ஊரில் திருட்டு உட்பட எந்த குற்றமும் நடந்ததே கிடையாது. 'மிகவும் சக்தி வாய்ந்த காக்கும் தெய்வம் ஷனி, இந்த ஊரை பாதுகாக்கிறது...' என, நம்புகின்றனர் இந்த ஊர் மக்கள். மக்களின் நம்பிக்கையை மீறி எதுவும் செய்யக் கூடாது என்பதற்காக, இந்த ஊரில் சமீபத்தில் திறக்கப்பட்ட யுகோ வங்கி கிளைக்கு பூட்டு கிடையாது. 'இந்தியாவில் உள்ள எல்லா வங்கி கிளைகளுக்கும், அதிநவீன பாதுகாப்பு சாதனங்கள் தேவை...' என, மத்திய அரசு வற்புறுத்தி வரும் சூழ்நிலையில், பூட்டே இல்லாத இந்த வங்கி, எல்லாரையும் ஆச்சரியப்பட வைக்கிறது.— ஜோல்னா பையன்.

