sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 15, 2025 ,புரட்டாசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

வாழையடி வாழை!

/

வாழையடி வாழை!

வாழையடி வாழை!

வாழையடி வாழை!


PUBLISHED ON : ஜூன் 16, 2013

Google News

PUBLISHED ON : ஜூன் 16, 2013


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சுள்ளென்ற வெயிலுமில்லாமல், மேக மூட்டமுமில்லாமல் ஊமை வெயிலாய் இருந்த வானிலை, சற்று அசவுகரியமாக இருந்தது. தன் மனதைப் போலவே வானமும், வெகுவாக குழம்பிக் கிடப்பதாய் தோன்றியது சங்கரனுக்கு.

''அம்மா... நான் கொஞ்சம் வெளியே போயிட்டு வர்றேம்மா,'' என்ற பிரியாவின் குரலும், ''இந்த வெயில்ல எங்கேடி?'' என்ற கவுரியின் குரலும் கேட்க, திரும்பிப் பார்த்தார் சங்கரன்.

அறையிலிருந்து, அழகு தேவதையாய் வெளிப்பட்டாள் பிரியா. மெரூன் நிற சுடிதாரில், அவளுடைய கோதுமை நிறம் இன்னும் பிரகாசமாகத் தெரிந்தது. அடர்த்தியான, நீளமான ஒற்றைப் பின்னல், கழுத்தில் மெல்லிய தங்கச் செயின், நெற்றியில் சிறிய மெரூன் கலர் பொட்டு, கையில் பிளாக் ஸ்ட்ராப் வாட்ச், ஆர்ப்பாட்டமில்லாத எளிமையான அழகு, இப்படியொரு அழகான, அடக்கமான பெண்ணை மருமகளாக்கிக் கொள்ள யாருக்குத்தான் ஆசை வராது.

அதிலும், லட்சுமி அக்காவுக்கு அந்த உரிமை ரொம்பவே அதிகம். அதனால் தானே அன்று, அந்தப் பேச்சு பேசினாள்...'உனக்கு மட்டுமில்லை, உன் பொண்ணுக்கும், இந்தக் கல்யாணத்தில் இஷ்டமில்லைன்னாலும் சரி, என் பையனை விட்டுத் தூக்கிகிட்டு போய் தாலி கட்ட வைப்பேன்டா...' ஆவேசமான அந்த பேச்சின் அடிப்படையில், அன்பு இழையோடுவதை நன்கு உணர்ந்தவர் தான் சங்கரன்.

பிரகாஷ்... லட்சுமி அக்காவின் ஒரே பையன். தங்கமான பிள்ளை, நல்ல படிப்பு, நல்ல வேலை. பிரியாவுக்கு எல்லாவிதத்திலும் பொருத்தமானவன். அடுத்தடுத்த தெருக்களில், இருவரது வீடுகளும் இருந்ததால், குழந்தையிலிருந்தே இருவரும் நெருங்கிய நட்பு கொண்டிருந்தனர்.

ஆனால், எக்காரணம் கொண்டும் பிரியாவை, பிரகாஷுக்கு திருமணம் செய்து கொடுக்க, அவர் மனம் துணியவில்லை. அதற்கு காரணம் இருந்தது.

''அப்பா... எனக்கு செலவுக்குப் பணம் வேணும்ப்பா,'' அருகில் நின்ற செல்ல மகளை, 'எதற்கு' என்பது போல் ஏறிட்டுப் பார்த்தார்.

''நம்ம பிரகாஷ் கல்யாணத்துக்கு, நல்லதா ஒரு பரிசு பொருள் வாங்கறதுக்குப்பா,'' என்றவளை ஆச்சரியமாகப் பார்த்தார்.

''கூல்ப்பா... ரிலாக்ஸ்! லட்சுமி அத்தை கூப்பிடலைன்னாலும், நாம அவன் கல்யாணத்துக்குப் போவம்ன்னு எனக்குத் தெரியும். அதான் முன்கூட்டியே ஏதாவது வாங்கி வச்சுக்கலாமேன்னு.''

''புத்திசாலிம்மா நீ, என் மனசை நல்லாப் புரிஞ்சு வச்சிருக்கே. அது நம்ம வீட்டுக் கல்யாணம்மா, அக்கா என்ன என்னைக் கூப்பிடறது? ஆனால், மண்டபத்துல ஏதாவது ரசாபாசமாகி விடக்கூடாதேன்னு தான் பயமாக இருக்கு,'' என்றவர், எழுந்து பீரோவிலிருந்து பணத்தை எடுத்து, கொடுத்தனுப்பினார்.

கண்கள் தானாக பீரோவின் உள்பக்கம் ஒட்டப்பட்டிருந்த சிறிய போட்டோவில் பதிந்தது. பாவாடை சட்டையில், இரட்டைப் பின்னலு டன் லட்சுமியக்காவும், பக்கத்தில் டிராயர் சட்டை அணிந்து, குட்டியாக அதே போன்ற இரட்டைப் பின்னலுடன், தானும் நிற்கும் போட்டோவைப் பார்த்து சிரித்து கொண்டார் சங்கரன்.

விவரம் புரியாத வயதில், அக்காவைப் போலவே பின்னல் வேண்டும் என்று, முடிவெட்டிக் கொள்ள அழுது ஆர்ப்பாட்டம் செய்ததின் விளைவு. பின்பு, பள்ளியில் நண்பர்களின் கேலிக்கு ஆளாகி, முடிவெட்டிக் கொண்டவுடன், இரண்டு நாட்கள் வரை அழுது கொண்டே இருந்ததாகவும், அதைத் தாங்க முடியாத லட்சுமிக்கா, தன் முடியை அந்தக் காலத்திலேயே, 'பாய்கட்' செய்து கொண்டதாகவும், அப்பா சொல்லியிருக்கிறார்.

லட்சுமி உடன் பிறந்தவள் என்பதை விட, சங்கரனை வயிற்றில் சுமக்காத தாய் என்பதே சரி. சங்கரனுக்கு நான்கு வயதாக இருக்கும் போதே, பெற்றவள் இறந்துவிட, லட்சுமி தாயாக உருமாறினாள். அவளுக்குத் திருமணம் முடித்த சில மாதங்களில் கடமை முடிந்துவிட்டதாக நினைத்தோ என்னவோ, அப்பாவும் இறந்துவிட, லட்சுமி தந்தையுமானாள்.

லட்சுமியக்காவின் கணவர் சுந்தரேசனும், நீண்ட ஆண்டுகள் குழந்தையில்லாததால், சங்கரனை மகன் போலவே அன்பு காட்டி வளர்த்து படிக்க வைத்தார். பிரகாஷ் பிறந்த பின்னும், மூத்த மகன் போலவே சங்கரனைப் பார்த்து கொண்டனர். நல்ல பெண்ணாக கவுரியைப் பார்த்து திருமணமும் செய்து வைத்தனர்.

பிரியாவுடைய கல்யாணப் பேச்சை எடுக்கும் வரை, அக்கா பேச்சுக்கு மறுபேச்சில்லாமல் தான் வாழ்ந்து வந்தார். மூன்று மாதங்களுக்கு முன் தான், அந்தப் பூகம்பம் வெடித்தது. அக்காவின் குரல் காதில் எதிரொலித்துக் கொண்டே இருந்தது இப்போதும்.

அன்று அக்காவும், மாமாவும் சேர்ந்து வீட்டுக்கு வந்திருந்தது ஆச்சரியமாக இருந்தது. ஏதாவது முக்கியமான பூஜை விசேஷம் என்றால் தான் மாமா இங்கு வருவார். மற்றபடி சங்கரனும், லட்சுமியும் தான் இரு வீட்டுக்குமாக அல்லாடி கொண்டிருப்பர்.

'வாங்க மாமா... வாக்கா உட்காருங்க...' உற்சாகமாக வரவேற்றார். ''என்ன விஷயம் மாமா? ஒரு போன் செய்திருந்தா நானே வந்திருப்பேனே...' என்ற சங்கரன், அப்போது தான் அக்காவின் கையிலிருந்த கூடையைப் பார்த்தார். நிறைய மல்லிகைப் பூவும், பழங்களும் இருந்தன.

'ஏன்டா நான், இங்க வரக்கூடாதா என்ன...' என்ற மாமாவுக்கு பதில் சொல்லும் முன், கவுரி வந்து அவர்களை வரவேற்றாள்.

'ஆமாம்... பிரியா எங்கே காணோம்?' கேட்டுக் கொண்டே, தான் கொண்டுவந்திருந்த பழக்கூடையை கவுரியிடம் கொடுத்தாள் லட்சுமி.

'அவ மேற்கொண்டு எம்.எட்., படிக்கிறதுக்காக, அப்ளிகேஷன் கொடுக்க கல்லூரிக்கு போயிருக்கா அக்கா.'

'சரியா போச்சு போ... நான் அவளுக்கும், பிரகாஷுக்கும் சீக்கிரம் கல்யாணம் செய்து பார்க்கணும்னு நினைச்சா... அவ மேலே படிக்கப் போறாளாமா? அப்படின்னா சரி, என் மருமகளா வந்ததுக்கப்புறம் எவ்வளவு வேணாலும் படிக்கட்டும். குழந்தை ஆசைப்பட்டா, நான் வேண்டாம்ன்னா சொல்லப் போறேன்.' லட்சுமியக்கா மிகச் சாதரணமாக, உரிமையாக, சந்தோஷமாக சொல்லிக் கொண்டே போக, இடி விழுந்தது போல் அதிர்ந்து போனார் சங்கரன்.

அக்காவின் மனதில், இப்படியோர் ஆசை இருப்பதாக, கவுரி ஒரு முறை சொன்ன போது, அதை அவர் நம்பவில்லை. 'அக்கா விளையாட்டுக்காகப் பேசுறதை வச்சு, நீயா எதுவும் கற்பனை செய்து லூசு மாதிரி பேசாதே...' என்று மனைவியை கடிந்து கொண்டார். இருந்த கொஞ்ச நஞ்ச சந்தேகத்தையும் பிரியாவிடம் பேசித் தீர்த்துக் கொண்டார்.

'என்னப்பா நீங்க... நானும், பிரகாஷும் சின்ன வயசுலேர்ந்து ஒண்ணா விளையாடி சாப்பிட்டு, தூங்கிட்டு அண்ணன், தங்கை மாதிரி பழகிட்டு வர்றோம். எங்களைப் போய்... அப்படியே ஏதாவது இருந்தாலும், உங்ககிட்டே சொல்லியிருப்பனே... பிரகாஷ் இதைக் கேட்டால் பயங்கரமாக சிரிப்பான்...' என்ற வார்த்தைகளால், அவர் வயிற்றில் பால் வார்த்தாள் பிரியா.

ஆனால், இப்போது அக்காவின் பேச்சு அமிலமாக இருந்தது.

என்ன பதில் சொல்வது என்பதில், அவர் தெளிவாக இருந்தாலும், அதை எப்படிச் சொல்வது என்று புரியாமல் தவித்தார்.

கவுரி எல்லாருக்கும் காபி கொண்டு வந்து கொடுத்தாள்.

' என்னடா சங்கரா... எவ்வளவு நல்ல சமாச்சாரம் சொல்லியிருக்கேன், பேச்சே இல்லை? பிரியா கிட்ட சம்மதம் கேட்கணுமோ?' காபியைக் குடித்துக் கொண்டே லட்சுமி கேட்க, லேசாகத் தொண்டையைச் செருமிக் கொண்டார் சங்கரன். தயக்கத்துடன், அதே சமயம் ஒரு முடிவுடன் நேராக விஷயத்துக்கு வந்தார்.

'பிரியா கிட்ட ஏற்கனவே பேசிட்டேன் அக்கா. அவள் சொந்தத்துல வேண்டாங்கிறா.'

'அவள் சொன்னாளா, இல்லை உன் பொண்டாட்டி சொன்னாளா?'

''ஐயோ அக்கா...' பதறிப்போய் குறுக்கிட்ட கவுரியைக் கையமர்த்தினார் சங்கரன்.

'இல்லக்கா... இது என்னோட முடிவு தான்...' முதல் முறையாய் தன்னை மறுதலித்துப் பேசும் தம்பியை அதிர்ச்சியுடனும், ஆச்சரியத்துடனும் பார்ததாள் லட்சுமி.

'பிரகாஷுக்கு வேற ஒரு நல்ல பெண்ணாகப் பார்த்து...' அவர் முடிப்பதற்குள், லட்சுமி கத்தினாள்.

''போதும் நிறுத்துடா... கையில் வெண்ணையை வைத்துக் கொண்டு நெய்க்கு அலையணுமா? உங்களுக்கு சொந்தத்துல வேண்டாமா... இல்லை சொந்தமே வேண்டாமா? பிரகாஷ் கூட, இதையே தான் சொல்றான். அவங்க குழந்தைங்கடா... நாமதான் எடுத்துச் சொல்லி புரிய வைக்கணும். அவனுக்கு நல்ல பெண்ணாகப் பார்ப்பது கிடக்கட்டும். உன் பொண்ணுக்கு பிரகாஷை விட, ஒரு நல்ல பையன் கிடைப்பானா? ரெண்டு பேருக்கும் நடுவில் நல்ல புரிதல் இருக்குடா. கல்யாணம் செய்து வைத்தால், அவர்கள் வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும்.'

'நாசமாப்போகும்' என்றார் ஆங்காரமாக. பார்வை எங்கோ சுவரில் நிலைகுத்தியிருக்க, 'என்னங்க இது' என்ற கவுரியின் உலுக்கலில் நிதானத்துக்கு வந்த சங்கரன் தீர்க்கமாக அக்காவைப் பார்த்தார்.

'அவர்கள் இரண்டு பேரும் நல்லா புரிஞ்சிகிட்டுயிருக்கிறது உண்மை தான். ஆனால், அதை நீ தப்பாப் புரிஞ்சிக்கிட்டிருக்கே. போகட்டும் நாலு வருஷம் முன்பு, என்னோட பால்ய நண்பன் கோபால் குடும்பத்தை டில்லியில் சந்திச்சதா அடிக்கடி உன்னிடம் சொல்லியிருக்கேனே, மறந்திட்டியாக்கா? அவன் பையன் ஷியாம், நம்ம பிரியா வயதுதான். அவனுக்கு, 'ஹீமோபீலியா' என்ற ரத்தத்துல ப்ளட்லெஸ் குறைபாடு நோய்... உடம்புல எங்கேயாவது அடிபட்டா... லேசான கீறல் ஏற்பட்டாலும் ரத்தம் நிற்காமல் வரும், உறையாது. அவனோட பிறந்த நாள் கொண்டாட்டத்துல, அந்தக் கொடுமையை நானே நேரில் பார்த்து துடிச்சுப் போயிட்டேன்.

'பாம்பு கடிக்கு கட்டுற மாதிரி, துணியைக் காயத்துக்கு மேலே இறுக்கக் கட்டி, அவனை அப்படியே அள்ளிப்போட்டுகிட்டு மருத்துமனைக்கு ஓடினான் கோபால். ஒரு கண்ணாடிப் பொருள் மாதிரி, அவனை பார்த்துக்கணுமாம். பெத்தவங்களுக்கு எப்படி இருக்கும். யோசிச்சுப் பார். சொந்த அக்கா பெண்ணையே கல்யாணம் செய்து கொண்டது தான் காரணம் என்று மனம் நொந்து சொன்னான் கோபால். அப்போது நான் எடுத்த முடிவுக்கா இது.' சொல்லிக் கொண்டிருந்த சங்கரனின் கண்கள் கலங்கியிருந்தன.

'அது மட்டுமல்ல போன வாரம் வந்த பத்திரிகைச் செய்தி, அந்த முடிவை இன்னும் உறுதியாகிவிட்டது.'

'பேப்பர்ல தினமும் ஆயிரம் போடுவான்டா...' என்று ஆரம்பித்த அக்காவை இடைமறித்தார் அவர்.

'அக்கா, ப்ளீஸ்... நான் சொல்றதைக் கொஞ்சம் முழுசாக் கேளேன். தர்மபுரியிலுள்ள சித்தேரிங்கிற கிராமத்துல, காலங்காலமாக நெருங்கிய உறவுகளுக்குள்ளேயே கல்யாணம் செஞ்சுகிட்டதால, அங்குள்ள பல குழந்தைகளுக்கு, 'தாலசீமியா' என்ற ரத்தக் குறைபாடு நோய் தாக்கியிருக்காம்.

'கொடூரமான இந்த உயிர்கொல்லி நோயால... தீவிர ரத்த சோகை ஏற்பட்டு தலையும், வயிறும் பெருத்து, கை, கால்கள் சூம்பிப்போய், சொல்ல முடியாத சோகத்தில் தவிக்கிறார்களாம் அந்தக் குழந்தைகள். இந்தியாவில் இன்னும் மருந்தே கண்டுபிடிக்காத இந்த நோய்க்கு, மாசம் ஒரு முறை ரத்தத்தை மாத்தலைன்னா உயிருக்கே ஆபத்தாம்.

'இந்தக் கொடிய நோயைக் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தவும், ரத்த உறவுத் திருமணங்களை தவிர்க்கவும், அரசே பிரசாரம் செய்யணும்ன்னு, அந்த ஊர் பிரமுகர் கோரிக்கை வச்சிருக்கார். பெண் சிசுக்கொலை, எய்ட்ஸ், போலியோவுக்கெல்லாம், அரசு முயற்சிகள் எடுத்ததுபோல், இந்த நோய்க்கும் முயற்சிகள் எடுத்து கட்டுப்படுத்தணும் என்று வேண்டுகோளும் விடுத்திருக்கிறார்.

'அப்படியிருக்கும் போது, விவரம் தெரிஞ்ச நாமே, அந்தத் தப்பைப் செய்யலாமா? நம்ம பாதுகாப்புக்காகப் போடற ஹெல்மெட்டைக் கூட அரசு சட்டம் போட்டாத்தான் கேட்கறோம். நம்ம உயிர் நமக்குப் பெரிசில்லையாக்கா?'' கண்களிலிருந்து வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டார் சங்கரன். ஆறிப்போய் ஏடுகட்டியிருந்த காபியை எடுத்து அப்படியே வாயில் ஊற்றிக் கொண்டார்.

சிறிது நேரம், அங்கு கனத்த மவுனம் நிலவியது. அவர் சொன்ன செய்தி எல்லாரிடமும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியிருந்ததை உணர முடிந்தது. மாமா அந்த மவுனத்தை கலைத்தார்.

'சிகரெட்டும், குடியும் உடல் நலத்துக்கு கேடுன்னு எல்லாருக்கும் தெரியும். குடிக்கிறவங்க திருந்திட்டாங்களா என்ன? அரசும் விடாம சொல்லிகிட்டே மதுபானக் கடையை நடத்தறது. பஸ், ரயிலில் போனால் விபத்து ஆகிடுமேன்னு யாரும் போகமா இருக்கோமா என்ன? அவரவர் விதிப்படி, பாவ புண்ணியத்தைப் பொறுத்துத்தான் எல்லாம் நடக்கும். நமக்கு எதுவும் ஆகாது... நாமெல்லாம் நல்லவங்கடா.'

'அப்படி நினைச்சு ஏமாந்துடக் கூடாது மாமா. நல்லவன், கெட்டவன், ஏழை, பணக்காரன், குழந்தை, வயதானவர்ன்னு நோய்க்கு எந்த பேதமும் கிடையாது. எதுவும், எப்போது வேண்டுமானாலும், யாருக்கும் நடக்கலாம் என்பதுதான் நிஜம். ஆனாலும், சில பரம்பரை, மரபு வழி நோய்களை நாமே தேடிப் போக வேண்டாமே.'

'அப்படிப் பார்த்தால், என் தாத்தாவும், பாட்டியும் கூட நெருங்கின சொந்தம் தான். ஆனால், எங்கள் குடும்பத்துல எல்லாரும் நல்லாத்தானே இருக்கோம்...' என்று மாமா அலட்சியமாகச் சொன்னார். 'டேய் சங்கரா... எங்கேயோ நூத்துல, ஆயிரத்துல ஒண்ணு ரெண்டு நடக்கறது சகஜம் தான். அதையெல்லாம் போட்டுக் குழப்பிக்காமல் நல்ல முடிவாச் சொல்லு.'

'வருமுன் காப்பதே இல்லையா மாமா...'

'மாமாவுக்கே புத்தி சொல்ற அளவுக்குப் பெரிய ஆளாகிட்டியா நீ... உனக்கு இப்ப தெரியாதுடா அந்நியத்துல பொண்ணைக் கொடுத்திட்டு, நாளைக்கு ஒரு பிரச்னைன்னு, அவள் திரும்பி வரும் போது, கண்ணைக் கசக்கிட்டு நீயும், எங்கிருந்தோ வந்த மருமகள் சோறு போடாமல் வீட்டை விட்டு விரட்டிட்டாள்ன்னு நானும், நடுரோட்டில் சந்திச்சுப்போம் பாரு... அப்போ புரிஞ்சுப்பே இந்த அக்காவின் பேச்சை...' ஆத்திரமாகச் சொன்னாள் லட்சுமி.

'ஓ... இதுதானா உன் பிரச்னை... தன் எதிர்காலம் குறித்த பயம். இப்படித் தான் நிறைய பேர் சொந்தம் விட்டுப் போகக்கூடாது, சொத்துவிட்டுப் போகக்கூடாதுன்னு ஏதேதோ காரணங்கள் காட்டி, நெருங்கிய உறவுகளில் திருமணம் முடித்து, வாழ்க்கையைத் தொலைக்கின்றனர்...'

'நீ பயப்படற மாதிரியெல்லாம் எதுவும் ஆகாதுக்கா. அப்படியே இருந்தாலும், உனக்கு எப்பவும் நிழலாய் நானிருப்பேன் லட்சுமியக்கா...' என்றார் கனிவுடன்.

'இவனிடம் பேச இனி ஒண்ணுமில்லை. வாடி போகலாம்... தீட்டினவனையே கூர்ப்பார்க்கிறது கத்தி. பிள்ளையைப் பெற்ற நானே கவுரவம் பாக்காமல் வந்து கேட்டதுக்கு செருப்பால அடிச்சுட்டான் உன் தம்பி. இவன் பெண்ணை விட்டால், வேற பெண்ணா கிடைக்காது, கிளம்பு முதல்ல.'

சங்கரா என்று வாய் நிறைய அழைத்த மாமா, முதல் முறையாய், 'உன் தம்பி' என்று பிரித்துப் பேசுகிறார். மனது வலித்தது.

'டேய்... உனக்கு மட்டுமில்லை, உன் பெண்ணுக்கும் இந்தக் கல்யாணத்துல இஷ்டமில்லைன்னாலும் சரி... என் பையனை விட்டுத் தூக்கிட்டு போயாவது தாலி கட்ட வைப்பேன்டா...' என்று ஆவேசமாகச் சொல்லிவிட்டுப் போனாள் லட்சுமி.

நோய் விவரம் சொன்னவுடன், அவர்கள் சற்று அமைதியானாலும், நாம் கேட்டு இவன் மறுக்கிறானே என்ற கோபமும், ஆதங்கமுமே மேலோங்கி இருப்பதாகப்பட்டது. எல்லாம் கொஞ்ச நாளில் சரியாகி விடுமென்று தான் நினைத்தார்.

ஆனால்... எத்தனையோ சமாதானம், முயற்சிகளுக்குப் பின்னும் இன்று வரை கோபம் தீரவில்லை. பிரகாஷ் பிடிவாதமாக பிரியாவை மறுத்துவிட்டதால், வேறு இடத்தில் பெண் பார்த்து நிச்சயம் செய்து, இதோ... நாளை மறுநாள் கல்யாணம். ஊரையே அழைத்தவர்கள் உடன் பிறந்தவனை மட்டும் கூப்பிடவே இல்லை.

காலடி ஓசை கேட்டு கண் திறந்தவருக்கு இன்ப அதிர்ச்சி. ''கவுரி இங்கே வாயேன் யார் வந்திருக்கா பாரு...'' சந்தோஷக் கூச்சலிட்டார்.

எதிரே லட்சுமியக்காவும், மாமாவும் நின்றிருந்தனர். இருவரது கண்களும் கலங்கியிருந்தன.

''சங்கரா... எங்களை மன்னிச்சுடுடா. எவ்வளவு பெரிய தப்பு செய்யத் துடிச்சேன். சுயநலமா, என் எதிர்காலத்தை நினைச்சு பயந்தனே தவிர, நம் குழந்தைகளின் எதிர்காலத்தை அலட்சியமா அடகு வைக்கப் பார்த்தேனே. நீ சொன்னியே தர்மபுரியில், அந்தக் குழந்தையைப் பற்றி. அந்தக் கொடூரத்தை சோமாலியாவில் இருப்பது போல், பரிதாபமான குழந்தைகளை இப்பத்தாண்டா, 'டிவி'யில் பார்த்தேன். காதால கேட்டதை விட, கண்ணால பார்த்ததுல என் ஆவி மொத்தமும் அடங்கிடுச்சுடா. ஐயோ சாமி... வேண்டாம்டா, நூத்துல ஒண்ணா நம்ம குழந்தைகள் ஆகிவிடக்கூடாது,'' என்று கதறிய அக்காவை அணைத்துக் கொண்டார் சங்கரன்.

''ரெண்டுநாளில் கல்யாணம்... தாய் மாமாவா முன்னாடியே வந்து மீதி வேலைகளைப் பார்,'' என்று இருவரிடமும் பத்திரிகையைக் கொடுத்து, உரிமையுடன் சங்கரனின் தோளில் கைபோட்டு அணைத்துக் கொண்டார் சுந்தரேசன்.

பெரியதொரு பரிசுடன் உள்ளே நுழைந்த பிரியாவை கட்டியணைத்து முத்தமிட்டாள் லட்சுமி. ***

லதா சந்திரன்






      Dinamalar
      Follow us