
அக்டோபரில் விஸ்வரூபம் - 2!
கமல் இயக்கி நடித்து வரும், விஸ்வரூபம் - 2 படப்பிடிப்பு, இந்தியாவை தொடர்ந்து, தற்போது, தாய்லாந்தில் நடந்து வருகிறது. அங்குள்ள மலைப்பிரதேசங்களில், 'செட்' போட்டு படமாக்கி வரும் கமல், படப்பிடிப்பு ஒரு பக்கம் நடந்தாலும், இன்னொரு பக்கம் எடிட்டிங், டப்பிங் உள்ளிட்ட பணிகளையும், முடுக்கி விட்டுள்ளார். அதனால், அடுத்த ஆண்டு தான் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட, விஸ்வரூபம் - 2 இந்த ஆண்டு அக்டோபரில், கண்டிப்பாக திரைக்கு வந்து விடும் என்கின்றனர்.
— சினிமா பொன்னையா
ஹீரோ வாய்ப்பை தவிர்க்கும் சூரி!
'பரோட்டா' சூரியை ஹீரோவாக நடிக்க சிலர் அழைக்கின்றனர். ஆனால், அவரோ, 'இப்போது நடித்து வரும், ரம்மி, பட்டயக்கிளப்பு பாண்டியா உள்ளிட்ட சில படங்களில், ஹீரோவுக்கு இணையான வேடத்தில் தான் நடிக்கிறேன். இந்த நேரத்தில், நான் சோலோ ஹீரோவாக நடித்து, அந்த படங்கள் ஓடவில்லை என்றால், இருக்கிற மரியாதையும் போய்விடும். அதனால், இன்னும் கொஞ்ச காலம் போகட்டும். அதன் பின், ஹீரோவாக நடிப்பது பற்றி யோசிக்கலாம்...' என்று, ஹீரோ வாய்ப்புகளை திருப்பி அனுப்பி வருகிறார் சூரி.
— சி.பொ.,
தீவிரவாதிகளுடன் மோதும் நமீதா!
தற்போது நமீதாவின் கைவசம் இருக்கும் ஒரே படம், இளமை ஊஞ்சல். இப்படத்தில், ஐந்து நடிகைகளை தீவிரவாதிகள் கடத்திச் செல்ல, போலீசான நமீதா, அவர்களை மீட்பது தான் கதை. அதிரடியான கதாபாத்திரம் என்பதால், விஜயசாந்தி ரேஞ்சுக்கு ஆக்ஷன் கோதாவிலும் குதித்துள்ள நமீதா, பறந்து பறந்து, சண்டை செய்திருப்பதோடு, துப்பாக்கியால் வில்லன்களை சுட்டு வீழ்த்தும் காட்சிலும் நடித்து வருகிறார்.
— எலீசா.
பாலிவுட் ஹீரோவை துரத்தும் நீது சந்திரா!
ஆதிபகவன் படமும் கை கொடுக்காததால், தமிழ் சினிமா மீதான நம்பிக்கை குறைந்து விட்டது நீது சந்திராவுக்கு. அதனால், பாலிவுட்டில் மீண்டும் கால் பதித்திருப்பவர், சில ஹீரோக்களின் அரவணைப்பை நாடியுள்ளார். அந்த வகையில், இதற்கு முன், ரன்தீப் என்ற நடிகரிடம் சிபாரிசு கோரி வந்த நீது சந்திரா, இப்போது, அங்கு அதிக படங்களில் நடிக்கும், வளர்ந்து வரும் ஹீரோ ருணால் கபூரிடம், நெருங்கி பழகி வருவதோடு, தனக்கு சிபாரிசு செய்யுமாறு துரத்தி வருகிறார். தலை எழுத்து இருக்க, தந்திரத்தால் ஆவது என்ன?
— எலீசா
கவனத்தை திருப்பும் நந்தவி!
அவள் பெயர் தமிழரசி படத்தில் நடித்த நந்தவி, தற்போது நடித்துள்ள, தாண்டவக்கோனே மற்றும் நேற்று இன்று ஆகிய படங்களில் கிளாமர் கதவுகளை திறந்து விட்டுள்ளார். அதோடு, தன் பெயரையும், மனோசித்ரா என்று மாற்றியுள்ளார். மேலும், சினிமாவையே முழுசாக நம்பிக் கொண்டிருக்க வேண்டாமென்று, பேஷன் டிசைனிங், புடவை டிசைன் வடிவமைப்பது போன்றவற்றிலும், கவனம் செலுத்தி வருகிறார். கிடந்த கிடைக்கு நடந்த நடை மேல்!
— எலீசா
அசின் பாணியில் நஸ்ரியா நசீம்!
நேரம் படத்தின் மூலம் தமிழுக்கு வந்த கேரள நடிகை நஸ்ரியா நசீம், தற்போது நய்யாண்டி, ராஜாராணி, திருமணம் என்னும் நிக்காஹ் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். 'அசின் பாணியில் நடித்து, தமிழ் சினிமாவில் முக்கிய இடத்தை பிடிப்பேன்...' என்று சொல்லும் இந்த நஸ்ரியா, கதை விஷயத்தில் அதிக கவனம் செலுத்துகிறார். தனக்கு முன்பாக தன் குடும்பத்தாரை கேட்க வைக்கிறார். அவர்கள் கதைக்கு பாஸ் மார்க் கொடுத்தால் மட்டுமே அடுத்த ரவுண்டில், தான் அமர்ந்து கதை கேட்கிறார். மேலும், கதை ஓ.கே.,வாகி சம்பளம் பேச முற்பட்டால், அதெல்லாம் என் டிபார்ட்மென்ட் இல்லை என்று, தன் அப்பாவை கைகாட்டி விடுகிறார் நஸ்ரியா நசீம்.
—எலீசா
கதாசிரியரான ஏ.ஆர்.ரஹ்மான்!
அமெரிக்காவில் இருந்து, சென்னைக்கு இடம் பெயர்ந்த ஏ.ஆர். ரஹ்மான், வரும் போதே, இரண்டு படங்களுக்கான திரைக்கதைகளை தயார் செய்து கொண்டு வந்துள்ளார். ஆனால், அந்த கதைகளை, அவர் இயக்கவில்லை. ஒரு இந்திப் பட டைரக்டரிடம் அந்த கதைகளை இயக்கச் சொல்லி கொடுத் திருக்கும் ரஹ்மான், அந்த படங்களை தமிழ், இந்தி என, இரண்டு மொழிகளிலும் வெளியிடப் போவதாக கூறுகிறார்.
— சினிமா பொன்னையா
அவ்ளோதான்!