
ஈ.வெ.ரா., சுயமரியாதை இயக்கத்தை ஆரம்பித்த போது, கடவுள் நம்பிக்கை உள்ளவராகவே இருந்தார். 1925ம் ஆண்டு அவர் தொடங்கிய குடியரசு ஏட்டின் முதல் இதழில், 'இப்பெரு முயற்சியில் இறங்கியுள்ள எமக்குப் போதிய அறிவையும், ஆற்றலையும் எல்லாம் வல்ல இறைவன் தந்து அருள் பாலிப்பானாக...' என்று எழுதியுள்ளார்.
வ.வே.சுப்ரமணிய ஐயர் மறைவு குறித்து, குடியரசில் ஈ.வெ.ரா., எழுதுகையில், 'அவரது ஒரே புதல்வர் நிலை கண்டு, எமதுள்ளம் நடுக்கமெய்துகிறது. எல்லாம் ஆண்டவன் செயல்...' என்று எழுதினார்.
(குடியரசு 7.6.25)
குடியரசு பத்திரிகை அலுவலகத்தை தொடங்கி வைத்திட, திருப்பாதிரிப்புலியூர் ஞானியாரடிகள் என்னும் சமய சந்நியாசியை அழைத்திருந்தார்...
அவ்விழாவில், ஈ.வெ.ரா., பேசியதாவது: இப்பத்திரிகையை ஆரம்பிக்கும் நோக்கம் தேசாபிமானம், பாஷாபிமானம், சமயாபிமானம் இன்னும் மற்ற விஷயங்களை ஜனங்களிடையே உணர்த்துவதற்கேயாம். ஏனைய பத்திரிகைகள் பல இருந்தும், அவை தங்களது மனசாட்சிக்குத் தோன்றிய, உண்மையான அபிப்பிராயங்களை வெளியிட அஞ்சுகின்றன. அவைகளைப் போல இல்லாமல், பொது மக்களுக்கு விஷயங்களை, உள்ளதை உள்ளபடி தைரியமாகத் தெரிவிக்க வேண்டுமென்பதே எமது நோக்கம். இப்பத்திரிகையைத் திறப்பதற்கு, ஈசன் அருளால் ஸ்ரீசுவாமிகள் போன்ற பெரியோர் கிடைத்ததேயாகும். இறைவன் அருளாலும், சுவாமிகளது அருளாலும் பத்திரிகை என்றும் நிலை பெற்று, மற்றப் பத்திரிகைகளிடமுள்ள குறைகள் ஏதுமின்றி, செவ்வனே நடைபெற வேண்டி ஆசீர்வதிக்கும்படி சுவாமிகளை வேண்டுகிறேன், என்றார்.
இப்படி, 'குடியரசு' பத்திரிகை துவக்க விழாவில், சுவாமிகளின் ஆசியை வேண்டி ஈ.வே.ரா., பேசிய பேச்சு, 'குடியரசு' முதல் இதழில் வந்துள்ளது.
காந்திஜி, உண்ணாநோன்பு இருந்தபோது, ஈ.வெ.ரா., எழுதியது: தப்புச் செய்த மக்களை தண்டித்தல் தவறு என்று உணர்ந்து, அவர்களைப் பரிசுத்தப்படுத்த, மகாத்மா உண்ணாவிரதம் மேற்கொண்டதை நினைக்க, அவருடைய அரிய மேன்மை, மலைமேலேற்றிய தீபம் போல் ஜொலிக்கிறது. உண்ணாவிரதத்தின்போது, அவருக்குப் போதிய வலிமை அளித்த கடவுளுக்கு எமது வணக்கம். (குடியரசு 6.12.25) ('குடியரசு' தலையங்கங்கள் அனைத்தும் தம்மாலேயே எழுதப்பட்டன என்று, ஈ.வெ.ரா., குறிப்பிட்டுள்ளதால், இவை, அவரது அக்காலத்திய கருத்துக்களே!)
— 'சுயமரியாதை இயக்கம்' நூலிலிருந்து...
***
விவேகானந்தரின், 150வது பிறந்த நாள், இந்துக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. ரவீந்திரநாத் தாகூர், தன்னுடைய 30வது வயதில், நண்பர் ஒருவருக்கு எழுதிய கடிதத்திலிருந்து: ஒரு நாள் மகரிஷியுடன் (தாகூரின் தந்தை) பிரம்ம சமாஜ கூட்டத்துக்குப் போயிருந்தேன். தூப மணம் கமழும் கூடத்தில், எல்லாரும் மகரிஷியின் வருகைக்காகக் காத்திருந்தனர். உள்ளே நுழைந்ததும் மகரிஷி சுற்றிலும் பார்த்துவிட்டு, 'எங்கே, நரேந்திரனைக் காணவில்லையே...' என்றார். அதே சமயம், 'நமஸ்காரம்...' என்று ஒரு குரல் கேட்டது. திரும்பிப் பார்த்தேன். நெடிய உருவமும், பரந்த அழகிய முகமும், விசாலமான கண்களும் கொண்ட ஒரு வாலிபர் நின்றிருந்தார்.
பணிவுடனும், புன்சிரிப்புடனும் மகரிஷியின் காலைத் தொட்டு ஒற்றிக் கொண்டார். அந்த முகத்தை என்னால் மறக்கவே முடியாது.
மகரிஷியுடன் எல்லாரும் ரத்தினக் கம்பளத்தில் அமர்ந்தோம். 'நரேன், ஆரம்பிக்கிறாயா?' என்றார் மகரிஷி.
நரேந்திரர் கை கூப்பி வணங்கி விட்டு, தம்பூராவை மீட்டியபடி, 'வேற நிராகார பரப்ரஹ்ம' என்ற, 'பிராஹ்ம' கீதத்தை மிகவும் உருக்கமாக கல்யாணி ராகத்தில் பாடலானார். சபையில் அமைதி நிலவியது. மகரிஷி கண்மூடி தியானத்தில் ஆழ்ந்தார். என் உடல் புல்லரித்தது. தெய்வீக அனுபவம் என்று தான் சொல்வேன். சபை கலைந்து, நரேந்திரர் என்ற, அந்தக் கல்லூரி மாணவர் புறப்படும் வரையில், கண்கொட்டாமல் எல்லாரும் அவரையே பார்த்துக் கொண்டிருந்தோம். அவருடைய எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என்று, என் உள்ளத்தில் ஏதோ ஒன்று சொன்னது.
— விவேகானந்தரைப் பார்த்த மாத்திரத்தில், தாகூரின் மனம் எவ்வளவு சரியாகக் கணித்து விட்டது!
***
நடுத்தெரு நாராயணன்